Tuesday, August 24, 2010

கவிதை இது, கேள்!

அம்மா கவிதாயினி,

வணக்கம்.
உங்கள் தமிழோசை ( thamizoosai) கவிதைப் பக்கங்களைப் பார்த்தேன். சிலவற்றைப் படிக்கவும் செய்தேன்.ஒரு நல்ல கவிதை உணர்வு உங்களுக்குள்ளேயிருந்து வெளிப்பட்டிருப்பது சிறப்பாகத்தான் உள்ளது. வாழ்த்துக்கள்!

ஆனால்,வயசுக் கோளாறு காரணமாகவும் அனுபவமின்மை காராணமாகவும் உங்கள் கவிதை உணர்வுகள், நமது பண்பாட்டையும் பாரம்பரியக் கட்டுபாட்டையும் காயலான் கடைக்கு அனுப்பி விட்டு வெறும் தகர டப்பாவைக் குலுக்கி கொண்டு பாடுவது போல் இருக்கின்றன. அதைப் பற்றி இங்கு எழுத வேண்டியதன் அவசியம் உள்ளது.

உலகத்தில் எல்லா ஜீவர்களும் தனித் தனியானவைகள்தாம். பிரபஞ்சச் சுழலில் அவை, சிருஷ்டியின் மாயா விநோதத்தில் ஈர்க்கப்பட்டு ஒரு அணுவாய் ஓரிடத்தில் அண்டுகிறது. ஐந்து பூதங்களாகிய வெம்மை,குளுமை,காற்று,ஆகாயம் (விசும்பு) நீர்மை என்ற கலவைகளின் இன்னொரு மாயா ஜாலத்தில் கருவின் உருவாய் மாறி, குறிப்பிட்ட காலத்துக்குள் அதன் ஜட மூலமாகிய கருவறையை விட்டு வெளியே தள்ளப்படுகிறது.இது, கண்ணுக்குத் தெரியாத பூச்சி முதல் கண்ணுக்குக் கவர்ச்சியான மனித ஜந்துக்கள் வரைக்குமான பிறவி விஷயம்.

ஜந்துக்களாகிய நமக்கு ஏற்படுகின்ற பசி,காமம்,மயக்கம்,துக்கம், தூக்கம், கோபம்,தனிமை, சந்தோசம்,ஆசை, திமிர்,ஆணவம்,அச்சம்,வெறுப்பு யாவும் நீரின் மேல் தோன்றி மறையும் குமிழிகள் போல்தான்.

’நாம் ஒரு மலர்ச் சோலைக்குள் இருக்கும் போது நறுமணத்தால் சூழப்பட்டு அகமும் முகமும் மலர்ந்திருப்போம்; சாக்கடை சூழ்ந்த பகுதியில் இருக்கும் போதோ, முகம் சுழித்து மனம் சலித்துத்தான் இருப்போம்’ என்பது போல்தான் இது; இயற்கையின் நியதி.

எனவே, நாம் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம் என்றால்,நமது சூழ்நிலை நன்றாக, அதில் நம் மனம் ஒன்றி இருக்கிறது என்று பொருள். அப்போது கவிதை எழுதும் சிந்தனைத் திறன் உள்ளோர் அச் சூழலுக்கு ஏற்பத்தான் எழுதுகிறார்கள்.அப்போது அவர்கள் துக்கங்களை வெளிப்படுத்தி எழுதுவதில்லை.

பெரும்பாலும் இழவு வீட்டில் இருந்து கொண்டு மோகன ராகம் யாராவது பாடுவதுண்டா? அப்படிப் பாடுவோர் பைத்தியக்காரனின் மனோநிலையை அடைந்தவர்களே தவிர வேறென்னவாக இருக்க முடியும்?

'உள்ளத்தில் உள்ளது கவிதை; உணர்ச்சியில் வருவது கவிதை' என்பான் பாரதி.

உங்கள் அற்புதமான சிந்தனைகளை, காதலென்னும் காமத்தில் உழல்வோரின் அரிப்புக்களை நன்றாக சொரிந்து விடும் சரக்காகவும் உங்களுடைய முதற்காதலின் (முதல் காதல்; முற்றிலும் கோணல்!) சருக்குதலைச் சொல்லி, ஒருதலை முகாரி பாடும் அவல நிலையை ஆராதிக்கும் போக்கை மாற்றி, மனித நேயத்தின் மாண்பைப் பற்றி எழுதத் தலைப் படுங்கள்.

உங்களுடைய உணர்வுகளைப் படித்ததும் ஏனோ, என்னுள் மறைந்து போயிருக்கும் வாழ்க்கை நினைவுகள் சுழல்கின்றன. பாவம், உங்களுக்கு பக்குவம் சொல்ல ஒருவரும் இல்லை போலும்: அல்லது பக்குவம் உடையோர் உங்கள் பக்கத்தில் இருக்கவில்லையோ.?

எப்பொழுது, உங்கள் உணர்சிகளை கவிதையாக்கி அவற்றை விதை போல் இந்தச் சமுதாயத்தில் விதைக்கத் தலைப் பட்டீர்களோ, அப்பொழுதே நீங்கள் ஓர் நல்ல விவசாயத்தை செய்ய முனையும் விவசாயி என்றாகி விட்டீர்கள்!.

நீங்கள் பயிரிடுவதற்காக இதோ, என்னால் முடிந்த உரச் சத்தை இலவசமாகத் தருகின்றேன்:

ஏனென்றால், அநாதையான, எனக்கென்று சேமித்து வைக்கும் தேவை எதுவும் இல்லையால், ’தங்களைப் போன்ற அறிவு ஜீவிகளுக்கு எனது கருத்துக்கள்,ஒருவேளை, உபயோகமாய் இருக்கக் கூடுமே’ என்னுமோர் எண்ணம்தான் எனது தானத்துக்குக் காரணம்.

இதை,‘கிண்டலுக்காக எழுகின்றேன்’ என்று மட்டும் எண்ணி விடாதீர்கள்.

இதைச் சொல்லக் காரணம், உங்களைப் போன்றே ஒரு பெண் எனக்கு இருந்தாள்; அவள் மீது உயிரை வைத்திருந்தேன்;ஆனால், ‘அவள் என்ன நினைத்துக் கொண்டு வளர்ந்தாள்’ என்பது தெரியாமலேயே அவளுக்குள் இருக்கும் உணர்வுகளைப் பற்றி நான் நினைத்துப் பார்க்கின்ற வாய்ப்பின்றி, எனது நேர்மை,பண்பு, இரக்கம்,சிந்தனை இவற்றின் வார்ப்பாகவே இருக்க வேண்டும்’ என்ற’ ஒரு நல்ல தகப்பனின்’ சுய நலச் சிந்தனையோடு, கட்டுப் பாட்டோடு வளர்க்கவே விரும்பி, எனது வாழ்க்கையை மேற்கொண்டதன் விளைவு: அவள் படித்து முடித்ததும் திடீர் என்று சிறகுகள் முளைத்தவளாய் என்னை விட்டுப் பிரிந்து போய் விட்டாள்; விண்ணில் பறவையாய்ப் பறந்து மறைந்து விட்டாள்.

நமக்கு செல்லமான பறவைகளை நாம் தங்கக் கூட்டில் வைத்து வளர்த்தாலும்,ஒரு நாள் அதற்கு கூண்டை விட்டு வெளியில் இருக்கின்ற வாய்ப்புக் கிடைத்தால்,எதிர்பாராமல் அது சிறகு விரித்துப் பறந்து விடும்; ஆனால்,'அதை உயிர் போல் பாவித்து வளர்த்த அதன் எஜமான் ‘என்ன நினைப்பான்:எப்படித் துடிப்பான்' என்றெல்லாம் அது கவலைப் பட்டால்,பிறகு அதற்கேது சுதந்திரம்?

அப்படிப்பட்ட நிலையை அனுபவத்தில் பெற்றவன் என்ற நிலையில் மட்டுமின்றி,உங்களைப் போல் ‘ஒருதலைக் காதலில் உணர்ச்சி வசப்பட்டு, எழுதுகின்ற விஷயங்களை என்னைப் போன்ற தந்தைமார்களும் படிப்பார்கள்; இந்த விஷயங்களைப் படித்துவிட்டு எப்படித் துடிப்பார்கள்’ என்பதாலும் ஏதோ, வேதம், மரணம்’ என்றெல்லாம் நீங்கள் குறிப்பிட்டு ‘ஓர் அறிவு ஜீவியாய்’ நிலைப்படுத்திக் கொண்டிருப்பதாலும், 'எனக்கு ஒரு மகள் இருந்தாள்' என்று சொன்னேன் இல்லையா, ‘அவளாக’ உங்களை நினைத்துக் கொண்டு (அவலை நினைத்து உரலை இடிக்கும் கதையாகி விடக் கூடாது அல்லவா?) இதோ,நானும் கொஞ்சம் கதைக்கின்றேன்.

மறுபடியும் மேலே சென்று எனது கருத்தை மீண்டும் ஒருமுறை படித்து விட்டு,கீழே விழுந்து விடாமல் பிறகு,இந்த அநாதை எழுதும் உண்மைக் கவிதை உணர்சிகளை நீங்கள் படித்தால், உங்களுக்குக் கவிதையின் தன்மை அழகாகப் புரியும்;இன்னும் சிறப்பாகக் கவிதையை விதைப்பீர்கள்.

‘நாம் எழுதும் கவிதைகள் சமுதாயத்தின் மேன்மையைப் புகுத்தும்’ வகையிலும், ‘ நூலோர் உங்களை மேலோர்’ எனப் புகழும்படியும் ‘நாளொரு வண்ணம்; பொழுதொரு எண்ணம்; பொத்துக் கொண்டு கொட்டும் அருவி’ எனப் போற்றும் அவகையிலும் இருக்க வேண்டும் என விழைந்தே இதனை எழுதலுற்றேன்.

இதை நீங்கள் புரிந்து கொள்வீர்களானால் நான் உங்களுக்குச் சொல்லும் ’பராக்’ இதுதான்:

‘அம்மா, கவிதாயினி, 'கவி தா, இனி, சத்தாக நல்ல வித்தாக’

வாழ்க!
-கிருஷ்ணன் பாலா

கவிதை இது, கேள்!

விழலுக்கு நீர்பாய்ச்சி மாய வேண்டாம்;வீண்
விஷயத்தில் மனம் செலுத்தி வீழ வேண்டாம்;
மழலையென வாழ்ந்த நிலை அறிந்துஉங்கள்
‘மடமையது யாது’எனத் தெளிதல் நன்று!

சிறுகுழந்தை கேட்பதெல்லாம் வாங்கித் தரும்
செல்வநிலை இல்லாத தந்தையவன்,
உறுதியுடன் வாழ்ந்து என்றும் வளைந்திடாமல்;
‘ஒழுக்கமுடன் வாழ்வதற்கே’ பாதை சொன்னான்!

இன்று 'மிக நன்று' எனக் கவிதை பாடி’
‘இளமை உயிர்ச் சத்தைஎலாம் விரயமாகிக்
கொன்று வரும் குழந்தை’உனை, ஒன்று கேட்பேன்:
'குவலயத்தில் காதல்தான் பொருளா என்ன?'

'நல்ல பொருள் இன்னதென' அனுபவத்தால்
நல்லறிவு உமக்கெல்லாம் வளர்வதற்கே’
சொல்லிவந்த அறிவுரையைத் தண்டனைபோல்
சூடிக்கொண்டு வளர்ந்ததற்கு யார் பொறுப்பு?

தினந்தோறும் விளையாடி, குழந்தையுடன்
தெருவெல்லாம் கைப்பிடித்துக் கூட்டிச்சென்று,
'சினிமாவா, தெருக்கூத்தா,போவோம்' என்று
சிணுங்காமல் வளர்த்திருந்தால் நல்ல தந்தை!


பணம் இருந்தால் பாரினிலே வசதி எல்லாம்
பம்பரமாய்ச் சுழன்றிருக்கும்; பண்பு மட்டும்
பிணமாகிப் பயண மெல்லாம்; பெருமையின்றிப்
பிணவாழ்வு ‘வாழ்வதுவா வாழ்க்கை’ என்பீர்?

அந்தப் பணம் ‘பாலை வனப் பயணத்துக்கு;
அருந் தாகம் தணிப்பதற்கு மட்டும்’ என்றே
தந்தென்னைக் குருநாதன் கருணை செய்தான்;
தருமமாய் அதைக்கூடச் செய்து விட்டேன்!

படிப்பதற்கும் பசியின்றி வளர்வதற்கும்
‘பாலாவின் பிள்ளை ‘எனச் சொல்வதற்கும்
நொடிப்பொழுதும் நோயின்றி இருப்பதற்கும்
நுண்ணறிவும் பெறத்தானே வாழ்க்கை செய்தேன்!

கூலி செய்து என் தந்தை படிக்க வைத்தான்:
குறையின்றி உங்களை நான் படிக்க வைத்தேன்?
கேலி செய்து என் மனத்தைக் குழியில் தள்ளி
'கேவலம்நான்'என்பதுபோல் வாழ்கின் றீர்கள்!

கவிதை என்றால் என்னவென்று தெரிந்து கொள்க:
‘கடவுளையும் துச்ச’மெனக் காணும் நேர்மை;
புவியிதனில் புரிந்து கொள்ள யாரும் இன்றிப்
போனாலும் சிந்தனைகள் சிங்கம் ஆகும்!

நேர்மை கொண்டு வாழ்பவனே கவிதை செய்வான்;
நெஞ்சகத்தில் வஞ்சமில்லான் கவிதை செய்தான்:
யார்துரோகம் செய்தாலும் கவிதை செய்து
யஜமானன் போல்வாழ்ந்து நிமிர்ந்து நிற்பான்!

பாட்டெழுதிப் பிழைக்காமல் அவன்பாட்டுக்குப்
பயணத்தைத் தொடர்வதிலே மகிழ்ந்திருப்பான்;
வாட்டமெலாம் அவனுக்குள் இருந்தபோதும்;
வாடாத கவி நெஞ்சால் வாழ்வான், அவனே!

'போகும் இடம் இது' என்று அவனுக்கில்லை;
‘போகின்ற இடமெல்லாம்’ அவனுக் கெல்லை;
சாகும் வரை ‘சாகாத நேர்மை ஒன்றே,
சார்ந்திருக்கும் சொந்த’மென வாழ்வான், காண்க!

அன்று, ‘அவன் உமக்காகப் பட்ட பாடு’
அத்தனையும் என்னவென்று பார்த்திடாமல்;
‘நன்று எது?’என்று சொலும்அறிவு இன்றி;
‘நாடுவது கவிதை’ எனில், ஏற்க லாமோ?

அழுகைதனைச் சொல்லுவது கவிதையன்று;
அடுத்தவரை அழவைக்கும் கவிதை நன்று;
‘எழுதுவது எல்லாமே எழுத்தா, என்ன? ;
எதிரிகளும் படித்தால்தான் எழுத்து’ ஆகும்!

எழுதுகின்றீர்;’என் மகள் போல்’ காணுகின்றேன்!
என் உணர்வை அவ்வாறே கூறுகின்றேன்;
‘பழுதறவே எழுது தற்கு’ வாழ்த்து கின்றேன்;
பரமகுரு நாதன்அவன் துணை யிருக்க!

-கிருஷ்ணன் பாலா
18.7.2010 / 16:00 Hrs.
Post a Comment