Friday, October 28, 2011

இது ஒரு தெருக் குறள்!

நானும் எனது நண்பரும் உணவு விடுதி ஒன்றில் உண‘வருந்தி’க் கொண்டிருந்தோம்,நேற்று (27.10.2011).

மூன்று பேர் சேர்ந்த உடல் கொண்ட ஒரு மேலை நாட்டுப் பெண் ஒருவர் தம் குழாத்துடன் பக்கத்து மேஜையில் மிகுந்த சிரத்தையோடு உண்டு கொண்டிருந்தார். தன் உடலை அதன் நாற்காலியில் பொருத்தி உட்கார அவர் படும் பாடு பரிதாபமாக இருந்தது. எல்லோரும் அவரைப் பார்த்து ஏளனப் பார்வை செய்வது போல் இருந்தது;நான் பரிதாபம் கொண்டேன்.

அருகில் இருந்த இன்னொரு மேஜைக்கு வேறு ஒரு பெண் உற்றார் சிலருடன் ‘சிக்’ என்ற தோற்றப் பொலிவில் வந்து அமர்ந்தார்.

அந்த ரெட்டை நாடிப் பருத்தவுடல் பெண்மணி மற்றவர்களோடு சேர்ந்து அந்த மெல்லிய மேனிப் பெண்மணியை ஏக்கத்தோடு பார்த்தார்.

நண்பரிடம் நான் சொன்னேன்:

‘சிக்’கென்று வாழ்வாரே வாழ்வார்;மற்றெல்லாம
‘சிக்’குண்டு வாடு பவர்.


(முதல் ’சிக்’ = மெல்லிய,அளவான,,அழகான தோற்றத்தைக் குறிப்பது; இரண்டாவது ’சிக்’= நோய்,மன வாட்டம்,தவிப்பு,ஏக்கம் என்றெல்லாம் பொருள் நிற்கும்)

நண்பர்களே,
இது நம்ம தெருக் குறள்;இது போல் யார் வேண்டுமானலும் இடம்,பொருள் ஏவலுக்கேற்ப எண்ணலாம்;எழுதலாம். ஆனால், வள்ளுவப் பெருமானுடன் மட்டும் வம்பு செய்து கொள்ளாதீர்கள். ப்ளீஸ்.

----------------------------------------------------------------------------------------------
இதன் நீதி:
உணவைச் சுருக்கி உடல் நலம் பெருக்க! (உடலை அல்ல!)
-----------------------------------------------------------------------------------------------

அன்புடன்,
கிருஷ்ணன்பாலா
28.10.2011

Thursday, October 27, 2011

கவித் தலம்;,என் கவிதைத் தளம்!


 -----------------------------------------
என்னைப் படைத்த கவிதை யாதென                    
இங்கு படைக்கின்றேன்;அது
உன்னை உணர்த்தி உயர்ந்திடச் செய்யும்
உண்மை உரைக்கின்றேன்!


மண்ணைப் பிசைந்து மார்பினில் சந்தனம்
மற்றவர் பூசுகின்றர்;நான்
மண்ணில் விளைந்துள சந்தனக் கட்டுக்குள்
மத்தளம் போடுகின்றேன்!


கண்டு மகிழ்ந்திட;கவிதை புரிந்திடும்
கவித் தலம் கட்டியுள்ளேன்;நல்ல
வண்டுகளாய் வந்துண்டு மகிழுங்கள்;
வந்தனம் கூறுகின்றேன்:

--------------------------------------------
காணும் யாவிலும் கவிதை!
--------------------------------------------

உள்ளத்தில் உள்ளது கவிதை;
உணர்ச்சியில் உள்ளது கவிதை;
வெள்ளத்தனையது கவிதை;
வீறு கொண்டிருப்பது கவிதை!


கள்ளம் அற்றது கவிதை;
கருணை உள்ளது கவிதை;
பிள்ளையைப் போன்றது கவிதை;
பேசத் தெரிவது கவிதை!


காதல் உடையது கவிதை;
கண்டதும் சேர்வது கவிதை;
தீது தவிர்ப்பது கவிதை;
தேசத்தில் வாழ்வது கவிதை!


உண்மை மிகுந்தது கவிதை;
ஊருக்குச் சொல்வது கவிதை;
நுண்மை நிறைந்தது கவிதை;
நோக்கம் உடையது கவிதை!


துன்பம் களைவது கவிதை;
தோழமை ஆவது கவிதை;
இன்பம் மிகுந்தது கவிதை;
ஈசன் அறிவது கவிதை!


அச்சம் இல்லாதது கவிதை;
ஆழ்மனம் கொண்டது கவிதை;
இச்சகம் வென்றிடும் கவிதை;
என்னைப் படைத்தது கவிதை!.


இவண்-
கிருஷ்ணன்பாலா
27.10.2011

Wednesday, October 26, 2011

மகிழ்வித்து மகிழும் திருநாள்

அறிவுசால் நண்பர்களே,


வணக்கம்.


எம்மதமும் சம்மதமாய் எண்ணி,பிறரை மகிழ்வித்து நாம் மகிழும் வாய்ப்பைத் தரும் திருநாள் கொண்டாட்டங்களில் தீபாவளி நாள் தலையாயது.


இன்று அதிகாலை (4:00 மணி) என்னை தீபாவளி மரபுப்படி வீட்டின் பெரியவர்-அவருடைய மாமியார் கரத்தால் வீட்டிலுள்ள ஒவ்வொருவர் உச்சந் தலையிலும் பூவில் நனைந்த எண்ணெய்யை வைத்து, உண்மையிலேயே கஙகா ஸ்நானம் செய்ய வைத்து, புத்தாடை அளித்து மகிழ்ந்தார்,எனது அன்புக்கும் நட்புக்கும் இணையற்ற ஒருவராய்த் திகழும் நண்பர்,மூத்த பத்திரிகையாளர் திரு ராவ் அவர்கள்.(ஆம். காசியிலிருந்து கொண்டு வந்திருந்த புனித நீரை வீட்டுக் குழாயின் மெட்ரொ நீரில் கலந்து குளிக்கச் செய்தார்.)


பத்திரிகை உலக ஜாம்பவான் திரு.ராவ்
ஆனந்த விகடனின் நிர்வாக ஆசிரியராக நீண்ட காலம் பணியாற்றி, அக் குழுமத்தின் பெருமைக்குரிய ‘மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தைக் கொண்டு வந்ததிலும் இன்று பத்திரிகை உலகில் பேசப் படும் ஜூனியர் விகடன் மற்றும் அதன் பிற கிளைப் பத்திரிகைகளின் உருவாக்கத்துக்கு, சிற்பியாகவும் இருந்து ‘கழுகுப் பார்வை’ கொண்டு எழுதியும் பத்திரிகை நிர்வாகத்தைத் திறம் பட நடத்தியவர் ’’ராவ்” என்று தமிழ்ப் பத்திரிகை உலகம் மதிக்கும் ’திரு ராகவேந்திரா கவாலெ’ அவர்கள்.


இவரால் பயிற்சி பெற்ற பத்திரிகையாளர்கள்தான், இன்று ஆனந்த விகடனிலும் ஜூனியர் விகடனிலும் ஜொலிக்கிறார்கள்.பிற பத்திரிகைகளையும் நடத்துகிறார்கள்.


திரு ராவ் அவர்கள்,விகடன் குழுமத்தின் பணியிலிருந்து விலகிய பின், குமுதம் இதழ்களின் ஆசிரியர்-பதிப்பாளர் என்ற இரு பெரும் பொறுப்புக்களையும் ஒரு பீஷ்மரைப் போல்,விருப்பு வெறுப்பின்றி நிறைவேற்றியவர்; பிறகு குங்குமம் இதழிலும் சில ஆண்டுகள் ஆசிரியப் பணியில் இருந்தவர்.


தமிழ்ப் பத்திரிகை உலகில் அரும் பெரும் சாதனையாளராகவும் அறிவு ஜீவியாகவும் அனுபவம் செழித்தவராகவும் எவரும் மதிக்கும் பண்பாளராகவும் வாழும் திரு,ராவ் அவர்களின் ’அகத்தில்’ இன்று எனக்குத் தீபாவளி!.


அவருடைய அன்புப் பிடியில் சிக்கி நழுவி விடாப் பந்தத்தில் கட்டுண்ண்டு போன நான் இன்று அதிகாலையில் கங்கா ஸ்நானம் செய்தேன். எனது தலையில் கங்கை பிரவாகம் எடுத்தபோது மனதில் தீபாவளி பற்றிய கருத்துக்கள்- கவிதையாகப் பிரவாகம் எடுத்தன.


அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விழைந்தேன்.இதோ அந்தக் கவிதை:
மகிழ்வித்து மகிழும் திருநாள்!
----------------------------------------------------------


'கங்கா ஸ்நானம் ஆச்சு;நம்
கவலை எல்லாமே போச்சு!
மங்காப் பெருமையைக் கொண்டு;நாம்
மகிழ்ந்திடும் திருநாள் இன்று!


பாரதப் பண்பின் அடையாளம்;இந்தப்
பண்டிகைத் திருநாள் ஆகும்:
நீரதன் மக்கள் அன்றோ?;இதை
நினைத்தால் வேற்றுமைஉண்டோ?


எங்கும் வெடிகளின் சத்தம்;இது
இந்திய மண்ணில் மட்டும்;
உங்களின் இந்தப் பெருமை;இந்த
உலகினில் எவருக்கு உரிமை?

தூங்கும் யாவரும் இன்று;
தூக்கம் கலைந்தார் என்று;
ஓங்கும் வெடிகளின் சத்தம்; அது
உரக்கச் சொன்னதைக் கேட்டோம்!

பண்டிகை கள்நம் மரபின்
பதிவுகள் ஆகும் காணீர்;
தண்டம் அதுவெனச் சொல்வோர்
தலைமுறை இழப்பார்,பாரீர்!


முன்னோர் வகுத்த நெறியில்
முழுமனம் செலுத்தி நாமும்
பின்னேர் பிடிப்போம்,வாரீர்
பெருமை அதுதான் உணர்வீர்!


சிந்தையுடையோர் மகிழச்
செய்தியைச் சொன்னேன்,இங்கே
இந்தியர் என்பதில்தானே;நாம்
இங்கொன்றாக வாழ்வோம்?


அன்புடன் –
கிருஷ்ணன்பாலா
26.10.2011 / தீபாவளித் திருநாள்.

Tuesday, October 25, 2011

ஒளிர்க,இத் தீபாவளி!


நண்பர்களே,

உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி நிறைந்த நாளாய் இத் தீபாவளித் திருநாள் அமையட்டும்.

இந்தியாவில் எல்லா மதத்து மழலையர்க்கும் இது ஓர் கனவுலகத் திருநாள். அவர்களின் பெற்றோர்கள் கூட தங்கள் குழந்தைச் செல்வங்களை மகிழ்வித்து மகிழும் நாளாய் இது அமைந்திருப்பது குறிப்பிட்த் தக்கது.


இந்தியாவைப் பொருத்தவரையில் எல்லா மதங்களும் நம் மதம்தான்; எல்லோரும் இந்தியத் தாய் ஈன்றெடுத்த ஒருதாய் வயிற்று மக்களே.


எல்லோரையும் சொந்தம் கொண்டாடுங்கள்;எல்லோருக்கும் சொந்தம் ஆகுங்கள்.
ஒரே ஒரு எச்சரிக்கை:

தீபாவளி மரபைப் போற்றும் வகையில் “கங்கா ஸ்நானம் ஆச்சா?” என்று நண்பர்களைப் பார்த்துக் கேட்கும் வெடியைப் பார்த்து வெடியுங்கள்:


இங்கே கூவத்தில் குளித்துக் கொண்டிருப்பவர்களுக்குக் கோபம் வந்து விடப் போகிறது!


வாழ்த்துக்களுடன்,
கிருஷ்ணன்பாலா
25.10.2011

Monday, October 24, 2011

நானும் அவளும்! (நினைவுக் குறிப்புக்கள்:3)

வளுக்கும் எனக்கும் 17 வருடப் பந்தம். இந்த 17 வருடங்களில் அவள் என்னை ஒட்டிக் கொண்டும் நான் அவளைக் கட்டிகொண்டும் திரிந்த காலங்கள்......
....ம்ம்ம் அது ஒரு கனாவில் உலா வந்ததுபோல்....

நான் இயல்பாகவே நமது கலாசாரக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பவன்; கடந்த 6 வருடங்களுக்கு முன்பு இக் கொள்கைகளில் நான் கொண்டிருந்த  கடுமையான அணுகுமுறைகள் ’அவள் பாதை வேறு’; ‘எனது பாதை வேறு’என்பதைக் காட்டி, எனது பாதையிலிருந்து அவளை .’ஒவ்வாமை’ என்னும் பிடிவாதம் பிரித்து விட்டது.

ஆம்!
அவளுக்கு நானும் நான் அவளுக்கும் ஒவ்வாதவர்களாக மாறி விட்டோம்.

17 ஆண்டுகளாக என் உணர்விலும் உள்ளத்திலும் இரண்டறக் கலந்து உதிரப் பாசம் கொண்டிருந்த அவளை மறந்து விடுவது என்ற வைராக்கியத்துக்கு நானும் இடம் அளிப்பதைத் தவிர வேறு வழி இல்லாது போயிற்று.

அவ்வாறே 6 ஆண்டுகளும் சென்றுவிட்டன.

எனினும்-

அவ்வப்போது, என் உள்ளத்தில் அவளைப் பற்றிய உணர்வுகளும் எண்ணங்களும் தோன்றி “எங்கேயாவது.... அவளை, வழியிலாவது பார்க்க வேண்டும்” என்கிற தடுமாற்றம் வரத்தான் செய்தது.

என்னை நெருங்கிப் பழகிய நண்பர்கள், என் மீது கழிவிரக்கம் கொண்டு,அவள் இருக்கும் இடம் தெரிந்து என்னை அழைத்துப் போகவோ அல்லது அவளைக் காண்பதற்கோ விரும்பி என்னை வற்புறுத்திய போதும் நான். ‘ஞான வைராக்கியத்’தோடு மறுத்து விடுவேன்.

 “நான் அவளைப் பார்ப்பதற்கு என்ன இருக்கிறது?” என்று எதிர் வாதம் செய்து அவர்களையும் பேசாதிருக்கச் செய்து விடும் எனது கோபம்.

என்றாலும்-

எனது புகைப் பட ஆல்பத்தில் அவள் என் தோள்மீது தொற்றிக் கொண்டு இருப்பதும் எனது பேனாவைப் பிடுங்கி அவள் கர்ம சிரத்தையோடு எழுதிக் கொண்டிருப்பதும் அவளுடைய பிறந்த நாள் காலப் புகைப்படங்களில் ஒரு தேவதை போல் குதூகலித்துக் கொண்டிருப்பதுமான காட்சிகள் என் கண்ணில் படும்போதெல்லாம் நெஞ்சில் ஒரு ஈரம் இளகி விழித்திரையை மறைத்துக் கொண்டு சற்று தடுமாற வைத்து விடும்.

ஆனால் அப்போதெல்லாம் “வீரன் நீ, விழிநீர் சிந்தலாமா?” என்றுதான் எனது மனச் சாட்சி கேட்கும்.உணர்ச்சிகளிலிருந்து என்னை விடுவிப்பது அதுதான்.

எனது தனிமையின் கொடுமையைப் போக்கிக் கொள்ள முகநூல் எனக்கு வாய்த்தது.

எழுதினேன்;எழுதினேன்;ஏராளமான விஷயங்களைக் கட்டுரைகளாகவும் கவிதைகளாகவும் கருத்துக்களாகவும் எழுதினேன். ஏராளமான நண்பர்கள் முகநூலில் எனக்குக் கிடைத்தனர்;ஆனாலும் அவள் எனக்குக் கிடைக்கவில்லை.

திடீரென்று சமீபத்தில் ஒரு ஞானம் பிறந்தது..


‘அவள் இந்த முகநூலில் இருப்பாளே’....”தேடிப் பார்” என்றது மனம்.
அவள் பெயரை முக நூலில் ‘க்ளிக்’ செய்தேன்.

அட...அவள்தான்.....

தன் பெயரை மாற்றிக் கொள்ளாமல் எனது பெயரின் இனிஷியலுடன் அப்படியே முகநூலில் இருந்தாள்.

“நாம் சந்தித்து,பழைய உறவு கொள்ள வேண்டாம்.. ஆனால்,முகநூலில் நண்பர்களாகத் தொடர்ந்தால் என்ன?’

இதை அவளிடம் கேட்டுச் செய்தி அனுப்பிப் பார்ப்போமே” என்று ஒரு வகைக் கடமை உணர்வும் உறவின் கோடு போட,அவளை எனது முகநூலில் நண்பராக்கிக் கொள்ள இணைப்புக் கேட்டு ‘க்ளிக்’ செய்தேன்.
முகநூல் கணினியின் தானியங்கிச் சொடுக்கி சொல்லிற்று:

“YOU CAN’T CONTACT A STRANGER”

‘முன்பின் தெரியாதவருடன் நீங்கள் தொடர்பு கொள்ள முடியாது’ என்று சொல்லும் இந்தக் கணினிக்கு, அவள் எனக்கு ஒரு STRANGER (அதாவது அந்நியமானவள்) என்பது மட்டும் தெரிகிறது;ஆனால் 17 வருடங்களாக நானும் அவளும் ரத்தப் பாசத்தோடு பின்னிப் பிணைந்து வாழ்ந்த எங்களுடைய ‘தந்தை- மகள் உறவு’ என்ன என்பதுதான் தெரியவில்லை!

தெரியவில்லை என்பது கணினிக்கு மட்டுமா?
அவள் கற்ற கல்வி அறிவுக்கும்தான்!

-கிருஷ்ணன்பாலா
24.10.2011

Sunday, October 23, 2011

வெடிக்காத வெடிகள்!

நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். உங்களுக்கு நல்ல சரவெடி ஒன்றைப் பரிசளிக்கின்றேன்; இதோ:இதைப் பத்திரமாகக் கொளுத்திப் போடுங்கள்.


வெடிக்காத வெடிகள்
--------------------------------------                                                                 
தேனும் பாலும் ஆறாய் ஓடும்;
திருவாளத்தான் தென்நாட்டில்;
நானும் நீயும் நம்புகிறோம்;
நம்தலைவர்கள் சொல்கின்றார்!


மானம் கெட்ட அரசியலை
மாய்ந்து மாய்ந்து தினம் பேசி
நானும் நீயும் மகிழ்ந்திருந்தால்
நமக்கேன் துன்பம்? சொல் தோழா!


தானம் தரவோர் அரசாங்கம்;
தரித்திரம் எப்படி வந்து விடும்?
ஞானம் பெறத்தான் தொலைக் காட்சி
நம்குறை எங்கே? சொல் தோழா!


உழைப்பில்லாமல் உட்கார்ந்து
உண்ணத் திண்ண,மதி மயங்க,
களைப்பைப் போக்கச் சாராயம்
காட்டுதுபார் நம் ராஜாங்கம்!


ஆள்வோர்,அரசியல்வாதி என
ஆளக் கனவு கொண்டிருப்போர்
வாழும் மாளிகை,வசதி எலாம்
வறக் காட்டுக்குள் வந்திடுமா?
கேனப் பயலே,கருப்பையா
கிட்டுச்சாமி, பாப்பையா
ஈனப் பயல்கள் ஏய்ப்பதைதான்
எட்டிப் பார்த்து ரசிக்கின்றாய்!

மேடு திருத்திக் காடாக்கி;
மேழி பிடிப்போர் இல்லையெனில்,
கேடு கெட்ட அரசியலின்
கீழ்மைத் தனத்தின் வாழ்வேது?

போடா, போ; உன் சந்ததிகள்
பிழைக்கும் வழியைப் பார்;அவர்க்கு
மாடாய்,ஆடாய் நீ இருந்து
மண்டியிட்டுப் போகாதே!

திருடர் கூட்டம் இந் நாட்டைத்
திருத்தி ஆட்சி செய்கிறதாய்க்
குருடர் முன்னே முழங்குவதைக்
                               கொளுத்திப் போட்டு வெடிப்பாயே!
இவண்-
கிருஷ்ணன்பாலா
23.10.2011

Friday, October 14, 2011

விருந்தும் மருந்தும்!கோணல்மதி கொண்டுலகில்
குறுக்குவழி தேடிடுவோர்;
          கூட்டதிடை மாட்டிக் கொண்ட மனது;
          கூறுகிறேன் உண்மை; அது எனது!

பூணுவது புலி வேஷம்;
பொங்குவது ஆவேஷம்;
          புரிந்து கொள்ளும் அறிவுடையோர் கணக்கு;
          போடுகிறேன்;அதிகமில்லை எனக்கு!

நாணலதைப் போல் மனதை
     நான் வளைத்துக் கொண்டாலும்;
                    நச்சுமனப் பேர்வழிகள் கூட்டம்;
                    நான் நிமிர எழுதுவதால் வாட்டம்!

மாணவனைப் போல் இருந்து
      மற்றவர்க்குக் கற்றுத் தரும்
          மடமையதில் உழலுகின்ற ஆளை;
                    மண்டியிட வைப்பதுஎன் வேலை!


வள்ளுவனும் பாரதியும்
      வார்த்தெடுத்த வார்த்தைகளைக்
          உள்ளமிதில்  விதைத்தவனின் எழுத்து;
                    உலகளவில் சொல்லுகின்ற கருத்து!

உள்ளபடிச் சொல்லுகின்றேன்;
          உண்மையைத்தான் வெல்லுகிறேன்!
                     ஊக்கமுடன் சொல்லுவதைக் கேளீர்;
                     உணருபவர்தாம்  எனக்குக் கேளிர்!


தெள்ளுதமிழ்ப் பண்புகளைத்
தெளிவாக எடுத்துரைக்கத்
          தீந்தமிழின் வார்ப்புக்களைத் தேடி;
                    தீட்டியது ஞானம் ஒரு கோடி!
                   

ள்ள மனம் பெற்றவரும்
     கயமைக் குணம் கற்றவரும்
          காட்டாயம் என் எழுத்தைக் கண்டு;
                    கலங்குகின்றார் கவலைகளில் நின்று!


மானுடன்நான் என்றாலும்
     மற்றவர்போல் இல்லாமல்;
                    மானமிகும் நெஞ்சுரத்தால் நின்று;பொய்
          மாய்ந்திருக்க எழுதுகிறேன் இன்று!

மானமின்றி நாணமின்றி
     மாக்களென வாழுபவர்
          மனந் திருந்த வேண்டுமெனும் நோக்கம்;
                    மாகவிஞன் பாரதியின் தாக்கம்!

ஆனவரை, நான் அவரை
     அடையாளம் கண்டு கொண்டு
          அவர்திருந்த நான் எழுதும் பாட்டை;
                    ஆணவம்போல் சொல்பவர்தான் ஓட்டை!

பூனைகளும் யானைகளும்
     புரிந்து கொண்டால் என் எழுத்து;
                    புதுப் படையல்போல் விளங்கும் விருந்து;
                    புல்லருக்கோ மனம் கசக்கும் மருந்து!

இவண்-
கிருஷ்ணன்பாலா
14.10.2011

Sunday, October 9, 2011

நான் எழுதும் சுவிசேஷங்கள் (பகுதி:1)

 


சுவிசேஷம்:1
----------------------------

கண்ணுடையோர் காணுங்கள்;
காதுடையோர் கேளுங்கள்;
எண்ணமுடையோர் எழுதுங்கள்;
இதயம் உடையோர் திறவுங்கள்.


நல்ல கருத்துக்கள்
நாலா திசைகளிலும் பரவட்டும்!
§ 
சுவிசேஷம்:2
----------------------------------
முன்னோர் முறைமைகளையும்
வார்த்தைகளையும்
நம்புவதில் நான் ஒரு மூடன்;
கேள்வியே கேட்க மாட்டேன்.


பின்னோருக்கு அதை எடுத்துச் சொல்வதில்
ஒரு கண்டிப்பான ஆசிரியன்;
தேவையற்ற கேள்விகளை அனுமதிக்க மாட்டேன்.

உண்மையை அறிந்து கொள்வதில்
நான் மாணவன்.
கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்பேன்.

§ 

சுவிஷேம்:3
----------------------
நான்
விதைகளைத் தூவினேன்:


அவற்றில் பல
களிமண்னில் வீழ்ந்து
வீணாய்ப் போயின…


இன்னும் பல
பாறைகளில் வீழ்ந்து
பட்டுப் போயின…


மேலும் சில
களர்நிலத்தில் வீழ்ந்து
கருகிப் போயின…


சில
நல்ல நிலத்தில் வீழ்ந்து
கவிதைகளாய்
நிறைந்த விளச்சலைத் தந்தன!

§
சுவிசேஷம்-4
--------------------------------


காதலில் மூழ்கியோர்
கரை சேருவதில்லை;
ஏன்…
அதுஓர் சுழல் நீரோட்டம்;
அதன் சுழலில்
அடித்துச் செல்லப்பட்டு விடுகிறார்கள்.
                     
§


சுவிசேஷம்:5
-------------------
புகழ்வது என்பது
கலைஞர்களுக்குப் பிடிக்கும்;

புகழாமல் இருப்பது
கருமிகளுக்குப் பிடிக்கும்;

புகழாமல் புகழ்வது
புலவோர்க்குப் பிடிக்கும்;

புகழையே விரும்பாதிருப்பது
ஞானியருக்குப் பிடிக்கும்!

§
சுவிசேஷம்:6
-----------------------


அன்பை விதைத்தவன்,
ஆனந்தத்தை அறுவடை செய்கிறான்;


வம்பை வளர்த்தவன்
வழக்கை அறுவடை செய்கிறான்;

பணத்தைப் புதைத்தவன்

பாவத்தை அறுவடை செய்கிறான்.


§

சுவிசேஷம்-7
-----------------------------------

முட்டாள்களுக்கு நடிக்கத் தெரியாது;
சபையில் கூட அவர்களின்
இயல்பு மாறாது;


அறிஞன் அவனிடமிருந்தும்
கற்றுக் கொள்கிறான்!


அறிஞர்களுக்கு நடிக்கத் தெரியும்;
சபையில் கரகோஷம்
பெறத் தெரிந்த அவர்கள்
முட்டாள்கள் முன்னிலையில்
நடிக்கத் தெரிந்தவர்கள்!

§சுவிசேஷம்:8
---------------------------
வேல் உள்ளவன் ’வேலன்
சரி....
அப்படியென்றால்-
வில்லை வைத்திருப்பவன்
வில்லன் ஆகிறான்;
அதேபோல்-
மூடு உள்ளவன்:
மூடன் தானே?
§   சுவிசேஷம்- 9
--------------------------------

‘எப்பொழுதும் கவலைகளில்
இணங்கி நிற்பான் பாவி’
என்றான் பாரதி.

கடந்த காலக் கவலையைச்
சிந்திப்பவன், அதன் ஆழத்தில்
மூழ்கி மடிகின்றான்;அவன் பாவி.


நிகழ்காலத்தை நிர்வகிக்கத்
தெரிந்தவனே
எதிர்கால மாளிகைக்கு
அடித்தளம் இடுகின்றான்;அவன் அறிவிஜீவி!

§  
             

சுவிசேஷம்:10
---------------------------------

மூடர்களின் சபையில்
முதல்வனாய்
இருப்பதை விடவும்-
அறிஞர்களின் பின்னே
அடிமையாய்
இருப்பதில் பெருமைப் படுகிறேன்.

                           §


சுவிசேஷம்:11
----------------------------


“தோல்விகளைப் பற்றிக்
கவலைப்படுபவன் கோழை;
வெற்றிகளில்
மூழ்கி விடாதவனே வீரன்


§ 

சுவிசேஷம்-12
-------------
உண்மையற்ற புகழ்ச்சியில் மயங்குவதும்;
நேர்மையற்ற நடத்தைகளில் நீந்துவதும்
தற்கொலைக்கு நிகரானது.
அதில் உங்கள் மனசாட்சி
தூக்கிட்டுக் கொள்கிறது’
§ 

சுவிசேஷம்:13
-----------------------------------
அயோக்கியர்களின்
கடைசிப் புகலிடம்
அரசியல்தான்;
இது அந்தக் காலம்.
இப்பொழுது ஆன்மீகம்.
§  

சுவிசேஷம்:14
------------------------------------
செல்வத்தின் சிறப்பு
அது சேர்வதில் அல்ல;
எப்படிச் செலவிடப் படுகிறது
என்பதில்தான்.

§ 


சுவிசேஷம்:15
------------------------------
சிரிக்கத் தெரிந்தவன்,மனிதன்;
சிந்திக்கத் தெரிந்தவன் அறிஞன்;
சிந்தித்ததை எண்ணிச் சிரிப்பவன்:ஞானி

§ 


சுவிசேஷம்:16
-------------------------------
‘எண்ணற்ற நண்பர்கள் எனக்கு’
என்பது பெருமையன்று;
எண்ணிப் பார்க்கும் நண்பர்கள்
வட்டமே பெருமைக்குரியது!
இவண்-
கிருஷ்ணன்பாலா
9.10.2011

Thursday, October 6, 2011

முகநூல் முற்றம்-அறிவிப்பு : 4 / 5-10-2011

நண்பர்களே,வணக்கம்.
முகநூல் முற்றம்’ ( Elite Friends in FaceBook) என்று இந்தக் குழுமம் நம்மிடையே எழும் நயமான சிந்தனைகள இங்கே பொதுவில் வைக்கவும் அது குறித்து, ஆரோக்கியமான வாதங்களை வளர்த்துக் கொள்ளவும்தான்.


முகநூலில் ஆயிரக் கணக்கில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாற்றம் செய்து வருகிறார்கள். ஆனால் அவற்றில் பெரும்பாலும் சின்னஞ் சிறார்களின் கிறுக்கல்களாகவே மாறி,அது மாசுபட்டுத்தான் போயிருக்கிறது.


நல்ல தகவல்களும் கருத்துக்களும் இதில் கரைந்துபோய் விடுகின்றன.


இயன்றவரை, இலக்கியத்தரம் வாய்ந்த எண்ணங்கள்;தெளிந்த அரசியல் கருத்துக்கள்,தேவையான சமூக எழுச்சிச் சிந்தனைகள், கட்டுக்கோப்பான தரக் கவிதைகள். கருத்துரையாடல்கள்,நேர்முகக் கருத்தரங்கங்கள், மாவட்டம் தோறும் முகநூல் முற்றம் அமைப்பு போன்ற பயனுள்ள செயல்முறைகளை வகுத்து, மக்களிடையே மகத்தானதோர் சிந்தனைக் களமாக இயக்கும் முயற்சிகள் தொடங்கப் படவுள்ளன.


முகநூலில் அறிவார்ந்த சிந்தனைகளோடு பங்கு பெறும் யாவரும் கூடுகின்ற முற்றமாக இது இயங்கும்.


இந்த நோக்கத்தை விரும்புவோர்,ஆதரிப்போர்,இது வளர வேண்டும் என் எண்ணுவோர்,இதில் பங்கு கொண்டு முன்னிலையில் நிற்க விரும்புவோர் யாவருக்கும் இதுவே அழைப்புக் கடிதம்.


அவ்வாறு இதை ஏற்கின்ற நண்பர்கள் எல்லோரும் இதற்கான விதி முறைகள், நெறிமுறைகள் குறித்துத் தாங்கள் எண்ணுபவற்றைச் சுருக்கமாக, தெளிவாக வரிசைப் படுத்தி எனது தனி அஞ்சலுக்கு எழுதலாம்.


நீங்கள் எழுதும் சிறந்த எண்ணங்களை ஏற்றுக் கொண்டு அவற்றைமுக நூல் முற்றத்தின் நெறிமுறைகளிலும் சட்ட விதிகளிலும் சேர்ப்போம்.


தகுதி மிக்கவர்கள் என்று தெரிவு செய்யப் படுவர்கள் முகநூல் முற்றத்தின் புரவலர்களாகவும் ஆலோசனைக் குழு அங்கத்தினர்களாகவும் நிர்வாகிகளாகவும் ஏற்கப் படுவார்கள்.


இங்கு எனது நண்பர்களாக மட்டுமின்றி,முகநூலில் உயர் நோக்கதோடும் சாதி,இனம்.மதம் கடந்து மக்கள் நலக் கருத்துக்களோடும் இணைந்திருப்போர் யாரும் இம்முற்றத்தில் இடம் பெறலாம்.


இம்முற்றத்தில் வெறும் பார்வையாளராக இருப்போர் இதன் நிர்வாகக் குழு எதிலும் பங்கு பெற முடியாது.அவர்கள் வெறும் பார்வையாளராக மட்டுமே தொடரலாம். எனினும் எவ்விதப் பங்களிப்பும் கூட இல்லாதவர்கள் - குறைந்த பட்சம் கருத்தாடல்களில் கலந்து கொள்ளாதவர்கள் - விரைவில் பெயர் நீக்கம் பெறுவார்கள்.


இந்த சமூக வலைத்தளத்தின் உண்மையான மேன்மையை உணர்வுப் பூர்வமாக உணர்வோர் இனி இது குறித்து எழுதலாம்.நன்றி.


அன்புடன்,
கிருஷ்ணன்பாலா
 5.10.2011