Monday, October 24, 2011

நானும் அவளும்! (நினைவுக் குறிப்புக்கள்:3)

வளுக்கும் எனக்கும் 17 வருடப் பந்தம். இந்த 17 வருடங்களில் அவள் என்னை ஒட்டிக் கொண்டும் நான் அவளைக் கட்டிகொண்டும் திரிந்த காலங்கள்......
....ம்ம்ம் அது ஒரு கனாவில் உலா வந்ததுபோல்....

நான் இயல்பாகவே நமது கலாசாரக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பவன்; கடந்த 6 வருடங்களுக்கு முன்பு இக் கொள்கைகளில் நான் கொண்டிருந்த  கடுமையான அணுகுமுறைகள் ’அவள் பாதை வேறு’; ‘எனது பாதை வேறு’என்பதைக் காட்டி, எனது பாதையிலிருந்து அவளை .’ஒவ்வாமை’ என்னும் பிடிவாதம் பிரித்து விட்டது.

ஆம்!
அவளுக்கு நானும் நான் அவளுக்கும் ஒவ்வாதவர்களாக மாறி விட்டோம்.

17 ஆண்டுகளாக என் உணர்விலும் உள்ளத்திலும் இரண்டறக் கலந்து உதிரப் பாசம் கொண்டிருந்த அவளை மறந்து விடுவது என்ற வைராக்கியத்துக்கு நானும் இடம் அளிப்பதைத் தவிர வேறு வழி இல்லாது போயிற்று.

அவ்வாறே 6 ஆண்டுகளும் சென்றுவிட்டன.

எனினும்-

அவ்வப்போது, என் உள்ளத்தில் அவளைப் பற்றிய உணர்வுகளும் எண்ணங்களும் தோன்றி “எங்கேயாவது.... அவளை, வழியிலாவது பார்க்க வேண்டும்” என்கிற தடுமாற்றம் வரத்தான் செய்தது.

என்னை நெருங்கிப் பழகிய நண்பர்கள், என் மீது கழிவிரக்கம் கொண்டு,அவள் இருக்கும் இடம் தெரிந்து என்னை அழைத்துப் போகவோ அல்லது அவளைக் காண்பதற்கோ விரும்பி என்னை வற்புறுத்திய போதும் நான். ‘ஞான வைராக்கியத்’தோடு மறுத்து விடுவேன்.

 “நான் அவளைப் பார்ப்பதற்கு என்ன இருக்கிறது?” என்று எதிர் வாதம் செய்து அவர்களையும் பேசாதிருக்கச் செய்து விடும் எனது கோபம்.

என்றாலும்-

எனது புகைப் பட ஆல்பத்தில் அவள் என் தோள்மீது தொற்றிக் கொண்டு இருப்பதும் எனது பேனாவைப் பிடுங்கி அவள் கர்ம சிரத்தையோடு எழுதிக் கொண்டிருப்பதும் அவளுடைய பிறந்த நாள் காலப் புகைப்படங்களில் ஒரு தேவதை போல் குதூகலித்துக் கொண்டிருப்பதுமான காட்சிகள் என் கண்ணில் படும்போதெல்லாம் நெஞ்சில் ஒரு ஈரம் இளகி விழித்திரையை மறைத்துக் கொண்டு சற்று தடுமாற வைத்து விடும்.

ஆனால் அப்போதெல்லாம் “வீரன் நீ, விழிநீர் சிந்தலாமா?” என்றுதான் எனது மனச் சாட்சி கேட்கும்.உணர்ச்சிகளிலிருந்து என்னை விடுவிப்பது அதுதான்.

எனது தனிமையின் கொடுமையைப் போக்கிக் கொள்ள முகநூல் எனக்கு வாய்த்தது.

எழுதினேன்;எழுதினேன்;ஏராளமான விஷயங்களைக் கட்டுரைகளாகவும் கவிதைகளாகவும் கருத்துக்களாகவும் எழுதினேன். ஏராளமான நண்பர்கள் முகநூலில் எனக்குக் கிடைத்தனர்;ஆனாலும் அவள் எனக்குக் கிடைக்கவில்லை.

திடீரென்று சமீபத்தில் ஒரு ஞானம் பிறந்தது..


‘அவள் இந்த முகநூலில் இருப்பாளே’....”தேடிப் பார்” என்றது மனம்.
அவள் பெயரை முக நூலில் ‘க்ளிக்’ செய்தேன்.

அட...அவள்தான்.....

தன் பெயரை மாற்றிக் கொள்ளாமல் எனது பெயரின் இனிஷியலுடன் அப்படியே முகநூலில் இருந்தாள்.

“நாம் சந்தித்து,பழைய உறவு கொள்ள வேண்டாம்.. ஆனால்,முகநூலில் நண்பர்களாகத் தொடர்ந்தால் என்ன?’

இதை அவளிடம் கேட்டுச் செய்தி அனுப்பிப் பார்ப்போமே” என்று ஒரு வகைக் கடமை உணர்வும் உறவின் கோடு போட,அவளை எனது முகநூலில் நண்பராக்கிக் கொள்ள இணைப்புக் கேட்டு ‘க்ளிக்’ செய்தேன்.
முகநூல் கணினியின் தானியங்கிச் சொடுக்கி சொல்லிற்று:

“YOU CAN’T CONTACT A STRANGER”

‘முன்பின் தெரியாதவருடன் நீங்கள் தொடர்பு கொள்ள முடியாது’ என்று சொல்லும் இந்தக் கணினிக்கு, அவள் எனக்கு ஒரு STRANGER (அதாவது அந்நியமானவள்) என்பது மட்டும் தெரிகிறது;ஆனால் 17 வருடங்களாக நானும் அவளும் ரத்தப் பாசத்தோடு பின்னிப் பிணைந்து வாழ்ந்த எங்களுடைய ‘தந்தை- மகள் உறவு’ என்ன என்பதுதான் தெரியவில்லை!

தெரியவில்லை என்பது கணினிக்கு மட்டுமா?
அவள் கற்ற கல்வி அறிவுக்கும்தான்!

-கிருஷ்ணன்பாலா
24.10.2011

1 comment:

V.Rajalakshmi said...

அந்நியமானவளிடம் நிலைத்த அநியாயப்பாசம்!