Sunday, October 2, 2011

வாழ்விக்க வந்த மஹாத்மா!


அருமை நண்பர்களே,வணக்கம்.

இன்று அக்டோபர் 2.
நமது தேசத்தின் தந்தை என்று கொண்டாடப்படும் அண்ணல் காந்தி அடிகளின் பிறந்த நாள்.

“வாழ்க நீ எம்மான்;இந்த வையத்து நாட்டிலெல்லாம் 
தாழ்வுற்று வறுமை மிஞ்சி.விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர் பாரததேசம் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா, நீ,வாழ்க; வாழ்க!”

-என்று 

ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு முன் ‘,மஹாத்மா இவர்' என்று,
அண்ணல் காந்தி அடிகளை இந்தத் தேசத்துக்கு அடையாளப் படுத்தி வாழ்த்தினான், நம் மகாகவி பாரதி.

பாரதியின் வாக்குப் பொய்த்ததில்லை;பொய்யானதை அவன் புகன்றதும்  இல்லை!

-அவன் அறிமுகப்படுத்திய ’மகாத்மா’வை நாமும் இன்று நினைந்து போற்றுகின்றோம்!

அவரைப் போற்றும் இதே நாளில்-
அவரையும் அவரது கொள்கைகளையும் அவமானப்படுத்தி, நாட்டைச் சுரண்டும் கயவர்களையும் கருத்தில் வைக்க வேண்டியிருக்கின்றது!.

நண்பர்களே, நம் பாரதத்தின் உறவுகளே,

உலக வரைபடத்தில் இந்தியாவை இமயச் சிகரத்தில் ஏற்றி வைத்தவர் உத்தமர் மகாத்மா காந்தி.

அவர் வளப்படுத்தி வலிமை ஆக்கிய இயக்கம் ’இந்திய தேசிய காங்கிரஸ்’

தேச பக்தி கொண்டோரை எல்லாம் ஒரு குடையின் கீழ் அணி திரட்டி, அஞ்சா நெஞ்சோடு அஹிம்சை வழியின் அடையாளாமாக, தூய கதராடையை அணியச் செய்து, அதே தூய்மையோடு தாய் நாட்டின் உரிமைக்காகப் பிரிட்டீஷ் அரசுக்கு எதிராகப் போராடச் செய்து உலகமே வியந்த விடுதலையைப்  பெற்றுத் தந்தார், அண்ணல் காந்தி அடிகள்.

அதற்கான தேசிய இயக்கமாய் அவர் தலைமையில் வலிமை பெற்றதுதான் இந்திய தேசிய காங்கிரஸ்

அண்ணலின் வாழ்வில் இந்திய தேசியக் காங்கிரஸின் பக்கம் அவர் சிந்தை நுழைந்த காரணமும் அந்த இயக்கத்தை இந்தியாவின் மாபெரும் தேசிய இயக்கமாக வலிமையடையச் செய்து ,பாரத விடுதலைக்காக அவர் நடத்திய போராட்டங்களும் மிகப் பெரும் சரித்திரத்தைப் படைத்தவை.

இன்று, உலகின் பல நாடுகளில் தொடர்ந்திருக்கும் சர்வாதிகார அடக்குமுறைகளையும் இனப் படுகொலைகளையும் மனித குலமே அஞ்சி நடுங்கும் கொடூரத் தண்டனைகளையும் உணர்வோர், உத்தமர் காந்தி அடிகள் இந்திய மக்களின் சுதந்திரத்துக்குப் போராடி, கத்தியின்றி ரத்தமின்றிப் பெற்றுத் தந்த பெருமையின் ஒப்பீட்டில் பேதலித்துப் போவார்கள்.

இன்றைய இளைய சமுதாயத்துக்கு அண்ணல் காந்தி அடிகளின் கொள்கைகளும் வாழ்வும் ஒரு வரலாற்றுப் பதிவு மாத்திரம்; ஆனால் அவர் பெயரால் அரசியல் நடத்தும் அயோக்கியர்களுக்கு அது ஒரு பிட்சைப் பாத்திரம்.

அதை ஏந்திக்கொண்டுதான் இந்த அயோக்கியர்கள் இன்று வரை தேர்தல் திருவிழாக்களில் இரக்கப்பட்ட இளிச்சவாய மக்களிடம் எப்படியோ ஓட்டுப் பிச்சை பெற்று, மக்களை ஓட்டாண்டிகளாக்கும் வித்தையில் ’கை’ தேர்ந்தவர்களாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

அண்ணல்காந்தி இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்த கையோடு இந்திய தேசிய காங்கிரஸைக் கலைத்து விடும்படித்தான் சொன்னார். ஆனால்,ஆட்சிக் கட்டில் ஏறும்வரை, காந்தி அடிகளின் வாக்கே தங்களின் வேதம் எனத் தவம் கிடந்த ‘காந்தி குல்லாய்கள்’ ஆட்சி அதிகாரம் பெற்றவுடன் மெஜாரிட்டியாகக் கூடி காந்தி அடிகளுக்கே குல்லாய் போட்டு விட்டனர்.

அதன் முடிவாக.அண்ணலின் அகச் சான்றுக்கு மாறாகத்தான் இந்திய தேசிய காங்கிரஸ் ஆளும் கட்சியாய் ஆட்சியைத் தொடர்ந்தது.அதன் பலனாகத்தான் அன்றைய காங்கிரஸ் பெரும் தலைவர்கள் ஆட்சி நிர்வாகப் பதவியைப் பங்கு போட்டுக் கொண்டனர்.

அண்ணல் காந்தி அடிகள், ‘இந்தியா சுதந்திரம் பெற்ற கையோடு ‘இந்திய தேசிய காங்கிரஸை’க் கலைத்துவிட வேண்டும்’ என்று கருதியதற்கு காரணம், ‘இந்திய தேசிய காங்கிரஸ் என்ற பெயரால் நாட்டை ஆளுபவர்கள் அதன் தூய்மையான லட்சியங்களுக்கு எதிராகச் செயல் பட்டு, இந்த இயக்கம் பதவிப் பித்துக் கொண்டவர்களின் கூடாரமாகி விடக் கூடாது’ என்ற தீர்க்க தரிசனம்மிக்க சிந்தையால்தான்.

என்ன செய்வது? அவர் கவலைப் பட்டது நிஜமாயிற்று.
நிஜமான கவலை எல்லாம் அதிகாரத்தில் நிலைத்து விட்டது

விளைவு:
வெள்ளை வெளியேறிற்று; இருட்டு நம்மைக் கவ்விற்று.

கடந்த 64 ஆண்டுகளாக இந்தியா அடைந்த முன்னேற்றம் யாரால்? என்று எந்தக் காங்கிரஸ்காரனாவது கேட்பானானால், இந்தியா அடைந்த முன்னேற்றத்தை விட, அடையாத முன்னேற்றங்கள் என்ன என்பதைச் அதே காங்கிரஸ்காரனைச் சிந்திக்கச் சொல்லுங்கள்.

நேற்று முளைத்த சிங்கப்பூரும் மலேஷியாவும் அடைந்த வளர்ச்சியில் பாதிகூட இந்தியா முன்னேறவில்லை; எல்லாவளங்களும் பெற்ற இந்நாடு எந்த வளமும் இல்லாத சுவீடன்,சுவிட்சர்லாந்து முதலான குட்டி நாடுகளுக்குப் பின்தங்கித்தான் உள்ளது
.
கேரளாவின் அரைப்பங்கு பங்கு நிலப் பரப்புக்கூட இல்லாத இஸ்ரேலின் வியத்தகு வேளாண்மை வளர்ச்சியும் அதன் ராணுவக் கட்டுக் கோப்பும் இந்தியாவுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றது.

எரிமலைகளாலும் சுனாமிச் சீற்றங்களாலும் அவ்வப் போது உருக்குலைந்து போனாலும் பொருளாதாரம்,மோட்டர் வாகனப் பொறியியல்,விவசாயம் மற்றும் மின்னணுப் பொருட்கள் உற்பத்தி முதலானவற்றில் ஜப்பான் நாடு அடைந்துள்ள அசுர வளர்ச்சியின் முன்னே நாம் சுனாமியில் சிக்குண்டவர்கள் போல் அல்லவா இருக்கிறோம்?

மக்கள் தொகையைப் பெருக்கியதல்லாது, நமது நாடு வேறு எதில் முதல் தர சாதனை படைத்துள்ளது?

கேளுங்கள் இந்தக் காங்கிரஸாரை.

எண்ணால் எழுதியும் படிக்கவும் முடியாத கோடிகளைக் கொள்ளையடித்த கூட்டத்தின் எண்ணிக்கையைப் பெருக்கியதுடன் அல்லாமல் அவர்களுக்கு வக்காலத்து வாங்கிப் பேசும் மானமற்ற செயல்களில் அல்லவோ இவர்கள் பல்லிளித்துப் பாராளுமன்றத்தில் பேசுகிறார்கள்?

அண்ணல் காந்தி அடிகளின் பெயரை உச்சரிக்கும் தகுதி கடுகளவும் இல்லாத இவர்கள் போடும் கபட வேடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு? 

மவுனமாகத்தான் அந்த மகாத்மா தலை குனிந்து நிற்கிறார்....
சிலையாக நம்தேசத்தின் பல்வேறு நகர்களில்.

அண்ணல் காந்தி அடிகள் தனது சுதேசி ராட்டையில் நூற்றெடுத்த சாதாரணக் கதர் நூல் இந்தியத் தேசீயத்தையே இறுகக் காட்டிக் காத்த விந்தையை நாம் அறிவோம்!

ஆனால்-
அதே ராட்டையைக் கொண்டு இந்தக் காங்கிரஸார் கயிறு திரிக்கிறார்களே, அந்த வித்தையைத்தான் நாம் அறியோம்!

அண்ணலின் பெயாரால் நாட்டில் அக்கிரம,அயோக்கிய ஊழல் ஆட்சி செய்வோரை மஹாத்மா காந்தி அடிகள்தான் மீண்டும் பிறப்பெடுத்து வந்து சாட வேண்டும். 

ஆனால் அஹிம்சா மூர்த்தியாக அல்ல; இதோ நமது பிரார்த்தனையின் வடிவாக,இப்படி,இங்கு:


ராட்டையை விட்டு;வீர
ரவுத்திரம் ஆக;கையில்
சாட்டையை எடுத்து வாரீர்!
சத்திய மூர்த்தீ;அன்று
காட்டிய அகிம்சை கெட்டு
கடுஞ் சினம் ,கொண்டு,இந்த
நாட்டையே சுரண்டும் பேரை
நாசம்நீ செய்ய வேண்டும்!


அஹிம்சா மூர்த்தி நரசிம்ம மூர்த்தியாய் வர வேண்டுவதே தேசப்பற்றுடையோர் செய்யும் பிரார்த்தனை ஆகிவிட்டது, இன்று!,

இவண்-
கிருஷ்ணன்பாலா
2.10.2011
Post a Comment