Monday, May 30, 2011

மக்களுக்கு மலிவாக! (எழுதுகிறேன் - தொடர்:7)

நண்பர்களே,


வணக்கம்.

சுமார் 400 கோடி செலவில் திட்டமிடப்பட்டு,ரூபாய் 1100 கோடி என விழுங்கி எழுப்பப்பட்டு, சென்னை அரசினர் தோட்டத்தில் ஆரவாரமின்றி புழுங்கிக் கொண்டிருக்கும் புதிய தலைமைச் செயலகம் பற்றிய சர்ச்சைகள் தொடர்கின்றன.


மேடம் ‘ஜெ' தலைமையில் அமைந்துள்ள புதிய அரசு,பழைய தலைமைச் செயலகத்திலேயே செயல்படுவதெனத் தீர்மானித்து விட்டது.


’புதிய மொந்தையில் பழைய கள்’ என வேடமிடாமல் பழைய மொந்தையைத் தூய்மைப் படுத்தி,அதில் பருகிடத் தூய்மையான நீரை வழங்க உறுதி பூண்டிருக்கும் மேடம் ‘ஜெ’அவர்களுக்கு நாம் நல்வரவு கூறத்தான் வேண்டும்.


பல கோடிகளை விழுங்கிய புதிய தலைமைச் செயலகக் கட்டிடம் பற்றிய வழக்கு உயர் நீதி மன்றத்தில் இருக்கிறது. எனவே புதிய அரசு எடுத்துள்ள முடிவு சரியா,தவறா என்ற சர்ச்சையில் நாம் செல்ல வேண்டியதில்லை; எனினும் ’புதிய தலைமைச் செயலகத்துக்குள் நுழைவதில்லை’ என்ற இந்த அரசின் மாறாத நிலை உறுதி செய்யப் படுமானால், சரியோ,தவறோ, சென்னை அண்ணா சாலையின் மகுடமாகவும்,சென்னை மாநகரின் புதிய கட்டிடக் கலைக்கு அச்சாரமாகவும் அமைந்துவிட்ட ’இந்த வளாகத்தை மக்களுக்காக மலிவாக்கிட,இந்த அரசு முன் வர வேண்டும்; அதற்கான செயல் திட்டங்களை விரைவாக வகுத்திட வேண்டும்’ என்ற யோசனையை நாம் முன் வைக்கின்றோம்.


இன்று-
இட நெருக்கடியால் மட்டுமல்ல;போக்குவரத்து நெருக்கடியாலும்கூட அரசுப் பணியாளர்கள் பலரும் தங்கள் அலுவலகங்களைக் குறித்த நேரத்தில் அடைவதில் மிகவும் சிரமப் பட்டுக்கொண்டிருக்கின்றார்கள், அரசுப் பணி மற்றும் நிர்வாகம் தொடர்புடைய விஷயங்களுக்காகவும் பொது மக்களும் அரசு அலுவலகங்களின் பல்வேறு பிரிவுகளைத் தேடிச் செல்வதில் மிகவும் இன்னலுக்குள்ளாகி வருகின்றனர். காரணம், அரசுத் துறையின் பல்வேறு அலுவலகங்கள் சென்னையில் ஓரிடத்தில் இல்லாமல் பல்வேறு பகுதிகளில்,குறிப்பாக, பாரிமுனை,சேப்பாக்கம்,கிண்டி, தேனாம்பேட்டை என்று பரவலாக விரவியிருக்கின்றன.


நிர்வாகக் காரணங்களுக்காக அரசு ஊழியர்களும்,கோரிக்கை தொடர்பாக பொது மக்களும் இந்த அலுவலகங்களை நாடிச் செல்வதில்,கால விரையமும்,பண விரையமும் மட்டுமின்றி சொல்லொணா மன உளைச்சல்களுக்கும் ஆளாகி வருவதைக் கண்கூடாகக் காண்கின்றோம்.


இதனைக் கருத்தில் கொண்டு,இந்த அரசு,சென்னை நகரில் பல் வேறு இடங்களிலும் ஆங்காங்கே இருக்கின்ற அரசு அலுவலகங்களை ஒரே இடத்தில் - ஒரே வளாகத்தில் கொண்டு வருமானால்,அதைவிடச் சிறந்த நிர்வாக முடிவு வேறு ஒன்றும் இருக்க முடியாது. இதை எவரும் குறை சொல்லவும் முடியாது.


அல்லது,பெரும் பொருட் செலவில் உருவான இந்த வளாகத்தை சர்வ தேசத் தரம் வாய்ந்த தொழில் மற்றும் வணிக வளர்ச்சி மையமாகவோ, உயர் கல்வி ஆராய்சிக்கான சர்வதேசப் பல்கலைக் கழக வளாகமாகவோ, உயர்தர மருத்துவ ஆய்வு மைய வளாகமாகவோ  உருவாக்க அரசு முன்வர வேண்டும்.


மக்களுக்கு மலிவாகத் தரக்கூடிய உயர்ந்த நிர்வாகத் தரம் வாய்ந்த கொள்கை முடிவாகவும் இது அமைந்து,எதிர்கால வரலாற்றில் ‘ஜெ’அரசுக்கு நிலைத்த பெயரும் கல்வெட்டில் பொறித்து வைக்கப்பட்டிருக்கும்!

தலைமைச் செயலகம் பற்றிய விமர்சனத்தில், அரசியல் காழ்ப்புணர்ச்சியில் செயல்படுகிறாரோ என்ற விமர்சனத்தை வீழ்த்தி,’தரமான தகுதிமிக்க நிர்வாக முடிவுகளில் கவனம் செலுத்துகிறார்,’என்ற பெருமையை ’ஜெ’ அடையவும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் வீழ்த்தும் சாமர்த்தியத்தை நிலை நாட்டவும் இது ஒரு வாய்ப்பு.

சிந்திப்பாரா, மேடம்’ஜெ’.?

நட்புடனும் நடு நிலையுடனும்-
கிருஷ்ணன் பாலா
29.05.2011

Sunday, May 15, 2011

நட்புடனும் நியாயத்துடனும் (எழுதுகிறேன் - தொடர்:6)

 அன்புக்கும் நட்புக்கும் இனிய நண்பர்களே,

வணக்கம்.

’நட்புடனும் நடு நிலையுடனும்’ என்று நடந்து முடிந்த தேர்தல் குறித்தான கருத்துப் படைப்பை இங்கே 14.5.2011 அன்று பதிவு செய்து நண்பர்களுக்கும் அனுப்பியிருந்தேன். அதைப் படித்துத் தங்களுடைய எண்ணங்களையும் பிரதிபலித்து நண்பர்கள் பலரும் எனக்கு எழுதியுள்ளனர்.அவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் உரித்தாகின்றன.

இதில், திருமதி கல்யாணி ரகுராம் ”இதற்கு மாற்று வழி என்ன சொல்லுங்கள்? யார் அந்த அறிவுள்ள தலைவன்?” என்று கேள்வி எழுப்பிருந்தார்.’இந்தக் கேள்வி தனி ஒருவரின் உணர்வன்று; நாடு பற்றியும் நல்ல மாற்றங்கள் தேவை என்பது பற்றியும் சிந்திப்பவர்களின் கேள்வி’ என்பதால் இதற்கு எனது எண்ணங்களையும் பதிலாகச் சொல்வது தேவையாகின்றது.

ஆரோக்கியமான அரசியலுக்கும் அறநெறி ஆட்சிக்குமான வழிமுறைகள் என்ன என்பதை அறிவுடையோர் யாவரும் சிந்திக்க வேண்டியிருக்கிறது;அது ஒவ்வொருவரின் கடமையும்கூட.

எனவே, தேர்தல் பற்றிய விசாரத்தைத் தொடங்கிய.நான்,அதற்கான வழிமுறைகளையும் எனது கருத்தாகச் சொல்லியாக வேண்டும் அல்லவா?

இதோ,எனது சிந்தனைகளைத் தொகுத்து இங்கே சுருக்கமாக உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.இதைத் தீட்டுவதும் திட்டுவதும் அறிவார்ந்த நண்பர்களாகிய உங்கள் பொறுப்பு.

‘அரசியலில் அறிவுள்ள தலைவன் கிடைப்பதற்கு முன், நாட்டில் ஏற்படுத்தப் படவேண்டிய அரசியல் அமைப்பு மாற்றங்கள் இவையாக இருப்பின் அந்த அறிவுள்ள தலைவன் யார் வேண்டுமானலும் இருக்கலாம்’ என்பதே என் துணிபான எண்ணம்.
எனது கருத்துக்களின் சுருக்கமான தொகுப்பு இதுதான்:

1.முதலில் 49 ஓ’வை ஆதரிப்பது.

2. அப்பழுக்கற்ற .உயர் நீதிமன்ற-உச்ச நீதி மன்ற நீதிபதிகளின் (ஓய்வு பெற்றவர்கள்) குழுவின் கீழ் தேர்தலுக்கு நிற்போரின் தகுதிகளை ஆய்வு செய்து,தகுதி பெற்றவர்களை மட்டும் தேர்தலில் அனுமதிப்பது.

3.தேர்தலில் நிற்பதற்கென்ற தகுதிகளை முன்னதாகவே தேர்தல் கமிஷன் கண்டறிந்து கொள்ளவும்,இதற்காக, தேர்தலில் நிற்க விரும்புவோருக்கென்று ஓர் தனித் தேர்வாணையம் உருவாக்கி அதன் மூலம், நடத்தப்படும் தேர்வுகளில் பங்கு கொண்டு நாடு,மக்கள்,அரசியல் சாசனம்,சட்டமன்ற நடைமுறைகள் இவை பற்றிய ஞானமும் அறிவும் உள்ளவர்கள்’என்ற சான்றிதழ்கள் பெற்றவர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும் என்ற அடிப்படைத் தேர்தல் விதிகளை ஏற்படுத்த வேண்டும்.

4.தேசம்,மக்கள் பணி,தனி மனிதர்களின் கடமையுணர்வு,கட்டுபாடான நேர்மை இவை பற்றிய அடிப்படை அறிவுத் தேர்வில் ‘தேர்வுச் சான்றிதழ்கள்’ பெற்றவர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க் முடியும் என்ற ஒரு சட்ட விதியை ஏற்படுத்தி,அத்தகைய அடிப்படைச் சான்றிதழ்கள் பெற்றவர்களை மட்டுமே தேர்தலில் நிற்க அனுமதிக்க வேண்டும். தேர்தலுக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும்;தேர்தலில் வென்றவர்களுக்கான ஊதியம் தவிர அவர்கள் வேறு ஒன்றையும் சம்பாதிக்க முடியாதவர்களாகவும் அவர்களுக்குக் கிடைக்கும் ஓய்வூதியத்தின் மூலம் மட்டுமே வாழ்நாள் முழுதும் வாழும் உத்திரவாதம் அளிக்கப் பட்டவர்களாகவும் தேர்தல் விதி முறைகள் கொண்டு வரப்படுதல். அதிகாரத்தில் இருக்கும் அவர்களைக் கடும் சட்டவிதிகள் மூலம் கண்காணிக்கவும் அதையும் மீறி .ஊழல் குற்றச் சாட்டுக்அலுக்கு ஆளானால் உடனுக்குடன் விசாரித்துத் தாமதமின்றித் தீர்ப்பளித்துத் தண்டனை வழங்கவும் உரிய சட்டங்கள் தேவை.

5.யாராயினும் குற்றச் சாட்டு நிருப்பிக்கப் பட்டால் அவர்களை நிரந்தரமாகவே அரசியலில் இருந்து நீக்கி,அவர்கள் சொத்துக்கள் முழுவதையும் அரசே கைக் கொண்டு இறுதி வரையில் அவர்கள் அரசு விடுதியிலேயே வாழும்படியும் அரசு தரும் உணவு,மருந்து இவற்றை மட்டுமே ஏற்றுக் கொள்ளவுமான கடும் சட்ட அமுலாக்கத்தைக் கொணர்வது;

6.ஊழல் செய்தவர்களை எக்காலத்திலும் தேர்தலில் நிற்கவோ,முறைமுகமாகக் கூட அதிகாரத்தில் பங்கு கொள்ளவோ சட்ட ரீதியாகத் தடை விதிப்பது; ஊழல் பேர்வழிகளின் நடத்தை நிரூபிக்கப் பட்டால் அவர்களுடைய சமுதாய ரீதியிலான உரிமைகள் அத்தனையையும் பறித்து, அவர்களை அரசின் பராமரிப்பின் கீழ் கொணர்வது (இதில் அரசு அதிகரிகளும் அடக்கம்)

7.ஜாதிகளுக்கு ஏற்ப வழங்கப் பட்டு வரும் சலுகைகளை நிறுத்திக் கொள்வதுடன் ,ஜாதிகளின் பேரில் எந்த இயக்கத்தையும் நடத்த அனுமதி மறுப்பது;மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் முன்னுரிமை மட்டுமல்ல;கால வரம்பையும் நிர்ணயிப்பது

8.தனி மனிதனின் வருமானத்தில் உச்ச வரம்பைக் கொணர்வது.

9.அரசுக் கருவூலத்தைக் கொண்டு,இலவசங்கள் வாரி வழங்கி,தன் கட்சி,தன் குடும்பம்,தன் கூட்டம் இவற்றை வளர்த்துக் கொள்வதும், ,இதை ‘தான்’ செய்ததாகச் சுய தம்பட்டம் அடித்து அதன் மூலம் ஓட்டு வங்கியைப் பெருக்கிக் கொள்வதுமான அயோகியத்தனமான அரசியல் கேடுகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பது.

10.குறுகிய காலத்தில் மிகப் பெரும் வளர்ச்சி அடையும் நிறுவனக்களையும் தனி மனிதர்களையும் மக்கள் மன்றம் முன்பு நிறுத்தி,தங்கள் வளர்ச்சிக்குரிய காரண காரியங்களை சட்ட ரீதியாக நிரூபிப்பதற்கான நீதி அமுலாக்கம்.

11. மக்களுக்குச் சேவை செய்யப் புறப்பட்டு விட்டதாகச் சொல்லி அரசியலில் கொள்ளையடிப்பதையும் அதிகார சுகங்களில் திளைக்கவும் திட்டமிட்டுச் செயல்படும் Extra Authority என்று சொல்லத்தக்கவர்களை வைத்துக் கொள்வதைக் கண்காணித்து மறைமுக அதிகார மையங்கள் செயல் படுவதைக் கடுமையாகத் தண்டிப்பது.

12.ஆட்சி நடத்தும் எவருமே தன்னை எஜமானர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பாங்கைக் கடுமையாகத் தண்டிக்கும் சட்ட விதிகளைக் கொணர்ந்து,அவற்றை அமுல் படுத்தும் மக்கள் மன்றக் குழுக்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகளின் கண்காணிப்பு கூழுக்கள் முதலானவற்றை சட்ட ரீதியாகச் செயல் பட அனுமதிப்பது

13.’ அரசியலில் அதிகாரம் பெற்றவர்கள் எஜமானர்கள் அல்ல;அவர்கள் மக்களின் சேவகர்கள்’ என்கிற உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் ஆட்சி நிர்வாகம் நடத்தும் கடுமையான சட்டங்களைக் கொணர்தல்.

14.பதவிப் பித்தில் அலையும் சமூக விரோதிகள் தாமகாவே தேர்தலில் நிற்க அஞ்சும் வகையில், உண்மையிலேயே ஒழுக்கமும் அறநெறிச் சிந்தனையும் மிகுந்தவர்கள் தேர்தலில் நிற்கவும் ஒரு சல்லிக்காசுகூட செலவு செய்யாமல் மக்கள் அவர்களைத் தேர்ந்து எடுக்கவுமான நடைமுறைகளைக் கொணர்தல்.

15.கல்வியை எங்கும் எதிலும் இலவசமாகச் செய்தல்.

16.ஒவ்வொருவருக்கும் வேலை வாய்ப்பை உறுதி செய்தல்.

17.முதியோர்களின் அமைதியான ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் செய்யும் அரசு நிர்வாகம்.

18..அனைவருக்கும் அரசு நடத்தும் இடுகாடும் சுடுகாடுமே கடைசிப் புகலிடம் என்பதைச் சட்டமாக்குவது

இவைபோன்ற சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்ட புதிய சித்தாந்த அரசியல் அணுகு முறைகளைச் சிந்திக்க மக்களைத் தூண்டுவோம்.

“நமக்குத் தொழில் கவிதை;நல்லவே எண்ணல்;நாட்டுக்கு உழைத்தல்;
இமைப் பொழுதும் சோராதிருத்தல்”

–இங்கே பாரதி சொன்னதையும் பகிர்ந்து கொள்கிறேன்:நண்பர்களே,நன்றி.

நட்புடனும் நியாயத்துடனும்-
கிருஷ்ணன் பாலா
15.5.2011

Saturday, May 14, 2011

நட்புடனும் நடுநிலையுடனும்! (எழுதுகிறேன்: தொடர்-5)

அறிவுசால் நண்பர்களே,
வணக்கம்.


"தங்களது துயரங்களைத் தாங்களே தேடிக் கொள்வதற்கு,மக்களுக்கு அளிக்கப்படும் வாய்ப்பே தேர்தல்” என்று சொன்னார் கவியரசு கண்ணதாசன்.


'தாங்க முடியாத அரிப்பைத் தீர்த்துக் கொண்டாக வேண்டும்’ என்ற தவிப்பில் கண்ணுக்குத் தட்டுப்படும் கொள்ளியை எடுத்துச் சொறிந்து கொள்வதைப் போல, தாங்க முடியாத கோபத்தைத் தீர்த்துக்கொள்ள,இந்தத் தேர்தலில் தவிர்க்க முடியாத கட்சிக்கே சரியாக வாக்களித்து விட்டனர் நம்பொது ஜனங்கள்.


அநீதியையும் அக்கிரமத்தையும் தண்டிக்கும் அஹிம்சை நெறியாக, ஜனநாயக முறையிலான வழியே தேர்தல் என்று வேண்டுமானால் நாம் பெருமை கொள்ள முடியுமே தவிர, அதுதான் ஒரே வழி என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.


அஹிம்சை விவேகமானதுதான்; ஆனால், வீரமானது அல்ல;


ஏனெனில் முள்ளை முள்ளால் எடுக்கும் முட்டாள்தனம் அங்கே முளைத்துக் கொண்டிருக்கின்றது.


(செய்த தவற்றைத் திருத்திக்கொள்ள அடுத்த தேர்தல்வரை காத்திருக்க வேண்டுகிறதே!)


நமது தேர்தல்கள், ஒரு திருடனைத் தண்டிக்கும் அதே சமயம் இன்னொரு திருடனையல்லவா மகா கெட்டிக்காரனாக மாற்றிக் கொண்டிருக்கின்றன?


’ஒரு திருடன் தண்டிக்கப்படும் திருப்தியில் இன்னொரு திருடன் திருந்தும்நிலை வருவதில்லை’ என்னும் வழக்கம் வந்து விட்டதே!


மானமும் வெட்கமும்கெட்ட கைதேர்ந்த நடிகர்களின் நாடகக் களமாக நமது அரசியல் முறைமை ஆகிவிட்டது.


காந்தியும் காமராஜர்களும் தேசமும் தேசபக்தியும் ஏட்டளவில் இடம் பெற்ற இலக்கண இலக்கியங்கள் ஆகி விட்டன; அவற்றைப் படித்துவிட்டு, இந்த நாடக அரங்கில் தங்கள் நடிப்புத் திறனைக் காட்டிக் கர கோஷத்தைப் பெற்றுவிடும் இந்த அரசியல்வாதிகளுக்கு ’பத்ம விபூஷண்கள்’ என்ன, ’பாரத ரத்னா’ விருதுகளையே வழங்கி விடுகின்றனர் மக்கள்.


இதற்கு அதிர்ச்சி வைத்தியம் தர எண்ணும் இந்திய இளைஞன் மாவோயிஸம் என்ற கூரிய கத்தியை எடுக்கும் புத்திக்குள் தன்னைப் புதைத்துக் கொள்ளப் புறப்பட்டு விடுவதையும் நாடு பார்க்கிறதே!


நண்பர்களே,


ஒரு சுழற் காற்று சூறாவளியாக மாறிவிடும்போது, கோபுரக் கலசங்களும் சாயும்; குப்பைகளாகிய எச்சில் இலைகள்கூட கோபுரத்தின் உச்சியில் மண்டும்.


அதில் அந்த எச்சில் இலைகள் தங்களைக் கோபுரக் கலசங்களாக எண்ணி இறுமாப்புக் கொள்ளும் ஈனக்குணத்தை இங்கே இயல்பாகக் கண்டு வெட்கப்படுவதைவிட, நாம் வேறென்ன செய்து விட முடியும், இந்த ஜன நாயக்தில்?


அரசியலில் வெற்றி பெற்றவர்கள் அடுத்த ஐந்தாண்டுக் காலம், தங்களைச் சர்வ வல்லமை படைத்தவர்களாக,இறுமாப்புக் கொண்டு எக்காளம் இடுவதையே கடந்த காலங்கள் நிரூபித்து வந்ததைக் கண்டோம்; இனியும் அதையேதான் காண்போம்.


ஏனெனில், கலி காலம் முடிவுக்கு வரவில்லை;அது தன் பிடியை மேலும் இறுக்கிக் கொண்டு இயல்பாகத் தனது ஆட்சியைத் தொடர்கிறது.


எனினும்-


இந்தத் தேர்தலில் ஜன நாயகத்தின் பெயரால் வெற்றி பெற்றவர்களை வாழ்த்துவோம்; அது பண்புள்ளவர்களின் கடமை!


ஆனால், இன்று இவர்கள் பெற்றுள்ள மகிழ்ச்சியையும் மக்களின் ஆரவாரத்தையும் அடுத்த தேர்தலிலும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்’ என்பதை வலியுறுத்தி,கண்ணதாசன் சொன்ன வார்த்தைகளையே வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமல்ல நம் பொது ஜனங்களுக்கும் நினைவூட்டி நிற்போம்:


கண்ணதாசன் சொன்ன வார்த்தைகள் இவைதான்:


’பணமும், பதவியும் மோசமானவை’ என்று ஞானிகள் ஏன் கூறினர்?
அவை வரக்கூடாதவனுக்கு வருவதாலும்; கிடைக்கக் கூடாதவனுக்குக் கிடைப்பதாலும்தான்.


சுடத் தெரியாதவன் கையில் துப்பாக்கி இருப்பதால், சுடத் தெரிந்தவனும் அவனிடம் சரணடைகிறான்.


ஆட்சி, ஒரு முட்டாளின் கையில் இருந்தால், அறிவுள்ளவனும் அவனுக்கு
அடிமையாகிறான்.


விதை இல்லாமல் புல் முளைக்கிறது; வேரில்லாமல் ரோமம் முளைக்கிறது. விதையும், வேரும் இல்லாமல் அரசியல் முளைக்கிறது.


நான்கு பேர் சேர்ந்து ஒரு பெண்ணைத் திருப்தி செய்வதைத் தர்மம் ஒப்புக் கொள்ளாது. ஆனால்,ஜனநாயகம் ஒப்புக் கொள்ளும்! காரணம், கட்சிகள் சேர்ந்து அரசு அமைப்பதை அது ஒப்புக் கொள்கிறதே!


அழுத்தமான ஜனங்களைத் திருத்தியமைக்க அறிவுள்ள தலைவன் வேண்டும்.


நட்புடனும் நடு நிலையுடனும்-
கிருஷ்ணன் பாலா
14.5.2011