Monday, May 30, 2011

மக்களுக்கு மலிவாக! (எழுதுகிறேன் - தொடர்:7)

நண்பர்களே,


வணக்கம்.

சுமார் 400 கோடி செலவில் திட்டமிடப்பட்டு,ரூபாய் 1100 கோடி என விழுங்கி எழுப்பப்பட்டு, சென்னை அரசினர் தோட்டத்தில் ஆரவாரமின்றி புழுங்கிக் கொண்டிருக்கும் புதிய தலைமைச் செயலகம் பற்றிய சர்ச்சைகள் தொடர்கின்றன.


மேடம் ‘ஜெ' தலைமையில் அமைந்துள்ள புதிய அரசு,பழைய தலைமைச் செயலகத்திலேயே செயல்படுவதெனத் தீர்மானித்து விட்டது.


’புதிய மொந்தையில் பழைய கள்’ என வேடமிடாமல் பழைய மொந்தையைத் தூய்மைப் படுத்தி,அதில் பருகிடத் தூய்மையான நீரை வழங்க உறுதி பூண்டிருக்கும் மேடம் ‘ஜெ’அவர்களுக்கு நாம் நல்வரவு கூறத்தான் வேண்டும்.


பல கோடிகளை விழுங்கிய புதிய தலைமைச் செயலகக் கட்டிடம் பற்றிய வழக்கு உயர் நீதி மன்றத்தில் இருக்கிறது. எனவே புதிய அரசு எடுத்துள்ள முடிவு சரியா,தவறா என்ற சர்ச்சையில் நாம் செல்ல வேண்டியதில்லை; எனினும் ’புதிய தலைமைச் செயலகத்துக்குள் நுழைவதில்லை’ என்ற இந்த அரசின் மாறாத நிலை உறுதி செய்யப் படுமானால், சரியோ,தவறோ, சென்னை அண்ணா சாலையின் மகுடமாகவும்,சென்னை மாநகரின் புதிய கட்டிடக் கலைக்கு அச்சாரமாகவும் அமைந்துவிட்ட ’இந்த வளாகத்தை மக்களுக்காக மலிவாக்கிட,இந்த அரசு முன் வர வேண்டும்; அதற்கான செயல் திட்டங்களை விரைவாக வகுத்திட வேண்டும்’ என்ற யோசனையை நாம் முன் வைக்கின்றோம்.


இன்று-
இட நெருக்கடியால் மட்டுமல்ல;போக்குவரத்து நெருக்கடியாலும்கூட அரசுப் பணியாளர்கள் பலரும் தங்கள் அலுவலகங்களைக் குறித்த நேரத்தில் அடைவதில் மிகவும் சிரமப் பட்டுக்கொண்டிருக்கின்றார்கள், அரசுப் பணி மற்றும் நிர்வாகம் தொடர்புடைய விஷயங்களுக்காகவும் பொது மக்களும் அரசு அலுவலகங்களின் பல்வேறு பிரிவுகளைத் தேடிச் செல்வதில் மிகவும் இன்னலுக்குள்ளாகி வருகின்றனர். காரணம், அரசுத் துறையின் பல்வேறு அலுவலகங்கள் சென்னையில் ஓரிடத்தில் இல்லாமல் பல்வேறு பகுதிகளில்,குறிப்பாக, பாரிமுனை,சேப்பாக்கம்,கிண்டி, தேனாம்பேட்டை என்று பரவலாக விரவியிருக்கின்றன.


நிர்வாகக் காரணங்களுக்காக அரசு ஊழியர்களும்,கோரிக்கை தொடர்பாக பொது மக்களும் இந்த அலுவலகங்களை நாடிச் செல்வதில்,கால விரையமும்,பண விரையமும் மட்டுமின்றி சொல்லொணா மன உளைச்சல்களுக்கும் ஆளாகி வருவதைக் கண்கூடாகக் காண்கின்றோம்.


இதனைக் கருத்தில் கொண்டு,இந்த அரசு,சென்னை நகரில் பல் வேறு இடங்களிலும் ஆங்காங்கே இருக்கின்ற அரசு அலுவலகங்களை ஒரே இடத்தில் - ஒரே வளாகத்தில் கொண்டு வருமானால்,அதைவிடச் சிறந்த நிர்வாக முடிவு வேறு ஒன்றும் இருக்க முடியாது. இதை எவரும் குறை சொல்லவும் முடியாது.


அல்லது,பெரும் பொருட் செலவில் உருவான இந்த வளாகத்தை சர்வ தேசத் தரம் வாய்ந்த தொழில் மற்றும் வணிக வளர்ச்சி மையமாகவோ, உயர் கல்வி ஆராய்சிக்கான சர்வதேசப் பல்கலைக் கழக வளாகமாகவோ, உயர்தர மருத்துவ ஆய்வு மைய வளாகமாகவோ  உருவாக்க அரசு முன்வர வேண்டும்.


மக்களுக்கு மலிவாகத் தரக்கூடிய உயர்ந்த நிர்வாகத் தரம் வாய்ந்த கொள்கை முடிவாகவும் இது அமைந்து,எதிர்கால வரலாற்றில் ‘ஜெ’அரசுக்கு நிலைத்த பெயரும் கல்வெட்டில் பொறித்து வைக்கப்பட்டிருக்கும்!

தலைமைச் செயலகம் பற்றிய விமர்சனத்தில், அரசியல் காழ்ப்புணர்ச்சியில் செயல்படுகிறாரோ என்ற விமர்சனத்தை வீழ்த்தி,’தரமான தகுதிமிக்க நிர்வாக முடிவுகளில் கவனம் செலுத்துகிறார்,’என்ற பெருமையை ’ஜெ’ அடையவும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் வீழ்த்தும் சாமர்த்தியத்தை நிலை நாட்டவும் இது ஒரு வாய்ப்பு.

சிந்திப்பாரா, மேடம்’ஜெ’.?

நட்புடனும் நடு நிலையுடனும்-
கிருஷ்ணன் பாலா
29.05.2011

2 comments:

மாதேஸ் said...

அது சரி...

உள்ள கால் கூட வைக்க கூடாதுன்னு முடிவெடுத்து சட்ட சபைக்கே வரல நம்ம 'ஜெ'..

இதுல அது 'உபயோக'ப்படுத்துறதா???

அந்த கட்டிடத்தில உள்ள ஒவ்வொரு கல்லும் தானா கீழ விழுற வரைக்கும் கோர்ட்-ல கேஸ் நடக்கும்... அதான் அம்மா ஆட்சி...

Anonymous said...

"இதனைக் கருத்தில் கொண்டு,இந்த அரசு,சென்னை நகரில் பல் வேறு இடங்களிலும் ஆங்காங்கே இருக்கின்ற அரசு அலுவலகங்களை ஒரே இடத்தில் - ஒரே வளாகத்தில் கொண்டு வருமானால்,அதைவிடச் சிறந்த நிர்வாக முடிவு வேறு ஒன்றும் இருக்க முடியாது. இதை எவரும் குறை சொல்லவும் முடியாது.

அல்லது,பெரும் பொருட் செலவில் உருவான இந்த வளாகத்தை சர்வ தேசத் தரம் வாய்ந்த தொழில் மற்றும் வணிக வளர்ச்சி மையமாகவோ, உயர் கல்வி ஆராய்சிக்கான சர்வதேசப் பல்கலைக் கழக வளாகமாகவோ மையமாகவோ உருவாக்க அரசு முன்வர வேண்டும்."

அருமையான யோசனை ஐயா! செயல்படுத்தப்பட்டால் மக்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய விஷயம்! - கீதா ராமஸ்வாமி