Monday, April 11, 2011

கலியுகத்தில் நான்! (பகுதி-1)


அகர முதல எழுத்தினைப் போல               
அநேக விஷயம் அதனதன் நிலையில்
சிகரம் தொட்டு,தர்மம் சிதைய
சிறுத்திடும் இந்தக் கலிகாலத்தை
நுகரத் தெரிந்தோர் நுண்மான் புலத்தால்
நுகர்ந்தும் பகர்ந்தும் நூல்பல தெளிந்தும்
அகத்தினில் கொண்ட உண்மைகள் யாவும்
அணிந்தவன் இங்கே உரைப்பது கேளீர்!


அத்தனும் அம்மையும் ஆசைப் பட்டதில்
ஆரம்பம் முதலே உயிர், சிறை பெற்றது;
பத்து மாதம் கருவறைச் சிறையில்
பட்டபின் உடலுள் வாழ்நாள் முழுதும்!
இரத்தமும் சதையும் வற்றிவிடாமல
இராப் பகலாக, உறங்கியும் விழித்தும்
நித்தமும் இரைப் பை நிரப்புவதல்லால்
நிஜமாய் இங்கு சாதிப்ப தென்ன?


ஒருநாள் கூட உணவில்லாமல்                                    
ஓட்டும் திறமை இல்லா திருப்பதும்
இருநாள் விழித்து உணர்வில்லாமல்
இயல்பாய் வாழ முடியாதிருப்பதும்
மரணம் என்பதை மற்றவர்க் கென்றே
மனம் தெளியாது கனவில் இருப்பதும்
ஒருநாள் விழித்து;உடலை வெறுத்து
உலகைக் கனவாய்க் காண்பதும் காண்பீர்!

சொத்தும் சுகமும் சேர்ப்பதற்கென்று
சுகத்தை இழந்து பித்தாய்த் திரிந்து,
மொத்தமும் ஆசைப் பற்றினில் வீழும்
மூட மனம்இதை யாரறிவாரோ?
வித்தை,விருந்து;வேடிக்கைச் சடங்கு
வேடம் போடும் நாடக வாழ்க்கை
எத்தனை காலம் நடக்கும் என்பது
இறைவன் எழுதும் காலக் கணக்கு!


வாழும்வரையில் காண்பது யாவும்
வரவோ செலவோ யாதும் இங்கு
சூழ்வது விதிப் பயன் என்றே நூலோர்
சொன்னதை மறந்து நின்றதில் கரைந்தேன்!
’ஊழ்வினை என்னை உலகினில் பிறக்க
உந்துதல் செய்தது’ என்பதை மறைக்கச்
சூழ்நிலை தோன்றி சூழ்ச்சி செய்தது;
சூழ்ச்சியில் நானும் தோற்றுப் போனேன்!


நானாய் விரும்பி வந்தேனில்லை;
நடுவழி வந்தபின் திரும்பிடத் தெரியேன்!
தானாய் எல்லாம் நடத்திக்கொண்டு
தனியாய் என்னைப் படைத்தனன் போலும்!
ஊனாய் உடலைப் பெற்றது முதலே
ஊர்ந்தேன்;தவழ்ந்தேன்;எழுந்தேன்;நடந்தேன்;
ஆனாலும்நான் உலகிற் பிறந்த
அவசியத்தையோ அறிந்தேன் இல்லை!


அங்கும் இங்கும் அலைவதும்;அலைந்து
அமைதியைத் தேடி உறங்கி எழுவதும்
எங்கும் எதிலும் ’நான்’ ‘நான்’ என்றே
என்னை முதலாய் எண்ணிக் கொள்வதும்;
பொங்கும் அலைபோல் புதுப்புதுக் கனவில்
புகுந்து,விழித்துப் புலம்பிக் கொள்வதும்
இங்கென் வாழ்க்கை இயல்பாய்ப் போனது;
இதைத்தான் இறைவன் எழுதி வைத்தானோ?

உண்ணவும், உறங்கவும் உறங்கி எழுந்து
உழலவும் உணரவும் ஆண்பெண் உறவை
எண்ணவும் ஏங்கவும் இலக்கில்லாமல்
இயங்கவும் மயங்கவும் இவையல்லாமல்
பண்ணிடும் வேறு காரியம் இங்கு
பலவிதம் இருந்தும் மனிதருக்கதனால்
புண்ணியம் ஏதும் பூப்பது உண்டோ?
பூமியில் இதைத்தான் புரியாதுள்ளேன்!


எத்தனை நேரம் மனிதர் மண்ணில்                     
இரவு,பகலாய் விழித்திட முடியும்?
எத்தனை காலம் இருந்து மண்ணில்
இரவை, பகலைக் கழித்திட முடியும்?
எத்தனை நாட்கள் பட்டினி இருந்து
இயல்பாய் மனிதர் வாழ்ந்திட இயலும்?
எத்தனை பணம்தான் இருந்திட்டாலும்
இரைப்பை இறுதியில் தருவது என்ன?


உண்ணல்,ஓய்தல்,உறங்கல்,எழுதல்
ஒவ்வொருநாளும் இவையே தொடர்தல்;
மண்ணில் இதுதான் நிரந்தர சுழற்சி;
மற்றெவை இந்த மாந்தரின் உடைமை?
உண்ணுதற்கெனவே உலகிற்பிறந்து
உடலை வளர்த்து,மண்ணில் புதையப்
பண்ணும் இந்தப் பம்பர வாழ்க்கை
பலயுகங் கள்எனச் சுழல்வதுதானே?

கடவுள் என்பதுநிஜமா?,பொய்யா?                                        
காரணமான கற்பனைப் பொருளா?
திடப் பொருளான வடிவம் உண்டா?
திரவப் பொருள்போல் உருவம் உடைத்தா?
ஜடப் பொருள் இந்த மானுடம் மற்றும்
ஜராசரம் அனைத்தும் சேர்ந்த வடிவா?
விடை தெரியாத குழப்பம்;எனினும்
விஷய ஞானிபோல் உரைசெய் கின்றேன்!

அண்டம் என்னும் அகண்ட வெளியில்                                       
அணுவெனத் திகழும் பூமிப் பந்தில்
அண்டிய இந்த மானுடப் புள்ளியுள்
அணுவிலும் அணுவாய் ஆகிய ஒருவன்
கண்டு வருவது கனவுகள்;அதில்தான்
காட்சிகள் இந்த மானுட வாழ்க்கை!
கண்கள் மூடினால் தான்நிஜம் தெரியும்;
கடவுளின் நோக்கம் யாதெனப் புரியும்!


அதுவரை எண்ணம் ஆயிரமாயிரம்;
அவற்றின் இடையே,குழப்பம்;தெளிவு
எதுவரை இந்த நாடகம் என்பது
இறைவன் பிடியில் இருக்கும் முடிவு!
இதனிடை நானோர் இறைவனைப்போல
எண்ணிக்கொண்டு எழுத்துகள் படைத்து
அதனிடை வாழும் அரைகுறைப் பாமரன்
அறிவீர்;என்போல் நீங்களும் தானே!


தோற்றம்,வளர்ச்சி.தொடர்ந்து முதுமை
தோல்வியும் வெற்றியும் நிலைகொள்ளாமல்
மாற்றம் என்பது மண்ணில் தோன்றும்
மாந்தருக்கெல்லாம் மாறா விதிதான்!
ஆற்றலும் அறிவும் அறிவில்லாமையும்
அவனவன் விதியில் எழுதியபடியே
ஏற்றமும் இரக்கமும் ஏழ்மையும் செல்வமும்
இறைவன் வழங்கிய நன்கொடை; கண்டேன்!


எங்கோ இருந்த இவ்வுயிர் தன்னை
இப்புவி மண்ணில் இழுத்து வைத்தவன்
எங்கோ இருந்து எழுதிடும் நாடகம்;
இதில் என்பாத்திரம்;’நான்’ எனும் சூத்திரம்!
உங்களுக்குள்ளே இருக்கும் உணர்வுகள்;
உலக மக்களின் உள்ளங்கள் எல்லாம்
தங்கி இருக்கும் தத்துவம்; எனினும்
தனித்தனி நாடக அரங்கேற்றங்கள்!
                                                                                                                                                               
உலகம் எனக்கோர் நாடக மேடை;                     
உறவுகள்,நண்பர்கள் போடும் வேடம்;
பலப் பல விதமாய் காட்சிகள் மாற்றம்;
பாசம் நேசம்;மோசம்,நாசம்;
நிலையில்லாத நிஜமும் பொய்யும்
நினைவில் மலர்ந்து கனவாய் உதிர
தொலைதூரம்போல் மரணம்;ஆனால்
தொடரும் நிழலாய்அது என் அருகில்!

நடந்து முடிந்த நாடகக் கூத்தின்                                   
நாயகனாக நான் இருந்தாலும்
நடத்தி வைத்தவன் அவனே;எனது
நடிப்பின் இயக்கம் செய்தவன்;உண்மை!
நடக்கப் போகும் முடிவும் அவன்தான்
நான்அவன் கருவி;நலமும் தீங்கும்
கடந்த காலம்;என்செயல் களுக்குக்
காரணம் எல்லாம் அவன்தான்;கேளீர்!
                                                                            (தொடரும்)
-கிருஷ்ணன் பாலா
11.4.2011




Pray For Japan

உலகப் பொருளாதாரத்தையே


உருமாற்றிய தேசம்;

இன்று-

கலக்கத்தின் கரங்களில்
கரைந்து நிற்கின்றது!

கடல்கோள் அழிவை
கக்கிடும் அலைகளின்
கொடுமைப் பெயரைக்
குறித்த நாடு;


இன்று-


அதே-


கடல் அரக்கனின்
'சுனாமி’க்கரங்களில்


சிக்கி-

சின்னா பின்னபட்டு
விக்கித்து நிற்கிறது!

விரைவில்
அத் தேசம்


துன்பத்திலிருந்து
விடியலைப் பெறவும்;
அமைதியில் சூழ்ந்து
ஆறுதல் பெறவும்;
இழந்த உயிர்கள்

இறையடி நிழலில்
இரண்டறக் கலந்து
இன்பம் பெறவும்-
ஜப்பானுக்கு
ஜயம் உண்டாகவும்-

எல்லோரும் ஒன்றாய்
எண்ணித் தொழுவோம்;
எண்ணங்களாலே
இதயம் இணைவோம்!

நட்புடன்,
கிருஷ்ணன் பாலா
Published in Face Books-Notes on Sunday, 27 March 2011 at 23:23