Thursday, February 3, 2011

இந்தக் கானல் நீரில்….



 ‘மு நூல்’ (FACE BOOK) என்பது ஓர் சமூக வலைத் தளம். இதன் பயனாளிகள் ஒருவருக்கொருவர் சமூக நலனில் அக்கறை கொண்டு சமூக நலன் சார்ந்த உணர்வுகளைப் பகிர்ந்தும் பரிமாறியும், பரஸ்பரம் நண்பர்களாகி,உலகத்தையே ஒரு குடும்பமாகப் பாவிக்கின்ற வகையில் உருவாக்கப்பட்ட இந்த வலைத் தளம்,அதன் உண்மையான பயன்பாட்டை எட்டியுள்ளதா?

அதைப் பற்றிய நமது கண்ணோட்டம், இதே முக நூலில் பதிவு செய்யப்பட்டது. முக நூல் நண்பர்கள் நிறையப் பேர்களின் மனதிலும் பதிவாகி விட்ட கவிதை இது. நமதுஉலகத் தமிழர் மையத்தின்’ அறிவார்ந்த வாசகர்களின் கருத்துக்கும் வைக்கப் படுகிறது, இங்கே
:


இந்தக் கானல் நீரில்....
முகவரியின்றியும் முழுமையின்றியும்
முகத்தை மூடி எழுதிக் கொண்டிருக்கும்
முகநூல் நண்பர் அனைவரும் அறிய       
முகமன் கூறி எழுதுவ தாவது:

பலருக்கும் இதுவோர் எழுத்துப் பலகை;
பலவிதம் எழுதிப் பழகிக் கொள்கிறார்;
சிலருக்கு இதுவே சிந்தனை மன்றம்;
சிறிது ஞானம் தேர்ந்து கொள்கிறார்!

அரைகுறையாகப் படித்தோர்; மற்றும்
அறிவிலியாக இருப்போ ரெல்லாம்
தரக் குறைவாக எழுதித் தள்ளித்
தறுதலைக் கூட்டம் வளர்க்கின் றார்கள்!

கவிதை என்ற பெயரில் கிறுக்கி
கண்டதைச் சிலபேர் எழுதிக் காட்ட
செவிடன் சபையில் சிரிப்பதைப் போல
சிலபேர் அதனை ரசிக்கின் றார்கள்;

பண்டிதம் மிகுந்த படைப்பைச் சிலபேர்
பக்குவமாக எழுதிடும் போது
கண்டு ரசித்த குருடர்கள் போல
கருத்தினைச் சொல்லிப் புளகாங் கிப்பதும்;

சமூக மாற்றம்; சரித்திர உண்மை
சாதிப்பதுபோல் சில பேர் எழுத
சமர்புரிவதுபோல் வெகுண்டு சிலபேர்
சங்கம் முழங்கி அடங்கி விடுவதும்;

அறிஞர் சிலபேர் அறிவியல் கருத்தை
அவையில் வைத்து அலங்கரிப் பதுவும்;
குறிக்கோள் இன்றிச் சிலபேர் எழுதி
குமைந்து நெஞ்சம் வருந்து கின்றதும்;

ஆண், பெண் பேதம்; அவை மரியாதை
அடக்கம் மீறி நட்பினை நாடி
நாணம் இழந்து எழுதிக் கொள்வதும்
நான் பார்க்கின்ற நாடகம் இங்கு:

சுய நலத்தோடு எழுதி இங்கு
சொல்லும் பொருளும் பேசிடுவோரும்
பயனுள வகையில் பதிவுகள் செய்து
பலருடன் நட்பைப் பகிர்ந் திடுவோரும்;

காலை, மாலை வணக்கம் சொல்லி
'காமெடி’,பேசி மகிழ்ந் திடுவோரும்
 'வேலைமுகநூல் எழுதுவதென்றே
வெட்டிப் பொழுதைக்களித்திடுவோரும்

'முக நூல் சந்தைக் கூட்டம்என்றே
முழுதாய் உணர்ந்தவன்; மனதின் பதிவில்
இகழ்வோர்;புகழ்வோர் யாரும் நிஜமாய்
இல்லாதிருப்பது உண்மையு மாகும்!

இந் நூல் நமது நிஜவாழ் வல்ல;
இதுநம் பாதையின் இலக்கும் அல்ல;
இந் நூல் என்பதுகானல் நீர்தான்;
இதுநம் தாகம் தீர்ப்பதும் அல்ல!

எனினும்,படிப்போர் எவரும் இங்கு
என்னை உணர எழுதுதல் என் கடன்;
தனியொரு வழியில்;தமிழ் நெறிகாட்டித்
தவறுகள் களைந்திட எழுதுகிறேன்,நான்!


நேர்மையோ டிருந்து ;நாளும்
நிமிர்வுடன்  எண்ணி;புத்திக்
கூர்மையோ டெழுதி உண்மை
கூறுவ தெனது கொள்கை!

யாரும் எனக்குப் பகைவர் இல்லை;
யாருக்கும் தீங்கு செய்திட இயலேன்!
காரணம் இன்றி என்பால், இங்கு
காய்பவர் நண்பர் ஆவதும் இல்லை!

நிரந்தரம் என்று என்னை,நானே
நினைப்பவ னல்லன்;எனினும்,இங்கு
நிரந் தரமான எழுத்தாய் இருக்க
நிலையாய்க்  கருத்தைப் பதிவு செய்கிறேன்!

இந்தக்கானலில் எழுதுவ தென்பது
எழுத்து மீனை வளர்ப்பது போல!
முந்தி வருவோர் முயன்று பார்க்க;
முடிந்தால் அவர்களும் மீனை வளர்க்க!

இவண்-

கிருஷ்ணன் பாலா
2.2.2011