Thursday, October 17, 2013

கவியரசு நினைவுகளில்....!

வரைவு: ஜீவா

எப்பொழுதும் சிந்தனையில் இருப்பவன்தான் கவிஞன்;
எதுகுறித்தும் அஞ்சாது படைக்கும் அவன் இறைவன்;
முப்பொழுதும்முத்தமிழில் மூழ்கி நின்ற   தமிழன்;
முன்னோரின் மரபு வழி முத்தெடுத்த கலைஞன்!

புத்தியுள்ள மனிதரெல்லாம் போதை தலைக்கேற
போதையிலே புதுத் தமிழைப் பொலியவைத்த மேதை;
வித்தைமிகும் எழுத்துக்களால் சத்தியத்தைச் சொல்லி;
விஜயனுக்குச் சொன்னதுபோல்சொன்ன மொழிகீதை!’

அர்த்தமுள்ள இந்து மதம்;அடடா.. அடடா;
அவன்போலச் சொன்னது யார்? வந்திங்கு தொடடா!
கூர்த்த மதி; கொள்கை நெறி;கூடு கட்டி அதிலே
குடியிருந்த கவியரசைக் கூறுகின்றேன்;இங்கே!

கம்பனவன் மறு பிறப்பு; காளிதாசன் ஜாதி;
காதலிலே கரைபுரண்ட உமர்கய்யாம் பாதி;
வம்பரெலாம் வாய் புதைத்து வணங்குகின்றவாறு.
வார்த்தைகளைச் சரம் தொடுத்த காளமேகம் மீதி!

கீதையதன் போதையினைத் தெளிந்து சொன்ன மேதை;
போதைமிகும் கருத்துக்களில் போகும் இவன் பாதை;
நீதி மொழி சொல்லி இங்கு நேர்த்திக் கடன் முடித்தே;
நித்திரையில் சென்று விட்டான்; நினைவுகளை விதைத்தே!

கவியரசை எண்ணி எண்ணிக் கலங்கு கின்றோம்;நெஞ்சம்;
காலனவன் கருணையின்றிச் செய்த கொடும் வஞ்சம்;
கவியரசாய்த்  தமிழை ஆண்டு,புவியில் ஓங்கி நின்ற
கண்ணதாசன் போன்று கவி பிறப்பதென்று? இங்கே!

இவண்-
கிருஷ்ணன்பாலா

17.10.2013

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

வரிகள் மனதை மிகவும் கவர்ந்தன... வாழ்த்துக்கள் ஐயா...