Wednesday, October 2, 2013

அரசியல் சதுரங்கம்:2

ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை
------------------------------------------------------------------

எனது அரசியல் சதுரங்கம்:1 என்ற பதிவில் ‘ கிரிமினல் குற்றச் சாட்டுகளில் தண்டனை பெற்ற எம்.பி. எம்.எல்.ஏக்கள் பதவி நீக்கம் பெற வேண்டும்’ என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பினால் விளக்கம் பெற்ற சட்டத்துக்கு எதிராக ஒரு அவசரச்  சட்டத்தை மன்மோகன் சிங் தலைமையிலான  மத்திய அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்தைத் தூக்கிக் குப்பையில் எறிய வேண்டும்’ என்று ராகுல் காந்தி முழங்கி இருப்பது காங்கிரசின் கபட நாடகம் என்றும் அதன் மூலம்  அவரை ஒரு கதாநாயகனாக்கி வரும் தேர்தலில் மக்களிடம் சென்று ஓட்டுக் கேட்கும் தகுதியையாவது   பெறத் துடிக்கும் ஓரங்க நாடகத்தின் ஒத்திகை என்றும் எழுதியிருந்தேன்.

இப்போது  நூற்றுக்கு நூறு அது உண்மை என்று நிரூபணமாகி இருக்கிறது.

இன்று (2.10.2013) மத்திய கேபினெட் கூடி ஏக மனதாகத் தீர்மானித்து’ ராகுல் காந்தியின் கருத்துச் சரியானது என்று தெளிந்து கொண்டு முன்பு கொண்டு வந்த ’அவசரச் சட்டத்தை வாபஸ் வாங்கி விடுவது’ என்று தீர்மானித்த செய்திதான் இப்போதைய அரசியல் அரங்கில் முக்கிய ஃப்ளாஷ்.

இதை முன்கூட்டியே நாம் யூகித்து எழுதிய விஷயம்தான் முகநூல் வரலாற்றில் வரலாறு படைத்த அரசியல் தீர்க்க தரிசனப் பதிவு.

ஆக, ராகுல் காந்தியை நேர்மையும் நியாயமும் மிக்க இளம் தலைவராக காங்கிரஸின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக  உருவகப்படுத்தி வரும் தேர்தலைச் சந்திக்கும் முடிவை காங்கிரஸ் எடுத்து விட்டது.

ஏனெனில்-
ராகுல் காந்திதான் இப்போதைக்கு காங்கிரஸ்காரர்களுக்குத் தலை;அவர் இல்லாத தேர்தலை முண்டங்கள் சந்திக்கவே முடியாது.

ஒருவேளை பிரியங்கா தனது உடன் பிறப்புக்காக உயிரைக் கொடுத்துப் பிரச்சாரம் செய்ய முன் வந்தால் அது காங்கிரஸ்காரகளுக்கு மேலும் பகலிலேயே கனவு காண வசதிப்படும்.

உண்மையைச் சொன்னால்,  ‘ஆலை இல்லாத ஊரில் இலுப்பைப் பூ சர்க்கரை’ என்பது போல், தகுதியும் திறமையும் இல்லாத காங்கிரஸ் தலைவர்களுக்கு நடுவே  தகுதியுள்ள தலைவரைப்போல் காட்டிக் கொள்ளவே ‘கிரிமினல்களுக்கு ஆதரவான அவசரச் சட்டம் முட்டாள்தனமானது; அதைக் குப்பைத்தொட்டியில் தூக்கி எறிய வேண்டும்’ என்ற வசனத்தை ராகுலைப் பேச வைத்திருக்கும் பித்தலாட்ட நாடகம்.

அதன் மூலம்  ஊடகங்களுக்கும் உளுத்துப்போன பிரசங்கிகளுக்கும் பேசுவதற்கும் விவாதம் செய்வதற்கும் ராகுல் காந்தியை மையப்படுத்தி விபச்சாரம்,மன்னிக்கவும் விளம்பரம் செய்து மக்களிடம் ஓட்டுக் கேட்கவும் அது வெட்கத்தையெல்லாம் விட்டொழித்து விட்டது’ என்பது நாளைய வரலாறு.

தனது சாதனைகளைச் சொல்லி இனி காங்கிரஸ் மக்களிடம் ஓட்டுக் கேட்க முடியாது.

ஆனால் இன்னும் ஓரிரு மாதங்களில் மக்களுக்குப் பல்வேறு சலுகைகளை அளிக்கும் அறிவிப்புக்களைச் செய்து அவற்றை நிறைவேற்ற அடுத்த ஆட்சி உரிமைக்கு காங்கிரஸ் மடிப் பிட்சை ஏந்தும் ஏமாற்றுத் தனத்துக்கும் தயாராகப் போகிறது.

நமது மக்கள் பாமரர்கள் என்பது ஊர்ஜிதமான ஒன்று;அவர்கள் பகுத்தறிந்து ஓட்டுப்போடும் பக்குவத்துக்கு வந்து விட்டார்கள் என்பதற்கான சான்று இன்றுவரை நிரூபிக்கப்படவில்லை.

நரேந்திர மோடி இன்னும் எச்சரிக்கையாக இருந்து தனது அரசியல் காய்களை நகர்த்த வேண்டும்.

ஏனெனில் மக்கள் பொய்யான வாக்குறுதிகளில் புளகாங்கிதமும் பூரிப்பும் கொள்கிறவர்கள்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
2.10.2013
Post a Comment