Friday, October 4, 2013

காங்கிரஸ்:கலைந்தது,இரட்டை வேடம்!


றிவார்ந்த நண்பர்களே,

‘பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிவிட்டுத்
தள்ளி நின்றே சிரிப்பார்; அதுதான்
கொள்ளையர் கூட்டமடி;ஞானத்தங்கமே;அவர்
கொள்கையை என்ன சொல்வேன்?

என்று -
கவியரசு கண்ணதாசன் அவர்களின் பாடலின் கடைசி வரியைச் சற்று மாற்றிக் காங்கிரஸின் இரட்டை வேட ஏமாற்று நாடகத்தைப் பற்றிச் சொல்லப் பயன் படுத்த வேண்டி இருக்கிறது.

ஆம்.
லாலு பிரசாத் போன்ற KD க்களை(Known Decoits) சிறைக்குள்  தள்ளி அவர்களின் பதவியை நீக்கும், ஊழல் மற்றும் கிரிமினல்களுக்கு எதிரான நடைமுறைச் சட்டத்தைத் திருத்தி, அவர்கள் மறு அப்பீல் செய்து அதன் தீர்ப்பு வரும்வரையில் அவர்களைப் பதவியில் நீடிக்கச் செய்யும் அவசரச் சட்டம் ஒன்றைக் கொண்டு வர முயன்றதும் காங்கிரஸ் கட்சிதான்; பிறகு அதை ராகுலைக் கொண்டு எதிர்க்கச் செய்து அதன் எதிரொலியாய் நாட்டில் விமர்சனங்களை எழுப்பி, ராகுலைக் கதாநாயகன் போல் சித்தரித்து ’அந்த அவசரச் சட்டத்தை ராகுல் எதிர்த்தார்’ என்பதற்காக வாபஸ் பெற்றதும் அதே காங்கிரஸ்தான்.

ஊழலைச் செய்வதும் ஊழல்வாதிகளைக் காப்பதும் பிறகு அவர்களைக் கை கழுவி விட்டு  ‘ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் அவர்களை விட்டு வைக்க மாட்டோம்’ என்று நேர்மையாளர்கள்போல் கங்கணம் கட்டிப் பேசுவதும் ஒரே கட்சிதான்;அது காங்கிரஸ்தான் என்பது நாட்டு மக்களுக்கு உள்ளங் கையிடை நெல்லிக் கனியென ஊர்ஜிதமாகி, காங்கிரசின் இரட்டை வேடம் கலைந்து விட்டிருக்கிறது.இப்போது.

காங்கிரஸின் கூட்டாளிகள் அனைவரும் அயோக்கியர்கள்; நாட்டைப் பல வகையிலும் சுரண்டிப் பங்குபோட்டவர்கள்; ஆட்சி அதிகாரத்தில் நேரிடையாக இல்லாமலேயே ‘ஊழல் பணத்தில் பாதிப் பங்கு,அதாவது கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தத் துறை வழங்கப்பட்டிருந்தாலும் அந்தத்துறை மூலம் அடிக்கும் கொள்ளையில் கூட்டணித் தலைவிக்கு உரிய பங்கு  சேர்ந்து விட வேண்டும்’ என்ற அறிவிக்கப்படாத சட்டத்தின்படி ஊழல் கொள்ளைகள் நடத்தப்பட்டன, நமது நாட்டில்;அரசாங்க கஜானா எல்லாவகையிலும் சூறையாடப்பட்டிருக்கிறது.

இந்த ஈடு இணையில்லாத ஊழலுக்குத் தூண்டுதலாக,துணையாக,பெரிய பார்ட்னராக இருந்ததும் இருப்பதும் சோனியாவின் குடும்பமே அன்றி வேறு யாராக இருக்க முடியும்?

தேச பக்தர்களின் நெஞ்சங்களையெல்லாம் பதற வைக்கும் இந்த கேடு கெட்ட ஆட்சியின்  ஊழல்களுக்கு என் போன்ற சாமன்யன் ஆதாரம் காட்டத் தேவையில்லை; உச்சநீதிமன்றத்தில் பலமுறை பலவிதத்திலும் கண்டிக்கப் பட்டும் தண்டிக்கப்பட்டதுமான நிரூபணங்களே போதுமானது.

ஊழல் பெருச்சாளியை கட்டுச் சோற்றில் வைத்து ஊர்ப்பயணம் செய்து உலகை ஏமாற்றுவதில்  ‘கை’ தேர்ந்த கட்யான காங்கிரஸ்,இன்று கையறு நிலையில் புலம்பிக் கொண்டிருக்கிறது.

ஃபொடார் தீவன ஊழல் வழக்கில் அந்த ஊழலின் ஊற்றுக் கண்ணாகத் திகழ்ந்த லாலு பிரசாத் யாதவை, மத்திய கேபினட் மந்திரியாக வைத்து ஐந்து வருடங்கள் நாடாண்டது யார்? காங்கிரஸ்தானே?.

அதன் பிறகு பீகார் மக்கள் லாலுவின் கட்சியைக் குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்த பின்னும்  அவருடைய எம்.பிக் களின் ஆதரவோடு மறுபடியும் ஐந்து ஆண்டுகள் UPA என்ற கூட்டு ஆட்சியில் இதே கூட்டாளிகளின் துணையோடு கொள்ளை அடித்துக் கொண்டிருந்த கட்சி எது? காங்கிரஸ்தானே?

கீழ்க் கோர்ட் முதல் உச்சநீதி மன்றம் வரை லாலுவின் வழக்கு இழுத்தடிக்கப்பட்டு, இறுதியில் உச்ச நீதிமன்றத்தின் உறுதியான நடைமுறைகளால், சி.பி.ஐ நீதி மன்றத்தில் நேற்று  முன்தினம் லாலு குற்றவாளி என்று தண்டனை விதிக்கப் பட்டுள்ளார்..

5 ஆண்டுகள் சிறைவாசம் என்று ,இன்று (4.10.2013) ராஞ்சியில் உள்ள சிறைக்கு லாலுவை அனுப்பி, அவருடைய அரசியல் அத்தியாயம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது, நீதியின்  கரங்களால்.

இன்னும் காங்கிரஸின் கூட்டாளிகளாக இருந்து கொண்டு பிரமிக்கவைக்கும் ஊழல்களைச் செய்தவர்கள் எல்லாம்,அதிகாரத்தின் பின் புலத்தாலும் பணத்தை பலத்தாலும் வெளியில் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போது லாலுவின் வழக்கைப் போலவே அவர்களுக்கும் நீதியின் தண்டனை அடுத்துக் காத்துக் கொண்டிருக்கிறது.

இனியும் அவர்களை எந்தப் பலத்தைக் கொண்டும்  காப்பாற்ற முடியாத சூழ்நிலையில் காங்கிரஸே அவர்களைக் கை விட்டு விட்டு.’நாங்கள் ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஆதரிக்க மாட்டோம்; அத்தகையவர்களால்தான் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்குக் களங்கம் ஏற்பட்டது; அவர்களை யெல்லாம் நாங்கள் களை எடுத்து விட்டோம்; எங்களுக்குப் பெருவாரியான எம்.பி.களைத் தாருங்கள். கூட்டணி இல்லாமல் தனிக் கட்சி ஆட்சி செய்வதன் மூலம் நேர்மையான நிர்வாகத்தைத் தருகிறோம்;இது சத்தியம்;சத்தியம்;சத்தியம்’  என்று புதிய கோஷத்தை போடுவதுடன்  இதற்காகத்தான் இந்திராவின் பேரன் ராஜிவ் காந்தியின் புதல்வன் ராகுல் கிரிமினல்களுக்கு ஆதரவான சட்டத்தைத் தூக்கிக் குப்பையில் எறியச் செய்தார்’ என்று புனிதர்கள்போல் காட்டிக் கொண்டு,லாலுவைச் சிறைக்கு அனுப்பிய விவகாரத்தையே தனக்குச் சாதகமாக்கிக் கொள்கின்ற விளம்பர யுக்தியில் வெளிப்படும்.

ஆனால்-
ஒரு குற்றவாளியை அதுவும் ராஜத் துரோகக் குற்றவாளியை யோக்கியன் என்பதுபோல் காட்டிக் கொண்டு அவனைத் தன் கூட்டாளியாக இத்தனை ஆண்டுகள்  வைத்துக் கொண்டு மிகப் பெரிய ஜனநாய நாட்டில் மிகப் பெரிய ஊழல் அரசாங்கத்தை நடத்தி வந்த காங்கிரஸ், ‘தங்களைப் பற்றி மக்களும் மதி உடையோரும் என்ன நினைப்பார்கள்? என்ற சுய சிந்தனையற்ற கட்சியாக, இன்று  சாயம் வெளுத்துச் சாவுக் களையை எட்டி இருக்கிறது.

ஆயுதபேர ஊழல்,விமான பேர ஊழல்,இரும்புத்தாது ஊழல், நிலக்கரி ஊழல் 2ஜி ஊழல் என்று நாட்டின் மிகப் பெரிய ஊழல்களைச் செய்து இந்தியாவுக்கு ஒரு ஐந்தாண்டுக் கால பட்ஜெட்டுக்கு உரிய பணத்தைச் சுரண்டியிருப்பது காங்கிரசும் அதன் கூட்டாளிக் கட்சிகளும்தான் என்பது  நாடறிந்த உண்மை ஆன பின்னும் காங்கிரஸ்  வெட்கமற்ற வகையில் தனது யோக்கியன் வேஷத்தை விடாமல் பேசிக் கொண்டிருக்கிறது.

தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் அது  பல்வேறு நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். மக்களின் ஏகோபித்த எதிர்ப்பு அலையானது  காங்கிரஸை சின்னாபின்னமாகச்  சிதறடிக்கப்போகிறது என்பதைத் தெரிந்து கொண்டு,
அதில் இருக்கிற சுயநலவாதிகளும் சரி; ஓரளவு ஒழுக்கம் உள்ள கட்சிக்காரர்களும்சரி, காங்கிரஸ்  வெலவெலத்துப்போனநிலையைக் கண்டு அஞ்சி, தங்களைக் காப்பாற்றிக் கொள்ளக் காங்கிரசிலிருந்து விலகவும் அதற்கு எதிரான அணியை மேலும் வலுவுள்ளதாக்கவும் முன் வருவார்கள் என்பதை நாடு பார்க்கும்.

இப்போது ஆந்திராவில் சஞ்சீவி; மத்திய மந்திரியாக நேற்றுவரை
இருந்தவர் இன்று விலகி விட்டார். இன்னும் பலர் தேசத்தின்  நான்கு திசைகளிலிருந்தும் விலகல் அதிர்ச்சிகளைத் தருவார்கள்.

தமிழ்நாட்டில் வாசன் அவர்கள் ’இனி இந்தக் காங்கிரசில் இருந்தால் இருக்கும் கொஞ்ச நஞ்ச மானத்தையும் காப்பாற்ற முடியாது’ என்பதைக் காட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு  ஆளாவார்.

எப்படியாவது மறுபடியும்  ஆட்சிக்கு வர வேண்டுமென்றால் நம் நாட்டில் உள்ள ஊழல் பெருச்சாளிகளின் துணை, அதுதான் தேர்தல் கூட்டணி அதற்குத் தேவைப்பட்டே ஆக வேண்டிய நிலையும் உருவாகும்.

இந்த நாட்டில் ஜாதி,மத,இன உணர்வுகளைத் தூண்டிவிட்டு போலியான ‘மதச் சார்பற்ற கட்சி’ என்று தன்னைக் காட்டிக் கொண்டு  ‘மதவாதிகளையும் ஜாதி,இன வெறியர்களையும் கூட்டுச் சேர்த்துக் கொண்டு கொள்ளை அடிக்கும் ஆட்சியை நடத்தி வந்தது காங்கிரஸ்தான்’ என்பதை நடுநிலைவாதிகளும் உண்மையான தேசப் பற்றாளர்களும் பொது ஜனங்களும் புரிந்து கொண்டுவிட்டார்கள்.

இனியும் மத வாதம் பேசிக் கொண்டே மதச் சார்பற்ற கட்சியை ஆதரிப்போம்’ என்று சுயநல மதவாத எண்ணம் கொண்டோர்  மக்களிடம் ஓட்டுக்கள் வாங்க முடியாது.

ஜாதி,மதம்,இனவெறிகளின் அடிப்படையில் மாநிலங்களில் தனித்தனிக் கட்சிகள் வளரவும் அவற்றின் கூட்டணியால் தேசத்தை ஆளவும் அதிர்ஷ்டம் பெற்றிருந்த காங்கிரசின் மதச் சார்பின்மை’ என்ற பித்தலாட்டம் இனி வரும் தேர்தலில் எடுபடாது.

ஏனெனில் அதுதான் காங்கிரஸின் ‘கூட்டுக்கொள்ளை ஆட்சியை’ இன்று நாடெங்கும் நாறச் செய்து விட்டது

எந்த லாலுக்களால் கூட்டணி ஆட்சியில் கொடிகட்டிப் பறந்ததோ,அதே லாலுக்களால் தனது பரம்பரை ஆட்சிக்குப் படுகுழியையும் பறித்து வைத்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ்.

மதச் சார்பின்மை வேஷம் அன்று காங்கிரஸுக்கு அதிர்ஷ்டம்; இன்று அதுவே துரதிர்ஷ்டம்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
4.10.2013
Post a Comment