Thursday, October 10, 2013

ஆச்சிக்கு அகவை 91- வாழ்த்து!


ன்னருமை நண்ப ரென;
இணையற்ற மனித ரென;
தென்னகத்தின் தென் பகுதித்
திருநெல்லைப்  ‘பிள்ளை’யெனப்
பொன்மனத்தைப் பூத்தி ருக்கும்
பிரேமநா யகத் தின்தன்
அன்னை எனத் திகழும்
ஆச்சிக்கு வாழ்த் துரைத்தேன்!

அகம் தேடி வந்தார்க்கு
அகம்நிறைய விருந்தளிக்கும்
சுகம்கூட சைவத் தின்
சுவைகூட்டும் கொள்கை’யென
முகம் சுளிக்கா தின்றைக்கும்
முதுமைதனை வெல்லுகின்றார்;
தகைசான்ற பண்பாட்டின்
தருமநெறி சொல்லுகின்றார்!

சைவத் திருநெறி யின்பால்
சலிப்பில்லாக்  கடமை யுடன்
வையத் திருந் தின்று
வளையாமல் நிமிர் கின்றார்;
ஐயம் தவிர்த் தன்பில்
அனைவர்க்கும் தாய் என்று
உய்கின்ற ஆச்சி இவர்;
ஒரு குறையும் வாராது!

பன்னிரண்டு பிள்ளைகளைப்
படைத்த தொரு தாயாக;
முன்பிருந்த வாழ்க்கை யதன்
முறைமைகளை மாற் றாது;
நன்னெறிகள் அத் தனையும்
நாள்தோறும் செழித்திருக்க,
தன்னுடைய கொள்கையதில்
தளராத  பெரு மாட்டி!

‘பாப்பம்மாள்’ எனும்,இந்தப்
பாட்டிக்கு வாழ்த்துரைக்க,
மூப்பில்லை என்ற னுக்கு;
முறையல்ல;என் றாலும்
‘காப்புரிமை பெற்ற ஒரு
கவிஞன்’ என வாழ்த்து வது
கேட்பவர்க்கும் உணர்பவர்க்கும்
கிட்டாத பெரும் பேறு!

திருநீறு எப்போதும்
தீட்டுகின்ற இவர் நெற்றி;
ஒருநாளும் தவ றாது
உரைக்கின்ற சிவ பக்தி;
மருவற்ற மன தோடு
மற்றவர்க்குச் சுமையின்றி
தரவாகத் தன் கடனைத்
தானேதான் செய் கின்றார்!

குறும்பான சிந்தனைகள்;
குலையாத நினைவலைகள்;
எறும்பான சுறு சுறுப்பு
எப்போதும் நல் நினைப்பு;
கரும்பான அன்பு மொழி;
கலகலக்கும் நகைச் சுவைகள்;
இரும்பான மன உறுதி;
இவரொத்த பெண்க ளிலை!

‘ஆச்சி’ என்ற ழைத்து,
அனைவருமே மதிக் கின்ற
பேச்சில் புன்ன கைத்து
பிழையில்லாப் பேரன்பை
மூச்சில் கொண்டி லங்கும்
மூதாட்டி,பாப்பம் மாள்;
ஆட்சிதான் இவர்வீட்டில்
அனைவர்க்கும் இவர் ‘ அம்மா!’

தொண்ணூற்று ஓராண்டைத்
தொல்லையின்றிக் கடந் திங்கு;
நன்நூற்றைக் காண் பதற்கு;
நடைபோடும் ஆச்சிக்கு
நன் ஊற்றுக் கவி ஊற
நாவாலும் மன தாலும்
பொன்னூற்று வாழ்த் தாக்கிப்
பூரித்தேன்,இந் நாளே!

மகிழ்வோடும் நெகிழ்வோடும்-
கிருஷ்ணன்பாலா 
10.10.2013

குறிப்பு:
எனது இனிய நண்பர் ‘ஆடிட்டர்’ திரு.பிரேம நாயகம் அவர்களின் தாயாரும் அனைவராலும் ‘ஆச்சி’ என்று அழைக்கப்படுபவருமான ‘சிவநெறி’த் திருமதி. பாப்பம்மாள் அவர்கள்  91ஆம் அகவையை முடித்து, அகவை 92ல் அடியெடுத்து வைத்த இந்நாளில் ஆச்சிக்காகப் படைக்கக் பெற்ற கவிதை இது.

மகிழ்வோடும் நெகிழ்வோடும்
வாழ்த்தும்-
கிருஷ்ணன்பாலா
10.10.2013
Post a Comment