Friday, October 18, 2013

முற்பகல் செய்யின் ..!

றிவார்ந்த நண்பர்களே!
வணக்கம்.

தமிழுக்கு இருக்கும் மொழிச் சிறப்பையும் தமிழருக்கென்றிருக்கும் பண்பாட்டுச் சிறப்பையும் காத்திடும் வண்ணம் நமது சிந்தனைகளும் அதன் வழி எழுத்துக்களும் விரிய வேண்டும் என்பதே எனது எழுத்துக்களின் நோக்கம்.

இதற்கு மாறாக,இங்கே பெண்கள் பலர் எழுதி வரும் கருத்துக்களில் வெளிப்படும் விரசமும் துணிச்சல்,சமத்துவ உரிமை என்ற தாக்கத்தில் துள்ளுகின்ற சரசமும்  சமூகவலைத்தளங்கள்  மூலம்  விதைக்கப்படும் விஷக் காளான்கள்.

ஒழுக்கக்கேடும் உன்மத்தப்பாடும் சூழ்ந்த இழிநிலையில் போதை கொண்டு எழுதும் பெண்கள்,’ஆண் இனம் என்ன? பெண்  இனம் என்ன? எல்லாம் ஒன்று’ என்பதைத்தான் இங்கே நிலை நாட்டுகின்றார்கள்’ என்பேன்.

இத்தகைய பெண்களின் எழுத்துக்களையும் எண்ணங்களையும் பேணி ஆதரிக்கும்விதமாக,பெட்டைகளின் பின்னே கட்டுச் சேவல்கள்போல் கொக்கரித்துக் கொண்டு, ஆண் பெயரில் வலம் வரும்  போலிகள் மனசாட்சியும் சுயதரிசனமும் இல்லாத கிரிமினல்களே அன்றி கீர்த்திமான்கள் அல்ல;

நாம்,இத்தகையோரைச் சாடுவது, நமது சமூகத்தின் ஆரோக்கியமான நிலைப்பாட்டுக்கும் நமது சந்ததிகளின் சத்தான எதிர்காலத்துக்கும்தான்.

ஆனால்  இதன் மெய்ப்பொருள் உணராது, நமது நல்லொழுக்கச் சுட்டல்களை ஏதோ தங்களின் உரிமையில் தலையிட்டுச்  சுடுகின்ற நெருப்பாகவும், ஆணாதிக்க உணர்வாகவும் சில பெண்மணிகள்  உளறிக் கொண்டு எழுதுகிறார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தப்பெண்மணிகளின் கருத்துக்குப் பெண்கள் இடும் ’லைக்’களையும் ‘கமெண்ட்ஸ்’களையும் விட உற்சாகப்படுத்தும் ஆண்களின் ’லைக்’களும் பாராட்டுக் கமெண்ட்ஸ்’களும்தான் அதிகம்.

பிறன் மனையாட்டிகள் இங்கே தங்களை முழுச் சுதந்திரப் புர்ரட்சி பெண்களாய் முகவரி காட்டி உலா வந்து உளறுவதை யெல்லாம் உற்சாகப்படுத்தும் இந்தப் போலி ஆண்கள், இதேபோல் தங்கள் வீட்டு மனையாட்டிகளும் பெண்களும் உருண்டு,திரண்டு எழுதுவதையும் எண்ணுவதையும் உற்சாகப்படுத்தி அவர்களையும் புதுமைப் பெண்களின் வரிசையில் வைத்து அழகு பார்ப்பார்களா?அனுமதிப்பார்களா?

ஆம் எனில் அவர்கள் தங்களின் முக்காடுகளை நீக்கிக்  கொண்டு இங்கேமுன் வந்து  எழுதட்டும்;பார்ப்போம்.

முகநூலில் ’ஆண்- பெண் நட்புக்கு வரைமுறைகளை வகுத்துக்கொண்டு பொதுவில் எம்மாதிரியான விஷயங்களை விவாதிக்க வேண்டும், எப்படி எல்லாம் எழுதக் கூடாது’ என்ற பண்பறிவு கொண்ட பெண்மணிகள் இருக்கிறார்கள்.

‘அவர்களைப்போல் நாம் ஏன் இருக்க வேண்டும்?; எண்ணச் சுதந்திரமும் எழுத்துச் சுதந்திரமும் நமக்கு உண்டு;நாமும் ஆணுக்குச் சளைத்தவர்கள் அல்ல’ என்று  புர்ரட்சி பேசுகின்ற புதுமைப் பெண்கள் ஒருநாள் தங்கள் அகவாழ்வின் இனிமைச் சுகங்களையெல்லாம் இழந்து தங்கள் பிள்ளைகளே தங்களுக்கு எதிராய் எதிர்ப் புர்ரட்சி செய்வதையும் அத்தகையோர் மனம் நொந்து எங்கேனும் முதியோர் இல்லத்தில் விதியே’ என்று சரணாகதி அடைந்து ’முற்பகல் செய்யின் பிற்பகல் தானே விளையும்’ என்பதையும் அனுபவிப்பது  திண்ணம்.

‘என்ன விதைக்கின்றோமோ அதுதான் அறுவடை செய்யப்படும்’ என்பதை இன்றைக்கு நீங்கள் உணராமல் போனால்,  நாளைக்கு நீங்கள் காணப்போவது உங்கள் கடந்தகால விதைப்பின் முளைப்பாரிதான் அம்மணிகளே. அதுவே ஒப்பாரியாக மாறத்தான் செய்யும்.

பெண்களை ஆண்களுக்குச் சமமாக அல்ல- ஆண்களுக்கும்  மேலான அந்தஸ்தில்  வைத்து மதிக்கின்ற உணர்வினால் பெண்மையின் பண்பாட்டுச் செழிப்பில் அதிக அக்கறைகொண்டு எழுதுகின்றேன்:

கையெடுத்துக் கும்பிடத்தக்க பெண்மை; கையைப் பிடித்து இழுக்கத் தூண்டும்வகையில் இங்கே தோன்றக்கூடாது..

//சிறைக்காக்கும் காப்பெவன் செய்யும்;மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.// 
(குறள்/அறத்துப்பால்/ வாழ்க்கைத் துணை நலம் எண்;57)

என்று-
வள்ளுவன் உரைத்ததை விட உயர்குண மாதர்க்கு
‘உரை’க்கும்படி  இன்னொருவர் உரைக்க முடியாது.

எனது எழுத்துக்கள் பழுது அல்ல; உங்கள் இதயமே பழுது.

‘பெண்மை போற்றுதும்’ என்பதென் எழுத்து.

இவண்-
கிருஷ்ணன்பாலா
18.10.2013

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அவரவர் உணர்ந்து திருந்த வேண்டும்... நல்லதொரு சீர்திருத்த ஆக்கத்திற்கு வாழ்த்துக்கள் ஐயா.... நன்றி....