Sunday, September 29, 2013

தமிழ்க் கடல் ஓசை
அறிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.
’தமிழ்க் கடல்’ அய்யா திரு.நெல்லைக் கண்ணன் அவர்கள் நான், நேற்று (28.9.2013) எழுதியிருந்த ‘காங்கிரஸின் கபட நாடகம்’ கட்டுரையில் “செத்துப்போன பாட்டன் நேருவே....” என்ற சொல்லாடலைப் பயன்படுத்தி இருந்ததில் சற்று வருத்தமுற்று, எனக்கு மடல் ஒன்று எழுதி இருந்தார்.

உண்மையில் அது ‘தமிழ்க் கடலின்’ ஆசை; மன்னிக்கவும் ஓசை.

நமது பாரம்பரியப் பண்பாட்டையும் தமிழின் இணையற்ற செழுமையையும் வழுவாது பின்பற்றி வாழும் தமிழ்க் கடல் அவர்கள், எனது சிந்தனைக்கும்; சிறுமை கண்டு பொங்கும் சீற்றத்துக்கும் முன்னோடி என்பதில் பெருமையோடு சொல்லிக் கொள்வேன்.

நான் அவருடைய சொற்பொழிவுகள் பலவற்றை ஒலி நாடாக்களில் கேட்டும் நேரில் பார்த்துப் பழகியும் அவருடைய பண்பாட்டுச் சிந்தனையில் இறும்பூதெய்துகின்றவன்.

எனினும் என்னுடைய பதிவில் ‘பண்டித நேருவைச் செத்துப்பான பாட்டன்’ என்று நான் சொல்லி விட்டதால் அவருக்கு ஏற்பட்டுள்ள வருத்தம் நேர்மையானது; நியாயமானது’ என்பதை உணர்கின்றேன்.

ஆயினும், நான் பண்டித நேருவைப் பழிக்கும் எண்ணமின்றி, 
சோனியா-ராகுல் ஆகியோரின் சொரணை கெட்ட சுயநல அரசியலைச் சாடுவதற்காக அப்படியொரு சொல்லாடலைக் கையாளும் சினம் எனக்குள் தோன்றிவிட்டதைச் சொல்லத்தான் வேண்டும்.

பண்டித நேரு மீது பாரத தேசத்து மக்கள் கொண்டிருந்த பக்தியையும் பாசத்தையும் அவருடைய பேரன் ராஜிவ் காந்தியின் இத்தாலிய மனைவியும் அவருடை பிள்ளையும் பிணையம் வைத்து அரசியல் பண்ணி, கேவலப் படுத்தி விட்டார்களே!

அதனால்தான் சொன்னேன்:
ராகுலுக்கு ’பண்டித நேரு ஒரு செத்துப்போன பாட்டன்’போல் ஆகி விட்டார்’ என்பதை இடித்துச் சொல்ல.

பாரதநாட்டுப் பாரம்பரியத்திலும் தமிழ்ப் பண்பாட்டிலும் மாறாத பாசமும் நேசமும் கொண்ட’தமிழ்க் கடல்; அய்யா,திரு நெல்லைக் கண்ணன் அவர்களின் மடலை, என் கட்டுரைக்கு அளித்த கருத்தூட்டமாகவும்
இனியும் நான் எழுதவுள்ள எண்ணப் பதிவுகளில் எச்சரிக்கை கொள்ள வேண்டிய விஷயமாகவும் மதிக்கின்றேன்.

உலகெங்கும் பரவி, ஏறத்தாழ 65 நாடுகளில் இருந்து என் எழுத்துக்களைப் படிக்கின்ற எனது மதிப்பிற்குரிய வாசகப் பெருமக்களுக்கு இதைத் தெரிவிப்பது என் கடமை.

இனி ’தமிழ்க் கடல்’ அய்யா அவர்களின் மடலும் எனது பதில் மடலும் கீழே:

அன்புள்ள கிருஷ்ணன் பாலா,

// செத்துப் போன பாட்டன் நேருவே// என்று எழுதியுள்ளீர்களே.அது சரிதானா? மோடியை ஆதரிப்பது தங்களின் விருப்பம். ஆனால்நேருவை செத்துப் போனவர்’ என்பது அநாகரீகத்தின் உச்சம்.  தங்கள் அளவு அரசியல் அறிவு எனக்குக் கிடையாது என்றாலும் பலர் மனத்தைக் காயப் படுத்தும் வரிகளை ஏன்  நீங்கள் எழுதினீர்கள்புரியவில்லை.
தங்களின் மீது அன்பு கொண்டுள்ளவன் நான்.
நெல்லைகண்ணன் 


எனது பதில் மடல்:
---------------------------------
அய்யா,
வணக்கம்.

தங்களைப் போன்ற புனிதமான தேசபக்தர்களின் மனம் புண்படும் வகையில் நான் எழுதி இருப்பின் என்னை மன்னியுங்கள்.

நான் பண்டித ஜவஹர்லால் நேருவை நேசிப்பவன்.

ஆனாலும், இந்தக் கத்துக்குட்டி ராகுலின் அரைவேக்காட்டுத் தனமும் சோனியாவின் சுயநலச் சுரண்டலும் அந்தப்பாரம்பரியம் மிக்க குடும்பத்தின் பாட்டன் பெயரையே கெடுத்து விட்டதுஎன்ற கோபத்தின் எதிரொலியே எனது சாடல்.

உண்மையில் அப்படிக் குறிப்பிடும்போது உங்களைப் போன்றவர்களின் மனநிலையையும் சோதிக்க வேண்டும்என்ற உள்ளுணர்வு எனக்கிருந்தது.

உங்கள் மீது நான் எப்போதும் மாறாச் சொந்தம் கொண்டவன், அய்யா.

இவண்-
கிருஷ்ணன்பாலா
29.9.2013
Post a Comment