Sunday, September 22, 2013

சினிமாத் தாயே! (1987களில்)


றிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.
தென்னிந்தியத் திரைப்படத் துறை தனது 100 ஆண்டுக்கால வரலாற்றைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

இந்தத் தருணத்தில், நான் 1987களில் எழுதிய ‘இந்த ராஜபாட்டையில்….’என்ற எனது நூலில் எழுதப்பட்ட ‘சினிமாத் தாயே!” என்ற உரைநடைக் கவிதையை இங்கே வாசக நண்பர்களின் ரசனைக்காக பதிவு செய்வது 
மிகப் பொருத்தம் உடையதென நம்புகிறேன்.:

நட்புடன் -
கிருஷ்ணன்பாலா
22.9.2013


சினிமாத் தாயே!
( 1987 களில்)

எங்கள்
இந்தியர்களின்
இதயங்களை
வசியப்படுத்தி

அவர்களுக்கு
அத்தியா வசியப்
பொருளாகிவிட்ட
சினிமாத் தாயே!
நமஸ்காரம்.

எங்கள் நாட்டின்
கலாச்சாரப் பெருமைக்கும்
சிறுமைக்கும்
நீதான் அச்சாரம்.

உன்
வாழ்க்கையில்
நான் 
சம்பந்தப்பட்டவன் அல்லன்;
ஆயினும்
நீ
என் வாழ்க்கையில் சம்பந்தப்பட்டு
எனது
சிந்தனைகளைக்
கலைத்தாய்!

ஆகவே -
கலைத் தாயே,

இங்கே
உன்னைச்
சந்திக்கின்றேன்;

கருத்தில்
வைத்துச்
சிந்திக்கின்றேன்!

எங்கள்
இந்தியனை
நல்ல குடிமகன்
ஆக்குவதும்;
கெட்ட ‘குடி’மகன் ஆக்குவதும்
உனது மகிமைதான்!

எங்கள்
மகாத்மாக்களைச்
சினிமாக்கள் ஆக்கி
மாக்களாக
இருந்தவர்களை
மக்கள் ஆக்கிய
வித்தையை
மேற்கில்
ஹட்டன்பரோக்கள்
வென்றிருப்பதும்
உனது
பெருமைதான்……

உன்னையே
வாழ்க்கையாக்கிய
எங்களில் பலர்-

படாதிபதிகளாக
ஆனதும் உண்டு;
மடாதிபதிகளாகப்
போனதும் உண்டு!

உன்னை
விநியோகம் செய்து
யோகம்
பெற்றவர்களும் உண்டு;
சோகம்
உற்றவர்களும் உண்டு!

எங்கள்
மக்களுக்குச்
சோறு கிடைக்கிறதோ
இல்லையோ?

உன்னால்
சுகம் கிடைக்கிறது!.....

வாழ்வின்
கோரப் பிடியிலிருந்து
கொஞ்ச நேரம்
அவர்கள் விலகியிருந்து,

தங்கள்
வசந்தக் கனவுகளைக்
காண
உனது முகம் இருக்கிறது;

ஆம்!
அவர்கள் காணும்
ஏக்கக் கனவு
அவர்களின் நித்திரையில் அல்ல;
உனது முத்திரையில்…!

தாயே,
உனது சாம்ராஜ்யத்தில்
அரைகுறைகளே
ஆதிக்கம்
செலுத்துகின்றன;
ஆடையிலும் சரி;
அறிவிலும் சரி!

எங்கள் ராஜ்யத்திலும்
அரைகுறை
வாழ்க்கைதான்
ஆட்சி செய்கின்றது;
பணத்திலும் சரி;
குணத்திலும் சரி!

அதனால்தான்,
எங்கள்
சத்யஜித் ரேக்களின்
காமிராக்களுக்குச்
சேரிகளும்
’பாண்டிச்’ சேரிகளும்

சிறந்த விருந்தாகி
மே’னாடுகளுக்கு
இந்தியா
ஒரு
‘கீழ்’ நாடாகவே
தெரிகிறது!

ஒரு
காலத்தில்
ஸ்டுடியோக்கள்
உன்னை
ஆட்டி வைத்தன;

இன்று
ஸ்டுடியோக்கள்
உன்னால்
ஆட்டம் கண்டு விட்டன.

சவமாகிக் கொண்டிருந்த
உனது முடிவு
எங்கள்
பாலு மகேந்திராக்களின்
கா’மிராக்களால்’
உயிர்பெற்று
உற்சவமாய்
ஊர்வலம் பெற்றது.

உன்னுடைய
வெறும்
கைகள்கூட
எங்கள்
பாலச்சந்திரர்களால்
தார’கைகளாய்
ஜொலித்தன.

உன்னால்
ஆச்சாரம் கெட்டதாய்
அழுதுகொண்டிருந்தவர்கள்

இன்று
உனக்கு
அச்சாரம் செலுத்தித்
தொழுது கொண்டிருக்கிறார்கள்;

ஆயினும் –
உன்னால்
அரியாசனங்கள்
மாறியதையும்
அறியா’சனங்கள்
ஏ’மாறியதையும்
நாங்கள்
மறுப்பதற்கில்லை!

இருட்டிலிருந்து
வெளிச்சத்துக்கு
வரும்
நீ-
வெளிச்சத்தில்
இருப்பவர்களை
எல்லாம்
இருட்டுக்குள்
அல்லவா
உட்கார வைத்து விடுகின்றாய்?

உன்னிடம்
மயங்கி
விட்டில் பூச்சிகளாய்
விழுந்தவர்களின்
எண்ணிக்கை
வானத்து
நட்சத்திரங்கள் போல்;

உன்னை வைத்து
மயக்கி
மின்மினிப் பூச்சிகளாய்
மேலே
எழுந்தவர்களின்
ஜொலிப்பும்
வானளாவிய
நட்சத்திரங்கள் போல்!

கிழவிகள்கூட
குமரிகளாய்ச்
சித்தரிக்கப்பட்ட
உனது கதைகள்
தாரளமாய் இருப்பதால்-

எங்கள் வீட்டுப்
பிஞ்சுகள் கூட
பழுத்துப்போய்
சித்திரவதைப்பட்ட்
கதைகள்
ஏராளமாய் இருக்கின்றன.

உனது
படங்கள் எல்லாம்
தரம் கெட்டவை
என்பதை மறுக்கிறேன்:

எப்படியெல்லாம்
எடுக்கக் கூடாது
என்பதைக் காட்ட
புத்திசாலிகளுக்கு
உனது படங்கள்
பாடங்களே……

எப்படி வேண்டுமானாலும்
எடுக்கலாம்
என்று
இறங்கி விட்ட
புத்திகாலிகளுக்கு
புத்தி புகட்டுவதும்
உனது படங்களே!

‘உன்னைவிடச்
சிறந்த சாதனம்

வேறு இல்லை’
என்பது
இன்று பொய்யாகி விட்டது;

ஏனெனில்-
உன்னைவிட்டு விட்டு
அரசியலில்
தங்கள்
திறமைகளைக் காட்டிவரும்
நடிகர்களின்  எண்ணிக்கை
பெருகி விட்டது.

உன்
மேடைகளில்
நடிப்பவர்கள்
லட்சக் கணக்கில்
சம்பாதிக்கிறார்கள்;

ஆனால்
அரசியல் மேடிகளில்
நடிப்பவர்களோ
’கோடிக் கணக்கில்’ எனக்
கூறிகொள்கிறார்கள்!

உனது
சினிமாக்கள்
எங்கள்
கல்லூரிகளின்
நாகரிகத்தைக்
கற்று வளர்கின்றன.

எங்கள்
கல்லூரிகளோ
உனது
சினிமாக்களின்
கவர்ச்சியைக்
கற்றுத் தேய்கின்றன.

எப்படியாயினும்-
உனது சந்தையில்
வியாபாரம்
அபாரம்
என்பதால்-

உனது
முரண்பாடுகள்கூட
இந்தியப் பொருளாதாரத்துக்கு
உடன்பாடாகி விட்டது!

மக்களை
மாக்களாக்கிய
பல
சினிமாக்கள்
இருந்தபோதும்-

மாக்களுக்கு
சில சினிமாக்கள்
‘எனிமா’வாக
இருப்பதால்

உனது
குப்பைகளைக் கூட

எங்கள்
கலாச்சாரப் பயிர்களுக்கு
உரமாகக் கொடுக்கவும்;

உனது
குப்பைகளுக்குள்கூட
மாணிக்கங்களைத் தேடி
எடுக்கவும்

நாங்கள்
நம்பிக்கை கொண்டுவிட்டோம்.

ஆகவே-
உன்னை நம்பிக்,’கைகொடுத்து’

நீ

எங்களுக்கு
‘எனிமி’என்ற
கருத்தைக் காட்டிலும்

உனது
பெருமையின் இனிமையை
நாங்கள்
அங்கீகரிக்கவே
செய்கிறோம்!

தாயே,
எமது தேசத்தின்
சத்தான பெருமை
உன்னால்
கௌரவம்
பெற வேண்டும்’
என்றே
கரங்களைக் குவிப்பேன்!

அதனால்-

உனக்கொன்று உரைப்பேன்:
பண்பட்ட சிந்தனையாளர்களே
சினிமாக் கலைஞர்களாகச்
செம்மைப் படட்டும்:
அவர்களை
நீ-
அங்கீகரிக்காததுகூட

அவர்களுக்குக்
கௌரவம் தரும்

விஷயம்தான்;

ஆனால்-

அவர்களை
அங்கீகரித்து
அணைத்துக் கொள்வதன்மூலமே

நீ
உயர்ந்த கௌரவம்
பெறுகிறாய்’

என்பதை
உனக்குச் சொல்லி வைப்பேன்!

இவண்-
கிருஷ்ணன்பாலா

(1987களில் வெளியான ‘‘இந்த ராஜ பாட்டையில்…...'' நூலிருந்து)


No comments: