Friday, September 13, 2013

பாரதி பாடல்-பாடபேதம் அறிக!




றிவார்ந்த நண்பர்களே, பாரதியின் பக்தர்களே! 
வணக்கம்.

மகாகவி பாரதி, என்போன்றோருக்கு ஞானகுரு; தமிழ்ச் சாதிக்கு பாட்டன். பாட்டெழுதும் திறமையினால் அவன் ’பாட்டன்’ என்றில்லாமல்,தனது பாட்டுச் சாசனத்தைத் தன் பின்வரும் சந்ததிகளுக்கு எழுதி வைத்ததனால்தான் அவன் நமக்குப் பாட்டன் என்றாகின்றான்.

சாதிகள் இல்லையடி பாப்பாஎன்று அவன் பாடியதற்கேற்ப,அவனைப் பற்றுவதிலும் பின்பற்றுவதிலும் நமக்குள் எவ்விதப் பேதமும் கிடையாது.

அது போலவே-

‘அவன் பாடலில் உள்ள கட்டமைப்பை, நாம் எவ்வித பாடபேதமுமின்றி பேதமின்றி உணர்ந்து ஒரே மாதிரியாகவே படித்தும் புரிந்தும் வர வேண்டும்’ என்ற சிந்தனையை இங்கு வைப்பது மிகச் சரியானது’ என நம்புகிறேன்.

பாரதி எழுதிய அத்தனை பாடல்களும் இன்று முழுமையாக நமக்குக் கிடைக்கவில்லை.  கிடைத்தவற்றுள் சில பாடல்களில் கூட சில வரிகள் சரியாகக் கவனித்து முழுமைப் படுத்தப்படாமல் பாடபேதத்தோடு இருப்பதைக் காண்கின்றேன்.

கவிச் சூரியனான பாரதியின் படைப்புக்கள் எதுவும் எள்ளளவும் குற்றம் குறை இல்லாதவைஎன்று நம்புகிறவன் நான்.

அவ்விதம் குறைகள் இருப்பின் அது,‘பாரதியின் கைப் பிரதிகளைத் தேடி எடுத்தோ, மறு பிரதி எழுதியோ ( மக்கிப் போன பழைய தாள்களிலிருந்து
Re-Write செய்தோ)  படி’ தந்தவர்களின் கவனக் குறைவால் அல்லது பாரதியின் சிந்தனயை அப்படியே தாங்கிச் சொல்லும் கவித் திறன் இல்லாதவர்களால் வந்ததாகத்தான் இருக்க முடியுமே’ தவிர,பாரதியால் அல்ல.

பாரதி கவிதைகளின் முழுப்பரிமாணத்தையும் அறிந்தோர் அவற்றை
மறுசீர் செய்ய, இப்போது வெளியிடப் பட்டுள்ள நூல்களில் உள்ள கவிதைகள் சிலவற்றின்அச்சுப் பதிவுகளில்- பாடபேதங்களை ஆய்வு செய்ய வேண்டும்.

உதாரணமாக:

//’’தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?’’//

என்று பாரதியின் கவிதை நூல்களில் இருப்பதையே இங்குள்ள அனைவரும் எடுத்துக் கையாண்டு வருகின்றனர்.

குறிப்பாக-
முகநூல் முதலான சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு, கவிதை எழுதும் ஆர்வலர்களும் சரி; கவிஞர்களும் சரி,ஏன்,பாரதியின் பக்தர்களும்சரி….

இந்த வரிகளையே சகஜமாக எடுத்து காட்டி இன்புற்று வருகின்றனர்.

இப்பாடலில் எது மோனைகளும் இயைபுத் தொடர்களும் பொருத்தமற்ற சொல்லாடலும்  உள்ளன.அவை இடம் மாறியுள்ளன.

உண்மையில் கவிதைத் தேட்டம் மிக்கவர்களும் இலக்கணம் அறிந்தாரும் கூட இதைத் தெளிவுபடுத்திக் கொள்ளாமல் அச்சில் வெளிவந்துள்ளா  ‘பாரதியார் கவிதை’ நூல்களின் அச்சுப் பிரதிகளில் உள்ள பிழைகளை அல்லது பாட பேதங்களைப் பற்றி அக்கறை செலுத்தாமல் அப்படியே ஒப்பித்து வருவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
பாரதியின் மீது எனக்கு ஈர்ப்புத் தோன்றிய நாள் முதலேஎனது இளம்வயது முதலே,இப்பாடலை என்னை அறியாமல்-

தேடிச் சோறு நிதந் தின்று; அதில்
திண்ணைக் கதைகள்பல பேசி;மனம்
வாடித் துன்பம் மிக உழன்று; பிறர்
வாடப் பல செயல்கள் செய்து;நரை
கூடிக் கிழப் பருவம் எய்தி; கொடும்
கூற்றுக்கு இரையெனப் பின் மாயும்
வேடிக்கை மனிதரைப் போலே; நான்
வீழ்வேனென்று நினைத் தாயோ? ”

என்றுதான் பாடி வந்திருக்கின்றேன்.

எப்போதும் என் சிந்தனைக்குள் ஊடுருவி நிற்கும் பாரதியின் இக்கவிதையின் கட்டமைப்பைக் கவனியுங்கள்.

இதன் அச்சில், வடிவில் ஏதேனும் எதுகை,மோனை,இயைபு,ஓசை மற்றும் அசைகளில் தடுமாற்றம் தட்டுகிறதா?

அதேபோல் முதலில் குறிப்பிட்டவாறு ‘பாரதியார் கவிதைகள் நூலில் உள்ள:

//’’தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?’’//

என்ற பிரசுரத்தில் உள்ள வரிகளையும் கவனியுங்கள்.


//’’தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி ……   //
என்று வருகிறது. 

சின்னஞ் சிறுகதைகளைவிட திண்ணைக் கதைகள் என்பதுதான் பாரதியின் சீற்றத்துக்குக் காரணமாக இருக்க முடியும்.

மேலும் அடுத்து வரும் வரிகளில் எதுகை, மோனைகளும் இயைபுத் தொடரும் சரியாக அமையவில்லை.

சிறு பிழைகள்தான்; ’பாரதியின் கருத்துக் கம்பீரத்தின் கைகளைக் கட்டி விட்டது’ போன்ற உணர்வைத் தரவில்லையா?

நான் சுதேசமித்திரன் நாளிதழில் - 1976-77 களில் உதவி ஆசிரியனாகப் பணியாற்றியபோது, பாரதியின் இக்கவிதையை நானே எழுதிக் கொண்டது போல் எண்ணி அடிக்கடி எனக்குள் பாடியும் எனது இயல்புகளைப் பிறருக்குத் தெரிவிக்கும்போது எடுத்துச் சொல்லியும் இறும்பூதெய்துவதும் வழக்கம்.

ஆனால்-
முகநூலுக்கு வந்த பிறகு பாரதியின் நேசர்கள் பலர் இப்பாடலை இங்கு எடுத்துக் காட்டும் போதெல்லாம் ‘பாரதியார் கவிதைகள்’ பிரசுரங்களில் உள்ளவாறே எடுத்துக் கையாண்டு வருகிறார்கள்.

உண்மையில்,இதில்- அதாவது,’பாரதியார் கவிதைகள்’நூல் பிரசுரங்களில்,குறிப்பாக இந்த, “தேடிச் சோறு நிதம் தின்று…என்று தொடங்கும் கவிதைப் பிரசுரத்தில் எதுகைகள் இடறி இருப்பதும்
மோனைகள் முறைத்துக் கொள்வதும் இயைபும் ஓசைகளும் தட்டிக் கொள்வதுமாக இருக்கின்றன.

இதையே பிரசுரிக்கப்பட்ட எல்லாபாரதியார் கவிதைநூல்களிலும்
இருக்கக் காண்கிறேன்.

விக்கிப் பீடியாவிலும் இதுவே உள்ளது.

இந்த கவிதையின் முதல், இரண்டு வரிகளை.
தேடிச் சோறு நிதம் தின்று; அதில்
திண்ணைக் கதைகள்பல பேசி;மனம்....”

என்று-

சரிசெய்து கொண்டால் மற்ற வரிகள் அனைத்தும் கவிதைக்கே உரிய கட்டுக் கோப்புக்குள்ளும் பாரதியின் கருத்துக்குள்ளும் கம்பீரமாய் நின்று கொண்டிருப்பதைக் காணலாம்;உணரலாம்.

தேடிச் சோறு நிதம் தின்று; அதில்
திண்ணைக் கதைகள்பல பேசி;மனம்
வாடித் துன்பம் மிக உழன்று;....”

என்று உணர்ந்து, அதன் கருத்தின் கம்பீரத்தின் அடிப்படையில், இந்த பாட பேதம் புரியப்பட்டால், அதில் உள்ள எதுகை மோனைகளும் இயைபுத் தொடரும் பாரதியின் எழுச்சிமிகும் தோற்றத்தையும் முழுமையாக் காட்டும்’ என்பதை வலியுறுத்தவே இப்பதிவை அளித்திருக்கின்றேன்.

இப்படி ஒரு பாடபேதத்தைச் சுட்டிக் காட்டுவது, எவ்வகையிலும் பாரதியின் பெருமையைக் குறைக்கவில்ல;மாறாக எழுச்சியுடன் ஏற்றம் பெருகிறதுஎன்பதை எடுத்து கூறவே  விரும்புகின்றேன்.

பாரதியின் உணர்வுகளில் பலமுறை தோய்ந்து அவனுடைய கவிதைப் பெருவெள்ளத்தில் நீந்தி வரும் எனக்கு பாரதியின் கவிதைகளில் வரும் எதுகை,மோனை,இயைபு, கருத்து முதலான அனைத்திலும் பொங்கி நிற்கும் புலமையில் அளப்பறிய பெருமையும் ஈடுபாடும் உண்டு.

‘பழைய பிரதியை சரிவரக் கவனிக்காது யாரோ செய்த பிழையை,பின் வந்த கவிஞர் பெருமக்களும் பாரதியின் பக்தர்களும் கூர்ந்து கவனிக்கவில்லையோ?’ என்பதை எண்ணும் எனது மனம், ‘ஆரம்பம் முதல் நான் நெஞ்சில் பதித்திருந்த வரிகளின் கட்டமைப்பே சரியான கவிதை வடிவம்’ என்பதையும் அதைத்தான் பாரதியும் எழுதியிருக்க முடியும்’ என்பதையும் உறுதியாக நம்புகிறது.

சிறு சொற்கள் இட மற்றம்தான்.

தேடிச் சோறு நிதம் தின்று; அதில்
திண்ணைக் கதைகள்பல பேசி;மனம்
வாடித் துன்பம் மிக உழன்று; பிறர்
வாடப் பல செயல்கள் செய்து;நரை
கூடிக் கிழப் பருவம் எய்தி; கொடும்
கூற்றுக்கு இரையெனப் பின் மாயும்
வேடிக்கை மனிதரைப் போலே; நான்
வீழ்வேனென்று நினைத் தாயோ? ”

என்றிருப்பதில் பாரதியின் கம்பீரமும் அவன் கவிதையின் பொருளும் சிறந்து நிற்கின்றதே தவிர,சிதைக்கப் படவில்லை.

எனவே-
இன்று பாரதியின்  நினைவு நாளைத் தொடர்ந்து, இதுபற்றி, ஓர் பார்வையை உங்கள் எல்லோருக்கும் வைத்து,அது பற்றிய உங்கள் எண்ணத்தை அறியவும் பாரதி பாட்டின்  கம்பீரத்தையும்  கட்டுக் கோப்பினையும் காக்கவும் வேண்டி இதனைப் பதிக்கின்றேன்.

வாழ்க பாரதி; வாழ்க அவன் புகழ்!

இவண்-
கிருஷ்ணன்பாலா



No comments: