Saturday, September 28, 2013

காங்கிரஸின் கடப நாடகம்!


றிவார்ந்த நண்பர்களே,

//கிரிமினல் குற்றங்களுக்கு ஆளான அரசியல்வாதிகளின் அதிகாரத்தை பறிக்கும் சட்டத்தில் திருத்தம் செய்து அவர்களக் காப்பாற்றும் பொருட்டு, மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டத்தைத் தூக்கி குப்பையில் போட வேண்டும்.

இது சோனியாவில் மகன் ராகுல் சொன்னதாகச் செய்தி.

நண்பர்களே,
இதில் உள்குத்து இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

வரும் பாராளுமன்றத் தேர்தலில் மக்களிடம் சென்று,ஓட்டுக் கேட்கும் அருகதையையாவது தோற்றுவித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, இப்போதுள்ள மன்மோகனின் ஆட்சிக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதது போல் ஒரு பித்தலாட்டக் காட்சியை அரங்கேற்றவும் சோனியாவின் பிள்ளை ஒரு சொக்கத் தங்கம் போலக் காட்டிக் கொள்ளவுமே இந்தக் கபடநாடகம்.

‘நீ இந்த அவசரச் சட்டத்தைக் கொண்டு வருவது போல் கொண்டு வா; நான் எதிர்ப்பதுபோல் எதிர்த்து நல்ல பேரை வாங்கிக் கொள்கிறேன்’ என்ற திட்டமிட்ட சதியின் சாட்சியே இது.//

என்று நான் எழுதியதன் அர்த்தம் இப்போது உண்மையாகிச் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கிறது.

‘இதோ பாருங்கள் காங்கிரசின் தவறுகளையும் மன்மோகன்  ஆட்சியின் பிழைகளையும் பிசகில்லாமல் பேசும் உத்தமத் தலைவன் ராகுல்’என்பது இந்த எதிர்ப்பின் மூலம் மக்கள் உணர்ந்து விட்டார்கள்’ என்று காங்கிரஸ்
திண்ணைப்பேச்சாளர்கள் இப்போது  ஊடகங்களில் உளறத் தொடங்கி இருக்கிறார்கள்.

நண்பர்களே,
ராணுவ ஆயுத பேர ஊழல், 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல், இரும்புத்தாது லைசென்ஸ் ஊழல் என்று மிகப்பெரும் ஊழல்கள் அப்பட்டமாக நாட்டுக்குத் தெரிந்து உச்சநீதி மன்றத்தால் கடுமையாகச் சாடப்பட்டும்கூட, சற்றும் தன் முயற்சியில் தளாராத  வேதாளமாய் விசனமற்று  வேப்ப மரம் ஏறும் காங்கிரஸ், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதைச் சொல்லி,எதை முன்னிறுத்தி,‘யாரை முன்னிலைப் படுத்தி ஓட்டுக் கேட்பது?  என்றுக் குழம்பிப் போய்க் கிடந்தது.

கழுவ முடியாத கறைபட்டு,மக்களாலும் ஊடகங்களாலும் கைவிடப்பட்ட காங்கிரஸுக்கு வழியே இல்லாத ஒரே வழி: இந்த ‘சைத்தான் கி பச்சா’ ராகுல்தான்.

’நீதிமன்றங்களில்  சுட்டிக் காட்டப்பட்டு, ‘கிரிமினல்கள் என்று வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டவர்கள்’ நாளுமன்றத்திலோ. சட்டமன்றத்திலோ பதவியில் இருக்கக் கூடாது’ என்ற  உச்ச நீதிமன்றத்தின் அதிரடித்  தீர்ப்பால் அதிர்ந்து போன காங்கிரஸ் அந்தத் தர்மத்தின் தீர்ப்பைத் திருத்திக் கிரிமினல்களைப் பதவியில் நீடிக்கவும் ஜோடிக்கவும் வழி செய்யும் வகையில் அவசரச் சட்டம் ஒன்றை மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய ஆளும் அரசு மூலம் கொண்டு வந்தது.

இதன் மூலம்,கிரிமினல்களின் நேரடித் துணையினாலும் மறைமுக ஆதரவினாலும் வன்முறைகளைத் தூண்டி அதனால்  தேர்தல் வெற்றிகளைப் பெறும் அயோக்கியத்தனம் எந்தக் கட்சிக்குச் சொந்தமானது என்பதைப் புத்தி உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இனக் கலவரங்களையும் மதத் துவேஷங்களையும் மக்களிடையே தூண்டுகிறவர்கள் கிரிமினல்கள்;அந்தக் கிரிமினல்களைக் காப்பாற்ற  வெளிப்படையாகவே எத்தனிக்கின்ற கட்சி: காங்கிரஸ்தான்.

இதற்குப் பின்னரும் கான்கிரஸை  நரேந்திர மோதிக்கு அஞ்சி ஆதரிக்கிறவர்கள் அந்தக் கிரிமினல்களின்  கிறுக்குப் பிடித்த தோழமைகள்தான்.

இப்போதெல்லாம் எல்லக் கட்சிகளின் சார்பிலும் நாடாளுமன்றத்திலும் சட்ட மன்றங்களிலும் கிரிமினல்கள் எம்.பிக் களாகவும் எம்.எல்.ஏக்களாகவும் இருப்பதால் எல்லாக் கட்சிகளும் இந்த அவசர சட்டத்தை எதிர்க்காமல் வாய் மூடிக் கொண்டிருக்கும் என்று கணக்குப் போட்டுத்தான் சட்ட மேதைகள் (?)(ப.சி.,கபில் சிபல் முதலானவர்கள்) நிரம்பிய மன்மோகன் சிங்கின் அரசு இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது.

‘UPA என்ற ஆளும் முன்னணியின் தலைவர் சோனியாவின் சம்மதமோ தூண்டுதலோ இன்றி இந்தச் சட்டத்தை முன்னிறுத்த மன்மோகனால் முடியாது’ என்பது நாட்டில் விரல் சூப்பிக் கொண்டிருக்கிற விடலைகளுக்குக் கூடத் தெரியும்.

சோனியாவால் தூண்டப்படும் எந்த விஷயமும் அவரது ’பச்சா’வான ராகுலுக்குத் தெரியாமல் இருக்க முடியாது.

இப்படி இருந்தும் இந்த அவசரச் சட்டம் கொண்டு வந்த மத்திய அரசைப் பகிரங்கமாக ராகுல் சாடுகிறார்.

உச்ச நீதிமன்றம் வரை காறித் துப்பபட்ட  2ஜி ஊழல் நிலக்கரி ஊழல் முதலான மிகப் பெரும் ஊழல்களுக்கு எதிராக வீறு கொண்டு எழாத ராகுல், இந்த ‘கிரிமினல்களைக் காப்பாற்றுவதற்காக கொஞ்சமும் லஜ்ஜை இன்றி கேடுகெட்ட சட்டத்தைக் கொண்டுவரும்வரை அமைதியாக,ஒண்ணும் தெரியாத பாப்பாவாக இருந்த ராகுல் ‘அந்தச் சட்டத்தைச் தூக்கிக் குப்பையில் எறிய வேண்டும்’ என்றும் ‘இந்தச் சட்டம் முட்டாள்தனமானது’ என்றும் புரட்சி வசனம் பேசுகிறார்,இப்போது..

இது மிகப் பெரிய சூழ்ச்சியோடு உருவாக்கப்பட்ட நரித் தந்திர நாடகமே அன்றி வேறென்ன?

ராகுலை ஒரு புனிதமானவராகவும் மனித நேயமானவராகவும் சித்தரிக்கவும் நாடெங்கிலும் உள்ள மீடியாக்களில் வெறும் வாயை மென்று கொண்டிருந்த காங்கிரஸ்காரர்கள், இனி அவலையாவது போட்டு மெல்லட்டும் என்பதற்காகவும் அதன் மூலம் ராகுலுக்குப் பெரிய விளம்பரத்தை உருவாக்கி மக்களிடம் செல்வாக்குப் பெற்று வாக்குக் கேட்கலாம் என்ற நப்பாசையின் விளைவாகவும்தான் இந்தச் சந்தி சிரிக்கும் சண்டாள  நாடகம்.

தூய்மையான அரசியல், துணிச்சலான சிந்தனை இவற்றுக்கும் ராகுலுக்கும் என்ன சம்பந்தம்?

நாடு கேடு கெட்டுப் போனதுக்கே இவரும் இவர் அம்மாவும் மச்சானும்தானே முழுமுதற் காரணம்?

கடந்த ஐந்து ஆண்டுகளாக அனைத்து நிர்வாகச் சீர்கேடுகளுக்கும் நாட்டின் மிகப் பெரிய ஊழல்களுக்கும் பொருளாதரப் பின்னடைவுகளுக்கும் தொழில்கள் முடக்கத்துக்கும் சிறு வருத்தம் கூடச் சிந்தாத இந்த ’சோட்டா’
இப்போது உச்ச நீதி மன்றமும் நாட்டு மக்களும் விரும்புகின்ற ‘கிரிமினல் அரசியல் வாதிகளின் பதவிப் பறிப்பை, ஏதோ ஒரு புனிதமான அரசியல் சக்திபோல் அதுவும் சொந்தக் கட்சிக்குளேயே,குறிப்பாக சட்டத்தைக் கொண்டுவரும் கட்சியின் சர்வ அதிகாரமும் கொண்ட துணைத்தலைவராக இருந்து கொண்டே  இவர் மட்டுமே ஆதரிக்கின்றவர்போல் பேசுவதும் அதை மீடியாக்களில் விவாதப் பொருள் ஆக்கப்படுவதும்  விந்தையும் வேடிக்கையும் விஷமத்தனமும் கொண்ட துர்ராஜ தந்திரமாய் வெளுத்துக் கொண்டிருக்கிறது.

அதைவிட மகத்தான கேவலம் ஒன்றும் இதில் புதைந்துள்ளதை நாம்-குறிப்பாக நமது ஊடகங்கள் கவனிக்க வேண்டும்:

‘இந்தச் சட்டம் முட்டாள்தனமானது’ என்று இன்று ராகுல் வர்ணிப்பது, இந்தக் கொழுப்பெடுத்த கோமாளி அரசின் உள்ளரங்கில் கோமாளிகளுக்குள் ஏதோ ஒருவகையிலான உள்குத்து வேலைகள் நடக்கின்றன’ என்றுதானே அர்த்தம்?

‘பிரதமர் மன்மோகன் சிங்கை முட்டாள்’என்றும் அவருடைய அரசின் செயல்பாடுகளை முட்டாள்தனமானது என்றும்தானே இப்போது விமர்சிக்கத் தலைப்படுகிறார்.இந்த ராகுல்?

இதை மீடியாக்கள் கவனிக்க வேண்டாமா?

ராகுல் என்ன சாதாரண  ஆளா அல்லது முகவரியற்ற விமர்சகரா?

ஆளும் கூட்டணியின் முதல் அங்கமான காங்கிரஸின் துணைத்தலைவர்;நாடாளுமன்ற உறுப்பினர். சோனியாவின்  சகல உரிமையுமுள்ள அரசியல் வாரிசு;அடுத்த பிரதமர் என்று காங்கிரஸால் தயாரிக்கப்பட்டு சரக்கு.

கடந்த சில நாட்களுக்குமுன்புதான் மன்மோகன் ‘பிரதமர் பதவிக்கு முழுத் தகுதியுமுள்ளவர் ராகுல்’ என்றும் அவருடைய தலைமையின் கீழ் சேவை செய்யத் தயாராக இருக்கிறேன்’என்றும் மீடியாக்களில் சொன்னார்.

அதைத் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களுக்குள் காங்கிரஸ் செய்தி வெளியிட்டது:

’ராகுலைப் பிரதமர் என்று சொல்லி காங்கிரஸ்  மக்களிடம் சென்று ஓட்டுக் கேட்காது; அது கட்சியின் நடைமுறையும் அல்ல’ என்பதுதான் அச் செய்தி.

ஆக, நரேந்திர மோதி அவர்களுக்கு மக்களிடையே பெருகி வரும் ஆதரவினால் கிடு கிடுத்துப்போய்,பிரதமர் ஒன்று சொல்வதும் அதை காங்கிரஸ் மறுப்பதும் ராகுல் ஒன்று சொல்வதும் அது காங்கிரசையே விமர்சிப்பதுபோல் இருப்பதுமான கேலிக் கூத்துக்கள் காங்கிரசுக்குள் முளைத்திருப்பது அதன் பித்துப்பிடித்த நிலையைத்தான் நிச்சயம் உணர்த்துகின்றன.

போகப்போக காங்கிரஸுக்குள் ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்தி  அதன் கூடாரம் சிதறுண்டு போகவும் காரணங்கள் தென்படுகின்றன.

நான்  இதை அப்போதே விமர்சித்து எழுதினேன்.

‘தன்னை ஒரு காசுக்கும்பிரயோசனப்படாத பிரதமர் பதவியில் இருக்கச் செய்து, அரசைப் பயன் படுத்தி எல்லா ஊழல்களையும் இந்த பெயரால் பெயரால் செய்து லட்சக் கணக்கான கோடிகளைச் சுருட்டிக் கொண்டு, தீராப் பழியைதன்னைச் சுமக்கச் செய்து,தனக்குக் கொஞ்ச நஞ்சம் இருந்த பெயரையும் பாழாக்கி,படுபாதாளத்தில் தள்ளிய  சோனியாவின் குடும்பத்தைப் பழி வாங்கவும்; தன்னால் காங்கிரஸ் வரும் தேர்தலில் மெஜாரிட்டியான இடங்களில் டெபாஸிட் போன அவமானம் வராமல் அது ராகுலால் வரட்டுமே என்ற  நோக்கத்தாலும்தான் அப்படியொரு திருவாய் மலர்ந்தார்,மன்மோகன்.

இது ஒன்றுமட்டுமேதான் அவர் சோனியாவைக் கலந்து பேசாமல் வெளியிட்ட அறிக்கை..

அவரது கருத்தை காங்கிரஸே மறுத்ததற்கும்  ‘கா’ரணம்’ இருக்கிறது:

ஆரம்பத்தில் ’நரேந்திர மோதி எப்படியும் பிரதமர் வேட்பாளர் என்ற தகுதிக்கு வர மாட்டார்’ என்று நம்பியது; பிறகு ‘வரக் கூடாது’ என்பதற்காகப் பல்வேறு சதுரங்கக் காய்களை உருட்டியது.

NDA வின் கூட்டாளியான பீகார் முதல்வர் நிதீஷ் குமாரின் எதிர்ப்பு, அத்வானியின் ஆ’வேசம்’ இஸ்லாம் கட்சிகளின் கூக்குரல்கள்; மோதியின் அமைச்சரவைச் சகா ஒருவருக்கு எதிரான தீர்ப்பு; குஜராத் உயர் போலீஸ் அதிகாரியின் மோதிக்கு எதிரான கடித வெளியீடு; மோதி ஒரு இந்துமத வாதி என்ற பிரச்சாரம் என்று பல காய்கள்.

அத்தனையும் நரேந்திர மோதிக்கு ஆதரவான மக்கள் ஆரவாரத்தினல் அடங்கிப் போனபின்பு,  ‘ராகுல் என்ன,  செத்துப்போன பாட்டன் நேருவே வந்தாலும் காங்கிரசை மக்கள் கைகழுவி விடுவார்கள்’ என்பதை புரிந்து கொண்டுதான் மன்மோகனின் கருத்தைக் காங்கிரஸ் மறுத்திருக்கிறது.
                                                                                                                                                           
எத்தனை முறை இழிநிலைப் பட்டு,மக்களாலும் மீடியாக்களாலும் காறி உமிழப்பட்டாலும்  இன்று பிறந்தவர்கள்போல் ஏமாற்று நாடகம் ஆடும் காங்கிரஸையும் காங்கிரஸ்காரர்களையும் ஓட்டுக் கேட்கக் கூட மக்கள் அனுமதிக்க மாட்டாத  வெட்கக் கேடான சூழ்நிலைகளைக் காண்ப்போகும் அவலத்தில் இருக்கும்  காங்கிரஸ் பித்தம் பிடித்துப் போய் தப்புத்தப்பாகத் தாளம் போட்டுக் கொண்டிருக்கிறது.

நாடே சிரிக்கின்றது.


நான் நண்பர் ஒருவரிடம் வினயமாகவே சொன்னேன்:

‘நரேந்திர மோதி அவர்களின் ஜாதகத்தில் தற்போது நடக்கும் ஏழரைச் சனி பற்றி நான் மிகவும் கவலைப் படுகிறேன்.

ஆனால் காங்கிரஸுக்கோ எட்டரைச் சனி பிடித்து ஆட்டிக் கொண்டிருப்பதை விநோதமாகப் பார்க்கின்றேன்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
28.9.2013

No comments: