Sunday, September 15, 2013

சுய தரிசனம்:1

விதியின் விளையாட்டு
ரணம் என்பது எல்லோருக்கும் நிச்சயிக்கப்பட்டதுதான்.

அது வரும் வழிகள்தான் வேறு வேறு.

ஒருவன் ஒரு பெண்ணைக் கொடூரமான முறையில் கற்பழித்து அதனால் அவளது சாவு பரிதாபமாக நேரும்போது, அவனுக்கு மரணம் தூக்குக் கயிற்றின்வழியாக வருகிறது என்றால் தடுப்பதற்கு ஏதுமில்லை.

ஆனால்,எவ்விதக் குற்றமும் செய்யாமல் எதிர்பாராத விபத்துக்களில் ‘தூக்குத்தண்டனை மரணத்தை’ விடக் கொடூரமாகக் கொல்லப்படுகிறானே.அந்தக் கொடுமையை ஏற்படுத்தும் விபத்துக்களுக்கு யார் தண்டனையை வழங்க முடியும்?

நமக்குச் சிந்திக்கும் அறிவும் செயல்படும் திறனும் இருப்பதால் மரணத்தை இயன்றவரை தள்ளிப்போட முயற்சிக்கிறோம்;அவ்வளவுதான். 


அந்த முயற்சி கூட விதியின் வழியேதான் அமைகிறது.

இங்கே தள்ளிப்போடப்பட்டதுபோல் நமக்குத் தோன்றுவதும்,’’அப்பாடா,தப்பித்துக் கொண்டோம்!” என்று பெருமூச்சு விடுவதும் விதியின் விளையாட்டே தவிர அதன் கருணையினால் அல்ல.

’பிறந்தார் எல்லாம் ஒருநாள் மரணதேவனின் சபைக்குள் சென்றாக வேண்டும்’ என்ற கட்டளையை ஏற்றுக் கொண்டுதான்,பிறக்கும் போதே அதற்கான டோக்கனைப் பெற்றுக் கொண்டு பிறந்திருக்கிறோம்.

நம் ஒவ்வொருவரின் ’டோக்கன் நம்பர்களை’ நமக்குத் தெரியாதபடி விதிதான் மறைத்து வைத்திருக்கிறது.

தெரிந்திருக்குமானால், மனிதராகப் பிறந்தவர் எல்லோருமே மகான்களாகவே வாழ்ந்து மடிந்து விடுவார்கள்.

பிறகு சுவாரஸ்யம் என்பது வாழ்க்கையில் இல்லாமலேயே நாம் ஒவ்வொருவரும் பொம்மைகள்போல்தான் வாழ்ந்து மடிந்து கொண்டிருக்க வேண்டும்.

வாழும்வரைதான் வாழ்க்கை நமக்கு; அதில்
வரவும் செலவும் விதியின் கணக்கு.

இவண்-
கிருஷ்ணன்பாலா
15.9.2013

No comments: