Saturday, September 14, 2013

எனது சுதர்மம்


ண்பர்களே,
வணக்கம்.

நண்பர்கள் சிலர் அடிக்கடி என்னிடம் குறைப்படும் அல்லது குறைகாணும் விஷயங்கள் இவை:

1. முகநூலில் கத்துக்குட்டிகள் அதிகம்தான். அதற்காகச் சாடுவதையே நீங்கள் குறிக்கோளாகக் கொண்டிருப்பது ஏன்?

2. காதலை விரும்பாதோர் யாருமில்லை; ஆனால் காதலைக் கடுமையாகச் சாடுவது ஏன்?

3. ‘முகநூலில் நடக்கும் சண்டைகள், அக்கப் போர்,கூட்டம் கூட்டமாக ’லைக்’ போடப் படும் பதிவுகள் பற்றி உங்கள் கருத்தென்ன?

4. குறிப்பாகப் பெண்கள் பலர் இடும் பதிவுகளை மிகவும் காரமான எழுத்துக்களில் சாடுகிறீர்கள். அவர்களைக் கண்டு கொள்ளாமல் நீங்கள் உங்கள் சிறப்பான பதிவுகளில் கவனம் செலுத்தலாமே?

இப்படிப் பலரும் பலவிதமான கேள்விகளைக் கேட்கிறார்கள்.

‘அவர்களுக்கெல்லாம் தனித்தனியாகச் சொல்லும்   நேரத்தை மிச்சப்படுத்தி ஒட்டுமொத்தமாக நண்பர்கள் அனைவருக்கும் சொல்ல வேண்டும்’ என்ற நிர்ப்பந்தம் எழுந்துள்ளதால் இந்தப் பதிவு.

இதனிடையில்-

உண்மையில்  இங்குள்ள வாசகர்களில் அதிகம் பேர், சமூகம்,அரசியல், ஆன்மீகம், தமிழர் மரபு பற்றிய எனது எழுத்துக்களை வரவேற்று மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் மிகவும் விரும்பிப் படிக்கின்றார்கள். கடல் கடந்து வாழ்கின்ற தமிழர்கள் பலர்,’மேலும் மேலும் அஞ்சாது எடுத்துரைக்கும் எழுத்துக்களைத் தொடருங்கள் என்று தொலை பேசி மூலமும் மின் அஞ்சல்கள் மூலமும் வலியுறுத்துகிறார்கள் என்பதையும் சொல்லத்தான் வேண்டும்.

முகநூலில் வாசசருக்கு வாசகர் ரசனைகளில் மாறுபடுகின்றார்கள்; முக நட்பு வட்டத்தில் இருக்கும் நண்பர்களும் அவ்வாறே.

உண்மையைச் சொல்வதென்றால் ஒட்டுமொத்தமாக அனைவரையும் திருப்தி படுத்த எழுதுவது எழுத்தாக இருக்கமுடியாது.

கவியரசு கண்ணதாசன் சொன்னதுபோல்:

“போற்றுவார் போற்றட்டும்;புழுதி வாரித்
தூற்றுவார் தூற்றட்டும்;தொடர்ந்து செல்வேன்;
ஏற்றதொரு கருத்தென்றென்  னுள்ளம் சொன்னால்;
எடுத்துரைப்பேன்;எவர் வரினும்நில்லேன்;அஞ்சேன்!

என்பதே எனது எழுத்தின் பாதை;நோக்கம்.

முகநூலில் ஒழுக்கமும் பண்பும் அற உணர்வும் கெட்டுப்போன பேர்வழிகளின் சிந்தனைகளைச் சாடாமல் எழுதுவது  எழுத்தும் அல்ல;தமிழின் அறம் சார்ந்த பயணமும் அல்ல.

ஏன் என்றால்-

‘கத்துக்குட்டிகள் எழுதுகிறார்கள்’ என்று அமைதியாக இருந்து விட்டால் பின் கத்துக்குட்டிகளின்  கண்ணறாவிக் கருத்துக்களுக்கே பெரும்பான்மை ஏற்பட்டுக் கணினித் தமிழே இதுதான்’ என்கிற மனப்பான்மைக்குக் கற்றவர்களும் அடிமையாகி விடுவர். அவர்களுக்கு ’நட்பு வட்டம் பெரிதாக இருக்க வேண்டும்’ என்பதில் வேட்கை மிகுந்து,தமிழின் தரம் அங்கே காணாமல் போய்விடும்.

இது ஒருவகையில்  மொழியைச் சிதைப்பதாகி, இளைய தலைமுறையினருக்கு உயர்தனிச் செம்மொழியின் சீர்மை யாதெனத் தெரியாது போய் நமது மரபும் ஒழுக்கமும் மக்கிப்போகவும் வழி திறக்கப்பட்டு விடும்.

சிறுமை கண்டு பொங்கவும் சிறப்புக் கண்டு வாழ்த்தவும் நான் தயங்குவதில்லை.

‘வாசகர் எண்ணிக்கை பெருக வேண்டும்’ என்பதில் எனக்குக் கிஞ்சித்தும் ஆர்வம் இல்லை;அதேசமயம் என்னிடம் நட்புக் கோரிக்கை விடுப்பவர்களில் 90 சதவீதம் பேரை அங்கீகரித்தும் பத்து சதவீதம் பேரை நிராகரித்தும் எனது நட்பு வட்டத்தை வைத்துக் கொள்கிறவன் நான்.

அவ்வாறு செய்வது ‘தரமான தமிழைப் படிக்கின்றவர்களின் எண்ணிக்கை கூடட்டுமே’ என்கிற தாராள மனதின் வெளிப்பாடென நண்பர்கள் உணரவேண்டும்.

நட்புக் கோரிக்கையாளர்களில் பத்து சதம்  நிராகரிக்கப்படுபவர்கள் என்றால் அவர்கள் வெறும் விளையாட்டுப் பிள்ளைகள்  மற்றும் விபச்சாரத்தனமான எண்ணம் கொண்டோர் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

காதலைக் கடுமையாகச் சாடுகிறேன்’ என்பதற்கு எனது பதில்:
‘நீங்கள் முதலில் இளம்வயதுக் காதல் பற்றிய மயக்கத்தை உங்கள் உணர்வுகளில் இருந்து அகற்றிவிட்டால் இக்கேள்வியே உங்களுக்குத் தோன்றாது.

இன்றைய தமிழ் இளைஞர் இளைஞிகளிடையே காதல் என்பது ஒரு  நாகரீகம் (Fashion) போல் ஆகிவிட்டது.

வசதி உள்ளவர்களும் வசதி அற்றவர்களும் இளமையில்  காதல் வசப்படுவது பருவத்தூண்டலின் பாதகத்தாலே அன்றி, பக்குவப்பட்ட அறிவின் ஆழத்தால் அல்ல;

விடலைக் காதலில்  வீசப்படும் வலையும் பேசப்படும் மொழியும் உண்மையானதல்ல; உணர்ச்சிகளின் தாக்கத்தால் வெளிப்படுத்தப்படும் சினிமாத் தனமான சிற்றின்பத் தூண்டல்கள்.

அதைக் கடுமை கொண்டு சாடுவதும் எதிர்ப்பதும் நமது இளைஞர் இளைஞிகளின் உண்மையான எதிர்கால நன்மைக்கே தவிர, நாசப்படுத்த அல்ல.

எங்கோ எவரோ காதல் வசப்பட்டு அதன் மூலம் சமூகக் கொந்தளிப்புக்கள் ஏற்பட்டு இரு வேறு சமூகத்தார் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டும் பழித்துக் கொண்டும் வன்முறையில் இறங்குவதைச் சட்டத்தால் தடுக்க முடியாது என்பதைக் கண்ட பின்னரும் ‘காதலை வாழ வைப்போம்;அதன் மூலம் சாதிக் கொடுமையை ஒழிப்போம்’ என்று கோஷமிட்டுக் கிளம்பும் குள்ள நரிகளை நாம்  ‘சமூக நோக்கர்கள்’,‘சமுதாயப் புரட்சியாளர்கள்’ என்றெல்லாம்   புகழும் புல்லறிவான்மை கொண்டிருக்க முடியாது.

‘அறிவும் பக்குவமும் இயற்கையான தேவையும் சேர்ந்த ஆண்-பெண்
காதலை நான் எதிர்ப்பவன் அல்லன்’ என்பதை இங்குள்ளோர் புரியாமல் என்பால் விரோதம் காண்பது விஷமத்தனமானது; அவர்கள் விடலைத் தனத்திலிருந்து விலகாத அறிவாளர்களே அன்றி விளைந்த அறிவு பெற்றவர்களாக  இருக்க முடியாது’ என்றுதான் சொல்வேன்.

அடுத்து-..

முகநூலில் அக்கப்போரில் ஆர்வம் மிகுந்த கூட்டம் என்பது வீண் திண்ணைப்பேர்வழிகள். இவர்கள் அடுத்தவர்களைச் சீண்டி விட்டு இரு கோஷ்டிகளாக ‘கோஷ்டி கானம் ‘இசைப்பவர்கள்.

இவர்கள் இடும் கமெண்ட்ஸ்களும் அதில் வெளிப்படும் தமிழும் உண்மையில் வெட்ககரமானது. இத்தகையோர்  இன்னொரு தரம் கெட்ட பேர்வழிகள் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தில்  தாங்கள் ஆதரிக்கும் பதிவாளர்ளை  அதிகம் சீண்டி வேடிக்கை பார்க்கும் கூட்டமாகத்தான் இருக்கிறார்களே தவிர, தரமான எழுத்துக்களிலும் தர்மத்தின் நெறிமுறைகளிலும் நாட்டம் கொண்டவர்களாக இல்லை.

வெறும் பொழுது போக்குக்கும் வீண் திண்ணைப் பேச்சுக்களுக்கும் மட்டுமே தங்கள் நேரத்தைச் செலவிடும் இவர்களின் Like மற்றும் கருத்தூட்டங்களில் பதிவாளர்கள் பிரமித்து விடுவதால் மேலும் உற்சாகம் கொண்டு தங்கள் உடல் பொருள் ஆவி அனைத்தையும்  தியாகம் செய்யத் தயாராகி மேலும் மேலும் கண்டதை எழுதித் தரம் தாழ்ந்து விடுகிறார்கள். ’லைக்’ மற்றும் உற்சாமூட்டும் கமென்ட்ஸ்’களைப் போடுவோரைத் தங்கள் எழுத்துக்களின் ஆதார சுருதியாகவே எண்ணி மகிழ்ந்து ஏமாந்தும்  போகிறார்கள்.

உண்மையில் தேவையற்ற பிரச்சினைகளைச் சந்திக்க நேரும்போது, ’இந்த உற்சாகமூட்டும்  ‘வீண் திண்ணைப் பேச்சு வீரர்கள்’  கானல்நீர் போல் கலைந்து போய் விடுகிறவர்கள்’ என்பதை சம்பந்தப்பட்ட பதிவாளர்கள் உணர்வதில்லை.

இது எழுதத் தெரிந்த சிந்தனையாளர்களுக்கு மட்டுமல்ல; கண்டதை எழுதி, கரகோஷம் பெறுகிற பெண்களுக்கும் பொருந்தும்.

வரைமுறையோடு எழுதிடும் பெண்களின் பதிவில் விரல் விட்டு எண்ணக் கூடிய  ‘லைக்’ மற்றும் கமெண்ட்ஸ் செய்யும் உபயதாரர்களை மட்டுமே காணலாம்.

அதேசமயம் விதம் விதமாக கவர்ச்சிகரமான படங்களைப் போட்டுக் கொண்டு( ஒன்று தங்கள் படங்கள் அல்லது மாடல்களின் படங்கள்) ‘தூக்கம் என் கண்களைத் தழுகிறது; நீங்கள் உங்கள் தலையணைகளைத் தழுவிக் கொள்ளுங்கள்’ என்ரும் எனக்குப்பசிக்கிறது சாப்பிடச் செல்கிறேன்; அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் ......’ என்றும் நான் டீ சாப்பிடப் போகிறேன் அதுவரை காத்திருப்பவர் யார் என்பதை வந்து கவனிக்கிறேன்’ என்றும் பலவாறு இரட்டை மொழியாடல்களில் ஏகத்துக்கும் வெட்கமற்றுப் எழுதும் பெட்டைகளின் வேசித்தனத்துக்கு லைக்’குகளும் கமென்ட்ஸ்களும் குவிவது வெட்கக் கேடானது;விபரீதம் விளைவிக்கக் கூடியது.

இதை சம்பந்தப்பட்ட பெண்களின் புருஷன்மார்களோ உடன்பிறந்தாரோ கண்டுகொள்ளாமல் போனாலும் தமிழின் மொழிப்பண்பைப் போற்றும் நாம் பொறுத்துக் கொள்ள முடியாது.

அத்தகையை  பெட்டைகளின் ’காமாந்திரக் கருத்துக்களில் கலந்துரையாடிக் காலம் கழிக்கும் முட்டாள்கள் மிகுந்த இச் சமூக வலைத்தளத்தில் கடிவாளத்தைச் சரியாகக் கையில் எடுக்கத் தெரிந்தவர்களாக நாம்  இருக்க வேண்டும்.

‘முகநூலில் பிரபலமாக வேண்டும் என்றால் விடலைகளின் வரவேற்புக்காக விபச்சாரத்தனமான கருத்துக்களை இடவேண்டும். அதுதான்  புரட்சி; துணிச்சல்;தோழமைகளைத் தூண்டி சுண்டி இழுக்கும் உத்தி’ என்ற எண்ணம் இங்கு பலரிடத்தும் இருக்கின்றது.

ஆனால் அது நமது பண்பாட்டின் சீரழிவுக்கான விஷம்’ என்பதை அவர்கள் பலரும் உணர்வதில்லை. நாம் அதை உணர்த்தத்தான் வேண்டும்

இந்தச் சமூகத்தின்பால் நமக்குள்ள அக்கறையும்  உலகின் மூத்த குடியெனத் திகழ்ந்த அதன் பண்பாட்டுச் சின்னம் பராமரிக்க வேண்டும் என்ற உரிமையும் சேர சிந்திப்பதன் விளைவே, எனது பதிவுகள்.

இதனால்தான் நான் பிறருடைய அர்த்தம் அற்ற பதிவுகளின் தாக்கத்திலிருந்து விலகி நிற்கின்றேன்; என்போல் பலர் இங்கிருப்பதாலும் அவர்கள் என்னைப் புரிந்திருப்பதாலும்  அவர்களோடு நான் இணங்கி நிற்கிறேன்.

எனினும்-
இந்த முகநூலில் துணிவுக்கும் தோழமைக்கும் உயரிய,அறிவார்ந்த மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் என்றோ, அதன் மூலம் அதிசயத் தக்க மாற்றம் நிகழ்ந்து விடும்’ என்றோ  நம்பி நான் எதையும் எழுதுவதில்லை.

நம் பண்பாட்டுக்கு எதிரான  விஷயங்களைக் கடுமையாக எழுதுவதன் மூலம்
அயோக்கியத்தனமானவர்களுக்கு உரைக்க வேண்டும் என்பதும்;நமக்கேன் வம்பு என்று ஒதுங்கி நிற்கும் நல்லோர் தீய எழுத்துக்களைக்  கண்டிக்கும் துணிவு பெற வேண்டும்’ என்பதற்காக எழுதுகிறேன்

ஆனால்,  ‘எழுதுவது என்பது எனது இயல்பாகிப் போன பின்னர் உண்மைகளையும் ஊருக்கு நல்லதான விஷயங்களையும் எழுதுவது’ என்பதே எனது தீர்மானம்.

சமூகத்தின் மூலம் நான் எதையெல்லாம்’கழிசடைகள்’ என்றும் ’கருத்துப் பெட்டகங்கள்’  என்றும் தெரிந்து கொண்டேனோ அதையெல்லாம் தரம் பிரித்துச் சொல்வது எனது கொள்கை’ என வகுத்துக் கொண்டிருக்கிறவன் நான்.

இதில் ’தனி நபர் விரோதமோ,தாக்குதலோ,வன்மமோ எனது எழுத்துக்களில் புகுந்து விடக் கூடாது’ என்பதில் கவனம் கொண்டிருக்கிறேன்.அதேபோல் எவரையும் நான் அனுமதிப்பதும் இல்லை.

எனக்கு யாரும் பகைவர்கள் கிடையாது;எனது எழுத்துக்களால் பகைமை கொள்வோர் எவரேனும் இருந்தால் அது அவர்களுடைய அழுக்கு மனத்தின் அடையாளமே,தவிர கருத்து முரண்பாடுகளால் அல்ல’ என்பதை இங்கே சாசனம் செய்து வைக்கின்றேன்.

வீண் வாதங்களுக்கும் வெறும் திண்ணைப் பேச்சுக்களுக்கும் பொழுது போக்க வருவோர்,என்னிடம் நியாயத்தை எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை; மாறாக எனது எழுத்துக்களின் சூட்டுக் கோலால் சுடப்பட்ட வடுக்களுடன்தான் வருந்த வேண்டியிருக்கும்.

இருளுக்கும் ஒளிக்கும் எப்போதும் ஒத்துப் போகும் வாய்ப்பில்லை!

அறியாமையும் அனுபவமின்மையும் ஆர்வக் கோளாறுகளும் அரைகுறைகளும், அயோக்கியத் தனமான எண்ணங்களும் கூட்டுச் சேர்ந்தாலும்கூட இங்கே எனது எழுத்துக்களின் முன் எழுந்து நின்று அவை கூவ முடியாது.

’பித்தலாட்டங்களையும் பேய்களின் தத்துவங்களையும் பிழைகளின் அர்த்தங்களையும் ஆதரித்து எழுதுவதுதான் நடு நிலைமை’ என்ற கோமாளிகளின் கூற்றுக்கு நான் கூற்றுவன்’ என்பதை எனது நண்பர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

இங்கே, இதை நான் அறிவித்துக் கொள்வது எனது சுதர்மம்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
14.9.2013

No comments: