Monday, September 9, 2013

எனது பிள்ளையார் பக்தி!





அருமை நண்பர்களே,
 
இன்று விநாயகர் சதுர்த்திப் பெருநாள்.

நாம், எந்த நல்ல காரியத்தைத் தொடங்கினாலும் தொன்று தொட்டு விநாயகக் கடவுளை முன் நிறுத்தித் தொழுது விட்டுத்தான் தொடங்குவோம். இது தொன்று தொட்டுத் தொடரும் நமது பண்பாட்டு வழக்கம்தான்.

விநாயகப்பெருமானை எவர் வணங்கினாலும் அவருக்குக் கேட்டதை கேட்டபடி, நிறைவேற்றும் கேண்மைமிகும் முழுமுதற் கடவுள்.

உலகமொழிகளில் தனித்தன்மை மிக்கதான நம் தமிழ் மொழியில் நமது முன்னோரின் படைப்புகள், வழிபாடு எதிலும் விநாயகருக்கு முதல் வணக்கம் செலுத்தப்படாமல் தொடங்கப்பட்ட பட்ட படைப்புக்கள் எதுவும் இல்லை.

மிகத்தொன்மை வாய்ந்த திருமந்திரத்தில் ஐந்து கரத்தானைப் போற்றும் முதல் பாடலின் பொருளில் இருந்தே யானை முகக் கடவுளின் தனிப் பெருமையை உணரலாம்.

தேவராலும் மூவராலும் யாவராலும் வணங்கப்படும் அந்த கணநாதருக்கு இன்று பிறந்த நாள்; அதுதான்  விநாயகர் சதுர்த்தி.

அனைவரும் அந்த ஆனை முகத்தானை ஒரு முகமாகச் சிந்தித்து சிந்தையில் வைத்து வணங்கிச் சேவித்து மகிழ்வும் நெகிழ்வும் பெறுவோம்.




எனது வாழ்வின் முதல் வழிபடு தெய்வமே விநாயகர்தான். 

‘எப்பொழுதும் எனது ’ஞான குருபரனாய்’ எனது எண்ணங்களில் நிறைந்திருப்பவன் அவனே. என்பதை என் மனம் உணர்ந்து கொண்டேதான் இயங்குகிறது.

அவன் எப்படி என் மனத்துள்ளே புகுந்தான்.? 

அதை இன்று பார்த்து உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.

எனக்கு நினைவு தெரிந்த நாள்முதலே விநாயகப் பெருமானை எண்ணித் தொழுது வருபவன் நான்.

எனக்குப் பிள்ளையாரைக் காண்பித்துப்  பற்றுக் கொள்ள வைத்தவர் என் தந்தைதான்.

என் தந்தை முருகப் பெருமானிடத்தில் அளவற்ற பக்தி கொண்டிருந்தவர்; அதேசமயம், தினமும் காலையில் குளித்து விட்டு எனது வீட்டுக்குப் பக்கத்துத் தோட்டத்தில் உள்ள பிள்ளையாரை வணங்கி விட்டுத்தான் காலை உணவருந்துவார்; வேலைக்குச் செல்வார்.

கிணற்றில் குளித்துவிட்டு பிள்ளையாரை வணங்கி நெற்றி நிறையத் திருநீறு பூசி மனமுருக வணங்கி விட்டுப் பின்  வீட்டில் மாட்டியிருக்கும் முருகப் பெருமான், சீரடி சாயிபாபா, சரஸ்வதி படங்களுக்குத் தவறாமல் ஊது பத்தி ஏற்றிக் கும்பிடும் அவரது பக்தியின் நேர்த்தி எனது பிஞ்சுமன வயலில் விதைக்கப்பட்ட விதை.

அது அருகெனத் தழைத்துப் பரவி, ஆல்போல்  என்னுள்ளே வேரூன்றி இருக்கிறது.

அதன் தாக்கத்தால்தான் நானும் நாள் தவறாமல் காலையில் எழுந்ததும் ஊருக்குக் கிழக்குப்புறத்தில் சின்னாற்றைத் தாண்டி அமைந்திருக்கும் ’துலுக்கன் தோட்டத்துக் கிணற்றில் குளித்துவிட்டு எங்கள் ஊர்ப் பிள்ளையாரைக் கும்பிடுவது வழக்கமாகவும் பழக்கமாகவும் எனது வாழ்வில் படிந்து போன அன்றாடக் கடமை என்றாகி விட்டது.

எழுந்து, காலைக் கடனை முடித்ததும் ‘அப்புனு (செல்லமாக ’அப்பா’ என்று கூப்பிடும் சொல்லின் திரிபுதான்; ‘அப்பனே’ என்பதற்குப் பதிலாக ‘அப்புனு’ என்று கிராமியப் பாணியில் என் அம்மா என்னை அழைப்பது இப்படித்தான்) கோயலுக்குப் போய்ட்டு வா; நேரமாச்சில்ல” என்று அன்போடு என்னைக் கோவிலுக்குப் போகச் சொல்லித் தூண்டுவார்,அம்மா.

முதலில் அம்மாவின் நிர்ப்பந்தமும் அப்பாவின் முருக பக்தியின் தாக்கமும் என்னைப் பிள்ளையார் கோயிலுக்குச் செல்ல வைத்து, நாள்பட நாள்பட அதுவே எனக்கும் பிள்ளையாருக்கும் ஒரு பந்தத்தை உருவாக்கி விட்டது.

எனக்குள் ஏற்பட்டிருந்த அதீதமான பிள்ளையார் பக்தியும் அதன் எதிரொலியாக, தமிழ்கூறும் நல்லுலகிற்குள் என்னை விசேஷமாக உந்தச் செய்த அவ்வையாரும் அவரது அதி அற்புதமான பாடல்களும் என்னுள் பிள்ளையார் பக்தியில் இனம் புரியாத தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.

அவ்வையின் சில பாடல் வரிகள், மந்திரச் சொற்கள்போல் என் உணர்வில் பதிந்து போய் அதன் உள்ளர்த்தங்களில் விரிவான பதங்களைத் தேட வைத்ததும் அதன் தொடர்ச்சியால் பழம் பாடல்காட்சிகள் – குறிப்பாகத் தனிப்பாடல் திரட்டுக்களும், விநோத ரஸமஞ்சரியும்,விவேக சிந்தாமணியும் காளமேகப் புலவர் கதையும் பாட்டுக்களும் பாரதியின் கவிதைகளும் எனக்குள் ஓர் தனி உலகத்தை உருவாக்கிக் கொண்டு விட்டது.

இதெல்லாம் நான் ஐந்தாம் வகுப்புப் படிக்கும் கால கட்டத்திலிருந்தேதான் உருவாயிற்று’ என்பது இப்போது நினைக்கையில் விவரிக்க முடியாத ஆச்சர்யத்தை தருகின்றது.
 
எனது பிள்ளையார் பக்திக்கு மூல வித்து அவ்வைப் பெருமாட்டிதான்.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றுந் தா

என்ற அப்பெருமாட்டியின் பிள்ளையார் வணக்கப் பாடல்தான் எனது
8அல்லது 9 வயதுப் பிஞ்சு மன வயலில் ஊன்றப்பட்ட  நல்வித்துக்கள்.

விநாயகப் பெருமானே,
பால்,தேன்,வெல்லப்பாகு,பருப்பு ஆகிய நான்கு வகைப் பொருட்களை நான் உனக்குக் காணிக்கையாகப் படைப்பேன்; அதை நீ ஏற்று, எனக்கு சங்கத் தமிழாகிய இயல்,இசை,நாடகம் என்ற மூன்று தமிழ் ஆற்றல்களயும் தந்தருள வேண்டும்

என்பதே இப்பாட்டின் பொருள்.

மிக எளிமையான வெண்பாவில் அவ்வை வடித்த இந்த அமுதப் பாடல்தான் என்னைப் ’பிள்ளையாரை,  பாடல் மூலமும் வணங்க வேண்டும்’ என்ற பக்தியை வளர்த்தது.  

அதுவே, நான், வளர வளர பல்வேறு அற நூல்களையும் நீதி நூல்களையும் என்னைத்தேடிதேடி விரும்ப வைத்தது; தமிழின் கூர்மையையும் அதன் மேன்மைமிகும் சீர்மையையும் என்னுள்ளே அரும்ப வைத்தது.

நான்கு வகைப் பொருட்களை விநாயகப் பெருமானுக்குப் படைத்து மூன்று வகைத் தமிழைக் கேட்ட அவ்வைப் பெருமாட்டிதான் என்னையும் அதே விநாயகப் பெருமான்மீது ஒரு பாடலை எழுதத் தூண்டினாள். 


திருமூலரின் ’’ ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை....”எனத் தொடங்கும் திருமந்திரத்தின் முதற் பாடலையொத்த சாயலில் எனது பாடல் ஒன்று இங்கே அமைந்திருப்பதற்கு திருமந்திரத் தேடலும் ஒரு காரணம்.

நான் விநாயகப் பெருமானுக்கு எழுதிய, அப்பாடல்:

பூதம்ஐந்தையும் பூட்டிய கரத்துளன்:
வேதம் நான்கையும் வெளித்தரும் வடிவினன்;
ஓதும் முதற்பொருள் ஆனவி நாயகன்:
பாதம் பணிந்துளம் பற்றுகின்றேனே!

பஞ்ச பூதங்களையும் பற்றியிருக்கின்ற ஐந்து கரங்கள் கொண்டவன்;
நான்கு வேதங்களின் சொரூபமாகத் திகழ்பவன்; தேவர் முதலாய் யாவரும் வணங்கும் முழுமுதற் பொருளென ஆன விநாயகன்;அவனுடைய பாதத்தை எனது மனத்துளே வைத்து வணங்குகின்றேன்

என்பது இதன் பொருள்.

ஆக, எனது தமிழுக்கு மூல முதல்வன், விநாயகப் பெருமான்தான் ; அவனது பெருங்கருணையினாலேதான் சரஸ்வதி எனக்குள் அவ்வையின் வடிவில் புகுந்தாள்; அவள் புகுந்த பிறகுதான் எனக்கு இவ்வுலகம் புரிந்தது;என்னையும் இவ்வுலகம் புரிந்தது.

அருமை நண்பர்களே,
நமது தமிழ்ப் பாரம்பரியத்தின் முழுமுதற் பொருளாய்ப் போற்றி வணங்கப்படும் விநாயகப் பெருமானை இன்று, இந்த விநாயகர் சதுர்த்திப் பெருநாளில் அவ்வைத் தமிழின் ஆழ்ந்த  வெளிப்பாட்டோடு செவ்வை மனத்தின் சேவிப்போடு சிந்தித்து நிறைவு கொள்வோமாக!

இவண்-
கிருஷ்ணன்பாலா
9.9.2013

No comments: