Sunday, September 15, 2013

அறிஞர் அண்ணாத்துரை!

அறிஞர் அண்ணாத்துரை-

மெத்தப் படித்தறிந்த மேதைமையைக் கொண்டவர்தான்;
சொத்துச் சேர்க்காமல் சுவர்க்கத்தைக் கண்டுவிட்டார்!
’அண்ணா’ எனச் சொன்னாலே என்மனது அப்போது
அண்ணாந்து பார்த்து, ஆர்ப்பாட்டம் கொண்டிருக்கும்!

வெள்ளை மனதோடு வெளுத்ததெலாம் ’பால்’ என்று
கொள்ளையர்கள் பலரைக் கூட்டமெனக் கொண்டிருந்தார்;
பிள்ளை வயதில்எனைப் பிடித்திட்ட பித்தம்போல்
கொள்ளை கொண்ட இப்பெயரை இப்போது நினைக்கின்றேன்:

ஊழல்செயத் தெரியாமல் உட்கார்ந்தார் ஆட்சியதில்;
வாழத் தெரியாமல் வசப்பட்டார் ஆட்சிக் கட்டில்;
ஈழப் பிரச்சினையும் அப்போது வாராமல்
சூழ்நிலையால் நோய் கண்டு சுவர்க்கத்தைச் சென்றடைந்தார்.

’அண்ணன் எப்போது அமரநிலை ஆவாரோ?
திண்ணை எப்போது நம் வசத்தில்  சேருவதோ?”
என்று அவர் தம்பி ஏங்கித் தவம் இருக்கக்
கொன்றானே காலனவன்,கலைஞருடன் கைகோர்த்து!

அரசுப் பணத்தோடு அரியாசனத்தைத் தன்
உரிமைப் பொருளாக்கி ஊழலுக்குப் புது வடிவம்
முரசொலித்து திசையெட்டும் முளைத்தோங்கக் காட்டி
அரச வம்சமென ஆகிவிட்டார் இவர் தம்பி!

தமிழரெலாம் தலைகுனிய;தன்மானம் சாக்கடையில்;
தமிழ்நாட்டுப் பண்பாடு தாங்கவொணாச் சவக் குழியில்;
எப்போதும் சுயநலத்தில்;எழுதுவதோ பொது நலத்தை;
இப்போது நினைத்தாலும் எங்களுக்குத் தூக்கமிலை!

எத்தகைய விமர்சனமும் இவருக்கு இனித்திருக்க;
முத்தமிழின் வித்தகராய் முடிசூட்டும் முட்டாள்கள்;
உத்தமன் போல் பேசி  உளறுகின்ற வார்த்தைகளின்
வித்தையிலே ஏமாந்து வீழ்ந்ததிந்தத் தமிழரினம்!

நாடு காடாக;நரிகளெலாம் நாட்டாமை;
கேடு சூழ்ந்ததொரு கேனக் கிறுக்க ரென
சாடிச் சினம் தீர்க்கத்தா னிந்தத் தமிழரினம்;
வேடிக்கை பார்ப்போமோ? வேதனைதான் கொள்வோமோ?

இப்படியோர் இழிந்தநிலை இந்நாடு கண்டிருக்க
இப்படியோர் உடன் பிறப்பை இழுத்து விட்ட அண்ணாவை
எப்படித்தான் எண்ணுவதோ? ஏமாந்த சோணகிரி,
எப்படித்தான் ‘அறிஞர்’ என ஆனாரோ; நாணுகிறேன்!

ஆனாலும் அண்ணாவை; தமிழ் தந்த  அவர் நாவை;
தேனாகக் காண்கின்றேன்; ’திமுக’ எனும் போது
தீயாகக் காண்கின்றேன்;  திராவிடத்துப் பொய்யர்களைப்
பேயாக வளர்த்துவிட்ட  அண்ணாவால், கூசுகிறேன்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
15.9.2013