Friday, September 27, 2013

மோடி: வழிமொழிந்த திருச்சி மாநாடு.


றிவார்ந்த  நண்பர்களே,
வணக்கம்.

‘யாருமே எதிர்பார்த்திராத வகையில்  ‘இந்தியாவின் நாளைய பிரதமர் நரேந்திர மோடிதான்’ என்பதை அறிவித்ததுபோல், இன்று திருச்சியில் நரேந்திர மோடியின் பேச்சைக் கேட்பதற்காக ‘இளம் தாமரை மாநாடு’ என்ற பெயரில் கூடி, மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்திருக்கிறது.

உண்மையில் தமிழக பி.ஜே.பி யேகூட இந்தக் கூட்டத்தை எதிர்பார்த்திருக்காது.

இந்தக் கூட்டம் நிச்சயம் பி.ஜே.பிக்காகக் கூடிய கூட்டம் அல்ல; நரேந்திர மோடிக்காகவும் கூடிய கூட்டம் அல்ல; காங்கிரஸ்மீது இளைஞர்கள் கொண்டிருக்கும்  கோபத்தின் கூட்டம் இது’ என்பதை இன்றைய திருச்சி இளம்தாமரை மாநாடு தீர்மானமாகக் காட்டி இருக்கிறது.

தமிழ்நாட்டில் நடத்தப்படும் கட்சி மாநாடுகளுக்கு வரும் கூட்டம் பணம், பிரியாணி,இலவசப் பேருந்துப் பயணம்,உற்சாகப் பானம்’ என்பதன் பின்னணியில் கூட்டி வந்த கூட்டமாகத்தான் இருக்கும்.

ஆனால் மோடிக்காக ‘இளம்தாமரை மாநாடு’ என்ற பி.ஜே.பியை வலுவூட்டும் இந்த மாநாட்டுக்கு, இளைஞர்களும் இளைஞிகளும் மட்டுமல்லாது மூத்தோரும் கூடி வந்த கூட்டமாக ஆரவாரம் செய்திருப்பது தழர்களின் அரசியல் தெளிவுக்கும் மத்தியில் உறுதியான ஆட்சி மாற்றத்துக்கும் வழிமொழிந்திருக்கிறது என்று சொல்வதே வாய்மைக்கும் நேர்மைக்கும்  நாம் முன்மொழிவதாகும்.

இதைவிட ஒரு உண்மை எனக்குப் படுகிறது:
இன்றுள்ள அரசியல் ஆரவாரத்தில் நரேந்திர மோடியின் பெயரைச் சொல்லி ஓட்டுக் கேட்டால் கிடைக்கும் மிகப் பெரும்  பெரும்பான்மை எம்.பிக்கள் வெற்றியானது பி.ஜே.பியின் பெயரால் ஓட்டுக் கேட்டால் நிச்சயம் சிறுத்துப்போகும்தான்.

இன்று மோடியால் பி.ஜே.பி  இந்தியாவில் மட்டுமல்ல,தமிழகத்திலும் தனது சரிந்து போன செல்வாக்கைக் கொஞ்சம் தூக்கி நிறுத்திக் கொண்டிருக்கிறது.

’வரும் பாராளுமன்றத் தேர்தலில்  மிகப் பெரும்பான்மை என்ற இலக்கை அது அடையுமா? அல்லது கூட்டணிப் பலத்தால் அந்தக் குறையைப் போக்கிக் கொள்ளுமா? என்பதெல்லாம் கணக்கிடக் காலம் இன்னும் நெருங்கவில்லை.

ஆனால், வெற்றிச் சிகரத்தை நோக்கி மோடி முன்னேறிக் கொண்டிருக்கிறார்.

எப்படியோ-
காங்கிரசின் கடை கெட்ட நிர்வாகச் சீர்கேடுகளாலும் ஊழலின் உச்சக் கட்ட உக்கிரத்தின் காரணமாகவும் Negative Wave எனப்படும் காங்கிரசுக்கு எதிரான மக்கள் அலை நரேந்திர மோடியை உச்சத்தில் உட்கார வைக்கத் தீர்மானித்து விட்டது.

இதன் விளைவாக, மோடியின் அலை வீச்சுக்கு அஞ்சி காங்கிரஸ் நடு நடுங்கிக் கொண்டிருக்கிறது.

‘தன்னை ஒரு பொம்மைப் பிரதமராகவே வைத்து நாடே காறித் துப்பும்படியான ஊழல் பெருச்சாளிகளைத்  தனக்குக் கீழ் வைத்து  மந்திரிகளாக வைத்து சொக்கட்டான் ஆடித் தனது பெயரை  சர்தார் ஜோக்குகளின் சக்கரவர்த்தியாக,உலக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு கறை படுத்தி’விட்ட சோனியாவைப் பழிதீர்த்துக் கொள்வதற்காக, ’இனி ராகுலைப் பிரதமராகப் பார்க்க விரும்புவதாகவும் அவருக்குக் கீழ் (மானம் கெட்டுப் போய் மந்திரியாக) வேலை பார்ப்பதில் பெருமைப்படப் போவதாகவும்’ ஒரு அரசியல் அறிக்கையை விட்டார் மன்மோகன். சோனியா ஆடிப் போய் விட்டார்.

உண்மையில்  ‘தனது தலைமையினால் காங்கிரஸ் தோற்றது’ என்ற பழி வரக் கூடாது;அது ராகுலால் வருவதுதான் நியாயம் என்பது மன்மோகன் சிங்கின் மனக் கணக்கு.

‘ஊழல் தயிரைக் கடைய வைத்து அதன் வெண்ணெய் முழுவதும்  போய்ச் சேர்ந்த வீடு இத்தாலி’ என்பதைச் சொல்லாமல் சொல்லி விட்டார்,சிங்.

‘ராகுலைப் பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்துத் தேர்தல் நடத்தினால்’ மோடியின் முன்னே. பின்னங்கால் பிடரியில் பட மக்கள் ஓட ஓட விரட்டி விடுவார்கள் என்பதை ’இண்டலிஜெண்ட்’ ரிப்போர்ட் மூலம் (மந்திரிகள் மூலம் அல்ல: மந்திரிகள் எப்போது ‘இண்டலிஜெண்ட்’ ஆக இருந்தார்கள்?) அறிந்து கொண்ட சோனியா,மன்மோகன் தங்கள் குடும்பத்துக்குக்  குழி பறிக்கப் பார்க்கிறார்’ என்பதையும் புரிந்து கொண்டார்.

‘தேர்தலுக்கு முன்பாகவே பிரதமர் யார்?’ என்பதை அறிவித்துக் கொண்டு தேர்தலில் இறங்குவது காங்கிரசின் வழக்கமில்லை’ என்று ஓர் அறிக்கையை விடச் செய்தார்.

இதிலிருந்து பிரதமர் மன் மோகன் ஒரு மண்;அவருக்கு என்ன தெரியும்? என்பதை மறைபொருளாகவும் காட்டிய சோனியா, மோடிக்கு எதிரான வேட்பாளர் ராகுல் அல்ல’ என்பதையும் சொல்லி விட்டார்.

அதாவது காங்கிரஸ் பெரும்பான்மையாக வென்றால் ராகுலைப் பிரதமர் ஆக்கலாம்’ எனக் கனவு கண்டடிருந்த சோனிய அந்த வாய்ப்பு மலை ஏறி நான்கு ஆண்டுகள் ஆகி விட்டது என்பதால், இனி ராகுலை முன்னிறுத்தி காங்கிரஸ் வாக்குக் கேட்டால் மக்கள் ஜோட்டால் அடிப்பார்கள் என்பதையும் லேட்டாகத் தெரிந்து கொண்டார். அதாவது, காங்கிரசுக்கு எதிரான மகக்ள் எழுச்சி அவருக்கு உணர்த்தி இருக்கிறது!

தேர்தல் நெருங்க நெருங்க மோடியின் செல்வாக்கும் காங்கிரஸ் எதிர்ப்பு அலையும் இமயச் சிகரங்களை எட்டிப் பார்க்கப் போகின்றன.

காங்கிரஸின் கதியோ கழுதை சிறுத்துக் கட்டெறும்பாகி அதுவும் சிறுத்துச் சிற்றெம்பாகப் போகிறது.

பி.கு: உடனே யானையின் காதில் எறும்பு புகுந்து ஆட்டி விடும் என்று எவரேனும் நமது அறிவு ஜீவிகள் (?) எழுதினாலும் எழுதுவார்கள்,பாருங்கள்.

வெல்க நாடு;வெல்க பாரதம்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
27.9.2013

No comments: