Tuesday, February 7, 2012

திருச்சியைத் தலைநகராக்குவீர்!மாண்புமிகு தமிழக முதல்வர் மதிப்புக்குரிய மேடம்அவர்களுக்கு,
வணக்கம

எதையும் துணிச்சலுடன் முடிவெடுத்து அதை நடைமுறைப் படுத்தும் வல்லமையுள்ள முதல்வர் நீங்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை என்று மகிழ்கின்றவர்களில் நானும் ஒருவன்.

உள் கட்சி அரசியலை ஆட்டிப்படைக்கும் உங்கள் சர்வாதிகாரப்
போக்கு உங்களுக்கு மேலும் மேலும் வலுவூட்டும் விதமாகவே அமைந்து விடுவது ஜனநாயக அதிசயம்தான்.

அந்த அதிசயம் உங்களுடைய ஆட்சி நிர்வாகத்திலும் வெளிப்பட்டு, தமிழ்நாட்டின் புதிய மறுமலர்ச்சிக்கு வித்தாக அமைய வேண்டும் என்பது என்னைப் போன்ற நிலைவாதியாளர்களின் எதிர்பார்ப்பு.

ஒரு முடிவு என்று எடுத்து விட்டால் எத்தகைய எதிர்ப்பையும் முனை மழுங்கச் செய்து உறுதி குலையாமல் அதை நிறைவேற்றுவதில் உங்களுக்கு இணையான ஆட்சியாளரை நாடு இதுவரை காணவில்லை;இனியும் காணுமா என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

அரசியலில்குறிப்பாக இந்திய அரசியல் களத்தில் நிரந்தர வெற்றியாளர்கள் இல்லை என்றாலும் மக்களின் எண்ணங்களில் நிரந்தரமான இடம் பெற்று அதில் முன்னிலை வகிக்கும் தகுதி பெற்ற பெண்மணியாக நீங்கள் திகழ்வதை உங்கள் அரசியல் எதிரிகள் கூட முனகிக் கொண்டேனும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

அறிவுப் பூர்வமாக எடுத்துரைக்கக் கூடிய உங்கள் தகுதியும் அச்சமற்ற அரசியல் அணுகுமுறையும் உண்மையிலேயே அரசியல் வரலாற்றில் தனி இடம் பெற்றவை, ஆனால், உங்கள் கட்சியினர் உங்கள் கவனத்தைப் பெற வேண்டும் என்பதற்காக தமிழ் அகர முதலியில் இல்லாத வார்த்தைகளைக்கூட உருவாக்கி அடிக்கும் போஸ்டர்களில் அவர்கள் அடிமைகள் போல் நாட்டு மக்களுக்கு அறியப்படும் அவல நிலையை நீங்கள் புரிந்து கொண்டு,உருப்படியான புகழுரைகளையும் சாதனைகளையும் சாற்றும்படிச் செய்தால், அறிவு ஜீவியான உங்களுக்கு அது மிகப்பெரும் அரசியல் வெற்றியென பேசப்படும்.

உங்களை மையப்படுத்தி அடிக்கப்படும் போஸ்டர்களில் கட்சியின் எந்தப் பிரமுகர்களின் படமும் இருக்கக் கூடாதென ஆணையிட்டு அதை நூறு சதவீதம் எவ்வித முனுமுனுப்பும் இன்றி கட்சிக்காரர்களை எல்லாம் கடைபிடிக்கச் செய்த உங்கள் துணிவு இந்திய அரசியல் வரலாற்றிலேயே புதுமையானது;போற்றப்படத் தக்கது.

இதன்மூலம்,வீரமும் விவேகமும் சேர்ந்த அரசியல் தலைவராக இன்று நீங்கள் உயர்ந்திருக்கிறீர்கள்.

இன்றைய சூழ்நிலையில் இந்திய அரசியலில் இணையற்ற தலைமை இடத்துக்கு உங்களைத் தயார்படுத்திக் கொண்டு வருகிறீர்கள் என்பதைக் கடந்த சில மாதங்களாக வெளியிடப்படும் கட்சிக்காரர்களின் கருத்தோட்டப் போஸ்டர்கள் மூலம் கணிக்க முடிகிறது.

முலாயம் சிங்கும் மாயாவதியும் மூன்றாம் அணிக்குத் தலைமைதாங்க ஆயாசப்படும்போது அவர்களை விட ஆயிரம் மடங்கு அறிவும் அரசியல் தெளிவும் கொண்ட நீங்கள் நாளைய பாராளுமன்றத்தில் உயர் பங்கு வகிக்கவும் ஆட்சித் தலைமையில் உயர் பதவி அடையவும் தடை ஏதும் இருக்க முடியாது.

அதற்கு முன் நீங்கள் துரிதமாகச் செயல்பட்டு நிறைவேற்ற வேண்டிய
முக்கிய விஷயங்கள் இரண்டு உள்ளன.

இரண்டுமே அகில இந்திய அரசியலில் மிகப் பெரும் ஆச்சரியத்தையும் புகழையும் உங்களுக்கு ஈட்டித் தருபவை.

அவற்றில் ஒன்று:
கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்டு தமிழ் நாட்டுடன் இணைக்கச் செய்வது.

இதன் மூலம் இலங்கையின் கடலாதிக்க எல்லையைக் கட்டுப்படுத்தி தமிழக மீனவர்களின் வாழ்வுரிமைக்கு வழி வகுத்த பெருமை உங்களுக்குச் சேரும். அன்று மத்திய அரசிடம் உள்ளடி வேலை செய்து தமிழ் நாட்டின் கடல் பகுதியைத் தாரை வார்க்கச் செய்த கலைஞரின் கபட அரசியலைக் குழி தோண்டிப் புதைத்த விவேகமிக்க தலைவர் என்று போற்றி இந்திய அரசியல் அரங்கம் அதிரும்.

வாரம்தோறும் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வதும் அவர்களை விடுவிக்கின்ற நாடகத்தில் இங்குள்ள அரசியல்வாதிகள் கூத்தாடுவதும் தமிழக மீனவர்களின் மீது தேவையற்ற வன்மத்தை இலங்கை திணிக்கும் அபாயத்தை ஒழித்த மாபெரும் தலைவி என இத்தமிழகம் உங்களைத் தாங்கிப் போற்றும்!

தமிழ் மரபுக்கும் மண்ணுக்கும் உரிய கச்சத் தீவை, மத்திய அரசு இலங்கைக்கு விட்டுக் கொடுத்த பிறகு,தமிழர்கள் கண்டு வரும் அவலங்களை நாடு உணர்ந்து வருந்துகின்ற நிலையில், ‘கச்சத்தீவை மீட்டே தீருவதுஎன்று சபதம் எடுத்துள்ள தங்களின் தலைமையும் நோக்கமும் நூறு சதம் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகின்றேன்; வாழ்த்துகின்றேன்.

இரண்டாவது செயல் திட்டம்:
மாநிலத்தின் தலைநகரை திருச்சிக்கு மாற்றுவது.

மக்கள் திலகமாகத் திகழ்ந்த எம்.ஜி.ஆர் அவர்களின் மக்கள் நலச் சிந்தனைகளின் அடியொற்றி நீங்கள் எடுக்கும் எந்த முடிவுக்கும் பெரும்பான்மைத் தமிழர்களின் ஆதரவை முழுமையாகப் பெற்று விடுவீர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை.

திருச்சியைத் தமிழ் நாட்டின் தலைநகரமாக மாற்றுகின்ற திட்டமானது,
மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்களின் புரட்சிகரமான எண்ணமாக அவர் ஆட்சியின் ஆரம்ப காலத்தில் சிந்திக்கப்பட்டது.

எம்.ஜி.ஆரின் கனவாகத் தோன்றி கானலாக மாறிப் போன இத்திட்டத்தை நீங்கள் நினைவில் கொண்டு அதை இப்போது நிறைவேற்ற முடிவு செய்வீர்களானால், அது பல வகையிலும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத செயல் திட்டமாக, இந்திய அரசியல் வரலாற்றில்,குறிப்பாக தமிழர்களின் அரசியல் வரலாற்றில் இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு வேறு எவராலும் மிஞ்ச முடியாத சாதனையாக தனித்து நின்று, உங்களுடைய அரசியல் நிலைப்பாடுகளுக்கு மாபெரும் வெற்றிகளை ஈட்டித்தரும்.

தமிழகத்தின் மறு மலர்ச்சியிலும்,அதன் நிகரற்ற வளர்ச்சியிலும் வித்திட்ட உங்களுடைய தீரம் நிறைந்த செயல்திட்டங்களின் சிகரமாக, அத்திட்டம் இனி வரும் தலைமுறை தோறும் புகழப்பட்டு,உங்கள் பெயர் வரலாற்றின் முகவுரையாக முன் மொழிந்து நிற்கும்.

திருச்சியை தமிழ்நாட்டின் தலைநகராக மாற்றும் திட்டத்தை, எம்.ஜி.ஆர் அவர்கள் ஆட்சியில் இருந்தபோது அறிவித்துச் செயல் படுத்த முனையும்போது அன்றைய அரசியல் சூழ்நிலையும் சென்னையைத் தங்கள் பூர்வீகமாகக் கொண்டு இங்கேயே அதன் சுகத்தில் சொக்கிப் போய்ச் சுருண்டுவிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் பெரும் தொழில் அதிபர்களின் துர் ஆலோசனையும் நிர்பந்தமும் காரணமாக அது கைவிடப் பட்டுவிட்டது.

உண்மையில் அத்திட்டம் எவ்வளவு மகத்தானது என்பதை அறிந்திருந்தும் அன்று எம்.ஜி.ஆர் அவர்கள் ஏனோ அதை அறிவித்த நிலையிலே கைவிட்டு விட்டார்.பத்திரிகை ஊடகங்களும் அதன் முக்கியத்துவம் பற்றித் தூண்டாமலும் கருத்து ஆக்கத்தைத் தொடராமலும் விட்டு விட்டன.

சொல்லப்போனால், தமிழகத்தின் தலை நகராகச் சென்னை, இன்று ஒரு தலையாய நரகமாகத்தான் அவலப்பட்டுக் கொண்டிருக்கிறது.

குண்டும் குழியுமான குறுகிய சாலைகள், நாற்றமெடுத்த குப்பை மேடுகள்,நாகரிகமற்ற சந்துகள்,சாக்கடைகள், விரிவாக்கம் செய்ய வழியில்லாத நடைபாதைகள், குடிநீர் வசதியும் காற்றோட்டமும் இல்லாத குடும்ப வாழ்க்கை, ஒருபக்கம் ஆடம்பரப் பங்களாக்கள் அதன் அருகிலேயே குடிசைகள்,குப்பைமேடுகள்,முறையற்ற தொழிற்சாலைகள்,தகர டப்பாக்களான கடைகள், சுகாதாரமற்ற ஓட்டல்கள்......

ம்ம்ம்பட்டியலிட்டால் நமக்கு பதைபதைப்பு நீளச் செய்யும் மாநரகமாகச் சென்னை மாநகரம்..

தலைநகர் சென்னை என்பதற்கான லட்சணங்கள் சிறிதுமற்ற நிலை பெருகி வரும் சூழ்நிலையில் இருக்கின்ற சாலைகளை அடைத்துக் கொண்டு மெட்ரோ ரயில்களை விட வேண்டிய அவலத்தில் நிர்வாகம்.

ஒரு தலை நகருக்குரிய கம்பீரமும் அழகும் தோற்றப் பொலிவும் இதற்கு இருப்பதாக எவரேனும் நினைத்துக் கொண்டிருந்தால் அவர்கள் கிணற்றுத் தவளைகளே அன்றி கற்றறிந்தவர்கள் அல்லர்; தமிழகத்தின் உண்மையான வளர்ச்சியில் அக்கறை அற்றவர்களாகவும் பெரும்பான்மைத் தமிழர்களின் வாழ்வைச் சுரண்டிப் பிழைக்கும் சுயநலவாதிகளாகவும்தான் அவர்கள் இருப்பார்களே தவிர உண்மைத் தமிழர்களாக இருக்க முடியாது.

சீர்குன்றிப்போய்,சிறப்பிழந்த சென்னையை மேலும் விரிவடைச் செய்தல் என்பது அதன் பழம் பெருமையைக் குலைத்து குப்பை மேடாக்கும் முற்சியாகத்தான் அதன் வளர்ச்சியைக் காண முடியும்.

ஒரு மாநிலத்தின் தலைநகர் எப்படிப் பொலிவுடன் இருக்க வேண்டும்?” என்பதற்கு பெங்களூரூவையும் ஹைதராபாத்-செகந்திராபாத் நகர்களின் வளர்ச்சியையும் போய்ப் பார்த்தால் மட்டும் போதாது அவற்றின் தோற்றப் பொலிவையும் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஏன் பஞ்சாப்,ஹரியாணா மாநிலங்களின் ஒரே தலைநகரான சண்டீகரின் வடிவமைப்பைப் பார்த்துச் சிந்திப்பது சாலச் சிறந்தது.
.
இந்த நகரங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், சென்னையைப் பொறுத்தவரைநாம் குண்டுச் சட்டிக்குள்தான் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கின்றோம்; சென்னையை விட்டு வெளியே சிந்திக்கத் தெரியாத சிக்கல் கொண்டவர்களாகத்தான் வாழ்கிறோம்என்பது உள்ளங்கையிடை நெல்லிக் கனியென விளங்கும்.

ஏறத்தாழ எழுநூறு கி.மீ நீளமும் ஐந்நூறு கி.மீ.அகலமும் கொண்ட
மாநிலமாகத் திகழும் தமிழகத்தின் தலைநகர் அதன் வட கிழக்குப் பகுதி முனையில் இருப்பது பூகோள ரீதியிலும் சரியில்லை: பொருளாதார ரீதியிலும் சரியில்லை. ஏன் கலாச்சாரப் பண்பாட்டு ரீதியிலும் சரியில்லைதான். வாஸ்து அமைப்புப்படியும் மிகப் பெரும் கோளாறான இடத்தில் தலைநகரம் தள்ளாடிக் கொண்டிருப்பதை உணரலாம்.

தென் முனையில் நெல்லை-கன்யாகுமரியில் இருக்கின்ற தமிழன் பல்வகையிலும் தனது வாழ்வாதாரத்தின் வசதிக்காக வடகோடிக்கு 700 கி.மீ.தொலைவுக்கு வந்து திரும்புவதும் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி அவன் 500 கி.மீ தூரம் வந்து செல்வதும் தெற்கு மேற்குப் பகுதி மக்களுக்கு பொருளாதாரச் சுமையைத் தருவதாகவே இருக்கிறது என்பதை நமது அரசியலாளர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை..

தவிர மாநிலத்தின் உயர்தர வசதிகள் அனைத்தையும் அதன் வடகிழக்குப் பகுதியிலேயே குவித்து வருவது என்பது, ‘வடக்கு வாழ்கிறது;தெற்கு தேய்கிறதுஎன்கிற விபரீதச் சிந்தனையை இன்றில்லாவிட்டாலும் என்றைக்காவது ஒருநாள் தெற்கு மேற்குப் பகுதித் தமிழர்களுக்குத் தந்து விடும்.

ஒரு நாட்டின் தலைநகர் அதன் மையப் பகுதியில் இருப்பதே அனைத்துத் தரப்புப் பகுதி மக்களுக்கும் சம வாய்ப்பைத் தரும் சிறந்த அரசின் சிறந்த நிர்வாகப் பகிர்வாக அமையும்என்ற இலக்கணத்தைப் புத்திமான்கள் ஏற்பார்கள் என்றால்,தமிழகத்தின் தலை நகர்அதன் மையப் பகுதி என ஏற்றுக் கொள்ளப் படும்திருச்சியை அடிப்படையாகக் கொண்டு புதிதாக ஏற்படுத்தப் படுவதே நியாயமும் நீதியும் ஆகும்.

இதற்கான புதிய நிர்மாணக் கட்டமைப்புக்களை உருவாக்கும் செயல் திட்டத்தை, தமிழர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ள தாங்கள் முன் வந்து சிந்தித்து எடுக்க வேண்டும்.

இதற்கான பெருமையும் புகழும் புண்ணியமும் முழுக்க முழுக்க உங்களையே சார வேண்டும் என்பதே எனது நெஞ்சம் நிறைந்த விழைவு..

தமிழகத்தின் புதிய தலை நகராக,திருச்சிப் பகுதியை புதிய நிர்மாணமாக உருவாக்குவதன் பயன்களை உங்களுக்கு விவரிக்க வேண்டிய அவசியமில்லைதான்.

கிருஷ்ணன்பாலா
எனினும் அவற்றில் சில விஷயங்களை கொஞ்சம் கோடிட்டுக் காட்டுவது நல்லதென நம்புகிறேன்:

1.
லட்சக் கணக்கான கோடிகளில் புதிய முதலீடுகளில் கட்டுமாணப்
பணிகள் மற்றும் புதிய தொழில்சாலைகள் இப்பகுதியில் உருவாகும்

2.
லட்சக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்புப் பெறுவார்கள்.அதன்
மூலம் வேலை வாய்ப்புத் திண்டாட்டம் முற்றிலும் ஒழியும்.

3.
நீர் வளம் மிக்க பகுதி இது என்பதால் குடி நீர்ப் பிரச்சனையற்ற
தலைநகர் பகுதி என்று மட்டும் இல்லாது,’பசுமை நிறைந்த தலைநகர்
இதுஎனும் தகுதியையும் பெறும்.

4.
தமிழகம் முழுவதையும் இணைக்கும் போக்கு வரத்து மையம்
எனும் முழுத் தகுதிக்கும் உரிய தலைநகர் இதுஎன விளங்கும்.

5.
அனைத்துத் தரப்பு மக்களும் எளிதில் சென்று திரும்பும் நிர்வாகத்
தலைநகர் என்ற பெருமைக்கு உரிய பகுதியாக விளங்கும்.

6.
இதன் சுற்று வட்டாரப் பகுதிகள் தமிழர்களின் வரலாற்றுப்
பகுதிகளாக இருந்தவை என்பதால் இப்பகுதி புதிய தலைநகர்
என்று ஆக்கப் படுவதன் மூலம் தமிழர்களின் பண்பாடும் வரலாறும்
எதிர்காலத்தில் உலக அளவில் முக்கியத்துவம் பெறும்.

7.
தலைநகரம் என்ற தகுதி வரலாற்றுக் காலம் தொட்டே
அடைந்திருந்தது திருச்சி,உறையூர்ப் பகுதிகள். இது தமிழர்களின்
தலைநகரம் என்று ஆக்கப்படுவதன் மூலம் தமிழ்
உணர்வாளார்களின் ஒட்டு மொத்த ஆதரவையும் உங்களுக்குப்
பெற்றுத் தரும் உன்னதத் திட்டமாக அமைந்து,அதன் மூலம்
அரசியலில் உங்களுக்கு எதிரிகளே இல்லை எனச் செய்து
விடும்.ஒட்டு மொத்த தமிழர்களும் உங்களை ஆயுள் முழுதும்
ஏற்றி வைத்து வாழ்த்துவர்..

8.
எம்.ஜி.ஆர் அவர்களின்ஒப்பற்ற லட்சியத்தை நனவாக்கிய
பெருமை உங்களின் அரசியல் வரலாற்றில் இமயச் சிகரமாய்த்
திகழும்.
.
9.
எல்லாவற்றுக்கும் மேலாக, நீங்கள் சரித்திர வெற்றி பெற்று,
இந்த அளவுக்கு மறுபடியும் ஆட்சிப்பீடத்தில் ஏற்றி வைத்த
திருவரங்கன் பள்ளி கொண்டெழுந்துள்ள பூலோக
வைகுந்தமாகிய பகுதியே, தமிழகத்தின் தலைநகர் என்பது
காலத்தின் கட்டாயம் என்பதாக அமைந்த திட்டம் இது
என்பதை எவரும் மறுக்க முடியாது.

மதிப்புக்குரிய மேடம் அவர்களே,

திருச்சியைத் தலை நகராக்கும் வல்லமையும் வாய்ப்பும்
இறைவன் உங்களுக்குத் தந்த வாய்ப்பெனக் கருதுங்கள்.

இதைச் செய்வீர்களானால்-
கச்சத்தீவுப் பிரச்சினையும் இராமேஸ்வரம் மீனவர் வாழ்வாதாரப்
பிரச்சினையும் ஏன் இலங்கைப் பிரச்சினையும் உங்கள் காலடியில் தானாக வந்து தவம் கிடக்கும் பாருங்கள்.

வாழ்த்துக்கள்.
உண்மையுடன்,
கிருஷ்ணன்பாலா
7.2.2012 / தைப் பூசத் திருநாள்
Post a Comment