Monday, July 1, 2013

செல்லாக் காசுகள்!

அறிவார்ந்த வணக்கம்.

இங்கு முகநூலில் (Facebook) எனது பதிவுகளின் கூரிய நோக்கம் யாதென அறியாது; அவற்றை நுனிப்புல் மேய்ந்து,தங்கள் மேதைமையைக் காட்ட சிலர் அவ்வப்போது கருத்துக்களை பதிவு செய்கிறார்கள்.

சொல்லப்பட்ட கருத்தை மேலும் கூர்மையாக்கவும் புதிய புதிய பொருள் விவாதங்களை வளர்க்கவும்தான் நாம் இந்த முக நூலில் பங்கெடுத்து வருகிறோம்.

இங்கே நமது நேரத்தையும் உழைப்பையும் பெரும்பகுதி செலவிட்டுக் கொண்டிருப்பதெல்லாம், நாட்டுக்கும் மொழிக்கும் நல்லோருக்கும் துணை நிற்கும் நோக்கமே அன்றி வேறில்லை.

இந்த முகநூல் மூலம் வெகு சில நட்பு உள்ளங்களைப் உறவாகப் பெற்றதிலும் சில ஆயிரம் தமிழ் உணர்வாளர்களுக்கு கருத்துக்களைப் பரிமாற்றம் செய்து கொண்டதிலும் எனக்கு நிறைவே தவிர குறை ஏதும் இல்லை.

எனினும், சொல்கின்ற கருத்தின் ஆழம் அறிந்து,அதன் நுட்பம் அறிந்து வாதிடுவோர் என்று பார்த்தால் விரல்விட்டு எண்ணக்கூடிய வெகு சிலரே தோன்றுவார்கள்.

ஆனாலும் ஒவ்வொருவருவரும் ஒருவகையான திறமையில் தேர்ந்து நிற்கும் அறிவில் விலாசம் பெற்றுள்ளார்கள் என்பதை ரசனையுடையோர் ஒப்புக்கொண்டாக வேண்டும்.


என்னை பொறுத்தவரை-
வெற்றுப் பொழுதுக்கும் வீண் திண்னை பேச்சுக்களுக்கும் நேரத்தைச் செலவிடுவதில்லை.

அதற்காக அப்படி இந்த முகநூலில் இருப்போரின் பக்கங்களுக்குச் சென்று பார்க்காமல் இருப்பதுமில்லை.

காரணம்,அதில் உள்ள நையாண்டி,நகைச் சுவை,கிண்டல்,கேலி மற்றும் இலக்கியம்,அரசியல்,கவிதை  போன்ற பலவிதமான உணர்வுகளைப் பகிர்ந்தளிக்கும் முகநூலைப் பக்குவத்தோடு ரசிக்கும் மனோ நிலை இருந்தால் ஒழிய முகநூலில் உங்களை நிலைப்படுத்திக் கொள்வது அர்த்தமில்லாது போய்விடும்.

நமது பண்பாட்டின் சீர்மையைக் குறைக்கின்ற,சிதைக்கின்ற கருத்துக்களை எழுதுவோர் மீது மட்டும் எனக்குச் சினம் வருவதில்லை; அதைப் போற்றி எழுதும்போது அதை நுணுகிப் பார்க்காது, தங்கள் மனம் காணும் போக்கில் எதிர் விமர்சனம் செய்வோர் மீதும் சினம் வரத்தான் செய்கின்றது.

அந்தச் சினம் எழுதுகின்றவரின் மீது அல்லாமல் அவருடைய எழுத்தின் மீது என்ற தெளிவுகூட இல்லாது,சினம் வரும் காரணத்தை  அவர்கள் உணர்வதில்லை. அப்படி உணராது அவர்களின் பொருள் அற்ற கருத்துக்களின்மீது சினம் கொள்கின்றவனைஆணவக்காரன்’ என்றும்தலைக் கனம்’ கொண்டவன் என்றும் ‘போலிச் சிந்தனையாளன்’ என்றும் காழ்ப்புணர்ச்சியால் புறம் பேசுகின்ற சிலர் எனது எழுத்தின் கர்வத்தால் காயப்பட்டுப் போய்,கண்டதை எல்லாம் உளறத்தொடங்கி,பின் நட்பு வட்டத்திலிருந்து விலகிக் கொள்கிறார்கள்.

அப்படி விலகும்போது மவுனமாக விலகி இருந்தால் சொல்வதற்கு ஒன்றும் இல்லைதான். ஆனால் சிந்தனைக் கூர்மையை செந்தமிழின் சீர்மையோடு செய்தி சொல்ல வந்தவனின் சிந்தனையைக் குற்றம் சொல்லி, குத்தாட்டம் போடுவதைத்தான்  நான் அனுமதிப்பதில்லை.

இம்மாதிரியான செய்திகளை மையமாக வைத்து இங்கு பலமுறை பதிவுகளும் இட்டிருக்கின்றேன்.

சமீபத்தில் ஒரு நண்பர் இம்மாதிரியான சங்கடத்தைத்
தோற்றுவித்துத் தனது சொரூபம் யாதெனக்காட்டி,என்னோடு கருத்து மோதல் செய்தார். பின் கழன்று கொள்கிறேன்;விட்டு விலகுங்கள் என்கிறார்.

அவரைப் போன்ற சிலரும் எனது கருத்துக்களைஆஹாஓஹோ’ என்றெல்லாம் புகழ்ந்ததும் உண்டு; கப் சிப்பென்று காட்டிக் கொண்டதும் உண்டு.

அவரைப் போன்றோர் எனது நட்பு வட்டத்தில் இருந்ததற்கும் இப்போது விலகுவதற்கும் எனது கருத்து இதுதான்:

எனது பொக்கிஷத்தில் சில செல்லாக்காசுகளும் கலகலத்தன; இப்போது அவை துருப்பிடித்துப் போய் அந்தக் கலகலப்பை இழந்து விட்டன.

அவ்வளவுதான்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
1.7.2013
Post a Comment