Wednesday, July 24, 2013

சமூகக் கேடர்கள்!

அறிவார்ந்த நண்பர்களே,

வணக்கம்.

குடும்பப்பாரம்பரியம் காத்து தலைமுறைகளைச் செழிக்க வைக்கும் சித்தாந்தம் தமிழனின் பரம்பரைக் குணம்.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்புவரை கூட இந்தப்பாரம்பரியம் படுத்து விடாமல் இருந்தது.

மனிதர்களுக்கு அன்றும்கூட மறைவிடத்தில் ஒழுக்கக்கேடுகளைச் செய்யும் குற்றங்கள் இருந்தன.

ஆனால் ’அது எங்கே வெளிப்பட்டு விடுமோ?’ இந்தச் சமூகம் தங்களைக் காறி உமிழ்ந்து விடுமோ?’ என்ற அச்சம் கப்பியும் இருந்தது.

இதனால் நம் சமுதாயம் கொலை.கொள்ளை,பழி பாவங்களில் மிகக் குறைந்த விகிதாச்சாரத்தில் அமைதியான  சமுதாய இணக்கத்தோடு வாழ்ந்திருந்தது.

எப்போது வெள்ளையனிடமிருந்து விடுதலை பெற்றோமோ,அப்போது முதலே நம்மிடைடையே சாதிகள் தலை தூக்கிக் கொண்டு ’நமது  ஒவ்வொரு சமுதாயமும்  விடுதலை வேண்டும்’என்று இல்லாத பொருளுக்கு வீங்கிக் கொண்டு வீம்பு பிடித்துப் போராட்டங்கள் நடத்தத் தொடங்கிற்று.

இங்கே ‘தடி எடுத்தவன் தண்டல்காரன்’ என்னும் பரிதாப நிலைக்கு நம்மிடையே ஏற்றத்தாழ்வுகள் உருவாக்கப்பட்டன.

தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்வதற்குப் பதிலாக தவறுகளையே முன் வைத்து அடுத்தடுத்துத் பெரிய தவறுகள் செய்வதை தங்கள் சாதியின் உரிமை’ என பாமர ஜாதி மக்களுக்கு படித்த ஜாதித்தலைவர்கள்,  பேசிப் பேசி உசுப்பேற்றித் தங்கள் தலைமையை அடையாளப்படுத்தியும் உறுதிப்படுத்தியும்  தக்க வைத்துக் கொண்டுள்ளார்கள்.

இதனால் தவறுகளின் பரிணாம வளர்ச்சி விகிதாச்சாரம் எல்லை கோட்டுக்கும் வெளியே வீறு கொண்டெழுந்து விட்டது.


மக்களிடையே பற்ற வைத்த  வேற்றுமைத் தீயை இன்னும் அதிகம் மூட்டி வேடிக்கை பார்க்கும் வீணர்கள்தான் இன்று ’சாதி;உரிமை;சமத்துவ நீதி’ என்றெல்லாம் சண்டாளத்தனம் பேசுகிறார்கள்;.எழுதுகிறார்கள்.

இத்தகையோர் தங்கள் இனத்திலிருந்து மனிதர்களை உருவாக்குவதற்குப் பதிலாக மிருகங்களைத்தான் தீனி போட்டு வளர்க்கிறார்கள்.

அந்த மிருகங்கள்தாம் இவர்களுடைய கொள்கைளையும் கோட்பாடுகளையும் கொடியேந்திப் பிரச்சாரம் செய்கின்றன.


அவர்களை அவர்கள் சார்ந்த சமுதாயம்தான் அடையாளம் கண்டு புறந் தள்ள வேண்டும்; சட்டம் குருடானது. அதற்கு உண்மையும் எதார்த்தமும் காட்சி  அளிக்காது.

‘எப்படி, போலீஸ்காரனே இன்று பெரிய திருடன்’ என்ற பட்டத்துக்கு ஆளாகி இருக்கிறானோ, அதுபோல சமுதாயத்தில் ஒற்றுமையும் இணக்கமும் ஏற்படுத்தி எழுத வேண்டியவர்களே அதற்கு எதிராக ‘சாதி.சமய, இன வேறுபாடுகளை வளர்க்கின்ற வகையில் கங்ஙணம் கட்டிக் கொண்டு எழுதுகிறார்கள்.

இந்தக் களேபரத்தில் தப்பித்துக் கொள்கிறவர்கள் பணம்,அதிகாரம் படைத்தவர்களே தவிர பாவப்பட்ட பாமரர்கள் அல்லர்; அந்தப் பாவப்பட்டோர் பட்டியலில் தலித்து மக்கள்தான் அதிகம்’ என்பது இப்படி எழுதுகின்ற புர்ரட்சி எழுத்தர்களுக்குப் புரியாததல்ல.

அவர்களை இருட்டறையில் வைத்து வெளியே வெளிச்ச வித்துக்களைத் தூவுவதாக  விலாசப்படுத்திக் கொள்ளும் சமூகக் கேடர்கள் இவர்கள் அன்றி வேறு யார்?

சிந்தித்துப் பாருங்கள்: இறைவன் ஏழைகளின் வடிவில் இல்லையா?

இவண்-
கிருஷ்ணன்பாலா
24.7.2013
Post a Comment