Tuesday, April 17, 2012

சித்திரையே முத்திரை!


நண்பர்களே,
தமிழ்ப் புத்தாண்டு குறித்து நம்மவர்களிடையே அரசியல் லாவணி நடத்தப் பட்டு வருகிறது.

’தைத் திங்களே தமிழர் ஆண்டின் தொடக்கமாய் கொண்டாடப் படவேண்டும்’ என்ற கலைஞர் கருணாநிதியின் பின்னே நின்று கொண்டு ஒரு கூட்டமும்; ‘இல்லை; சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த கலைஞர் கருணாநிதியின் அரசு முறை ஆணை தவறு; சித்திரைதான் தமிழர் ஆண்டின் தொடக்கம்” என்று மேடம் ஜெ.அவர்களைக் ’காக்காய்’ பிடிக்க ஒரு கூட்டமும் இந்த லாவணியை வலிந்து பாடிக் கொண்டிருக்கின்றன..
 
நாம் இதை மரபுவழிச் சிந்தனையாய்க் கொண்டு இங்கே சில செய்திகளை உணர்த்த வேண்டியுள்ளது:

சித்திரை முதல் தேதியை தமிழர் ஆண்டின் தொடக்கமாகக் கொண்டு   நம் முன்னோர்கள் தலை முறை தலைமுறையாகக் கொண்டாடி வந்தனர்.

இது கலைஞர் கருணாநிதி அவர்களுக்குத் தெரியாததல்ல!

தமிழர் ஆண்டின் முதல்நாள் சித்திரை ஒன்று என்பதை நான்கு முறை தமிழ்நாட்டின் முதல் அமைச்சாராக இருந்து கொண்டாடி இருந்து விட்டு ஐந்தாம் முறையும் அரசுக் கட்டில் ஏறி அதில் நான்கு ஆண்டுகள் இதையே பின்பற்றி வந்தவர்க்கு, தனது ஆட்சிக்கும் அரசியலுக்கும் காலம் போன கடைசியில் வேறு பொழுது போக்க நேரமில்லாமல், சரித்திர, இலக்கிய ஆய்வுகளை எல்லாம் செய்து கண்டுபிடித்ததுதான் ‘தமிழரின் காலக் கணக்கின் ஆண்டுத் தொடக்கமே தைத் திங்கள்தான்’

வரலாறு காணாத (?) இந்த ஆய்வை அவர் செய்து அறிவிக்க, அதை அவருடைய ராஜ சபையின் விதூஷகர்களான நமது கவிராஜர்களும் காக்கை அறிஞர்களும் முன் மொழிந்தும் வழிமொழிந்தும் “ஆகா… ஓகோ....இவரல்லவா, உலகத் தமிழரின் ஒப்பற்ற ஒரே தலைவர்’ என்று வாழ்த்து மழை பொழிந்து காவியங்கள் இயற்றத் தொடங்கி விட்டனர்.

அவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை: கலைஞர் கருணாநிதி ஒருவர்தான் தமிழரின் பாரம்பரிய வாழ்வுக்கும் பண்பாட்டுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் ’பட்டா’ போட்டுக் கொண்ட பரம வாரிசு’ என்பது.

ஆனால் தமிழரின் பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பின்பற்றிப் பழகிப் போன தமிழ் அறிஞர்களுக்கோ இதை ஒப்புக் கொண்டு ஒப்பாரி பாடுவதைத் தவிர வேறு வழியின்றி அவர்கள் விழி பிதுங்கி கொண்டிருந்தனர்.

உண்மையில் தமிழரின் புராதனச் செம்மையும் மெய்ஞான-விஞ்ஞானப் பூர்வமான அணுகுமுறைகளும் ஆலய வழிபாட்டுச் சம்பிரதாயங்களும் சுட்டுப் போட்டாலும் தெரியாதவரை, அவற்றை மூட நம்பிக்கை எனச் சாடி வந்தவரை, தமிழர்கள் காலம் காலமாக தலைமுறை தலைமுறையாகக் கொண்டாடிவந்த தமிழ்ப் புத்தாண்டுத் தினமாம் சித்திரை ஒன்றை வரலாற்றுப் பிழை எனச் சொல்லி, இனி, ’தைத்திங்கள் முதல் தேதிதான் அரசுப் பூர்வமான தமிழர் புத்தாண்டு தினம் அதையே அனைவரும் கொண்டாட வேண்டும்’ என ஆணையிட்டவரை மக்கள்ஆணை தேர்தலில் தூக்கி எறிந்து விட்டது...

’பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்’ என்ற நிலை
முற்றிவிடும் சூழ் நிலையில் கலைஞரின் ஆட்சி அகற்றப்பட்டதன் மூலம் தமிழர் புத்தாண்டு தினம் மீண்டும் மரபுப்படி உறுதி செய்யப் பட்டுவிட்டது.

சரி, சித்திரை முதல் தேதியே தமிழரின் புத்தாண்டு தினம் என்பதன் மெய்ப் பொருள் விளக்கத்தைத் தெரிந்து கொள்வோம்:

சித்திரைதான் தமிழர் புத்தாண்டு தினம் என்பதில் உள்ள தமிழரின் உலகளாவிய வான சாத்திர அறிவும் வாழ்க்கைச் சாத்திரச் செறிவும்
நம்மை வியக்க வைக்கும்!

சங்க காலத்துக்கும் முன் இருந்தே, நம் தமிழர்கள் வான சாத்திரத்தின் அடிப்படையில்தான் காலத்தை கணித்து அதன்படி ஆலய வழிபாடுகள்,நோன்புகள்,விழாக் கொண்டாட்டங்கள், மனைகட்ட அடிகோலுதல்,நிலம் வாங்குதல்,அரசரைச் சந்தித்தல் மற்றும் திருமணம்,,குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுதல்,நிலத்தை உழுதல்,விதை விதைத்தல் அறுவடை செய்தல் முதலான சுபகாரியங்களைச் செய்து வந்தனர்.

இதற்கு நம் சித்தர்களும் முத்தர்களுமே பின் புலமாய் இருந்தனர்.

அவர்கள் வகுத்துக் கொடுத்த விதிகளை மீறி, யாரும் தங்கள் விருப்பப்படி எதை வேண்டுமானலும் எப்போது வேண்டுமானலும் சுபகாரியங்களைச் செய்து விடவில்லை. எல்லாவற்றுக்கும் நல்லஓரை எனும் நல்ல நேரத்தைப் பார்த்துத்தான் நல்ல காரியங்களைச் செய்து வந்தனர்.

அதற்குக் கிரகங்களின் நிலையையும் நட்சத்திரங்களின் கணக்கையும் அடிப்படையாகக் கண்டு கணித்து வந்தனர் என்பதே உண்மை.

சோதிட அறிவியல் என்பதே வான சாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது.

சோதிடத்தில் கிரகங்களின் முதன்மையானது சூரியன் என்றும் அவனே ஆண் வர்க்கத்தின் அதிபன் என்றும் சந்திரன் பெண் வர்க்கத்தின் மூலம் என்றும் சொல்லப்பட்டு சூரிய சந்திரர்களின் நிலையைக் கொண்டு மாதங்களை வகுத்தனர், இவ்வாறே பிற கிரகங்களுக்கு உள்ள வலிமையையும் பொறுப்புக்களையும் கணித்து சோதிடம் மூலம் அவற்றைப் புரிந்து கொண்டனர்.

சித்திரை மாதம் புத்தாண்டின் தொடக்கம் என்பது, வான நூலையும், பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. பூமி, சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் ஓர் ஆண்டு. சூரியன், பூமத்திய ரேகையில் நேராகப் பிரகாசிக்கும் மாதம், ஆண்டின் தொடக்கமாகக் கணக்கிட்டனர். அதாவது,சூரியனின் சுழற்சியில் அவன் சித்திரை மாதத்தில் உச்ச நிலையை எய்துகிறான் என்பதுதான் முக்கியமானது. எனவேதான் 12 மாதங்களில் சித்திரையே முதல் மாதம் எனும் முத்திரையைப் பெறுகிறது.

புவியியல் ரீதிலும் பருவகாலங்களின் அடிப்படையிலும் இதுதான் சரியானது.

சூரியன் ஒவ்வொரு 30 டிகிரியிலும் இடம் மாறுவதைக் கொண்டு 360 டிகிரிகளை 12 வீடுகளாக,அதாவது 12 மாதங்களாகக் கண்டுணர்ந்தனர்.

அதன்படியே 27 நட்சத்திரங்களின் அமைப்பை 12 வீடுகளில் பகுத்துணர்ந்துனர்.

இதில் சனி, சூரியனை ஒரு முறை சுற்றிவர 30 வருடங்கள் ஆகின்றன என்பதன் அடிப்படையில் அதன் இரண்டுசுற்றுக்களைக் கொண்டு 60 வருங்களைக் கணக்கிட்டுத் தமிழ் வருடங்களை 60 என்று வகுத்தனர்.

இந்த 60 ஆண்டுச் சுழற்சியில் ஒரு மனிதனுக்கு முழுமையான வாழ்வு அமைகிறது என்பதுடன்,உலக மாந்தரின் வாழ்க்கையில் ஒரு தலை முறை மாறி அடுத்த தலைமுறை பொறுப்பேற்கிறது என்ற சூத்திரத்தைச் சொல்லவும்தான் ஆண்டுகள் அறுபது என வகுத்தனர்.

அறுபது ஆண்டுகளுக்கு ஒருமுறை சனியின் மகத்தான சக்தியால் மனிதனின் உயிர் வாழ்க்கையிலும் மாறுதல் ஏற்படுத்தப்படுகிறது என்பதையும் நாம் உணர வேண்டும்.ஆண்டுக்கு 12 மாதங்கள் என்பது சூரியனை அடிப்படையாகவும் ஆண்டுகள் அறுபது என்பது சனியின் இரு சுற்றுக்களை அடிப்படையாகக் கொண்டும் வகுக்கப் பட்டது என்பதே முற்றிலும் பொருந்துகின்ற விஷயம். (சனி ஆயுள் காரகனாகவும் கர்மகாரகனாகவும் அறியப்பட்டுள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.)

இதுபற்றிக் கேள்விகள் கேட்பதும் விதண்டாவாதத்தில் இறங்குவதும்  முட்டாள்களின் செயல். குருடனுக்குத் தெரியுமோ சூரிய ஒளியின் தன்மைகள்?.

இன்று நமக்குள்ள அறிவை விடவும் மேலான மெய்ஞ்ஞான-விஞ்ஞான அறிவு கொண்டு நம் தலைமுறைகளை உருவாக்கி உலக நாகரீகத்துக்கே முன்னோடிகளாகத் திகழ்ந்த அவர்களின் பெருமையைப் பலவாறு புகழ்ந்தும் பேசியும் எழுதியும் கர்வம் கொண்ட தமிழ் இனத்தின் மரபுகளை மாற்றிப் புதிய விதியை எழுதும் அருகதை எவருக்கும் இல்லை.

நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல; ஆனால் ஏனோ,
சில முட்டாள்கள் அவர்களுக்குப் பிறந்து விட்டனர்?.

இவண்,
கிருஷ்ணன்பாலா
17.4.2012

No comments: