Thursday, April 19, 2012

எங்கே போகிறோம்?


அறிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.

’உலகின் மூத்த குடி’ என்று தமிழ்ச் சமுதாயத்துக்குத் தொன்று தொட்டுப் பெருமை துலங்கி வந்து கொண்டிருந்தது.

ஆனால், அது ‘இந்த 21 ஆம் நூற்றாண்டில் சமாதி நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது’ என்பதை நாம் வருத்தபட்டுச் சிந்தித்துப் பாரம் சுமக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

இதை நான் இங்கு வருத்தப் படாமல் சொல்ல வேண்டியவனாக இருக்கின்றேன்
.
உள்ளதைச் சொல்லுகிறேன்; அதில் உண்மையைச்சொல்லுகிறேன்.

“எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே; அதன்முந்தையர்ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே’’

என்று பாரதி பாடிய பொருள், ‘இந்த 21 ஆம் நூற்றாண்டோடு நின்று விட்டது’ என்று சொல்லக் கூடிய வகையில் இன்றைய கால கட்டத்தில் கால் வைத்துக் கொண்டிருக்கின்றோம்.

’வறுமையிற் செம்மை’ என்பது வளமார் தமிழின் வார்ப்பு,

’கந்தையானாலும் கசக்கிக் கட்டு’ என்பதையும் அதே தமிழ் நமக்கு எடுத்துச் சொல்லி, ஏழ்மையிலும் தூய்மையை இறுமாப்புக் கொள்ள வைத்தது.

ஆனல் இன்றைய நம் சமூகம், ’பணத்தேவையிலும் அதன் பகட்டிலும்தான் வாழ்வு’ என்பதை இறுக்கமாகப் பற்றிக் கொண்டிருக்கிறது.

விளைவு:
‘பண்பாட்டுச் சிதைவிலும் ஒழுக்கப் புதைவிலும்தான் வாழ்வாதாரம் வளமாக இருக்க முடியும்’ என்ற கணக்குப் பாடம் மட்டுமே அதற்குத் தெரிகிறது.

இதற்கு இப்போது வலைவிரித்து விட்ட IT என்கிற Information Technology Sectorதான் காரணம் என்று சிலர் சொல்ல, அந்தக் குற்றச் சாட்டை அதே IT Sector ல் பணிபுரின்றவர்களின் பிரதிநிதியாகச் சிலர் மறுக்க, நண்பர்கள் சிலர் இந்த வாதங்களில் நடுநிலைக் கருத்துக்களை எடுத்து வைக்க ஒரு விவாதம் அரங்குக்கு வந்தது.நமது முகநூல் முற்றத்தில்.

‘அது பற்றி இங்கே ‘உலகத் தமிழர் மைய’த்தில் நமது கருத்துக்களை உலகெங்கும் வாழ்கின்ற நம் தமிழ்க் குடும்பங்களின் நடுவில் எதிரொலிக்கச் செய்வது கடமை’ என்ற நோக்கில் இதை எழுதுகின்றேன்.

ஏற்பவர்,மறுப்பவர் யாவரும் இங்கே வரவேற்கப்படுகின்றார்கள்.

நண்பர்களே,
.
இன்றைய ஒழுக்கச் சீர்கேடுகளுக்கு IT என்கிற Information Technology Sector தான் காரணம் என்று சொல்வது. ‘ஆடத் தெரியாதவள், தான் வழுக்கி விழுந்ததற்கு ‘நிலம் கோணல்’ என்று காரணம் சொல்லியதற்குச் சமம்.

பணமும் பகட்டும் கூட்டும் துறை என்பதால், இன்று ஏழை எளிய வீட்டுப் பிள்ளைகளும் IT துறையில் எப்படியோ கடன் வாங்கியும் கஷ்டப்பட்டுப் படித்தும் வேலை பெறுகிறார்கள்.

அவர்களின் பெற்றோரின் கனவு ‘தம் பிள்ளைகள் தங்களைப் போல் குறைந்த வருமானத்தில் குடும்பம் நடத்திக் கஷ்டப் படக் கூடாது’ என்பதுதான்.

‘அதற்காக அவர்கள் செய்யும் தியாகம் எத்தகையது?’ என்பது அவர்களின் பருவப் பிள்ளைகளுக்குப் புரிவதில்லை.

‘தங்கள் பெற்றோர் எப்படியெல்லாம் கனவு கண்டு தங்களை வளர்த்து ஆளாக்கியிருப்பார்கள்?’ என்பது, அவர்களுக்குக் கல்யாணம் ஆகிக் குழந்தைகள் பிறந்து, அந்தக் குழந்தைகளை அவர்கள் ஆளாக்கப் போராடும் எதார்த்த நிலையில்தான்.‘தங்கள் பெற்றோர் செய்த தியாகம் எத்தகையது?’ என்ற ஞானம் அவர்களுக்குள் உணர்த்தப்படும். 

அப்போது அவர்கள் சிந்தும் கண்ணீரை ஏற்பதற்கு அவர்களுடைய பெற்றோரின் கல்லறைகூட காணாமல் போயிருக்கும்.

பொறியியல் மற்றும் அது சார்ந்த பட்டப் படிப்புகளை நம் இளைஞர், இளைஞிகள் படித்து முடித்ததும் IT துறையில் ‘மூளைச் சலவை’ செய்யப்பட்டவர்களாய்’ கனவுகளுடன் .நுழையும் அவர்களை, இருகரம் கொண்டு ஏந்தி வரவேற்கும் IT நிறுவனங்கள், அவர்களிடம் 8 மணி நேரம் இடைவிடாது வேலையைப் பிழிந்து வாங்குகின்றன.

அதில் நம் இளைஞர், இளைஞிகள் விரைவில் மூளைக் களைப்பை அடைந்து விடுகிறார்கள். அப்போது மூளையின் தனி வலிமை செயலற்ற நிலையில், ஆண் பெண் பேதமின்றி, நட்பாலும் இயல்பான பருவக் கவர்ச்சியாலும் நெருங்கிப் பழகும் நிர்பந்தம் நேர்கிறது.

அங்கே குடும்ப ஒழுக்கமும் சுய கட்டுப்பாடும் செயல் இழந்து, சூழ்நிலையின் தாக்கம் ஆளுமை கொள்கிறது. இங்கேதான் ஒழுக்கச் சீர்கேட்டுக்கான ‘கிரியா ஊக்கிகள்’ சிறப்புறச் செயல்பட்டு நமது குடும்பப் பண்பாட்டின் செழுமையை எல்லாம் சிதறடித்து விடுகின்றன.

பாவம்! இளமை. என்ன செய்யும்?

பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில் வைத்துவிட்டு, பணத்தால் அல்லவா அதை ஊதச் செய்ய அனுமதிக்கின்றோமே?.

ஆண்,பெண் என்ற பேதம் இல்லாமல் இருபால் இனமும் (இளைஞர்/இளிஞிகள்) அதிக அளவில் சங்கமிக்கும் துறை என்பதால் இதன் வாயிலாகத் தெரியும் ஒழுக்கச் சீர்கேடுகள் நமக்கு அதிகரிக்கத்தான் செய்கின்றன. 

என்னைப் பொருத்தவரை, IT என்ற Information Technology Sector தரும் வேலை வாய்ப்புகளின் விபரீதப் பக்கத்தை மட்டுமே காரணமாக எடுத்துக் கொள்ளாது, இன்றைய இளைஞர் இளைஞிகளின் வளமான உத்தியோக வாய்ப்புகளால் நேரும் நிலையத்தான், IT என்பேன். அதாவது INTIMATED TRIANGLE நிலை. அதாவது ஒன்றை விரும்பி இன்னொன்றை ஏற்று வாழ்கின்ற முக்கோண வாழ்வு நிலையைத்தான் முன் நிறுத்திப் பேச முடியும்.

உண்மையில்-
சினிமாதான் நமது பண்பாட்டின் அடித்தளத்தையே அசைத்தது;
பிறகு தேசிய-திராவிட அரசியல் கலாச்சாரப் பேய்கள் நம் ஜனங்களின் பிடரியை பிடித்துக் கொண்டன.

ஒரு புறம் பற்றாக்குறை; ஏழ்மை;பணத்தேவை....
மறுபுறம் பணச் செழுமை;வசதிகள்;ஆடம்பர வாழ்வு.

இதன் மூலம் ஆண்டான் அடிமை,சமூக ஏற்றத்தாழ்வு நிலை,சாதிகள்,சண்டை வழக்குகள்.

அவனவன் ஒட்டுமொத்தமாக ’மராத்தான்’ ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டு மூச்சிறைக்க ஓடுவதுபோல் பணத்தின்தேவையை நோக்கி ஓடி, அதன் விளிம்பில் பணத்தை அனுபவிக்கும் நிலைக்கு வந்தபிறகு,

கற்பு, ஒழுக்கம்,பண்பாடு எல்லாம் பணத்துக்குக் கீழே பதுங்கிக் கொண்டன.

இன்றைய இளைஞர், இளைஞிகள் மத்தியில் குடும்ப ஒழுக்கமும் கட்டுப்பாடும் உயர் சிந்தனைகளும் வேற்றுக் கிரகத்து விளைபொருட்களாகி விட்டன.

நாம் இதைப் பற்றிக் கேட்டாலே போதும்; அவர்கள் ஈயத்தைக் காய்ச்சி செவியில் சிந்தியதுபோல் அலறுகிறார்கள்.

பாவம், இதில் அதிகம் பாதிக்கப்படுவது கிராமத்து ஏழை எளிய பெற்றோர்கள்தாம்.

பணம் தேடுவது, அதைத் தேடியபின் சிற்றின்ப நெருக்கடியில் சிக்குண்டு வீழ்வது, அதன் மூலம் குடும்பப் பண்பாட்டைக் குப்பைக் குழியில் போடுவது என்பன மட்டுமே இன்றைய இளைஞர்,இளைஞிகளின் ‘ஸ்டேடஸ்’.இதில் ஏழை,பணக்காரன் என்பதெல்லாம் இல்லை.
 
‘எதிர்காலம்,நமது சந்ததிகளின் வாழ்வாதாரம். நம் முன்னோர் கட்டிக் காத்து வந்த குடும்பப் பாரம்பரியம்’ இவை பற்றிய சிந்தனை எல்லாம், இன்று பணத்தை மட்டுமே தேடி, அதில் பகட்டுக் காணும் இன்றைய தலைமுறைக்கு இல்லாது போயிற்று?

நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்கள் மகள்/மகன்கள் அமெரிக்காவில் இருக்கின்றார்கள்; ஐரோப்பாவில் இருக்கின்றார்கள்’ என்று சொல்லிக் கொள்வதில் பெருமையாகக் கருதிக் கொண்டனர்,ஆரம்பத்தில், அதாவது,
இந்த IT அடியெடுத்து வைத்த கட்டத்தில் அப்போது! .

இப்போது?
திருமணம் செய்ய மாப்பிள்ளை வீட்டாரோ, பெண் வீட்டாரோ ஒருவருக்கொருவர் அணுகும்போது ‘பெண்ணோ பையனோ அமெரிக்காவில் / ஐரோப்பாவில் இருக்கிறார்கள்’ என்றாலே அஞ்சி அலறி ஒதுங்கிக் கொள்ளும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது..

இதனால் திருமண ஏற்பாடுகள் தள்ளி போய், தள்ளிப் போய் இளைஞர்கள் வாலிப வயோதிகர்களாகவும், கன்னிப் பெண்கள் முதிர் கன்னிகளாகவும் மாறி, ‘திருமணம் ஒன்று நமக்குத் தேவையா?’ என்று சிந்தித்து அவர்கள் செயலற்றவர்களாக வாழும் நிலையை அநேக இடங்களில் காண்கின்றோம்.

’பருவத்தே பயிர் செய்’ என்பது நம் முன்னோர் வாக்கு. இன்று பருவகாலங்கள் தப்பி உருவ கோலங்களும் மாறிப்போன நிலையில் நடக்கும் திருமணங்களே அதிகம்.

அப்படி நடந்த பின்னும் அவர்கள் இரண்டற அன்பு கலந்து வாழாமல் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு வாழும் நிலைதான் வளர்கிறது.
பணமும் வசதியும் அவர்களுக்குள் இருக்கும் அவலங்களைப் பூசி மெழுகி விடுகின்றன.

ஆக-
புண்களின் மீது புனுகு தடவிக் கொண்டுதான் இன்றைய ஆணும் பெண்ணும் வாழ்க்கையை இழுத்துக் கொண்டு செல்கிறார்கள்.

நண்பர்களே,
இதுதான் இன்றைய சமூகத்தின் ஒட்டு மொத்த அவல நிலை.

‘ஒருவனுக்கு ஒருத்தி’ எனும் உயர் ஒழுக்கம் நமது ’இலக்கியப் பெருமைக்கு உரிய சொத்தாக மட்டுமே’ உரித்தாகி, அவை புத்தக அலமாரிகளில் புழுதி படிந்திருக்கும்  விஷயங்களாகிவிட்டது..

மேலை நாட்டுப் பண்பாடும் மேனா மினுக்கித் தனமும் இன்றைய இளைய சமுகத்தின் கனவு லட்சியங்களாய்ப் பூத்துக் காய்த்துக் கனிந்து, குலுங்கிக் கொண்டிருக்கின்றன.

நமது முன்னோர் வாழ்ந்து காட்டிய பெருமை யாவும் ’செத்த காலேஜ்’ மியூஸியத்தில் மவுனமாக அழுதுகொண்டிருக்கின்றன.

நாம் அழுவதா, ஆனந்திப்பதா? அல்லது இதை அரவணைத்துக் கொள்வதா?



இவண்-
கிருஷ்ணன்பாலா
19.4.2012
Post a Comment