Thursday, August 14, 2014

தேசீய நீதி!



அறிவார்ந்த நண்பர்களே,

"தாயின் மணிக்கொடி பாரீர்!- அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்! ”

என்று நம் நாட்டின் தேசியக் கொடியைப்ற்றி உணர்ச்சி பொங்கிட வெகுஅற்புதமாகப் பாடினார் மகாகவி பாரதி.

இந்தியா விடுதலை பெறும்  முன்னரே பாடிப் பரவசப்பட்டவன் அந்தப் பாட்டன்.

அவன் பாடிப் புகழ்ந்த இந்தக் கொடிக்கு ஜாதி,இனம்,மதம் மற்றும் மொழி என்ற வர்ண பேதம் இல்லை, ஆரஞ்சு,வெள்ளை,பச்சை என்ற மூன்று வர்ணங்களைத் தவிர.

இந்த மூன்று வர்ணங்களைக் கூட, எனது நண்பர்,ஆடிட்டர் திரு விஜயக்குமார் அவர்கள் வியக்கத்தகும் ஒப்புவமையாகக் கூறியதை இங்கே வாசக நண்பர்களுக்கும் பகிர்வது  மிகப் பொருத்தமாக இருக்கும்:

//இக்கொடியின் மூன்று வர்ணங்களில் ஆரஞ்ச் நிறத்தை காவிக் கொடியைப் போற்றும் இந்து மக்களின் எண்ணமாகவும் நடுவில் உள்ள  வெள்ளை நிறத்தைத் தூய்மையான கிறிஸ்துவர்களின் சின்னமாகவும் பச்சை நிறத்தை இஸ்லாம் மக்களின் இதயம் கவர்ந்த  எண்ணமாகவும் கருத  வேண்டும்//.

அடடா....
நமது தேசியக் கொடியின் மூன்று வர்ணங்களும்  நமது தேசத்தின் முப்பெரும் மதங்களின் தோற்றத்தைத்தான் நமக்கு உரைக்கின்றன என்பதை அறிவுப்பூர்வமாக உணர்ந்து கொள்வதுதான் சரியான தேசப்பற்றின் சான்று என்பதைப் பெருமையாக எண்ணுகிறேன்.

நண்பர்களே,

நித்தமும் நினைத்துப் பணிந்து,புகழ்ந்து போற்றப்பட வேண்டியது இந்த மூவர்ணக் கொடி.

என்றாலும் ’குறைந்த பட்சம் ஆண்டுக்கு ஒரு  முறையாவது இந்தக் கொடியின் பெருமையை உணர்ந்து  இந்திய தேசியத்தின் அருமையைக் கட்டிக் காக்கும் குடிப் பெருமை பெற்றவர்களாக இந்தியக் குடிமக்கள் இருக்க வேண்டும்’ என்பதற்குத்தான் இந்தியா விடுதலை பெற்ற ஆகஸ்ட் 15 ஆம் நாளை கொண்டாடுகின்றோம்.

இவ்வழக்கம் அரசியல் பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்ட  நெறிமுறை.

இந்த மூவர்ணக் கொடியின் மகத்தான சிறப்புக்களை,அதன் பின்னணியில் இருக்கும் நம் முன்னோர் செய்த அளப்பரிய தியாகங்களின் உன்னத மதிப்பை  நற்பண்புடையோரும் நற்குடிப்பிறந்தோரும் உணர்ந்து போற்றுவார்கள்.

எப்படி வேண்டுமானாலும் இந்தியத் தேசியக் கொடியைப் பற்றி  இழிவுபடுத்தும் வகையில் பேசுவது  அறிவார்ந்த மக்களின் இயல்பாகாது.

ஆகவே, இந்திய விடுதலையின் அறுபத்தெட்டாவது ஆண்டில் அடிவைக்கும் இத்தினத்தில் அதன் மகத்தான உணர்வுகளைப் பரப்புவதையே தாய் நாட்டுக்கு நாம் தரும் தனிப்பெரும் மரியாதை என்று உணர வேண்டும்.

ஒரு நாட்டின் தேசியக் கொடியை எரிப்பதும் அவமானப்படுத்துவதும் வீரமல்ல; விடுதலைக் கோஷமும் அல்ல. அது, மதி கெட்டவர்களின் மடமைக்கும் மூர்க்கக் குணத்துக்குமான அடையாளம்.

மூர்க்கக் குணம் உள்ள மிருகங்கள் தண்டிக்கப்படுவதே பண்பட்ட சமூகத்தை ஊக்குவிக்கும் தேசீய நீதி..

வாழ்க,இந்திய சுதந்திரம்;வளர்க அதன் தேசீயப் பண்பாடு!

இவண்-
கிருஷ்ணன்பாலா
14.8.2014

No comments: