Sunday, July 20, 2014

நாளைய சந்ததிக்கு...




அறிவார்ந்த நண்பர்களே,

தமிழுக்கென்று தனிச் சிறப்பும் அதன் மொழிவழிப்பண்பாடும் உண்டு.

உலக மொழிகளியேயே மூத்த இனமாக மட்டுமின்றி பண்பாட்டிலும் பக்குவத்திலும் முன் நிற்கும் சமுதாயமாகவும் தமிம் இனம் மதிக்கப்படுகிறது.

அறிவிலும்  நீதி நெறி சான்ற அரசியல் முறைமைகளிலும் பிற சமுதாயங்களை வழிப்படுத்துவதிலும் தமிழுக்குள்ள இலக்கியச் செழுமையும் இலக்கண மரபும் தொன்றுதொட்டுத் துலங்கியிருந்து, ஈடு இணையற்ற தவச் சான்றோர்களைப் பெற்றிருப்பது தமிழர் மரபு மட்டுமே.

காலம் தோறும் தமிழ் வளர்கிறது. தமிழை அழிக்கவும் அலங்கோலப்படுத்தவும்  அவ்வபோது அறிவிலிகள்கூட்டமும் அரைகுறைகள் கூட்டமும் ஆரவாரம் செய்தபோதும் தமிழன்னை, தனது தொன்மையாலும் தொடர்பு மாறா இலக்கணச் சிறப்பினாலும்  அறிஞர்கள் நெஞ்சிலும் கவிஞர்கள் நாவிலும் சான்றோர் மரபிலும் அருகெனத் தழைத்து ஆல்போல் வேரூன்றி  அரியாசனம் கொண்டிருக்கிறாள்.

உலக இலக்கியங்கள் எல்லாவற்றுக்கும் மூத்த,முதல் நின்ற அவளது இலக்கியச் சீர்மையையும் இணையற்ற பண்பாட்டுச் செழுமையையும் கடந்த 40-45 ஆண்டுகளாக இம்மண்ணில் சிறுத்துப்போகச் செய்த திராவிடப் பதர்களாலேயே அழிக்க முடியாத அவளுடைய   ஆளுமையை இன்றுள்ள கவிஞர்களும் அறிஞர்களும் தமிழ் மரபு போற்றும் தகைசான்ற  சீலர்களும் புரிந்து கொண்டு தமிழ்ப் பண்பாட்டைக் காப்பதற்குச் சிந்தை கொண்டிருத்தலே நாம் நம் தமிழ் அன்னைக்குச் செய்யும் மாபெரும் தொண்டாகும்.

முதலில் இம்முகநூலில் எது தமிழ்ப் பண்பாடு? என்பதை இங்கே எழுதுகின்ற ஒவ்வொருவரும் எண்ணிப் புரிந்து கொள்ளும் வகையில் எழுத முற்படுதுவது அவசியம்.

ஒழுக்கத்துக்கும் உயர் நெறிகளுக்கும் ஊறு செய்யும் வகையில் பதிவுகள் செய்வோரையும் படங்களைப் பதிப்போரையும் கண்டிக்காமல், எதிர்க்காமல்,எதிர்க் குரல் கொடுக்காமல், இங்குள்ள தமிழ் ஆர்வலர்கள்   ‘சங்கம்  அமைக்கிறோம்;சபை கூட்டுகிறோம்’ என்றெல்லாம் தத்தமது பக்கங்களில் எழுதுவதெல்லாம் வீண்;வெற்று வேலை.

நமது பண்பாட்டைச் சீர்குலைக்கும் சிந்தனைப் பரவல் இம்முகநூலில்
ஒரு நோய் போல் தொடர்கிறது.முதலில் இது குறித்த கவலைகளும் அதைப் போக்குகின்ற அக்கறையும் துணிவும் இல்லாமல் ’தமிழ்’ தமிழ்’   என்று பேசுவதாலும் குழுக்கள் அமைத்துக் கூடிக் கலந்துரையாடுவதாலும் என்ன மாதிரியான பயன் விளைந்து விடும்’ என்று நம்புகிறீர்கள்?

சினிமா, போலி அரசியல் சிந்தாந்த வாதங்கள், கவர்ச்சி உரையாடல்கள், வெட்கமற்ற விரசப் பதிவுகள், மஞ்சள்தனமான விமர்சனங்கள்,’இவள் அவனுடன் கூத்தடிக்கின்றாள்; இவன் அவளுடன் ஆட்டம் போடுகின்றான்; நான் இப்படித்தான்” என்றெல்லாம் நரம்பில்லாமல் பேசும் நாக்கையும் வரம்பில்லாமல் எழுதும் எழுத்தையும் வெத்துப் பிழைப்பாகக் கொண்டுள்ள வீணர்களின் பின்னே மந்தைகள்போல் திரியும் கூட்டத்தைக் கண்டிக்கவும் திருத்தவும் வழி உண்டா?

அதையெல்லாம் சிந்திக்காமல் சாலையோரக் கடை திறப்பதுபோல்
ஆளாளுக்கு குழுக்களை அமைப்பதும் நான் இத்தனை குழுக்களில் இணைந்துள்ளேன் என்று பெருமை பேசுவதும் ஒவ்வொருவரும் தாங்கள் உளறுவதையெல்லாம் நாட்டின் புரட்சிகர மாறுதலுக்கான எழுத்துப் புரட்சி’என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதையும் தவிர இம் முகநூலில் எம் மாதிரியான முன்னேற்றம் கண்டு வருகிறோம்?

கண்டவர்கள் விளக்குவார்களாக!

நீங்கள் இன்றைய தலைமுறையின் பிரதிநிதிகள் என்பது மட்டுமல்ல; நாளைய சந்ததியின்  வித்துக்கள் என்பதையும் மறந்து விடாதீர்கள்.

வித்து ஒன்றை நட்டுவித்தால் விதை வேறாக முளைக்காது நண்பர்களே.

அந்த வித்து சத்தான வித்தாக,சாரம் குன்றாதிருக்க உங்களை முதலில் நன்கு தீட்டிக் கொள்ளுங்கள்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
19.7.2014

No comments: