Saturday, April 11, 2015

’ஓல்டு’ மாணவன்;ஆனாலும் ‘கோல்டு’!

பழைய பள்ளிக் கூட நினைவுகளிலிருந்து.....
--------------------------------------------------
1969-70 ஆம் ஆண்டு பள்ளி இறுதி படித்தவன் நான்.

1964களில்,ஆறாம் வகுப்பில் சேர்ந்தபோது இது போர்டு ஹைஸ்கூலாகவும் சில ஆண்டுகளில் 1970க்குப் (வருடம் சரியா?) பிறகு அரசினர் உயர்நிலைப் பள்ளி என்றும் ஆனது.

ஆறாம் வகுப்பில் சேர்ந்த போது இருந்த தலைமை ஆசிரியர் கொளிஞ்சிவாடி வெங்கட்ராம அய்யர். பள்ளியை விட்டு வெளியேறியபோது இருந்த தலைமை ஆசிரியர் திரு நாராயணன்.

அப்போதெல்லாம் எனதியற் பெயர் கி.பாலதண்டபாணி. அதாவது கிருஷ்ணசாமிக் கவுண்டர் பாலதண்டபாணி.

அதன் பிறகு 1972களில்,கல்கி,கோகுலம். இதழ்களிலும் சுதேசமித்திரன்,மக்கள் குரல்-அலிபாபா இதழ்களிலும் , சக்தி சுகர்ஸ் செய்திமடலிலும் பணியாற்றிய காலம் 1983 வரை நிலைத்திருந்த எனது இயற்பெயர்,1984க்குப் பிறகு கிருஷ்ணசாமி பாலதண்டபாணி என்பதன் சுருக்கமாகவும் தந்தையின் பெயரே முதலிடம் பெறும் காரணமாகவும் மாறி,’கிருஷ்ணன்பாலாவாகிப் போனேன்.
அன்றைய பள்ளித் தோழர்களையும் தோழியர்களையும் நினைத்துப் பார்க்கின்றேன்.

விரல் விட்டு எண்ணக்கூடியவர்களை மட்டுமே இன்றுவரை சந்திக்க முடிந்திருக்கிறது.

பெரும்பாலோர் எங்கெங்கு இருக்கின்றீர்களோ?
உங்களில் யாரையும் நான் மறக்கவில்லை.

குறிப்பாக, பள்ளிக் கட்டடத்துக்கு வெளியே, தின் பண்டங்கள் விற்று கடன்தந்து, ரொம்பவும் விட்டுக் கொடுத்துக் கெடுபிடியில்லாமல் கடனைப் பொறுமையாக வசூலித்த ஜப்பானையும் ஜப்பாத்தியையும் மறக்கவே இல்லை!

ஜப்பான் ,ஜப்பாத்தியிடம் ஐவ்வு மிட்டாய் மற்றும் எலந்தை வடைகளை வாங்கி அதை நண்பர்களுக்கு இலவசமாகக் கொடுத்து இன்புற்றதும் கடனை அடைக்க முடியாமல் பள்ளியின் வடபுறக் கேட்டின் வழியாக நுழைந்து வருவதுமாய்க் கழிந்த காலங்களை வெட்கத்தோடு எண்ணிப் பார்க்கின்றேன்.

கடன் அதிகபட்சமாக ஐந்து ரூபாய் ஆறு ரூபாய் என்று ஆகிப் போய் கடனுக்குப் பயந்து கொணடு பள்ளிக்கே செல்லாமல்கட்அடித்த நாட்களையும் மறக்கமல் எண்ணிப் பார்க்கின்றேன்.

நேர்மை,ஒழுக்கம்,பணிவு இவற்றை எனக்கு நானே கற்பித்துக் கொண்டும் கனவு கண்டும் வளர்ந்த அந்தப் பாலதண்டபாணிக்கு உற்சாகமூட்டவும் வழிகாட்டவும் துணை என்றும் அப்போது யாரும் இல்லை.

ஆனாலும் எனக்கு நானே தவறுகளைச் செய்வதும் அதை நானே உணர்ந்து செப்பனிட்டுக் கொள்வதுமான அந்த நாட்கள் இன்று எனக்குள் கர்வத்தையும் கம்பீரத்தையும் ஏற்படுத்துகின்றன.

பழைய தாராபுரம் போர்டு ஹை ஸ்கூலின் நான் ஓல்டு மாணவன் என்றாலும் அதன் கோல்டு மாணவன் ஆக இருக்கிறேன் என்பதில் எனது முன்னாள் ஆசிரியர்களுக்குப் பெருமை சேர்க்கின்றேன்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
10.4.2015


No comments: