Tuesday, September 7, 2010

படித்தோரும் பிடித்தோரும்-3

அறிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.
எனக்குத் தனிப் பட்ட முறையில் நண்பர்களின் எண்ணிக்கை அதிகம். அவர்களில் மின்னஞ்சல் முகவரி கொண்டோர் மிகவும் சொற்பம்.மின்னஞ்சல் முகவரி கொண்டிருந்தும் பரஸ்பரம் (ஒருவருக்கொருவர்)என்னோடு அடிக்கடி கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வோர் அதிலும் குறைவு.


என்னுடைய நீண்ட கால நண்பர்களுக்கும் நெருங்கிப் பழகுபவர்களுக்கும் கூட,நான் பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றியவன் என்பதும் மக்கள் தொடர்புப் பணியில நிறைவான செயல்பாடுகளில் தெளிவாக இருந்தவன் என்பதும்;எழுதுவதில் தனிக் கொள்கை கொண்டிருப்பவன் என்பதும் தெரியுமே தவிர, நான் எவ்வாறு,எத்தகைய கருத்துக்களை,எந்தஉணர்விலிருந்து எப்படி எழுதுகிறேன் என்பதெல்லாம் தெரியாது.


கடந்த ஆறு ஆண்டுக் காலம் என் சிந்தனைக் கடலோரங்களில் சுனாமிப் பேரலைகள்....என் உறுதி மிக்க உணர்வுக் கூடங்கள் பலவும் சீரழிந்து போயின; சீர்படுத்திட எவராலும் இயலாது என்ற அளவில் பாதிப்புக்கள்...


எடுத்துச் சொல்லவும்,இடித்துச்சொல்லவும் அதை எழுத்தில் கொள்ளவும் முடியாத அளவுக்குநம்பிக்கைத் துரோகம்,மோசடி,பித்தலாட்டமான நாடகங்கள்.... வெளி உலகில் அல்ல;எனது உள்ளரங்கத்தில்....


யாரும் எனக்கு ஆறுதல் சொல்லும் வல்லமை கொண்டிருக்கவில்லை;நானும்
ஆறுதல் கொள்ளும் நிலையில் இல்லை.


இந்த நிலையில் இந்த முக நூல் (face Book)எனக்கு உற்ற தோழமையைத் தந்தது. கடல் போல் ஆழம் நிறைந்த இதில் தலை கீழாகக் குதித்தேன்,நண்பர்கள் எனும் முத்துக்களை எடுக்க.


இதோ:


எனது எழுத்துக்களின் தரத்தை மட்டும் அல்லாது,இதயத்தின் ஆழத்தையும் பண்பின் செழுமையையும் கோடிட்டுக் காட்டும் அவரது நட்பின் எழுத்துக்கள்.


‘என்னைப் பற்றி..’என்று இந்த வலைத் தளத்தில் ‘முகமன்’ஒன்று எழுதியிருந்ததைப் படித்து விட்டு என் முக நூல் பக்கத்தில் ஒரு கவிதை மூலம் ஆறுதல் கூறியிருந்தார். அதன் வரிகளில் இருந்த தாக்கம் எனது வாழ்க்கைப் பின்னணியைச் சொல்ல உடனே'எனது வாழ்க்கைப் பாதை’என்ற கவிதை மடலை எழுதிப் பதித்தேன்.


முன் அறிமுகம் இல்லை;உண்மை உணர்வின் ஒரே படைப்பில் எங்கோ தொலை தூரத்தில்,கடல் கடந்து நோர்வே நாட்டில் வாழும் இவர்,'எனது வாழ்க்கைப் பாதை’யின் தாக்கத்தை உணர்ந்து அவர் எனக்கு எழுதியது என் உணர்வுகளுக்குப் பெருமை சேர்த்தது.


இவரது பார்வை பண்பாட்டின் செழுமை எனச் சிந்திக்கின்றேன்.


வாசக நண்பர்கள் இதைச் சிந்திப்பதற்காக அதை இங்கே அப்படியே பதிக்கின்றேன்:


‘உதயன் சத்தியானந்தன்!
(Uthayan Sathiyananthan as in "Face Book")
எங்கிருந்து வந்தார்,இவர்?
எனது வாழ்க்கை பற்றி
“என்னைப் பற்றி....” என்ற குறிப்பில்
சிலவரிகளில்,சிறுகுறிப்பாகத்தான் எழுதியிருந்தேன்.
(காண்க:முக நூல்:Krishnan Balaa on Sunday, 05 September 2010 at 16:29)


ஆயிரக்கணக்கானோர் கண்களில்
அகப் படும் அந்தக் குறிபபு-
இவரின் ‘அகக்’ குறிப்பாய்...
இவர் கருத்தில் பட்டு விட்டது.


என் வாழ்க்கை நிலையை,
‘குறிப்பால் உணர்ந்து’ துணை நின்றார்ப் போன்று,
எனது-உள் மனக் காயங்களுகக்கு மருந்திடும்
உத்தம நண்பராய்க் கருத்தைக்
கவிதை எழுத்தில் எழுதி இருந்தார்.


அவர் எழுதினார் இப்படி:
Uthayan Sathiyananthan தோழர்களே!
பெற்றோர் உறவு பிரிந்து போனாலும்
உற்றார் உறவினர் உனைவிட் டகன்றாலும்
கற்றாயே நற்றமிழ் காவலாய் நின்று
காக்கும் தோழா என்றென் றும்மே!


...நன்றியுடன்
ச.உதயன்
(காண்க :Faccebook,நாள்;5.9.2010,ஞாயிற்று கிழமை)


இதுவரை-
எனது எழுதுலக நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும்
தெரிந்திராத உண்மைகளைச் சுருங்க விரித்துக் கூறும்
வாய்ப்போ,மன நிலையோ எனக்கு இல்லாதிருந்தது.


நண்பர் உதயன் சத்தியானந்தன் அதை இன்று,
இப்போது உணர்வெனும் ’கட்டளை’யால்
எழுதிடப் பணித்து விட்டார்.


இதோ-
எனது வாக்கு மூலம்:


எனது வாழ்க்கைப் பாதை!


பெற்றோர் பிரிவு இயற்கையானது;
பிழையில்லாத பாசம்கொண்டது;
உற்ற உறவாம் உடன்பிறந்தோரும்
ஊரார் மற்றும் உறவினர் யாரும்-


உலக வழக்கில் உள்ளதுபோன்றே
உணர்வொடு கலந்த உறவில் உள்ளனர்;
நலங்கெட வாழ்ந்தாள் ’நாறி’ என் மனையாள்;
நல்லறம் அற்றது:இல்லறம் கெட்டது!


வறுமையிற் செம்மை;வாழ்ந்து காட்டினேன்;
வந்தவர் மனதில் அன்பை நாட்டினேன்;
அறிவோடிருக்க அகத்திருந்தோர்க்கு
அடிக்கடி, பாடம் கடிந்து நடத்தினேன்!


பெற்ற பிள்ளைகள் மூவர்;அவரைப்
பெரிதாய் வளர்த்திடக் குறியாய் இருந்தேன்;
கற்றனர்,தாயின்வழியில் நின்றனர்;
கயமையை நெஞ்சம் ஏற்க மறுத்தது!


‘அருள் வழி நின்று பொருள் வழி தேடல்’;
அதுதான் எனது உடல் பொருள் ஆவி;
‘பொருள்’வழி நின்று அருள் வழி மறந்து
புண்படச் செய்தனள்;‘பெண்’டெனும் பாவி!


மனத்தால் வெறுத்தேன்;பணத்தால் பிரிந்தனர்;
‘மானம் ஒன்றே மலை’யென நிமிர
இனத்தால் இருக்கும் ‘வெறியையும்’ வென்று
எண்ணம் செழித்தே தனித்து வாழ்கிறேன்!


இதுதான் எனது வாழ்க்கையின் காதை;
இதை இன்றெழுதிட, வகுத்தனை பாதை;
உதயன்,உனக்கென் உளமார்,நன்றி!
உணர்வுகள் கொதித்து அடங்கின,இன்று!


-கிருஷ்ணன் பாலா
05-09-2010,ஞாயிறு,பகல்:12:30


குறிப்பு:
என்னுடைய இந்தக் கவிதைக்கு நண்பர் உதயன் சத்தியானந்தன்,இந்த
எழுதிய கடித வரிகள்,தமிழ்ப் பண்பின் சிகரத்தை நோக்கி நடக்கச் செய்பவை.


அந்த வரிகள்:


Uthayan Sathiyananthan
அகத்தின் அழகு முகத்தில் தெரியும். ஐயா உங்கள் முகத்தில் ஏக்கம் தெரிந்தது உங்கள் கவிதையில் எல்லோருக்குமான விடியல் வெளிப்பட்டது. எல்லாத் துறைக்கும் பணம் கிடைக்கும் தமிழ்துறைக்கும் தமிழிசைத் துறைக்கும் பயன் தான் கிடைக்கும் அதுவும் நம் பிறங்கடைக...ளுக்குத். பாரதியை வெறுத்தவர் பலர் விரும்பியவர் சிலர். இன்று பலர் 'பாரதி' யென்று தங்களுக்கு பெயர் சூட்டவிரும்புகின்றனர். இது தான் உலகம். இலக்கை கைவிடாததால் உறவுகள் கைவிட்டனர். பேதைமனம் பலருக்குண்டு. மேதைமனம் எத்தனைபேருக்குண்டு. என்வேண்டுகோள் ஐயா திருந்திவந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். பிள்ளைமனம் தெய்வ மனம் கடந்ததை மறந்துவிடும். கைவிட்டவர்களே உங்கள் காலடிக்கு வருவார்கள். தமிழ் அதைச்செய்துவைக்கும்.
நன்றியுடன்.
ச.உதயன்.


இதற்கு எனது பதில்:


உதயனே எந்தன் இதயனே
உளம் நிறை நட்பின் புதையலே!
சிதைவில்லாமல்தமிழ்ப் பண்பை
செலுத்துகின்றாய்,நீ என் நண்பன்!


...வாராக் கடனாய் எழுதப்பட்டிருக்கின்றது
வரும் என்று நம்புதல் நம் கடன் அன்று...


எனினும்-


’‘இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு?’’


‘சங்கு சுட்டாலும் வெண்மை தரும்...;
அல்லவா?

5 comments:

Tamilnorsk said...

பார்த்தேன் படித்தேன். என்றென்றும் அன்புடன் நண்பன். ச.உதயன்.

munril said...

பார்த்தேன் படித்தேன். என்றென்றும் அன்புடன் நண்பன். ச.உதயன்.

munril said...

ஐயாவின் உரை
ஆயிரம் சொத்துக்கு ஈடாய்,
பொய்யில்லா வுரை...!
செய்யும் செயலுக்குச் செலவாய்
நீயிர் செப்பியவை யெனக்கு முதலாய்
உயர்ச்சி தரும் ஆசியுரை!
நன்றி ஐயா
நன்றியுடன்
_ச.உதயன்.

munril said...

உங்கள் வரிகளை கொஞ்சம் கொஞ்சமாக படித்து உள்வாங்கி அதற்கு கருத்துரை வழங்கினால்தான் எனக்கு நிறைவாய் இருக்கும். அமைதியாக இருந்து படிக்க வேண்டிய அற்புத வரிகள். தொடருங்கள் உங்கள் உரை நடையை. படித்து உங்களைப் பின் தொடர்கிறேன் ஐயா ஒரு பையா.

இராஜ. தியாகராஜன் said...

மன்னிக்கவும் கவிஞர் கிருஷ்ணன் பாலா. பணிநெருக்கம் சிறிது அதிகம். ஆதலால் உடன் வந்து காண இயலவில்லை. மிகவும் அருமையான பதிவு.