Monday, September 27, 2010

எழுதுகிறேன்….. (புதிய தொடர்-1)

அறிவார்ந்த நண்பர்களே,


வணக்கம்.
’முகநூல்’FACCE BOOK- எனக்கு நல்ல நண்பர்களை ஏராளமாகத் தந்து வருகிறது.


பத்திரிகைத் துறையில் எனக்கு நிறைய நண்பர்கள்.அவர்களில் எத்தனையோ பேர்,என்னைத் தங்கள் பத்திரிகையில் எழுத வற்புறுத்திய போதும் நான்,வனவாசம் கொண்டிருப்பதில் விருப்புள்ளவனாகவே தொடர்ந்தேன்.


மவுனம் கொண்டு பல ஆண்டுகள் இருந்த விரதம் இப்போது முடிந்து விட்டது போலும். ஏனெனில், நான் தொடர்ந்து மவுனத்தைக் கடைப்பிடிக்க விரும்பினாலும்,பேச வைக்கும் பல்வேறு நிர்ப்பந்தங்களுக்குப் பணிந்து போகும் மனோ நிலை கடந்த காலங்களில் இல்லாதிருந்தது; இப்போது அது,கழன்று விட்டது.


நீண்ட நாட்களாகப் பத்திரிகைகளில் எழுதுகின்ற வாய்ப்பைத் தவிர்த்துக் கொண்டு வந்த நான்,நண்பர்களின் நட்பு வேண்டலும்; நிறைய எழுத வேண்டும் என்ற ‘சமூகம் சார்ந்த அக்கறை’யின் தூண்டலும் சிலர் ’எழுத்து என்று சொல்லிக் கொண்டு’ எழுதுகின்ற பாங்கின் சீண்டலுமாகச் சேர,இப்போது நிறைய எழுத வேண்டும் என்பதைத் தீர்மானம்போட்டுக் கொண்டு, அதை’நிறைவேற்றுவது’என்று முடிவெடுத்து விட்டேன்.


நண்பர்கள் பலர் எப்போதோ இதை வழிமொழிந்தும் விட்டார்கள்.


தமிழன்னை,பாவம். நல்ல எழுத்துக்கள் பற்றாமல்,தாகத்தால் தவித்துக் கொண்டிருகின்றாள். என் கடன், அவள் பொருட்டு எழுதிப் பணி செய்து கிடப்பதே!


நண்பர்களே,
முகநூலில் நான் என்னை இணைத்துக் கொண்டு கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கடந்து விட்டன.ஆரம்பத்தில், இந்த முக நூலின் பயன்பாடு பற்றி எனக்குக் கொஞ்சம் தயக்கம் இருந்தது;உண்மை. காரணம், நவீன காலத்து இளைஞர், இளைஞிகளின் எழுத்துக்களும் அவர்களின் கருத்துப் பரிவர்த்தனையும் சற்றே என்னைத் திகைக்க வைத்தன.


“இது என்ன தமிழ்? என்ன மாதிரியான தகவல் தொடர்பு?” என்று மனம் கவலையுற்றது.அதே சமயம்,சிறந்த படைப்பாளிகளின் கருத்துப் படையல்களும் எண்ணப் பரிமாற்றங்களும் எழுத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளாமலேயே நண்பர்களாகி அளவளாவிக் கொள்வதையும் புரிந்துகொண்ட பிறகே, ’ஓ….நல்லதைச் சொல்லவும் பரப்பவும் நாம் இதை ஓர் காரணியாகப் பயன் படுத்திட முடியும்;பயன் படுத்துவது’ என்ற முடிவுக்கு வந்தேன்.


அதன் பிறகே முக நூலில் (FacceBook) இணைந்ததுடன், இந்த ‘உலகத் தமிழர் மையம்’ என்ற வலைத் தளத்தைக் கணினித் தமிழ் வாசகர்களுக்காகவும் உலகெங்கும் வாழும் தமிழ் ஆர்வலர்களுக்காகவும் தொடங்கினேன். (காண்க:”இது உலகத் தமிழர்களின் உறவுப் பாலம்’ பதிவு நாள்;வியாழன்,8,ஜூலைத் திங்கள்,2010)


தொடங்கி, சில வாரங்களில் இவ் வலைத் தளத்தை வண்ண மயமாகவும் எண்ணமயமாகவும் மாற்றி அமைத்தேன்.


கடந்த 7,8 வாரங்களில் இதன் பார்வையாளர்களின் எண்ணிக்கை 1,280-ஐத் தாண்டியிருப்பதுடன்,நாளொன்றுக்கு சராசரி 25 பார்வையாளர்கள் வீதம் விருந்தினர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டேயிருக்கும் மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிந்து கொள்வதிலும் பெருமைப் படுகின்றேன்.
இந்தியாவுக்கு வெளியே, இதே எண்ணிக்கையில் வாசகர்கள் இருப்பதும் குறிப்பிடத் தக்கது.


யு.எஸ்.,கனடா,அர்ஜண்டினா,நெதர்லாந்து,நார்வே,பிரிட்டன்,ஃப்ரான்ஸ்,சவூதி அரேபியா,ஓமன்,அரபு எமிரேட்ஸ்,குவைத்,ஸ்ரீ லங்கா,மலேஷியா,சிங்கப்பூர் முதலான நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தொடர்ந்து இந்த வலைத் தள விருந்தினர்களாக இருந்து வருவதைப் பார்க்கப் பெருமையாக இருக்கிறது. இவர்களில் பெரும் பாலோர் முக நூல் நண்பர்களாகவும் இருக்கின்றார்கள்.


இந்த‘முகநூல்’ என்னும் அற்புதமான அறிவியல் காரணியை, நாம் நல்ல விஷயங்களுக்காகப் பயன் படுத்த வேண்டும்’ என்பதில் நான் உறுதியான கொள்கையுடையவன்.


இதை வலியுறுத்தி ‘இணைய தளம்: ஓர் எச்சரிக்கை’ என்று ஓர் கவிதை மடலை ‘முகநூல்’ வழியாக எழுதியிருந்ததுடன், இந்த வலைத் தளத்திலும்,படிக்கின்ற அனைவருக்குமாகப் பதிப்பித்து இருக்கிறேன்.


ஒரு கவிதை வடிவில்–குறிப்பாக,மரபுக் கவிதை வடிவில் அமைந்த மடல் இது. எளிய வார்த்தைகளால் அமைக்கப்பட்ட இதன் கருத்தையும், சந்தங்களையும் பலரும் விரும்பி வரவேற்றதுடன் நிறையப் புதிய நண்பர்களும் அறிமுகம் ஆகி வருகின்றனர்.


தமிழுக்கும் தமிழர் பண்பாட்டுக்கும் உரிய வகையில் நாம், நமது கருத்துக்களை எழுதுவதும் பரப்புவதும்,வாதிப்பதுமே ஏற்ற மரபாகவும்,இலக்கண வரம்பாகவும் உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களோடு நட்புறவு கொள்கின்ற நாகரீகமாகவும் இருக்க முடியும்.இதற்கு மாறானவை எல்லாம் தமிழ் உணர்வோடு சிறிது சிறிதாய் நஞ்சு கலக்கின்ற வஞ்சகக் குணம் கொண்டவையே ஆகும்.


’கற்றாரும் கற்பிப்பாரும்;கற்றுக் கொள்ள ஆர்வம் உடையாரும் இதைக் கருத்தில் கொண்டு எழுதுவதும் படிப்பதுமாக இருக்க உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்’அதுதான் நாம் ‘நற்றமிழர்’ என்பதற்கும் ‘நல்லொழுக்கச் சிந்தனையாளர்’ என்பதற்குமான சான்று.


சில நாட்களுக்கு முன்பு, நல்ல படைப்பு திறன் உள்ள ஒரு முக நூல்,நண்பர்,தனது முகநூல் பக்கத்தில்,ஒரு பாவையின் அரை நிர்வாணப் படத்தைப் பதிவு செய்து, அதைப் பற்றி ’கவிதையில் சொல்லுங்கள்’ என்று பலருக்கும் அனுப்பியிருந்தார்.


எனக்கு இது பெரிய வருத்ததையும் சற்றே சினத்தையும் உருவாக்கிற்று.
எத்தனையோ பேர்,எத்தனையோ அருவருப்பான விஷயங்களை எல்லாம் தங்கள் அறிவு(?)ப் பசியைத் தீர்த்துக் கொள்வதற்காக,எதை எதையோ எழுதி, கவிதை என்றும்,புதுமைக் கருத்து என்றும் பெருமை கொண்டாடி வருகிறார்கள்.


அவர்களோடு வாதாடவும்,தீதாடவும் எனக்கு விருப்பம் இல்லை;ஆனால்,இந்த நண்பர், நல்ல விஷயங்களை புதுமைத் தரத்தோடு எழுதக் கூடியவர்,திடீரென்று இப்படியொரு படத்தைப் பதிப்பித்து எனது முகநூல் பக்கத்துக்கும் அனுப்பி இருக்கிறாரே’என,என்னுள்ளே ஒரு கேள்வித் தாக்கம்.உடனே,அது பற்றிய விமர்சனத்தை அவருடைய‘முகநூல்’குறிப்புக்கு அனுப்பினேன்.


மேற்குறித்த ஆபாசமான அரை நிர்வாணப் படப் பதிவைக் கண்டித்து,
நான் எழுதிய கவிமடலை இங்கே இந்த ‘உலகத் தமிழர் மையத்தின் ’வாசகப் பெருமக்களுக்கும் அப்படியே பதிக்கின்றேன்,படியுங்கள்;


அந்த நண்பர்,அப்படியொரு அரை நிர்வாணப் பாவையின் படத்தைப் பதிவு செய்து அதன் கீழ் ஒரு கவிதை போன்ற வாசகத்தை எழுதிப் பார்ப்பவர்களை எழுதும்படித் தூண்டுகிறார் இப்படி:


ஓவிய மங்கைகளை
கவிதை மழையால்
நனையச் செய்யுங்கள்;
ஓவியம் நனையாமல்..…


நான் கேட்டது இப்படி:


தேவையா,இப் பா(ர்)வை?


கவிதைவரக் காரணங்கள்;இன்னதென்று
காட்டுவது சாத்தியமே இல்லை;ஆங்கு
கவிபடைக்கும் பேர்கள்எலாம் கவிஞர் என்று
கதைத்து விட்டால் பாரதியும் கவிஞனில்லை!


படுக்கைதனில் ஓர் பாவை உடுக்கை செய
பாவம்,அவள் உடுப்புக்களைப் போடுவதை
வெடுக்கெனவே வரைந்து அதைப் பதிவு செய்து
விளக்கங்கள் எழுதும்படிச் சொல்லுகின்ற-


பண்புதனை யார்,உமக்குக் கற்றுரைத்தார்?
பச்சை,மஞ்சள் நிறமெடுத்து எழுதி;இதைப்
புண்படுத்தும் பக்கமென ஆக்க வேண்டாம்;
புறையோடும் முகநூலாய் மாற்றவேண்டாம்!


’அன்பு (பெயர் குறிப்பிடல் தவிர்ப்பு);அறிஞன்‘என்று
அறிந்திருந்தோர் வெட்கும்படி மாறிடாதீர்
இன்னமுதச் சுவைபலவும் இருக்க; இங்கு
இல்லாத கசப்பெடுத்து எழுதலாமோ?


நட்புடன்,
கிருஷ்ணன் பாலா / 26.9.2010


நண்பர்களே,
இதில் வியப்பு என்னவென்றால், அந்தப் படத்தைப் பார்த்து மயங்கியும் புளகாங்கிதம் உற்றும் பாராட்டி எழுதினவர்களே அதிகம்; அதைக் கண்டித்து எழுதுவோர் ஒருவர்கூட இதுவரை இல்லை. (இனிமேல் எழுதுவார்களோ, அல்லது இதில் நமக்கு ஏன் வம்பு? என ஒதுங்கியிருப்பார்களோ அறியேன்)


ஆனால், எனது கெழுதகை நண்பரும்,முகநூல் ஆர்வலர்கள் பலருக்கும் தமிழ் இலக்கண ஆசானுமான தோழர் இராஜ.தியாகராஜன் மற்றும் சகோதரி நிர்மலா பொற்கொடி,நார்வே நாட்டுத் தமிழர் திரு.உதயன் ஆகியோர் எனது விமர்சனக் கவி மடலைப் பார்த்து ஆதரிப்பதாகத் தங்கள் கருத்தைப் பதிவு செய்துள்ளனர் என்பதை இங்கே சொல்லியாக வேண்டும்..


இதை ஏன் எழுதுகிறேன் என்றால், நல்லதைச் சொல்ல நாலு பேர் இருந்தால்.அதை நாலாயிரம் பேர் ஆதரித்தால்தானே,பொது வாழ்வில் நல்ல பண்புகளை நிலை நிறுத்த முயல்வோரின் முயற்சிக்குப் பக்க பலம் சேரும்?.


இம்மாதிரியான,தவறான,ஆபாசமான கருத்துக்களைப் பரப்புவதை வேடிக்கை மட்டும் பார்க்கின்ற நண்பர்களும் மறைமுகமாக அதை ஊக்குவிப்பர்களாகவே ஆகிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


இந்த ‘முகநூலில்’ இந்த மாதிரியான கருத்துக்களைப் பரப்புவதன் மூலம்,தவறு செய்யாத,செய்யத்தெரியாத பல புதியவர்களுக்கும் இது ஓர் தூண்டதலாகி விடாதா?


இது போன்ற சிறுமைத் தனமான சிந்தனையையும்,பொது வாழ்வில் அநாகரீகத்தையும் பரப்பக் கூடியவற்றை எழுதுவோர்,தங்கள் தாய்,தந்தை, உடன் பிறந்த தமக்கை,தங்கை ஆகியோர்மட்டுமின்றி,படிப்பவர்களின்,அதை ஆதரித்து எழுதுவோரின் தாய்,தந்தை,உடன் பிறந்த தமக்கை,தங்கையரும் அவர்தம் மனைவிமார்களும் இத்தகைய நாகரீகமற்ற படங்களையும் செய்திகளையும் படிக்கிறார்கள் என்பதைக் கருதிற் கொள்ள வேண்டும்.


’சிறுமை கண்டு பொங்குவாய் வா,வா,வா…’
பாரதி எழுச்சியூட்டிப் பாடினானே?


பாரதி அன்பர்காள்,எத்தனை பேர் இதைக் கடைப் பிடிக்கிறீர்கள்? கேட்கிறேன்;சொல்லுங்கள்?


(ஏற்கனவே: இணைய தளம்: ஓர் எச்சரிக்கை’ என்று ஒரு கவி மடலைப் பதிப்பித்து இருப்பதால் இது எண்: ’2’ என்று குறிப்பிடப் படுகிறது. எண்:1-ஐப் படிக்காதவர்கள் இதே வலைத் தளத்தில் சென்று அதையும் படித்துக் கொள்ளலாம்)


இணைய தளம்: ஓர் எச்சரிக்கை-2

பொல்லாத காட்சிகளைப் பொறுக்கித் தந்து;

போய் அதிலே கருத்துரையும் எழுதச் சொல்லி,
இல்லாத கற்பனையைத் தூண்டுகின்றார்;சிலர்
இரையாகி,மெனக் கெட்டும் எழுது கின்றார்!


முக நூலைக் கருத்தோடு பயன் படுத்தி
முறையோடு மொழியறிவை வளர்ப்பதற்கும்;
தகவோடு பண்பாட்டைச் சொல்வதற்கும்
தயங்காமல்எழுதுங்கள்;அதுதான் மேன்மை!


அதை விட்டு அசிங்கத்தை எழுதுவதும்
அதில் தங்கள் திறமைகளைக் காட்டுவதும்
கதைவிட்டுக் களங்கத்தைப் பரப்புவதும்
’கறை’யாக்கும் உம் வாழ்வின் எதிர்காலத்தை!


இணையதளம் என்கின்ற கருவிதனை
எல்லோரும் பார்க்கின்றார்;அண்ணன்,தங்கை;
துணையோடு எழுதுவதாய் எண்ணங் கொண்டு
தூண்டுங்கள்,பிறர் படிக்கும் எழுத்துக்களை!


எழுதுகின்ற சுதந்திரத்தைக் கேடு செய்து
எழுதாதீர்;நண்பர்களே,திரும்பிப்பாரும்!
பழுதான சந்ததிதாம் உங்கள் பின்னே
பயிராக நின்றிடுவார்; எச்சரிக்கை!


நட்புடன்,
கிருஷ்ணன் பாலா
கவிதை எழுதிய நாள்:26.09.2010 / 4:41 மாலை
.......................................................................................................(எழுதுவேன்)
Post a Comment