Friday, September 3, 2010

வரந் தாராய், பரந்தாமா!

இந்த உலகம்; அதில் ஏற்பட்ட வாழ்க்கை, அதன் அனுபவத்தால் அடைந்த வடுக்கள்….
அவற்றுக்கு விடிவாக, பரம் பொருள் கண்ணனிடம் அடைக்கலம் கோரும் மனதின் வேட்கை:

வரந்தாராய், பரந்தாமா!
--------------------------------------------------
கண்ணை மூடிக் கொண்டபோதும்,
காட்சி தெரிகின்றது; இந்த
மண்ணை மறந்து தூங்கும்போதும்
மனமது விரி கின்றது!

’கனவில் வாழும் உலகம்’ என்றே
மனது கெடுகின்றது; அந்த
மனதைத் தேடும் எந்தன் கனவு
மண்ணில் விடிகின்றது!

நெஞ்சில் வாளைச் சொருகும் உறவில்
நேசம் மடிகின்றது;அதன்
வஞ்ச நிழலில் வாழ்ந்த வாழ்வின்
வடுக்கள் சுடுகின்றது!

உலகில் முன்னே உள்ளவன் போலே
ஒளித்து நடிக்கின்றேன்; நீ
தொலைவில் நின்று சிரித்தபோது
துடித்து வெடிக்கின்றேன்!

உன்னை முழுதும் என்னுள் அழைத்தேன்
ஓடி வருவாயா;கண்ணா
என்னைத் தேற்றி, புண்ணை ஆற்றும்
இரக்கம் தருவாயா?

என்னை இங்கு எதற்குப் படைத்தாய்?
என்று கேட்கின்றது; மனம்
உன்னைப் பகையாய் எண்ணிக் கொண்டே
உன்னுள் கலக்கின்றது!

இந்தப் பயணம் எதுவரை, என்று
எனக்குச் சொல்வாயா?;மனம்
கந்தல்ஆகிக் கலங்கி நிற்கும்
கணக்கைத் தீர்ப்பாயா?

கனவைப் போலே வாழ்வு படைத்தாய்;
கவிதை படைக்கின்றேன்;அதில்
கனவை நானும் விரித்து வைத்து
கவலைப் படுகின்றேன்!

வந்த விதமே திரும்பிச் செல்லும்
வரத்தைக் கேட்கின்றேன்;அந்த
வரத்தில் எந்தன் பாரம் தீரும்
விதத்தைப் பார்க்கின்றேன்!
*
கிருஷ்ணன் பாலா

No comments: