Saturday, October 2, 2010

பிதா முன்ஓர் பிரகடனம்!

இன்று-(2.10.2010)உத்தமர் காந்தி பிறந்த நாள்.
“வாழ்க நீ எம்மான்;இந்த வையத்து நாட்டிலெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி.விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர் பாரததேசம் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மகாத்ம நீ வாழ்க; வாழ்க!”


-என்று ஏறத்தாழ90 ஆண்டுகளுக்கு முன்
மகாத்மா இவர் என்று அடையாளம் காட்டிவாழ்த்தினான்:
நம் மகாகவி பாரதி.


-அந்த மகாத்மாவை நாமும்
இன்று நினைந்து போற்றுகின்றோம்!


இதோ,


அந்த-


பிதா முன்
ஓர் பிரகடனம்!



அண்ணலே!
போர்ப் பந்தரிலிருந்து
புறப்பட்ட புத்தனே!


வெள்ளை மேகங்களையும்
இருள வைத்து,
சுதந்திர மழை பொழிய வைத்த
காந்தியே,மஹாத்மா!


உனது
காலடிச் சுவடுகளில்
நாங்கள்
நம்பிக்கைகளை மட்டும்
வளர்க்கவில்லை;
நாட்டையும் வளர்க்கின்றோம்!


அதே சமயம்-
எச்சரிக்கைகளையும் ஏந்தி வளர்க்கின்றோம்!


ஏன் தெரியுமா?


அன்று-
உனது போதனைகளால்
மதங்களிலிருந்து
மனிதனை மீட்க வேண்டியிருந்தது;


இன்று-
மனிதர்களிடமிருந்து
மதங்களை
மீட்க வேண்டியிருக்கின்றது!


உலகத்துக்கு
இந்திய தேசத்தை
அடையாளப் படுத்தி-


சக வாழ்வைப் போதித்த
சத்திய மூர்த்தியே!
உத்தமரே!


உன்னை
ரத்தப் புஷ்பங்களால்
அர்ச்சித்த
கோட்சேக்களைக்கூடக்
கும்பித் தயாராக இருக்கின்றோம்;


ஆனால்-
உனது கொள்கைகளைக்
கொல்கின்றவர்களை
மன்னிப்பதாய் இல்லை!


இதோ-


இளைய பாரதத்தின்
எழுந்து நிற்கின்றான்…
ஒளி படைத்த கண்ணும்
உறுதிகொண்ட நெஞ்சுமாய்….


உனது நாட்டுக்கு
உன்னதம் சேர்க்க!


அவன் உனக்குப் பேரன்;
எனினும்-
உன்னை போன்றே
அவனையும் காண
விழைகின்றோம்-
குணங்களில் மட்டுமின்றி
வாழ்கின்ற வயதிலும்!




உலகமே போற்றும்
உனது பிறந்த நாளில்-


நாங்கள்
பிரகடனப்படுத்த விரும்பும்
செய்தி இதுதான்:


‘”எங்கள்
தேசப் பிதாவே!
உனது ராட்டையிலிருந்து
உற்பத்தியான
சாதாரண சுதேசி நூல்
இந்திய தேசியத்தை
இறுகக் கட்டிவைத்தது.


ஆனால்-
அதே ராட்டையைக் கொண்டு
கயிறு திரிக்கின்ற
கயவர்கள்
உற்பத்தியாகி விட்டார்கள்;


நாங்கள்-
உன் ராட்டையிலிருந்து
சாட்டையைத்
திரித்துக் கொள்ளத்
தயாராகி விட்டோம்!”

3 comments:

munril said...

"காட்டில் விலங்குகள் அழிந்து கொண்டு வருகின்றன" என்று நண்பர்(அரசியலாளர்) ஒருவர் கூறினாராம். உடனே மன்பதை காந்தி சொன்னாராம்"ஆமாம்.நாட்டில் விலங்குகள் பெருகிக் கொண்டு வருகின்றன" என்று. காந்தி வழியில் நடந்தால் நன்று தான் ஆனால் சீனன் மூடிவிடுவான்.ஆயினும் காந்தி உலகமே இனி வாழும்.
_ச.உதயன்.

dogra said...

"அன்று-
உனது போதனைகளால்
மதங்களிலிருந்து
மனிதனை மீட்க வேண்டியிருந்தது;

இன்று-
மனிதர்களிடமிருந்து
மதங்களை
மீட்க வேண்டியிருக்கின்றது!"

மிக அருமையான கருத்து

Unknown said...

……………….திடமான சோதிடம்……
தோழர் பாலா அவர்களே தங்களின் திடமான சோதிடம் தொடரின் இரண்டு பதிவுகளையும் படித்தேன் முன் கூறியது போல் எமக்கு அதில் ஒப்பு இல்லை என்றாலும் தாங்கள் அதனையும் கடந்து ஆரிய திராவிட ஞானம் மாயை என்று புகுவதால் தமிழ் தமிழன் என்றிருப்பதாலும் அதிலிருந்து இயல்பாய் எழும் சில கேள்விகளை தங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.இவை போலி பகுத்தறிவுவாதிகளின் குதர்க்கம் என கொள்ளாமல் அறிய விழையும் பாமர திராவிடனின் கேள்விகளாய்க்கொள்ளவும் ஏற்றம் உரைப்பதல்லவோ சான்றோர் கடன்.
முதல் பதிவில் நமது வேத ஞானங்கள் ஒன்றும் வந்தேறிய ஆரியர்களின் அப்பன்வீட்டு சொத்தல்ல வடக்கில் வாழ்ந்த நம் முன்னோர்களின் ஆக்கம் என்பதாயும் மேலும் அவர்களே இவர்களை தம் ஞானம்கொண்டு கொண்டுவந்தாதாயும்,அவர்களின் குணநல மேண்மைக்கண்டு கொடுத்து வளர்த்த்தாயும் குறிப்பிட்டிருந்தீர்கள்,ஏற்க்கிறேன்.வந்தாரை வாழவைக்கும் சிங்கார பாரதம் அல்லவா,அங்கனமெனில் எங்கோ நிலம் ஆடி நகர்ந்து புலம்பெயர்ந்து நல்வாழ்வு தகர்ந்து அக்குலம் எங்கு போவோம் என்றறியா திகைத்து நிற்ப்பதுணர்ந்து தம் ஞானம் கொண்டுணர்ந்து கொண்டுவந்த நம் முன்னோர்களின், வழிதோன்றல்களில் அல்லது தான் தோன்றிய வழியில் உள்ளோர் யாரும் இவர்களைபோல குணநல மேண்மைத் தகுதியுடையோர் இல்லைஎன கொள்ளளாமோ,மேலும் இவர்களை தகுதியுடையோராக்கி வேதம் ஞானம் எல்லாம் தந்ததுடன் இன்று இவர்களுக்குள்ள மேலாதிக்க குணத்தையும் நம் முன்னோர்களா தந்தார்கள் ஆம் இன்றுவரை அத்தகுதியை அவர்களன்றி யாரும் பெற தகுதியற்றவர்களே என ஒதிக்கொண்டிருக்கின்றார்களே,சத்திரியனும் சூத்திரனும் சாத்திரம் என்னாலும் அறியான் என்று எம்ஞானியரே தீர்மானித்து விட்டிருந்தனரா?