Thursday, October 21, 2010

இந்திய மைந்தர்களே!

















எத்தனை ஏற்றம் எத்தனை மாற்றம்;
இந்திய சுதந்திர வரலாற்றில்?
எத்தனை ஏக்கம்;எத்தனை ஊக்கம்;
எங்கள் பாரதத் திருநாட்டில்?

இத்தரையில் ஒரு நூற்றாண் டெய்திய
இந்தியக் காங்கிரஸ் இருக்கின்றதா?
உத்தமர் காந்தியின் உன்னத நெறிகள்
 உண்மையில் இன்னும் இருக்கின்றதா?

இந்திய மக்கள் சிந்திய ரத்தம்
இனும்நம் நினைவில் உரைக்கின்றதா?
வந்தேமாதரம் என்றே போதிலும்
வாழ்க்கையில் அதுநமை இணைக்கின்றதா?

அதன்பின் னால்நமை அடிமைகள் ஆக்கிய
அரசியல்  'விலங்குகள்' இருக்கின்றதே?
மதம்,இனம்,மொழிஎனும் வெறிகளி னாலே
மக்களை அழித்திடத் துடிக்கின்றதே?

ஆயிரம் கட்சிகள் முளைத்தவை இங்கு
அணு அணுவாகப் பிரிக்கின்றதே?
தாயவள்நமக்குப் பாரதம் எனினும்
தனித்தனி உணர்வுகள் தளிர்க்கின்றதே?

குளுமைக் காஷ்மீர் ரோஜா மலரின்
கூரியமுள் நமைக் குத்துவதேன்?
பளுமிகு நக்ஸல் பிரச்சினையில்;நாம்
பலவிதமாகக் கத்துவ தேன்?

தமிழன் எவர்க்கும் தாழ்ந்தவன் இல்லை;
தரணியில் நிமிர்ந்து நின்றானா?
அமைதியும் வளமும் பிறருக்கு நல்கும்
ஆற்றலில் தன்சுகம் கண்டானா?

தென்னகம் உள்ள இலங்கையின் மேன்மை 
தீட்டிய தமிழ் மகன் இப்போது;
தன்அகம் தேடி அலைகின்றான்:
தணிந்திடும் நிலமை எப்போது?

உன்னதம் படைக்கும் திறமையும் அறிவும்
ஓங்கிய பாரத மைந்தர்களே;
இன்றெழும் கேள்விக்கெவ்விதம் பதிலை
ஏற்பது என்பதை உரைப்பீரே!

இவண்-
கிருஷ்ணன் பாலா
15.8.1985ல் எழுதியது

No comments: