Tuesday, December 13, 2011

உணர்ந்து எழுதுக!




முகநூல் மற்றும் வலைத்தளம் என்று
முனைந்து எழுதிடும் நண்பர்க்கெல்லாம்,
அகம்எழும் உணர்வில் தமிழ் நலன்கருதி
அன்புடன் எழுதும் பண்புரைக் கடிதம்:

சமூகத் தளமென இதனைத் தந்தார்;
சமுத்திரம் போலே சங்கமம் ஆகி
சுமூகமாக ஒருவருக் கொருவர்
சொற்களைப்  பகிர்ந்து எழுதிடுகின்றோம்!

எழுதிடும்போது எல்லைகள் வகுத்து;
இனியவை;புதுமை;இலக்கியச் செய்திகள்
பழுதில்லாமல் படைக்கும் கவிதைகள்;
படங்கள் மற்றும் தகவல்கள் எல்லாம்

படைக்கும் திறத்தோர் படைக்கின்றவாறும்
படிப்போர் உணர்ந்து மகிழ்கின்றவாறும்
கிடைக்கும் தளம்என இதனைச் செய்து
கேண்மை கொள்வதே தமிழர் மேன்மை!


அண்ணன்-தங்கை ஆயினும்,கூட
அதீத அன்பைக் காட்டுதல் குறைத்து
பண்புடன் எழுதும் பக்குவம் நிறைத்து
படிப்பவர் மதிக்க,எழுதிடல் வேண்டும்!

ஒருவரை ஒருவர் நேசிக்கின்ற
உண்மைக் காதல் உள்ளே இருப்பின்
பருவக் காமம் அதனைக் கவியாய்;
படிப்பவர்க் கெல்லாம் எடுத்துரைக்காதீர்!

தமிழுக்கென்று தனிச் சிறப்புண்டு;
தயவும் பணிவும் தகைசால் பண்பும்
அமைந்த மொழி என அகிலம் சொல்லும்
அதனை உணர்ந்து எழுதுதல் நம் கடன்!

பண்டை இலக்கியம் பழந்தமிழ் நெறிகள்
பக்குவம் நிறைந்த காதல் கவிதைகள்
கண்டு,மகிழ்ந்து எழுதுவ தெல்லாம்
காண்போருக்கும் கற்பித்தல் பொருட்டே!

இலைமறை காயென எழுதிடும் செய்திகள்
எச்சில் இலைபோல் காற்றில் பறக்க
தலைமுறை இதனைக் கெடுக்கும் விதத்தில்
தமிழைக் கெடுத்து எழுதாதிருப்பீர்!

உங்களின் எழுத்தை உங்கள் வீட்டு
உற்றார்,பெற்றார்,உறவினர் எல்லாம்
தங்களின் உணர்வாய்த் தாங்கி மகிழத்
தரமாய் எழுதி உரமாய்த் திகழ்வீர்!

நல்ல சந்ததி இன்றைய தலைமுறை
நாளை அவர்தாம் ஆளும் குடிகள்
நல்லவர்,வல்லவர் என்றவர் இருந்து
நாடும் வீடும் காத்திடச் செய்வீர்!

நட்புடன்,
கிருஷ்ணன்பாலா
13.12.2011

No comments: