Monday, December 19, 2011

இது மிகவும் கவனிக்கத்தக்க விஷயம்!


நண்பர்களே,

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் வன்முறையைத் தூண்டும் கருத்துக்களைப் பலரும் எழுதி வருகிறார்கள்.முதலில் இதற்கு அணை போடுங்கள்.
  
கேரள அரசியல்வாதிகள் பற்ற வைத்த வன்முறைக் கொழுப்பு மிகுந்த விவகாரம் இது. இதற்குப் பதிலடி தரவில்ல என்றால் 'நமக்கு அரசியல் வாழ்வு இல்லை' என்பதாகக்  கற்பனை செய்து கொண்டு இதைத் தாங்கள் தேடிக் கொண்டிருக்கும் அரசியல் முகவரிக்கான மிகப் பெரும் வாய்ப்பாக்கிக் கொண்டு விட்டனர் முகவரியற்ற நமது ஊர் அரசியல்வாதிகள்.

விளைவு:  ‘அறிக்கைக்குப் பதில் அறிக்கை’ என்றில்லாமல் இங்குள்ள அப்பாவி மலையாளிகளை அடித்து நொறுக்கினால் அங்குள்ள ’பாவி மலையாளிகளுக்குக்  கொடுத்த அடியாக மாறும்’ என்னும் கொடிய வன்முறையை,மனித நேயமற்ற அரசியல் விளையாட்டைக் கையில் எடுத்துள்ளனர் இவர்கள்.

இதை மாநில அரசுகளும் மைய அரசும் வேடிக்கைதான் பார்க்கின்றனவே தவிர, உடனடியாக அமைதியான தீர்வுக்கான  எந்த நடவடிக்கையையும்  இதுவரை எடுக்கவில்லை. உரிய நடவடிக்கையை ஒத்திப் போடுவதை ஒரு ராஜ தந்திரமாகக் காட்டிக் கொள்வதில் கை தேர்ந்த, கையாலாகாத பிரதமரையும் அவரைத் திரை மறைவில் ஆட்டி படைக்கும் அரசியல் சக்தியாக ஆளும் கட்சியின் அந்நியத் தலைவியையும் கொண்ட மக்களாய் நாம் வாழாவிருப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.

முல்லைப் பெரியாறு அணை பற்றிய உண்மை நிலவரங்கள் வேறு;அது நீதித் துறையின் தீர்ப்பில் இருக்கிறது. ஆனால், அதற்குள் இருதரப்புப் போராட்டங்களைத் தூண்டி வருவோரும் அரசியல்வாதிகளும் வேறு தீர்ப்பை எழுதி தமிழர்களுக்கும் மலையாளிகளுக்கும் முன் எப்போதும் இல்லாத இனப் பகைமையை வளர்க்கத் தொடங்கி விட்டனர்.

இதில்,உண்மையிலேயே தமிழர் நலன் காக்க விழைவோர் கருத்தில் கொள்ளத் தவறும் விஷயம்:மனித நேயம் - தமிழருக்கே உரிய பண்பாடு.

ஆண்டாண்டுக் கலமாக இங்கே வாழ்ந்திருந்து தமிழர்களோடு ஒன்றிப் போய் டீக் கடைகளும் பேக்கரிகளும் உணவு விடுதிகளும் நடத்தி வரும் மலையாளிகளின் கடைகளை,நேற்றுவரை அவர்களின் கடைகளில் உட்கார்ந்து கொண்டு அரசியல் பேசி, நட்புப் பாராட்டிக் கொண்டு,கடன் வைத்து  சமூசாவும் பிஸ்கட்டும் தே நீரும் காபியும் சாப்பிட்டுக் கொண்டிருந்த தமிழன்,இன்று அதே மலையாளிகளின் கடைகளை அடித்து நொறுக்கி அவனது உடமைகளை நாசம் செய்கின்றான்; மலையாளிகளைத் தெருவில் கண்டால்  உதைக்கின்றான்.

இது நீதியா? தமிழனின் பண்பாடா?

இதே வன்முறையாளர்களின் தலைவர்கள் சொல்கிறார்கள்:” கேரளாவில் 
தமிழர்களை,மலையாளிகள் அடித்து விரட்டுகிறார்கள்

மனிதர்களைக் கடிக்கும் நாய்களைத் திருப்பிக் கடிக்கச் செய்யும் மனிதனாகத் தூண்டும் இந்தக் கேடு கெட்ட செயலைத் தமிழன் செய்யலாமா

நண்பர்களே,தமிழர்களே

பதிலுக்குப் பதில் வன்முறை செய்வதன் மூலமும் அதைத்தூண்டி எழுதுவதன் மூலமும்  முல்லைப் பெரியாறு அணை விவகாரம் முற்றுப் பெற்று விடும்என்கிற மூடமைதான் நமது கொள்கையா?

கேரள மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப் படும் செய்திகளை வெகு ஆக்ரோஷப் படுத்திப் பலர் எழுதி வருகிறார்கள். நமது தலைக் காட்சிகளில் இது பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது

கூட்டமகச் சென்று மலையாளிகளின் கடைகளை அடித்து நொறுக்குவதையும் ஆக்ரோஷத்தோடு பெரும் கூட்டமாக மலையாளிகளைத் தாக்கவும் ஒழிக்கவும் கோஷமிடுவதையும் பிரதானப் படுத்தும் செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதையும் கண்டு நல்ல உணர்வுடையோர் மனம் நொறுங்கி கொண்டிருக்கிறது.

இவ்வாறு ஆர்ப்பாட்டத்தையும் வன்முறையயும் தூண்டும் அக்கறையானது, கேரளாவில் தமிழர்கள் தாக்கப் படுவதால் எழும் அக்கறை என்பதையோ இன உணர்வு என்பதையோ ஏற்க முடியாது. அவ்வாறு எழுதுவதன் மூலமும் செய்திகளைப் பரப்புவதன் மூலமும்  இங்குள்ள மலையாளச் சகோதரர்கள் அதிகம் தாக்கப் படுவதும் அதன் மூலம் தமிழர்கள் என்றாலே அவர்கள் எங்கிருந்தாலும் மலையாளச் சகோதரர்கள் தமிழர்களைப் பார்த்து வன்மம் கொள்ளச் செய்யத் தூண்டுவதையும் தவிர இவர்களின் கைங்கர்யம் இதற்கு மேல் எந்த நன்மையையும் செய்து விட முடியாது

ஒரு வன்முறை இன்னொரு வன்முறையைத்தான் செய்யத் தூண்டுமே தவிர, எவ்வித நன்முறைக்கும் வித்தாகாது.

எந்தச் சூழ் நிலையிலும் நாம் மனிதர்களாய் நடந்து கொள்ளும் நாகரிகத்தை வளர்க்கத் தவறி விடுவோமானால்,நமது எதிர்காலச் சந்ததியினரிடம் அதைக் காணவே முடியாது போய் விடும்.

சென்னையிலும் கோவையிலும் மதுரையிலும் டீக் கடைகளும் பேக்கரிகளும் உணவு விடுதிகளும் வைத்து பிழைப்பு நடத்தி வரும் மலையாளச் சகோதரர்கள் முல்லைப் பெரியாறு அணையை இடிக்கச் சொன்னவர்களா?

அவர்களைத் தாக்குபவர்களே தமிழர்களின் பண்பாட்டு எதிரிகள்.

எழுதத் தெரிந்த யாவரும் கண்ணியத்தையும் மனித நேயத்தையும் கருத்தில் கொண்டு எழுதுங்கள்.பிறரையும் அவ்வாறு எழுதத் தூண்டுங்கள்.


“ வன்முறையைத் தூண்டும் எழுத்துக்கள் தமிழனின் எழுத்துக்கள் அல்ல” என்பதைப் பிரகடனப் படுத்துங்கள்.

மனித நேயம் வேண்டி,
கிருஷ்ணன்பாலா
19.12.2011

No comments: