Tuesday, June 19, 2012

‘நான்’ இனி,நீங்கள்’!


நான்எனும் அகந்தை கொண்டு
நான்சொலும் செய்தி யாவும்
தேன் பொழித் தமிழின் வீரம்
தெளிவுறக் காட்டு தற்கே!

‘ஆணவம்’ என்று இதனை
அளப்பவர் யாரும் எழுத்தின்
மாணவர் என்றே சொல்வேன்
மற்றவர் எனது தோழர்!

யாரெது சொன்ன போதும்
எதிர்ப்பிலும் நிமிர்ந்து நின்று
நேர்பட உரைத்தல்;உண்மை
நிலைத்திடச் செய்யத் தானே?


நாட்டிடைத் தீயோர் தலைமை
நாசத்தைச் செய்யும் போது
கேட்டிட யாரும் இல்லாக்
கேவலம் நிலைக்க லாமோ?

ஆட்சியைப் பிடிப் பதற்கே
அரசியல் செய்வோ ருடைய
சூழ்ச்சியை எதிர்க்கும் சக்தி
'சொல்எனும் எழுத்துக் குண்டு!

தமிழர்தம் வாழ்வும் தூய
தரம்மிகும் பண்பும் இன்று
நமைமிக வருந்த வைக்க
நலங்கெட எழுத லாமோ?

நாட்டிலே லஞ்சம்;மக்கள்
நம்பிக்கைத் துரோ கங்கள்
வாட்டிட வளைந்து நின்று
வரைவது எழுத்தா,என்ன?

பேய்களே ஆட்சி செய்தால்
பிணந் தின்னும் சாத்திரங்கள்;
நாய்களே வாழும் என்றால்
நரகல்தான் நமது வாழ்வு!

கொஞ்சமும் இரக்க மின்றி
கொடுங்கோ லாட்சி இங்கு
வஞ்சகம் புரியும்போது
வாய்பொத்தி நிற்க லாமோ?

ஓய்விலாக் கவலை; நாட்டின்
உறக்கத்தைக் கெடுக்கும் போது;
ஓய்வாகப் படுத்துக் கொண்டு
உறங்குவோன் தமிழன் அல்ல!

சத்தியம் நேர்மை வீரம்
சாற்றிடும் பண்பு யாவும்
செத்ததேன்? என்று இங்கு
சிந்தித்தால் தூக்க மில்லை!

திருடர்கள் கூட்டம் இங்கு
தெருத் தெருவாக நின்று
பெருமைகள் பேசு கின்றார்;
பிறகு நாம் என்ன செய்ய?

சாட்டையை எடுத்து இங்கு
சாடியே கயவர் கூட்டம்
ஓட்டவே செய்யும் எழுத்தின்
உறுதியைக் காட்ட வேண்டும்!

எழுத்திலே வீரம் கெட்டால்
எறும்புக்கும் அஞ்ச வேண்டும்;
கருத்திலே உண்மை நின்றால்
கயவரும் அஞ்ச வேண்டும்;

எழுதுவோர் எல்லாம் இந்த
இலக்கணம் அறிந்து, நமது
பழுதிலா வாழ்வு காக்கப்
படைத்தலே அறிவு என்பேன்!

தேங்கிடும் தேசப் பற்றில்
தெளிவுடன் பார்வை கொண்டு
ஓங்கிடும் உறுதி யோடு
உரைப்பதென் நோக்கம்;அறிக!

மிடுக்குடன் மிளிரும் எழுத்தில்
மிதந்திடும் செறுக்கை நீங்கள்
வெடுக்கெனப் புரிவீ ராயின்;
விளம்புவேன்: ‘நான்,’இனி நீங்கள்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
19.6.2012

No comments: