Saturday, June 9, 2012

மதுரை ஆதீனம்:அவ்வினைக்கு இவ்வினை!
றிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.

’அவ்வினைக்கு இவ்வினை’ என்று ஒரு தேவாரப் பதிகத்தை பாடி அருளினார் தெய்வத்திரு ஞானசம்பந்தர் பெருமான்.

அவரது தெய்வீக வார்த்தைகள் எப்படிப் பொய்யாகும்?

இதோ:


'அவ்வினைக்கு இவ்வினை’ என்பது அரங்கேறத் தொடங்கி விட்டது.


மாற்று சமயத்தார் முன்பு, நமது மாசில்லா சமயநெறியை மண்டியிட வைத்து விட்டாரே, இந்த மதி கெட்ட மதுரை ஆதீனம்” என்று மனம் குமைந்துபோய் இருந்த சான்றோர் யாவரும் ’அவ்வினைக்கு இவ்வினை’ என்றால் யாதென?’ இப்போது உணர்ந்து ஞானசம்பந்தரின் அருளாற்றலில் நெகிழ்கின்றார்கள்.

நண்பர்களே,
மதுரை ஆதீனம் என்பது சிவன் சொத்து. திருஞான சம்பந்தர் பெருமானின் சமயநெறி போற்றி வாழ்ந்த, சிவனடியார்களும் 
சிவநேயச் சிந்தனையாளர்களும் ஆன்மநேயப் பெரியோர்களும் அருளார்களும் சான்றோர்களும் தமிழ் மரபு காக்கும் ஆன்றோர்களும் மனம் குமைந்து வெகுண்டெழுந்த கேடு கெட்ட நிகழ்வுகள் இங்கே அரங்கேற்றப் பட்டது.

குடிமக்களின் உணர்வுகளை மட்டுமின்றி, தமிழர்களின் பாரம்பரியப் பெருமையையும் காக்க வேண்டிய இந்த அரசு, கைகட்டி,வாய் பொத்தி மௌனம் காத்து வருகிறது.

“ஜெயலலிதா அவர்களின் ஆதரவுடன்தான் நான் மதுரை ஆதீனத்தின் பொறுப்பை ஏற்றேன்” என்று, ஆன்மஞான மூடன் நித்தி வெளிப்படையாக தம்பட்டம் அடித்துக் கொண்ட பின்னரும் மேடம் ஜெ. மௌனம் காத்தார்” என்பது இறைவனின் சபையில் எடுத்து வைக்கப்பட்ட விண்ணப்பம்.

மேடம் அவர்களுக்குத் தனது அரசின் சாதனைகளைச் சொல்லி முழக்கமிடத்தான் நேரம் இருந்ததே தவிர, ‘ஒரு கேடு கெட்ட கிரிமனல் தன் பெயரை ‘பப்ளிக்காக’ சொல்லி விட்டானே?’ என்ற பதைபதப்புக் கொஞசம்கூட எழவில்லை.

இறைவனின் ஏட்டில் இதுவும் குறிக்கப்பட்டதுதான்.

‘ஆதீனங்களின் ஆட்சி முறைமையில் அரசு தலையிடக் கூடாது’ என்பது எழுதப் படாத சட்டப் பண்புதான். ஆனால் அக்கிரமம் நடந்த பின்னரும் அதை ஆன்றோரும் சான்றோரும் எடுத்துச் சொன்ன பின்னரும் அதில் தலை இடாதிருப்பது, நெறி காக்கும் அரசின் நீதியல்ல!

அது, அநீதிக்குத் துணை போவதாகவும் திரைமறைவில் அக்கிரமத்தைத் தூண்டுவதாகவும்தான் அர்த்தம்’ என்றே தெய்வ நீதி தீர்ப்பளிக்கும்.

ஆம்.நீதியை நிலை நாட்டாது,முடிவு எடுக்கவேண்டிய நேரத்தில் ஒதுங்கி விடுவதுகூட அநீதிதான்.

இமாலய யாத்திரைக்குச் செல்லும் பக்தர்களுக்கு நிதி உதவி அளிப்பதாக அறிவித்து, ஆன்ம நேயர்களை எல்லாம் மகிழச் செய்த மேடம் ஜெ., இமாலயக் குற்றங்கள் நடக்கும் மதுரை ஆதீனத்தில் ஏன் தலையிடவில்லை?.

மக்கள் நீதிக்குச் சகாயமாக நடந்து வந்த மதுரை மாவட்ட ஆட்சியர் திரு சகாயம் நடு நிலையோடு மதுரை ஆதீனத்தின் மக்கள் விரோத நடத்தைகளைக் கண்கொண்டு பார்த்தபோது, அவரை மாற்றிவிட்டு, நித்தியின் விசுவாசியாக நடந்து கொண்ட திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரை இந்த அரசு,மதுரைக்குக் கொண்டு வந்ததேன்?

மதுரை ஆதீன மீட்புக் குழுவினர் 13.5.2012 அன்று நிகழ்த்திய அறவழி எதிர்ப்பின்போது அவர்கள் மீது செருப்புக்களை வீசிய காவிகட்டிய நித்தியின் ரவுடிகளை மேடம் ஜெ.அவர்களின் காவல்துறை கைது செய்யாதது ஏன்?

அவர்கள் வீசிய செருப்புக்கள் காவல்துறையினர் மீதுதான் விழுந்தன; அதுவும் ஒரு பெண் காவலர் மீதுதான் விழுந்தது.அப்பெண் காவலர்,கண் கலங்கி அழுததற்குப் பொதுமக்கள் சாட்சி.

அந்தச் செருப்புக்கள் சரியாகவோ,தவறாகவோ,இந்த அரசின் நீதி காக்கத் தவறிய குற்றத்துக்காகவும் அதன் மெத்தனப் போக்குக்காகவும், தெய்வக் கோபத்தால் அரசின் காவல்துறையினர் மீது தெரித்து விழுந்த அடியாக நடு நிலையாளர்கள் வருந்திச் சொல்கின்றனர்.

நானும் மிக மிக வருந்துகின்றேன்.
”நமது பாரம்பரியத்தின் பழமையும் பெருமையும் மிக்க மதுரை ஆதீனம் ஏதோ அருணகிரிக்கும் நித்திக்கும் பொதுவானது’ என்று ஒதுங்கி இருக்கிறதே இந்த அரசு” என்பதில்.

நண்பர்களே,
’அரசு அன்று கொல்லும்;தெய்வம் நின்று கொல்லும்’ என்பது முன்னோர் சொல்லி வந்த முதுமொழி.
  
மதுரை ஆதீனப் பட்டாபிஷேகம் நடந்த அன்றே, தமிழ்கூறும் நல்லுலகே அதிர்ந்தது;அனைத்துத் தரப்பிலிருந்தும் எதிர்ப்புக்கள் பொங்கின. ஆனால் அசையாமல்,அதை வேடிக்கை பார்த்தன் மூலம் இந்த அரசு,நீதியை அன்றே கொன்று விட்டது.

”மதுரை ஆதீனமும் நித்தியும் மாறி,மாறி தன்னைப் புகழ்ந்ததை மேடம் ஜெ.அவர்கள் அனுமதித்தன் மூலம் இந்த இரட்டைக் கோமாளிகளின் கூத்துக்கு ஆதரவாக நின்று விட்டார்” என்று தேவாரம் பாடி,கண்ணீர் மல்கிக் கசந்து வருந்தினர் திருஞான சம்பந்தரின் திரு அடியாரக்ள்.
  
ஆனால்,அரசே கைவிட்ட போதும் தெய்வம் தனது தீர்ப்பை வாசிக்கத் தொடங்கி விட்டது இப்போது.

’தெய்வம் நின்று கொல்லும்’ என்றால் ‘தாமதமாக முடிவு எடுக்கும்’ என்று எவரேனும் கற்பனை செய்து கொள்ள வேண்டாம்.

தெய்வம் தான் எடுத்த தீர்ப்பை ஒரே நாளில் காட்டாமல்,நின்று நிதானமாகக் காட்டும். அதாவது அனலிடைப் பட்ட புழுப்போல், துடிக்கத் துடிக்கத் தண்டிக்கும் என்று பொருள்.

நண்பர்களே,
உங்கள் உணர்வுகளைக் கூர்மையாக்கிப் பாருங்கள்,புரியும்:
‘தெய்வம் என்ன செய்யத்தொடங்கி இருக்கிறது?’என்பது.

மதுரை ஆதீனத்துக்கும் பிடதி ஆதீனத்துக்கும் என்ன சம்பந்தம்?

காவிக் கோவணத்தை இறுக்கமாகக் கட்டிக் கொண்டு நாக்கையும் வாக்கையும் நறுக்கென்று சுருக்கி, தேவார இசையும் தெளிந்த சமய நெறிகளும் தினமும் விரிந்திருக்க வேண்டிய இடத்தில், கோவணத்தையே அறியாது காம நெறி பரப்பும் கழிசடைப் பாவி நாக்கையும் நச்சு வாயையும் பரப்பி ஆட்சி செய்ய யத்தனித்தால், தெய்வத்திரு ஞான சம்பந்தரின் அருள் வீச்சு அமைதி காக்குமா,என்ன?

மூடர்களும் முட்டாள்களும் தினமும் ஆலாபணை செய்ய. பிடதியில் வீற்றிருந்த வாழ்வு போதாது என்று, மதுரை ஆதீனத்தைக் கபளீகரம் செய்ய வந்த போலிப் பீடாதிபதியான நித்தி, இப்போது சொந்த இடத்திலும் இருக்க முடியாது; சுரண்ட வந்த இடத்திலும் இருக்க முடியாது தலை மறைவாக ஓட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது,
பார்த்தீர்களா?.

’அரசனை நம்பிப் புருஷனைக் கை விட்ட’கதியில் இந்தப் போலி சமயவாதிகள் தங்கள் சொந்த இடத்திலும் இனி தலை காட்ட முடியாமல் இன்று நட்டாற்றில் நமச்சிவாய மந்திரத்தைச் சொல்லி மூழ்கித்தான் ஆக வேண்டும்.

’மதுரையையே மாற்றுவேன்’ என்று வாய்ச் சவடால் விட்டு, பழம் பெருமை வாய்ந்த திருஞான சம்பந்தர் பீடத்தை ஒரு ஐந்து நட்சத்திர விடுதியாக ஒரு மாதத்துக்குள் மாற்றி, தெய்வீக நெறிகளைத் தெருவில் எறிந்த நித்தி, அங்கே அசிங்கங்களை அரங்கேற்றத் தொடங்கியதை நாடு பார்த்தது, நல்லோர் நெஞ்சமெல்லாம் வேர்த்தது.

திடீரெனத் தன் பூர்வாசிரமப் பிடதிக்குச் சென்றாக வேண்டிய தேவை இந்த 292க்கு. ஆர்த்தியின் ரூபத்தில் அழைத்தது.

’அவ்வினைக்கு இவ்வினை’ என்றொரு பதிகத்தைப் பாடி அருளிய
பரமனின் பிள்ளை ஞானசம்பந்தரின் திருவுளம் இந்த 292க்கும் 293க்கும் சேர்த்து அவ்வினைக்கு இவ்வினையைத் தந்தது.

பிடதிக்குச் சென்ற இரு கூத்தர்களும் கூட்டிய பத்திரிகையாளர் கூட்டத்தில், இந்தப் பிடதிப் பித்துக்குளி நித்தி தன் வாயை கட்டிக் கொள்ளாது வம்பளக்க, தெய்வம் பத்திரிகையாளர் வடித்தில் வாய்க்கரிசி போட்டிருக்கிறது.

தமிழ் நாட்டுப் பத்திரிகையாளர்கள் தட்டிக் கேட்காத கேள்வியை, தமிழக அரசு தட்டி எழுப்பாத தூசியை கர்நாடகப் பத்திரிகையாளர்கள் தட்டி எழுப்பி விட்டனர்.

விளைவு,களேபரம் ஆகி விட்டது.

“தலை தப்பினால் போதும்,இனி பிடதியும் வேண்டாம்; பேராசைப் பட்ட மதுரையும் வேண்டாம்” என எங்கோ ஓடிப் போய் விட்டார் 293. நித்தியின் அடியாட்கள் பலர் இப்போது கர்நாடகக் காவல் துறையின் பிடியில்.

மதுரையை ஆக்கிரமிக்க இங்கேயுள்ள ஆளுவோரின் பின் பலத்தால் வந்தவன்பின்னங்கால் பிடரியில் பட ஓடி ஒளிகின்றான்;அவனது பிடதி ஆசிரமம் இப்போது கர்நாடக அரசால் பிடுங்கப்படுகிறது.

இங்கோ அவனை அரவணைத்து அவனது ஆட்டங்களுக்கெல்லாம் காவல் துறை காவல் தருகிறது.  

கர்நாடக  அரசின் கண் விழிப்பு ;நமது அரசுக்கு இல்லை. 
தமிழர்கள் விழித்துக் கொண்டார்களா என்பது இப்போது தெரியாது.

தெய்வ நீதியை உணராமல் போன அரசும் அதில் சம்பந்தப்பட்டோரும் அதன் எதிர் விளைவுகளைச் சந்தித்தே ஆக வேண்டும்.

இதை நாம் சொல்லவில்லை;

“இறைவனின் சித்தம் திரும்பி விட்டால் பொய் வைத்தமாடங்கள் எங்கே? மாமன்னர் ஆட்சி எங்கே? இது காணாது காண் கண் மயக்கேஎன்கிறார் பட்டினத்து அடிகளார்.

293 நித்தி தலை மறைவான சூழ்நிலையில் தலையில் அடித்துக் கொண்டு அரற்றுகின்றார் 292 இப்போது.

மறுபடியும் தலை மறைவாகி விட்ட இந்த மாய்மாலப் போக வியாபாரி நித்தியின் கர்ம வினைகளின் கடுமையை இப்போதாவது உணர்ந்து கொண்டு ”அவர் என்னுடைய வாரிசுப் பதவிக்குத் தகுதியற்றவர்” என்று நான்காவது முறையாக வாய் கூசாமல் அறிக்கை விடுவது எப்படி?” என்று 292 மதுரை ஆதீனம் ஆலோசிக்கின்ற நேரம் உருவாகிக் கொண்டிருக்கிறது.

நண்பர்களே,
’மதுரை ஆதீனத்தின் ஈனச் செயல்’ என்றும் அதில் ‘நீதி நிச்சயம் வெல்லும்’ என்றும் ஆரம்பத்திலேயே எழுதினேன்.

என் எழுத்து பழுதாகவில்லை.

அடிக்கடிச் சொல்லிக் கொள்வேன்:
”நான் பொய்யைப் புகல்வதில்லை;புகல்வது பொய்யாவதுமில்லை”என்று.

மதுரை ஆதீனம் என்பது சிவன் சொத்துத்தான்;

அதை நாசம் செய்பவர்களும் அதற்கு உடந்தையாக இருப்பவர்களும்
குல நாசம் ஆகிப் போவார்கள்.

ஆம்.
மதுரை ஆதீனத்தை மீட்கத் தமிழர்கள் ஒன்றும் மெனக் கெட வேண்டாம்!

அதை கன்னடத்துச் சகோதர்களே மீட்டுத் தருவார்கள்.

இவண்,
கிருஷ்ணன்பாலா
9.6.2012
Post a Comment