Sunday, August 19, 2012

கண்டேன், மலேஷியா!-1


மலேஷியப் பயணத் தொடர்:1
-----------------------------------------------------------
நண்பர்களே,

வணக்கம்.

மகரிஷி சிவராஜயோகி ஆதிமூலனார்
ஏற்கெனவே இங்கு எழுதியபடி,நான் மலேஷியாப் பயணம் மேற்கொள்ள, நண்பர் திரு சிவ சண்முகம் ரெட்டி என்ற சிவா ரெட்டி பயணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.

அதன்படி 16.7.2012 திங்களன்று மாலை 4:15 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கோலாலம்பூர் புறப்பட்டு, இரவு  (கோலாலம்பூர் நேரப்படி)10:30க்கு கோலாலம்பூர்  விமான நிலையம் சேர்ந்தேன்.

நண்பர் சிவா என்னை அழைத்துச் செல்வதற்காக வந்திருந்தார்.

அவருடன் அவர் வசிக்கும் அம்பாங் நகரை  மலேஷிய நேரப்படி இரவு 11:50க்குச் சென்றடைந்தோம்.

அம்பாங்கில் WATER FRONT பகுதியில் இருக்கும் கிரீன் ஓட்டலில் தங்கினேன்.

மறுநாள் 17.7.2012 முதல் நான் சென்னைக்குத் திரும்பிய 30.7.2012 வரை
இரு வாரங்கள் மலேஷியாவில் நேரம் போனதே தெரியவில்லை.

ஒவ்வொரு நாட்களும் செய்த பயணம்,சந்தித்த நண்பர்களின் உபசரிப்பு,கலந்துரையாடல்  என்று ஒவ்வொரு மணித்துளியும் எனக்கு எங்கே இருக்கிறோம் என்ற உணர்வைக் கூடத் தரவில்லை.

இரண்டு வாரங்கள் மிரண்டு ஓடி விட்டன.

சென்னை திரும்பிய பிறகும் ஓய்வு என்னைத் திரும்பிப் பார்க்க மறந்து விட்டது.

கிடைத்த நேரத்தில்,இப்போது எனது மலேஷியப் பயணத்தின் அனுபவங்களை,  அவற்றின் எதிரொலியை எண்ணித் திரும்புகின்றேன்.....

மலேஷியாவுக்குப் பலமுறை சென்று வந்திருக்கின்றேன்.

மலேஷியத் தமிழர்களின் விருந்தோம்பல், கலை ஆர்வம், ஆன்மீக நாட்டம் இவற்றை நேரில் உணர்ந்து வியந்திருக்கின்றேன்.

இவர்களின் இயல்பினைத் தெரிந்து கொண்டு,அவர்களின் நம்பிக்கைகளை மூல தனமாக்கி ஜோதிடம்,மாந்திரீகம் என்றும்  சினிமாக் கலை நிகழ்ச்சிகள் என்றும்  மலேஷியத் தமிழர்களின் வருமானத்தைச் சுரண்டி தங்கள் பையை நிரப்பிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டுத் தரம் கெட்டவர்களின் நடத்தை கண்டு வருந்தியுமிருக்கின்றேன்.

எனக்கு ஜோதிட அறிவியல் பற்றிய தெளிவும் அதன் மூலம் பலருக்கு ஆலோசனை வழங்கி அவர்களுக்குச் சரியான வாழ்வைக் காட்ட வேண்டும் என்ற ஆர்வமும் அக்கறையும் இருந்தபோதும் இந்தப் போலிகளின் பித்தலாட்ட நடத்தைகளால் அதில் யோசிக்க வேண்டிய விஷயங்களும் வேரூன்றியிருக்கிறது. இதனால், நான் அந்த மலேஷிய நண்பர்களின் நம்பிக்கையையும் நட்பையும் நாணயத்தோடும் நியாயத்தோடும்  காக்க  வேண்டும் என்ற கருத்தும்,எச்சரிக்கையும்  இந்தக் கயவர்களின் போக்குவரத்துப் புழக்கத்தால் புரிய வைத்திருக்கிறது.

மலேஷியாவில் இருக்கும் ஆலயங்களும் அதன் வழிபாட்டு முறைகளும் இங்கிருந்து  சென்று குடியேறியவர்களால் சுமார் 100,150 ஆண்டுகளுக்கு முன்பு  உருவாக்கப்பட்டவை.

அதற்கு முன்னரே தமிழர்கள் அங்கு பல நூறாண்டுக் காலமாய் வாழ்ந்து வந்திருந்த போதிலும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்தான் - கடந்த சுமார் 100-150 ஆண்டுகளுக்குள் தமிழ் நாட்டிலிருந்து அதிக அளவில் தொழிலாளர்களாகவும் அவர்களைக் கண்காணிக்கும் மேலாளர்களகாவும் வேலையில் பல்லாயிரக் கணக்கில் தமிழகத்திலிருந்து அழைத்துச் செல்லபட்டு மலேஷியாவில் குடி அமர்ந்தப் பட்டார்கள்.

நாட்டுக் கோட்டை செட்டி மக்களில் பலர் அங்கு ரப்பர் தோட்டங்களை வாங்கி ரப்பரும் பாமாயில் பனைகளையும்  வளர்க்கும் தொழிலை மேற்கொண்டார்கள்.

குறிப்பாக நாட்டுக் கோட்டைத் தனவந்தர்களால் அங்கு ஆலயங்கள் கட்டப் பட்டு,தமிழ்ப் பண்பாட்டின் ஆன்மீக நெ.றி நிலை நிறுத்திப் பேணப்பட்டு வருகிறது.

தமிழ் மொழியின்  தலைசிறந்த பண்புகளும் சமய சித்தாந்தந்தங்கங்களும்  மூன்று நான்கு தலைமுறைகளுக்கு  முன்னர்தான் அங்கு விதைக்கப்பட்டது என்று சொன்னால் அதை மறுத்துப் பேசுவதற்கு ஆதாரம் இல்லை.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நமது  ராஜேந்திர சோழன்  கடாரம்வரை படை எடுத்துச் சென்று வென்றதும்  மலை நாடென்னும் மலேஷியாவில்  இன்று உள்ள கெடா  மாநிலமே அந்தக் கடாரம் என்பதும் வரலற்று உண்மை.

இதன் தொடர்பாக, போர் வீர்களாகச் சென்ற நமது மூதாதையர் அன்றிருந்த அரசியல்-பொருளாதாரக் காரணங்களுக்காக அங்கேயே நிலை கொண்டு வாழத் தலைப்பட்டதும் பின் வந்த கால கட்டத்தில் அவர்களின் தலை முறைத் தொடர்பு தாயகமாம் தமிழகத்துக்கும் அவர்கள் வாழும் மலையகத்துக்கும் அற்றுப் போய் விட்டதும் காலம் எழுதிய கணக்கு..

அவ்வாறு தலை முறை மறந்து போன மூதாதைத் தமிழர்கள் ஆயிரக் கணக்கான குடும்பங்கள்.

ஆனால் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வேலைக்காக மலையக நாட்டில் குடியேற்றம் பெற்ற தமிழ்க் குடும்பங்கள் பல்லாயிரம் எண்ணிக்கை.

இன்று அவர்களின் வாரிசுகளாக வாழும் மலேஷியத் தமிழர்களின் எண்ணிக்கை பல லட்சம்.

மலேஷியாவின் மக்கள் தொகை எண்ணிக்கையில் நூற்றுக்கு 25 சதம் சுத்தத் தமிழர்கள் என்பதே இன்றைய கணக்கு.

இதில், தமிழகத்தில் இன்னமும் தங்கள் தாயாதிகளின் ஊரையும் பேரையும் மறந்து போய்த் தவிப்பவர்கள்தான் அதிகம்;அவர்கள் 80 சதம் என்பதில் வியப்பான வருத்தம் நமக்கு.

இன்றுள்ள மலேஷியத் தமிழர்களின் நல் வாழ்வுக்கு உரம் இட்டு அவர்களின் தார்மீக உறுதிக்கும் தமிழ்ப் பண்பாட்டுத்  தத்துவ-சித்தாந்த நெறிகளுக்கும் அரசியல்ரீதியான பாதுகாப்புக்கும் காவலர்களாகப் பலர் வாழ்ந்து வருகிறார்கள் என்பதைக் காணும்போது, நவீன  மலேஷியாவின் மகத்தான வளர்ச்சிக்கு அடித்தளமாகத் திகழும் தமிழர்களின் வாழ்வு மேலும் வளப்படும் என்ற நம்பிக்கை வலுத்துள்ளது.

இன்றைய நவீன மலேயாவின் பொருளாதார வளர்ச்சிக்கு சுற்றுலா மேம்பாடும் தொழில் வளர்ச்சியும் பெரும்பாலும்  தமிழர்களால் அடித்தளம் இடப் பட்டிருக்கிறது. தமிழர்களின் தொன்மைப் பண்பாடான இறைநெறிச் சித்தாந்தமும்  தமிழ் பண்பாடும் கூட  தமிழ்நெறிப் புலமையாளர்களாலும் தருமம் மிகு ஆன்மீகச் சிந்தனையாளர்களாலும் தொடர்ந்து காக்கப் பட்டு வருகின்றது.

இதை மெய்ப்பிக்கும் ஆலயங்களும் அவற்றைப் பராமரிக்கும் ஆன்மீக அறிஞர்களும் இந்த உண்மைக்குக் கட்டியம் கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.

இதுதான் இம்முறை மேற்கொண்ட மலேஷியச் சுற்றுப் பயணத்தில்  நான் கண்டுணர்ந்த உண்மை.

அந்த உண்மைக்கு சிகரம் வைத்தாற்போல் திகழ்கின்ற மகரிஷி ஒருவர் எனது நினைவுகளில் முன் நின்று மோனச் சிரிப்போடு முறுவலிக்கின்றார்.

எனது பயண அனுபவத்தில் அவரைப் பற்றி மலேஷியத்தமிழர்கள் மட்டுமல்ல; தாயகத் தமிழர்களும் உணர்வது  மேன்மை தரும் விஷயம்.

கோலாலம்பூரிலிருந்து சுமார் ஒரு மணி நேரம் ரயில் பயண தூரத்தில் இருக்கும் செலாங்கூர் மாநிலத்தில் கிளாங் நகரின் அருகில் கேஜி ஜாவா என்னும் இடத்தில் ’சிவராஜயோகி ஆதிமூலனார் யோகாலயம்’ என்ற மேன்மை மிக்க சிவாலயம் அமைத்து,  நூற்றுக் கணக்கான இளைஞர்களுக்கும் இளம் பெண்களுக்கும் யோகாசனத்தின் உயர் பிடிமானம் யாதென உணர்த்தி அவர்களை உடலியல் கட்டுக் கோப்பும் வாழ்வியல் காப்பும் கொண்டு வளர்த்துக் கொண்டிருக்கும் ‘மகரிஷி சிவராஜ யோகி ஆதி மூலனார்’ அவர்கள் ஓர் அப்பழுக்கற்ற யோகக் கலை ஆசான்.

மலேஷியத் தமிழர்கள் எட்டிப் பிடிக்க முடியாத ஆன்மிக உயர் நெறிக் கலை யோக நெறி. உடலையும் மனதையும் தூய்மைப் படுத்தி உறுதியோடும்  அறிவுக் கூர்மையோடும் ஆளுமைத் திறனோடும் வாழ வைக்கக் கூடிய மெய்ஞான யோகக் கலையை மிக எளிதான அணுகுமுறையோடு மலேஷியா வாழ் தமிழர்களுக்கு  தெய்வீகக் கருணையோடு, உணரத் தந்து உவப்பவர் இம் மகரிஷி.

இவருடைய யோகக் கலையின் வித்து, திருமந்திரம் கூறும் ‘சித்தாந்த ஞானக் கலையின் சொத்து’ என்பதுதான் இங்கே நம்மை முழுமையாக ஆச்சரியப் பட வைக்கிறது.

அந்த ஆச்சரியம் பற்றி.......?

 (தொடரும்)

-கிருஷ்ணன்பாலா
19.8.2012

1 comment:

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
நன்றி.