Monday, July 16, 2012

வணக்கம் மலேஷியா!


படத்தில்:(இடமிருந்து வலமாக) சிவா ரெட்டி,டத்தோஸ்ரீ,கிருஷ்ணன்பாலா,கவிஞர் ரவிபாரதி                                                                       படம்: E.S.மணி

சென்ற ஜூன் முதல் வாரம். புதன் கிழமை (6.6.2012).
மலேஷியத் தமிழ் நண்பர், திரு சிவசண்முகம்  ரெட்டி அவர்கள் கோலாலம்பூரிலிருந்து தொலை பேசியில் என்னை அழைத்தார்.

“மிஸ்டர் பாலா, டத்தோ அவர்களும் நானும் நாளை மறுநாள் (8.6.2012) வெள்ளிக்கிழமை இரவு சென்னைக்கு வருகிறோம்; நீங்கள் அவசியம் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இருக்க வேண்டும்; நீங்கள் டத்தோவைச் சந்திக்க ஏற்பாடு செய்துள்ளேன்’ என்று தகவல் சொன்னார்.

எனது வலைத்தளத்தின் வார்ப்புக்களைத் தவறாது படித்து வரும் நண்பர் திரு.சிவா ரெட்டி என்கிற சிவசண்முகம் ரெட்டி அவர்கள். மலேஷியாவின் காவல்துறையில் முக்கியப் பொறுப்பு வகித்து, இப்பொழுது சுயவிருப்பு ஓய்வு பெற்று டத்தோஸ்ரீ அவர்களின் உற்ற தோழர்களில் ஒருவராகத் துலங்கும் தமிழர் திரு.சிவா ரெட்டி, சென்னை ஆடிட்டர், திரு.விஜயகுமார் (Miracle Consuntants) அவர்கள் மூலம் எனக்கு அறிமுகம் ஆனவர்.

ஜோதிட ரீதியில் ஆலோசனை பெறுவதற்காக மலேஷியாவிலிருந்து வந்தவரை, ஆறு மாதங்களுக்கு முன்பு சென்னை அறிவாலயம் அருகில் உள்ள ஹோட்டல் ஹயாத் ரீஜன்சியில் முதன்முதலாகச் சந்தித்தேன்.

அதன் பிறகு,கடந்த ஆறுமாதங்களில் மூன்று முறை சென்னைக்கு வந்தவர், கடைசியாக, “தமிழரின் அரசியல் மற்றும் வாழ்வியல் பண்பாட்டுச் சிறப்புகளின் சீரிய சிந்தனைகள் உங்கள் எழுத்துக்களில் பிரமாதமாக அமைந்துள்ளன. அவற்றை டத்தோ அவர்களின் பார்வைக்கும் அவ்வப்போது அனுப்பி வருகிறேன்” என்றவர்,”நீங்கள் டத்தோ அவர்களை நேரில் சந்திக்கவேண்டும்; அதற்கு ஏற்பாடு செய்கிறேன்’ என்று சொல்லி இருந்தார்.

இன்றைய மலேஷியாவின் நேர்த்திமிகும் நெடுஞ்சாலைகளின் வடிவமைப்புக்கும் கீர்த்திமிகும் கட்டிடக் கலைகளின் புதுமைக்கும்  மட்டுமல்லாது, மலேஷியாவாழ் இந்தியர்களின், குறிப்பாகத் தமிழர்களின் தரமான வாழ்வுக்கும் தகுதிமிக்க அரசியல் உரிமைகளுக்கும் பின்புலமாகத் திகழும் டத்தோஸ்ரீ (DatoSeri) எஸ்.சாமிவேலு அவர்களைச் சந்திக்கும் ஏற்பாடு குறித்துத்தான் இந்தத் தகவல்.

மலேஷியாவில் பல்வேறு சமூக,அரசியல்,கலாச்சரப் பணிகளிலும், தொழில் துறைகளிலும் சாதனை படைத்து மக்களிடையே பிரபலம் ஆனவர்கள் பலர் இந்தக் கௌரவப் பட்டங்களை அடைந்துள்ள போதிலும் மலேஷிய மக்களிடையே மட்டுமல்லாது, இந்தியாவிலும் ‘டத்தோ’ என்றால் வெகுவாக அறியப்படுபவர் ‘டத்தோஸ்ரீ’ எஸ் சாமிவேலு அவர்கள்தான்.

’டான்ஸ்ரீ,’ ’டத்தோ’,’டத்தோஸ்ரீ என்பதெல்லாம் மலேஷியாவில் அந்நாட்டு அரசர்களால் வழங்கப்படும் சமூகக் கெளரவப் பட்டங்கள்.

நம் நாட்டில் குடியரசுத் தலைவர் மூலம் வழங்கப்படும் பத்மஸ்ரீ,பத்மபூஷண்’ போன்று மலேஷியாவில் ‘டத்தோ’ ’டத்தோஸ்ரீ’ ’டான்ஸ்ரீ’ மற்றும் ‘துன்’ முதலான கௌரவத் தகுதிகளை அந்நாட்டு அரசு, மன்னர்களின் அதிகாரத்தின் கீழ் வழங்கி வருகிறது.

மலேஷியத் தமிழர்களின் வாழ்வியலையும் பொருளாதாரச் 
சீர்மையையும்  புரட்டிப் பார்த்துப் பேசும்போது, அவர்களின் 
முன்னேற்றத்தில் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக அக்கறையும் 
ஈடுபாடும்  கொண்டு அவர்களின்  அரசியல் தளமான ’..காவின் 
தலைவராகவும் மலேஷிய  அரசின்  மதிப்பு  மிக்க அமைச்சராகவும்
நீடித்துநிமிர்ந்து பார்க்கும் பணிகளைச்  செய்து வந்தடத்தோஸ்ரீ ’
எஸ் சாமிவேலு அவர்களைத் தொடாமல் யாராலும்  பேச முடியாது.

காரணம் 1979 முதல் ம.இ.கா.வின் தலைமைப் பொறுப்பில் மட்டுமல்ல;மலேஷியாவின் அமைச்சராகவும் பொறுப்பேற்று கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் மிகச் சிறந்த முறையில் பொறுப்புக்களை நிர்வகித்து வந்தவர் என்ற பெருமை இவருக்கு மட்டுமே உண்டு.
.
இன்றைய மலேஷியத் தமிழர்களின் அரசியல் ஸ்திரத் தன்மைக்கும் தொழில் - பொருளாதார வலிமைக்கும் வளர்ச்சியும் இவருடைய தலைமையும் தனிப் பண்புகளும்தான் அடித்தளம் என்பதை மலேஷியத் தமிழர்கள் மறக்க முடியாது; சரித்திரமும் மறக்காது.

அத்தகைய பெருமைக்கும் புகழுக்கும் உரிய மலேஷியாவின் மாண்புமிக்கத் தமிழரை, தமிழர்களின் தனித் தன்மைக்கும் திறமைகளுக்கும் சான்றாக வாழும் மனிதரை, மகத்தான இதயமும் மலைப்பூட்டும் செயல்திறனும் கொண்டவரை டத்தோஸ்ரீ எஸ் சாமிவேலு அவர்களை, கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பிறகு நேரில் சந்திக்கின்ற வாய்ப்பு 10.6.2012 அன்று நண்பர் திரு சிவா ரெட்டி அவர்கள் மூலம் இப்போது கிடைத்தது.

சென்னை நுங்கம்பாக்கம் தாஜ் ஓட்டலில் விசேஷ அறையில் அன்று சந்தித்தேன்.

டத்தோ அவர்களின் அறையைத் தட்டியபொழுது, நண்பர் சிவா ரெட்டி அவர்களும் என்னுடைய நீண்ட நாள் நண்பர் ES மணியும் கவிஞர் ரவி பாரதியும் உடன் இருந்தனர்.

திரு ES மணி மலேஷியா தமிழ் நேசன் நாளிதழின் சென்னை புகைப்பட நிருபர் (Photo Journalist) மற்றும் டத்தோ அவர்களின் உதவியாளர்.

டத்தோ அவர்கள்தான் ‘தனது தந்தை;வழிகாட்டி;வாழ்வின் ஆதாரம்’ என்று நெஞ்சம் நெகிழ அவருக்குத் தொண்டு செய்வதைப் பெருமையோடு சொல்லி வருபவர் ES மணி.

அறைக்குள் நுழைந்த என்னை வெகு இயல்பாகவும், விஷயம் நிறைந்த ஆர்வத்தோடும் வரவேற்ற டத்தோஸ்ரீ அவர்கள் என் கையை பிடித்து அமர வைத்து ’என்ன சாப்பிடுகிறீர்கள்? என்று தனக்கே உரிய வாஞ்சையோடு கேட்டு, காஃபி, பிஸ்கட்டுகளுக்கு ஆர்டர் கொடுத்தார்.

ஒருவருக்கொருவர் நட்பை பரிமாறிக் கொண்டோம்.

பிறகு,”கொஞ்சம் பொறுத்துக் கொள்ள வேண்டும்’ என்று தயவோடு
கேட்டுக் கொண்டு, ஏற்கெனவே தான் கலந்துரையாடிக் கொண்டிருந்த நண்பர்;கவிஞர் ரவி பாரதி அவர்களுடன் பேச்சைத் தொடர்ந்தார்.

பிஸ்கட்டும் காஃபியும் வந்தன.அதன் சுவையோடு டத்தோஸ்ரீ அவர்களைப் பற்றிய எண்ண ஓட்டங்கள் என் மனதில் படர்ந்தன.

18.ஆண்டுகளுக்கு முன் சென்னையில் நண்பர் ஒருவரின் குடும்ப நிகழ்ச்சியில் சந்தித்துப் பேசியிருக்கின்றேன். அதற்கு முன் ’வாழும் தமிழ் உலகம்’ மாத இதழின் பொறுப்பாசிரியனாக இருந்த பொழுது 1985களில் டத்தோ அவர்களைச் சந்தித்திருக்கின்றேன்.

அப்பொழுது அவருடைய ‘தமிழ் நேசன்’ பத்திரிகையில் பணியாற்ற என்னை இணைத்துக் கொள்ளும் முயற்சி நண்பர்களால் மேற்கொள்ளப் பட்டதுண்டு.

அந்தக் காலக்கட்டம் முதலே டத்தோ அவர்களிடத்தில் எனக்குத் தனி ஈர்ப்பு இருந்தது; சிறந்த பேச்சாளர்;சிந்தனையாளர்; இசை ஞானம் கொண்டவர்.எல்லாவற்றுக்கும் மேலாக உயர்ந்த தமிழ்ப் பண்பாளர்.

ஆனால் 18 ஆண்டுகளுக்குப் பிறகும் தோற்றப் பொலிவும் இளமைத் துடிப்பும் மாறாது இருக்கும் மனிதராகவும் பழைய நினைவுகளில்
எளிதாக நீந்தும் நினைவாற்றல் கொண்டவராகவும் உற்சாகம் குறையாது நண்பர்களிடத்தில் கலந்துரையாடுபவராகவும் நேரில் பார்க்கின்றேன்.

ம.இ.காவின் தலைமைப் பொறுப்பிலிருந்தும் மலேஷிய அமைச்சர் பொறுப்பிலிருந்தும் தன்னை விலக்கிக் கொள்ளும்படிச் செய்த அரசியல் பின்னடைவு பற்றிய வருத்தம் துளியும் இன்றி, அறிவார்ந்த சிந்தனையாளருக்கே உரிய நிமிர்வோடு புன்னகை மாறாது பேச்சைத் தொடர்ந்த அவரது பாணி, நம் ஊர் அரசியவாதிகளுக்குச் சுட்டுப் போட்டாலும் வராது.

அவரது உரையாடலில் தன்னை நாடிவந்து உதவி கேட்ட தாயகத் தமிழர்கள் பலரையும் நினைவுகூர்ந்து அவர்களுக்கு உதவிய நிகழ்வுகளை முக மலர்ச்சியோடு விளக்கிச் சொன்ன விதம் கண்டு வியந்து கொண்டிருந்தேன்.


தமிழர்கள் எங்கும் தாழ்மையுறக் கூடாது என்பதிலும் அவர்களின் வாழ்வியல் உரிமையில் என்றும் துயரங்கள் அண்டிவிடக் கூடாது என்பதிலும் அவருக்கிருந்த வேட்கை, மலேஷியத் தமிழர்களின் தன்னிரகற்ற தலைவர் இவரெனக் கட்டியம் கூறிக் கொண்டிருந்தது.

தனது இளமைப் பருவம் முதலே மலேஷியவாழ் தமிழர்களின் வாழ்வியல் உயர்வும் உரிமைகளும் உன்னத நிலையை எட்ட வேண்டும் என்று கனவு கண்டவருக்கு ம.இ.கா.வின் தலைமைப் பொறுப்பும் மலேஷியா அரசின் பொதுபணித்துறை, வீட்டுவசதித் துறை,தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் பொறுப்புக்களும் தேடி வந்தன. இவருக்குக் கிடைத்த அமைச்சர் பொறுப்புக்கள் இவரால் பெருமை பெற்றன என்று சொல்வதைவிட இந்தத் தமிழரால் மலேஷிய அரசுக்கு மதிப்பும் இந்தியத் துணைக் கண்டத்தில் தமிழ் இனத்துக்கு மரியாதையும் ஏற்பட்டது என்பதே பொருந்தும்.

கடந்த 2008 பொதுத் தேர்தலில் துரதிர்ஷ்டவசமாக இவரது வெற்றி அமையாது போய் விட்ட போதும்; ’இவரது தன்னிகரில்லாத சேவை தங்கள் அரசுக்குத் தேவை’ என்பதை மலேஷிய அரசு உணர்ந்து கொண்டு, ‘கேபினட்’அமைச்சருக்கு இணையாக,‘மலேஷிய அரசின் இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளின் கட்டுமானப் பணிகளுக்கான விசேஷத் தூதர்’ (Special Envoy (Infrastructures)  for India and South Asian Countries) என்ற உயர் கெளரவப் பொறுப்பில் இவரை அமர வைத்து அழகு பார்த்து வருகிறது என்பதைக் காணும்போது, இவரைத் தேர்தல் களத்தில் தோல்வியுறச் செய்தவர்கள் நாணும்படி மலேஷிய அரசு அவர்களுக்குச் செய்திருக்கும் ’தண்டனையோ? என்று மனம் திருக்குறளை வாசித்தது.

“இன்னா செய்தாரை ஒறுத்தல்;அவர்நாண
நன்னயம் செய்துவிடல்”

என்று வள்ளுவன் சொல்லியிருக்கின்றாரே!

’மலேஷிய அரசின் கட்டுமானத் துறையின் விசேஷத் தூதர்’ என்ற சிறப்புத் தகுதியில், ஆசியா நாடுகளில்-குறிப்பாக இந்தியாவில் அடிக்கடி வலம் வந்து பல்வேறு கட்டுமானத் திட்டங்களுக்கு ஆலோசனையும் அறிவுரையும் வழங்கி வருவதன் மூலம் இந்தியா-மலேஷியாவுக்கு இடையே வணிகம் மற்றும் கலாச்சார நட்புப் பாலம் கட்டிக் கொண்டிருக்கிறார் டத்தோஸ்ரீ சாமிவேலு.

இன்றைய மலேஷியாவின் பொலிவுக்கும் பொருளாதார வலிவுக்கும் இவருடைய சிந்தனையும் உழைப்பும் அச்சாணி என்பதை இவரோடு நெருங்கி பழகிய பிறதேசத்து ஆட்சியாளர்கள் இன்று உணர்ந்து இவரைத் தங்கள் நாட்டுக்கு அழைப்பதிலும் இவரிடம் ஆலோசனை பெறுவதிலும் அக்கறை கொண்டிருப்பதானது, இவருடைய திறமைக்கும் உழைப்புக்கும் கிடைத்து வரும் கீர்த்தியாகும்.

இன்று உலகம் எங்கும் இருக்கின்ற தலை சிறந்த கட்டிடக் கலை வித்தகர்களில் (Chartered Architects) விரல் விட்டு எண்ணக் கூடிய தமிழர்களில் தலையாய சிறப்புக்கள் கொண்டவர், டத்தோஸ்ரீ எஸ். சாமிவேலு அவர்கள் என்பதை உலக நாடுகள் உணர்ந்துள்ளன.

சார்ட்டர்டு ஆர்க்கிடெக்டாக மட்டுமின்றி, சாதனை மிக்க அரசியல் சிந்தனையாளராகவும் திகழும் டத்தோ அவர்கள் தமிழர்களின் அறிவுசார் ஆற்றல்களுக்கும் அவர்களின் கலை.இலக்கியப் பண்புகளுக்கும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாத பிரதிநிதியாகத் திகழ்கிறவர் என்பதை எண்ணிப் பார்த்தது மனம்.

’தங்களை ’உலகத் தமிழர்களின் தலைவர்கள்’ என இங்கு ஆள் ஆளுக்குக் கொஞ்சம் கூட வெட்கமின்றி,எவர் எவரோ,தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக் கொண்டு பகைமை பாராட்டி வரும் நிலையில் இவர் உண்மையிலேயே தன்னலம் கருதாது உழைத்து, தமிழர்களுக்கு உலக அளவில் மதிப்பும் மரியாதையும் ஏற்படுத்தி வருவதில் ஓர் பரம ஞானிதான்.

’யானை தன் பலம் அறியாது’ என்பதுபோல்,இந்தியாவில் இவர் நம் நாட்டு அரசியல்வாதிகளிடம் பணிவன்போடு பழகி வருவதைப் பார்த்து இவரது அடக்கத்தை ஆமோதிப்பதா? அல்லது நமது நாட்டு அரசியல்வாதிகளின் அறியாமையை அலசுவதா? என்று திகைக்கின்றேன்.

உலகப் புகழ்பெற்ற Royal Institute of British Architects  என்ற அமைப்பின் மதிப்புக்குரிய அங்கத்தினர் இவர் என்பது இங்கு எத்தனை பேருக்குத் தெரியும்?

தெரிந்திருந்தால் நேற்றைய மழையில் இன்று முளைத்த காளான்களாக இங்கு மேம்பாலங்களையும் குண்டும் குழியுமான கொடுஞ் சாலைகளையும் போட்டு விட்டு, மக்களுக்கும் நாட்டுக்கும் மகத்தான சேவைகள் செய்து கொண்டதாய் மார்த்தட்டிக் கொண்டிருப்பார்களா?

இவரைப் பற்றிய மதிப்பீடு இங்குள்ளவர்களுக்கும் தெரியவில்லை;இன்றைய மலேஷியத் தமிழர்களில் பலருக்கும் தெரியவில்லை என்றுதான் சொல்வேன்.

நண்பர்களே,

மலேஷியத் தமிழர்களின் சமயப் பற்றும் மொழிப் பற்றும் இசை,நடிப்பு முதலானவற்றில் உள்ள கலைப் பற்றும் என்னை வியக்க வைத்துள்ளன. அதைவிட அவர்கள் தாயகத்திலிருந்து வந்த தமிழர் என்றால் அவர்களை உபசரிப்பதில் காட்டும் அன்பின் ஆழத்தைக் கண்டு மலைத்துப் போயிருக்கின்றேன்.

மலேஷியாவில் நாம் நமக்கு அறிமுகமான நண்பருடன் உணவு விடுதிக்குச் சென்று, அங்கு நமது நண்பருக்கு வேண்டிய ஒருவர் எதிர்பாராமல் சந்தித்துவிட்டால் அந்தப் புதிய நண்பர் நம்மைப் பற்றி ஆர்வத்துடன் விசாரிப்பார்.

பிறகு அந்தப் புதிய நண்பர் நம்மிடம் எவ்விதப் பலனையும் கருதாது அதே நாளிலோ மறு நாளிலோ அதற்கடுத்த நாளிலோ நமக்கு நல்லதொரு உணவு விடுதியில் விருந்துக்கழைத்து நம்மைத் திக்குமுக்காடச் செய்து விடுவார்.

மலேஷியாவுக்குச் சென்ற பொழுதெல்லாம் இதை அனுபவித்துப் பலரை  நண்பர்களாகப் பெற்றவன் நான்.

மலேஷியாவில் பிறந்து வாழும் தமிழர்களுக்கெல்லாம் இந்தியா,
குறிப்பாக தமிழகம்தான் தங்கள் தாயகம் என்பதும்; அந்தத் தாயகத் தமிழன்தான் தங்களுடைய உணர்வுப் பூர்வமான உறவினன்;நண்பன்’ என்பதும் மலேஷியத் தமிழர்களின் இரத்தத்தில் ஊறிப் போன விஷயம்.

அதன்பொருட்டேஅவர்கள் தமிழ் நாட்டிலிருந்து வரும் 
தமிழர்களை உபசரிப்பதில் உள்ளன்பு கொண்டிருக்கிறவர்கள்
அதிலும் மலேஷியாவுக்கு வருகை தரும் தமிழ் நாட்டு 
நண்பர்கள்  ஒரு படைப்பாளராகவோ, இலக்கியவாதியாகவோ,
கலைத்துறையில் இருப்பவராகவோ,சமயப் பற்றாளராகவோ  
இருப்பார்களானால் அவர்களுக்குஅவர்கள் இந்தியாவில்கூட
கண்டுணராத விருந்துபசரிப்பை  ஈந்து மகிழும் குணம்
என்பது மலேஷியத்  தமிழர்களின் மகத்தான சொத்து.

தமிழர்களுக்கே உரிய இந்த உயர் குணமான ‘விருந்தினரைப் போற்றும்
பண்பைக் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வள்ளன்மையோடு
கொண்டு வாழ்ந்து வரும் டத்தோஸ்ரீ எஸ்.சாமிவேலு அவர்களைப் பற்றி
நண்பர் திரு.சிவா ரெட்டி அவர்கள் சொல்லச் சொல்லச் வியந்து
போயிருக்கின்றேன்.

தமிழன் என்று எவர் தன்னைச் சந்தித்துஉதவிஎன்று வாய் திறந்து விட்டால், தன்னிச்சையாக இவர் மனமும் மணிபர்ஸும் திறந்து,உதவி கேட்டவர் நினைத்துப் பார்க்காத வகையில் அவரை திக்குமுக்காடச் செய்து விடும் என்பதைப் பலரும் சொல்லக் கேட்டிருக்கின்றேன்.

டத்தோஸ்ரீ’  எஸ் சாமிவேலு அவர்களால் மலேஷியாவுக்கு
மட்டுமல்ல;மலேஷியத் தமிழர்களுக்கும் தரமான வாழ்வும் தகுதி
சான்ற பொறுப்புக்களும் தயவு மிக்க உதவிகளும் கிடைத்திருக்கின்றன.

ஏன்,தமிழகத்திலிருந்து சென்ற எந்த அரசியல்வாதியேனும் சினிமாக் கலைஞரேனும் டத்தோஸ்ரீ எஸ்.சாமிவேலு அவர்களின் உபசரிப்பில் நெகிழ்ந்துபோய்,அவரது உப்பை உண்ணாது திரும்பி இருக்கவே முடியாது.

மலேஷியாவில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லிய ஏமாற்று நிறுவனங்களை நம்பி அங்கு பிழைக்கச் சென்று,பின் அதன் சட்டத்தின் பிடியில் சிக்கித் தவித்த ஏமாளித்தமிழர்களின் கதைகள் அவ்வப்போது பத்திரிகைகளில் ஏராளமாக நாம் செய்திகளாகப் படித்திருக்கின்றோம்.

அப்படிச் சென்று விழி பிதுங்கித் தவித்த ஆயிரக் கணக்கான தமிழர்களை மீட்டு இவர் செய்த உதவிகள் எண்ணற்ற குடும்பங்களில் விளக்கேற்றி வைத்துள்ளது.

‘உதவி’ என்று இவரை யாரேனும் சந்தித்து விட்டால்,‘அவர் யார்? என்ன ஜாதி?’ என்றெல்லாம் பார்க்க மாட்டார்; பாக்கெட்டில் கையை விட்டால் கையில் என்ன வருகிறதோ அது மலேஷியக் கரன்ஸியாக ஆயிரக் கணக்கில் பிதுங்கி வரும். உதவி கேட்டவர் விழிவியந்து போய் கசிந்துருகிக் கண்ணீர் மல்கிக் கைதொழுதுதான் திரும்புவார்கள்.

“சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடி

என்று பாடிய மகாகவி பாரதி, டத்தோ அவர்களைப் பார்த்திருக்கும்
காலம்வரை வாழ்ந்திருந்தால் தனது பாடலுக்கு எதிர்ப்பாட்டைத்
தானே எழுதியிருப்பான்.

தன் நலம் கருதாது, மலேஷியத் தமிழர்களின் பாதுகாப்பான வாழ்வுக்கும் பக்குவமான அரசியலுக்கும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட டத்தோ எஸ் சாமிவேலு அவர்கள், தன்னை நம்பி ‘ம.இ.கா’ என்னும் மலேஷிய இந்தியன் காங்கிரசின் தலைவர் பொறுப்பை வழங்கிய தன் மக்களுக்கு ஓர் தந்தை போன்று செயல்பட்டவர் என்பதை இவர் அருகிருந்து பழகிய அத்தனை பேருக்கும் தெரியும்.

மலேஷிய அரசியல் என்பது SENSITIVE ஆன ஒன்று. அதன் பூர்வ குடிகளான மலாய்க்காரர்களை ஏமாற்றி, பன்நெடுங் காலமாய்த்
தங்களை வளப்படுத்திக் கொண்டவர்கள் சீனர்கள். சீனர்களுக்கும் மலாய்க்காரர்களுக்கும் உள்ள உருவ ஒற்றுமை ஒன்றே மலாய் மக்களிடத்தில் எளிதில் சீனர்களை வலுப்படுத்திக் கொள்ள உதவிற்று.

‘மலேயா’ என்று, இன்றுள்ள மலேஷியாவும் சிங்கப்பூரும் சேர்ந்த நாடாக இருந்ததுவரை தமிழர்களுக்கு உரிய மரியாதை இந்நாட்டில் கிடையாது;

பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே கடாரம் என்ற இந்நாட்டுடன் நமக்கு வணிக உரிமையும் வாழ்வியல் உரிமையும் இருந்து வந்த போதிலும் சீனர்களின் ஆதிக்கத்தாலும் மலைவாசிகளான மலாய்க்காரர்களின் மயக்கத்தாலும் தமிழர்கள் வந்தேறிகள் என்றே வசைபாடப் பட்டனர்.

மலேயாவில் தமிழர்களின் சம உரிமை நிலை நாட்டப் படுவதற்காக,
..கா என்றமலேஷியன் இந்தியன் காங்கிரஸ்என்ற அமைப்பு அங்கு
பல தலைமுறைகளுக்கு முன்பே  குடியேறிய இந்தியத் தொழிலாளர்களின் நலன்களுக்கான அமைப்பு என்று  John A Thivy என்ற ஆங்கிலேயரால் 1946களில் தொடங்கப்பட்டது. 1947ல் இந்தியா பிரிட்டீஷ் காலணியில் இருந்து விடுதலை பெற்றதைத் தொடர்ந்து இதன் இரண்டாவது தலைவராகப் பொறுப்பேற்ற Budh Singh (1947-50) அவர்களால் மலேயா நாட்டில் பிரிட்டீஷாருக்கு எதிரான சுதந்திர உணர்வு தூண்டப்பட்டது.


1950க்குபிறகு ..கா.வின்.K Ramanathan ..கா.வின் மூன்றாவது
தலைவராகவும் அவருக்குப் பின் K.L. Devaser (1951-1955) நான்காவது
தலைவராகவும் இருந்தனர். 1955களில் மலேஷிய சுதந்திரப் போராட்டம்
தீவிரமடைந்த நிலையில் ..கா வின் சக்திமிக்க தலைவராக
துன் வி.டி.சம்பந்தம்’ என்று மலேஷியத் தமிழர்களால் போற்றப்பட்ட
 திருவி.திருஞான சம்பந்தம் பொறுப்பேற்றார்.

Tun V.T. Sambanthan  அவர்கள் ..கா.வின் ஐந்தாவது தலைவராகப்
பொறுப்பேற்ற பிறகுதான் மலேஷியத் தமிழர்களின் ஒற்றுமை
வலுப்படுத்தப் பட்டதோடு மலேஷிய இந்தியர்கள் என்றாலே
தமிழர்கள்தான் என்று  மலேஷிய நாடு உட்பட அனத்து நாடுகளும்
ஏற்கும்படியான சூழல் உருவாயிற்று.

தமிழர்களின் கூட்டுப் பலத்தோடு மலாய் மக்கள் சுதந்திர நாடு
பெற்றதும் 31,8.1957 அன்று பிரிட்டீஷ்காரர்களிடமிருந்து விடுதலை
பெற்ற மலேயாவின் அரசியல் சாசனத்தில் தமிழர்களின் பிரநிதியாகக்
கையெழுத்திட்டு, துன் சம்பந்தம் அவர்கள் அங்குள்ள தமிழர்களின்
சம உரிமையை அரசியல் சட்ட பூர்வமாக நிலை நிறுத்தியதும்
சரித்திரம் கூறும் பெருமைகள்.

1973வரை மலேஷியத் தமிழர்களின் தனிப் பெரும் தலைவராகத்
திகழ்ந்தவர் துன் சம்பந்தம்.அவருக்குப் பின் Tan Sri Dato' Seri V. Manickavasagam' (டான் ஸ்ரீ டத்தோஸ்ரீ V.மாணிக்க வாசகம்)
..கா.வின் ஆறாவது தலைவராக இருந்தார்.

1979 களில் டத்தோ ஸ்ரீ எஸ்.சாமிவேலு அவர்கள் மலேஷியத்
தமிழர்களின் அரசியல் இயக்கமான ..கா.வின் தலைவராகவும்
மலேஷிய அரசின் கேபினெட் அமைச்சராகவும் பொறுப்பு ஏற்றார்.

மலேஷிய அரசியல் வரலாற்றில் தமிழர்களின் ஏகோபித்த
பிரதிநிதியாக30 ஆண்டுக்காலம் இருந்து பல்வேறு அமைச்சகப்
பொறுப்புக்களை அந்த நாடே வியக்கும்படி திறம்படச் சுமந்து,
பிற நாடுகளின் மதிப்பையும் மரியாதையும் பெற்ற தமிழர் என்ற
தகுதி இவர் ஒருவருக்கு மட்டுமே உண்டு.


இதன் தாக்கத்தில்தான் ‘நவீன மலேஷியாவின் சிற்பி’ என
‘டத்தோஸ்ரீ’ போற்றப் படுகிறார். இதை இந்நாட்டின் பெரும்பான்மை மலாய்க்காரர்களும் சீனர்களும் உணர்ந்து,இவரிடம் நேசத்தோடும் நிஜமான மரியாதையோடும் நட்புப் பாராட்டி வருகிறார்கள்.


இத்தகைய பெருமைகளைச் சுமந்து கொண்டு எளிமையாகவும் இனிமையாகவும் பிறரிடம் மனம் திறந்து பேசி மகிழும் பாங்கை
நான் ரசித்துக் கொண்டிருந்தபோது,ரவி பாரதி அவர்களுடனான உரையாடல் நிறைவு பெற்று எழுந்தார்.

எழுந்தவர் எனது கைகளை வாஞ்சையோடு பிடித்துக் கொண்டு ”ம்ம்..உங்களுடன் நிறையப் பேச வேண்டும்…இங்கு நேரம் கிடைக்கவில்லையே ” என்றவாறு ’சரி வாருங்கள் பேசிக் கொண்டே போவோம்’ என்று சொல்ல, லிஃப்டுக்கு நடந்தோம்.

நடந்து கொண்டே அவருடைய பழைய சந்திப்புக்களை நினைவுகூர்ந்து நான் கல்கியில் கர்நாடக சங்கீதமேதை எம்.எஸ் சுப்புலக்ஷ்மி  அம்மா அவர்களிடத்தில் பணியாற்றிய காலத்தைச் சொன்னதும் சட்டென எம் எஸ்.எஸ் அவர்கள் பாடிய பழைய பக்தமீரா படத்தின் பாடல் ஒன்றை சுதி பிசகாது பாடி அசத்தினார்.

அதன் வியப்பு சூழ “அய்யா, எம் எஸ் அவர்களிடத்தில்  பணிபுரிந்த எனக்கே இப்பாடல்  வரிகள் நினைவில் இல்லை;உங்களுக்கு எப்படி? என்று கேட்டு முடிக்கும் முன்பே, ‘நான் அந்தக் காலத்தில் மலேஷியாவில் நாடகங்கள் போட்டு அதை நடித்தும் பாடியும் நம் மக்களுக்கு கலை,அரசியல் உணர்வுகளைப் பிரச்சாரம் செய்திருக்கிறேன்;எப்படி நமது கலை இலக்கியத்தை எல்லாம் மறக்க முடியும்? என்று ஒளிவு மறைவில்லாமல் ஒரு கலைஞனுக்கே உரிய தெய்வீக இறுமாப்புடன் வெளிப்பட்ட அவரது சொல் வீச்சு என்னைச் சற்றே உறைய வைத்து விட்டது.

இவருடைய தமிழும் அதன் நாட்டமும் கலைத்துறையாளர்களிடத்தில் இவர் காட்டிவரும் பரிவும் நம் ஊர் அரசியல்வாதிகள் காட்டும் விளம்பர யுக்திக்கானவைபோல் அல்ல:

நிஜமான ஈடுபாடும் நிலையான அன்பும் மிளிரும் நேசம் அது.

இதன் எதிரொலியாகத்தான்-
கடந்த 30 ஆண்டுகளாக,மலேஷியாவில் நடத்தப் பட்ட நட்சத்திரக் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அத்தனை நட்சத்திரங்களுக்கும் ஒரே முழு நிலவு டத்தோ என்றாகிவிட்டார்.

அவர் அள்ளிக் கொடுத்த சன்மானங்களும் வாரிக் கொடுத்த தங்கச் செயின்களும் அலங்கரிக்காத கழுத்துக்கள் நமது நட்சத்திரங்களுக்கும் நம் ஊர் அரசியல் நாட்டாமைகளுக்கும் இருக்கவே முடியாது.

போலித்தனமும் புரட்டுப்பேச்சுக்களும் அலங்காரமாகக் கொண்ட நம் அரசியல்வாதிகளிடமிருந்து விலகி வெகுதூரத்தில், மலேஷியாவில் தமிழர்களின் தலைவராகப் பார்க்கப்பட்ட டத்தோஸ்ரீ, ‘உலகத் தமிழர்களின் உண்மைத் தலைவர்’ எனத் திகழும் உயர் குணங்கள் கொண்ட மாமனிதர்தான்.

அந்த மாமனிதரிடம் நிறையப் பேசுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி என்னை மலேஷியாவுக்கே இந்த வாரம் அழைத்துள்ளார் நண்பர் திரு சிவாரெட்டி அவர்கள்.

வணக்கம் மலேஷியா.

வந்து திரும்பிய பின் பேசுவேன்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
16.7.2012

Post a Comment