Saturday, August 25, 2012

யார்,தமிழினத்தின் எதிரிகள்?

அறிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.

ஈழத் தமிழர்களின் ‘ஈழக் கனவுக்கு’நாங்கள்தான் ஒட்டுமொத்தக் குத்தகைதாரர்கள். இந்த உரிமையை வேலுப் பிள்ளை  பிரபாகரன் உயிர் விடுவதற்கு முன் எங்களுக்கு அளித்துச் சென்றுள்ளார்’ என்பதாகக் கதைத்துக் கொண்டு, இன்று தமிழகத்தில் பலர் காகிதப் புலிகளாக உருவெடுத்திருப்பதுடன், ஒருவரை ஒருவர் சினம் காட்டி உறுமிக் கொண்டு திரிகின்றனர்.

‘அவன்  யார் ஈழ உரிமை பற்றிப் பேச?’ என்று இவனும், ‘இவன் யார்;இவனுக்கு என்ன தகுதி, எனது தகுதியை எடைபோட்டுப் பேச?’ என்று அவனும் ஊடக யுத்தம் நடத்திக் கொண்டு தங்களை அடையாளப் படுத்திக் கொண்டு வருகிறார்கள்.

’தமிழன்’ -’ தமிழினம்’- ‘தமிழ்ப் பண்பாடு’- ‘தமிழ்த் தேசியம்’ என்றெல்லாம் தமிழின் பெயராலும் தமிழர்களின் பெயராலும் சிலர் தனித் தனி இயக்கங்களை  நடத்திக்கொண்டு,தங்களுக்குத் தாங்களே  ’மாவீரன்’ என்றும் ‘தமிழீழத்தின் விடிவெள்ளி என்றும் தாங்களே பிரபாகரனின் நெஞ்சில் இடம் பெற்ற ’தனி ஈழப் பிரதிநிதிகள்’ என்றும் ‘தம்’பட்டங்களப் பறக்க விட்டுக் கொண்டு மார்தட்டி வருகிறார்கள்.

’தமிழ் உணர்வாளர்கள்’ என்றொரு புதிய சாதியைத் தங்கள் சாதியெனச் சாதித்துக் கொண்டு முழங்கி.இங்கே சில்லறை வியாபாரம் செய்து வருகிறார்கள்.


சொல்லப் போனால் இந்தக் காகிதப் புலிகள் அந்த ஆயுதப் புலிகளை அடித்துத் தின்று வருகின்றன.

     
இவர்களுக்கு , ‘பார்ப்பனீய எதிர்ப்பு’  என்ற மாய்மாலச் சிந்தனை ஒன்றில் மட்டும்தான் ஒற்றுமை. மற்றதில் எல்லாம் ஒருவருக்கொருவர் பகைமையும் தாழ்மையும்  படுத்திக்கொண்டு செயல்படும் விவேகமற்ற  போக்குத்தான் சந்தி சிரித்துக் கொண்டு இருக்கிறது. 

தமிழைச் செம்மையாக எழுதத் தெரியாதவர்கள்கூட தமிழ் இயக்கம் என்ற பெயரில் தறுதலைக் கூட்டத்தை வளர்க்கும் வஞ்சக அரசியலே தவிர வேறில்லை இது.

தமிழுக்கு எத்தனை எழுத்துக்கள்? அதில்,உயிர், மெய்,உயிர்மெய்,ஆயுத எழுத்துக்கள் எவை?  அவற்றில் வல்லினம்,மெல்லினம், இடையினம்,குறில்-நெடில் என்றால் என்ன? என்று கேட்டால் விழி பிதுங்கும் வெட்டிப் பயல்கள் எல்லாம் தமிழியக்கம் என்று பேசும் அவலத்தை இங்குதான் காண முடிகிறது.

இவர்களின் புத்தியில்-பார்வையில் இங்குள்ள ‘அந்தணர்கள் எல்லாம் பார்ப்பனீயர்கள்;தமிழனுக்கு எதிரிகள்’ என்பது இந்த்த் தரம் கெட்டவர்களின் பிரச்சாரம்.

உண்மையான அந்தணன் எவரும் தமிழையோ,தமிழனையோ,தமிழ் இனத்தையோ கிஞ்சித்தும் கேலி செய்ததில்லை;கீறிக் காயப் படுத்தியதில்லை.

மாறாக,தமிழுக்கும் தமிழினத்துக்கும் தரமான சிந்தனைகளை அந்தணர்கள் அளித்துள்ளனர்.

காலம் காலமாக இம்மண்ணில் வாழ்ந்து,பிறருக்கு அறநெறியும் ஆன்மீக  நெறிகளையும் சொல்லி வரும் இனம் அந்தணர்கள்.

வேதம் படித்து அதன் வழி வாழும் அந்தணர்களை நிந்திப்பதும் அவர்களைத் தமிழினத்தின் விரோதிகள் என்று  சிந்திப்பதும் நமது தமிழ்ச் சமுதாயத்தில் விஷ விதைகளைத் தூவி, தமிழினத்தையே வேரறுக்கும் மூடர்களின் செயலாகும்.

தமிழ்ப் பண்பாட்டின் உயர் நிலையையும்  உன்னத நெறிகளையும்  பாரம்பரியமாகக் கட்டிக் காத்து வருவதில் அந்தணர்களுக்குப் பெரும் பங்கு இருக்கிறது.

நம் மூதாதையர் அந்தணர்களை சமூகத்தின் உயர் மதிப்பில் வைத்து பன்னெடுங் காலமாக பணிவும் கனிவும் காட்டிப் போற்றி மதித்து வந்தனர்.

நம் அப்பனும் பாட்டனும் காட்டிய  இந்தப் பண்புக்கு எதிராக தமிழ்ச் சமூகத்தில் இனத் துவேஷத்தை எழுப்பி வரும் கேடர்கள் அறிவிலிகளே.

’இந்த அறிவிலிகளின் கூட்டத்துக்கு தலைவனாக எவன் வேண்டுமானாலும் இருக்கட்டும்; நாம் அவர்களுக்கு எதிர்த் திசையில்  இருப்போம்’என்கிறவனே உண்மைத் தமிழன்.

“யாதும் ஊரே;யாவரும் கேளிர்”

என்று கணியன் பூங்குன்றனார்  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
சொன்ன இணையற்ற சமூக உறவுப் பண்பு மொழியைப் பாழ்படுத்தும்
தமிழினத்துரோகிகளாகச் செயல்படுபவர்கள்தான் நம்மிடையே பிரிவினையை வளர்க்கும் பித்தலாட்டத்லைவர்களாய் பலர் முளைத்து, சாதீயை வளர்த்துக் கொண்டு அதில் குளிர்காயத் தலைப்பட்டுள்ளனர்.

சாதி இல்லை என்று சாதிப்பதும்
சாதியாலேயே சாதித்துக் கொள்வதும்
இந்தத் தலைவர்களின் சாதிதான்.

இவர்களுக்கு தமிழின் மாண்பும் புரியாது;மானுடத்தின் நோன்பும் தெரியாது.

‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந் நாடே;அவர்
சிந்தையில் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந் நாடே’

என்று பாரதி பாடிய  பரம்பரைப் பண்பை எதிர்வரும் சந்ததியினரும் உணரும் வண்ணம் தமிழ்ச் சாதிகளிடையே  நல்லிணக்கமும் நட்பும் பேணி வருவோம்.

இனத் துவேஷம் காட்டிப் பேசி எவரேனும்  இந்தப் பதிவுக்கு எதிராக இங்கே எழுத்தின் மாண்போடு எதிர் வரட்டும்;நாம் நமது எழுத்ததிகாரத்தின்  ஆட்சியை நிலை நாட்டுவோம்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
25.8.2012

Post a Comment