முகநூல் மூலம் அறிமுகம் கொண்டு
முகம் அறியாமல் நட்பினைப் பூத்து
தகவுடன் கருத்துப் பரிமாற்றத்தில்
தழைக்கும் நண்பர்கள் அனைவரும் அறிக:
அறநெறித் தமிழை ஆழ்மனம் பற்றிட
அதன்வழி நின்றே சிந்தனைப் பரவலை
நெறிமுறையோடு சபையில் உரைக்கும்
நேர்மையை என்றன் நிழலாய்க் கொண்டவன்!
எதுஎன் உணர்வாய் இதயம் உள்ளதோ?
அதுஎன் எழுத்தாய் உமிழக் காண்கிறேன்;
எதுநம் பண்பை அழிக்க வல்லதோ?
அதுமாய்ந் திடவே எழுத்தில் வைக்கிறேன்!
அவையில் வைக்கும் கருத்து யாவையும்
அணிந்துரை செய்ய முன் வாராமல்
கவைக் குதவாத புகைப்படம் இட்டும்
கலகலப்பில்லா வெற்றுரை செய்தும்
தொடர்பில்லாத தொகுப்பரை பதித்தும்
தொடர்ந்து நாளை வீணே கழித்து
இடரும்பேர்கள் அதிகம் இருப்பினும்
இவர்என் நட்பைக் கவருவதில்லை!
இளமையின் வேகம் கண்களை மறைத்து
எதையும் நகைத்து இனிக்கும் இப்போது;
வளமை மாறி முதுமை மலர்ந்தபின்
வாழ்க்கையின் தவறுகள் கனக்கும் அப்போது!
முறைகேடான சிந்தனைத் தூண்டல்.
மூர்க்கத் தனமாய் வார்த்தைகள்; விரசம்;
மறைபொருளாக மதனக் கிளர்ச்சி;
மானமும் மதிப்பும் இல்லாப் பதிவுகள்!
தாயும் தந்தையும் தமக்கையர் தம்பியர்
தாங்கிய உறவுகள் அனைவரும் படித்துத்
தோயும் வகையில் தொடர்புகள் பெருக்கி
தோளை உயர்த்தும் தோழமை யன்றி
நாளும் பொழுதும் நக்கல் உரையும்
நல்லோர் வருந்தும் கக்கல் மொழியும்
ஆளுமை என்று எழுதிடு வோரும்
அதையே நக்கி இன்புறு வோரும்
என்னை விட்டு விலகி இருக்கவே
எழுத்தில் கருத்தில் இறுக்கம் கொள்கிறேன்;
பொன்னை உரசிப்பார்க்கும் உரைகல்
போன்றது தானே, உண்மை நட்பு?
அறிவுடன் அணுகி ஆய்ந்து நுணுகி
அறநெறியோடு பேசியும் நடந்தும்
செறிப்பவை மட்டும் சிறந்த வாழ்வைச்
சேமிக்க உதவும் சிந்தனை விதைகள்!
இவண்-
கிருஷ்ணன்பாலா
3.9.2014
No comments:
Post a Comment