Wednesday, November 7, 2012

வாதம்-விவாதம்


அறிவார்ந்த நண்பர்களே,

வாதம் என்பதும் விவாதம் என்பதும் வேறு வேறு அர்த்தங்கள் உடையவை.

வாதம் என்பது:
ஒரு கருத்தைச் சொன்னவருக்கும் அதை மறுத்துப் பேசுபவருக்குமான சொற்போர். இதில் இருசாரருமே விஷய ஞானம் உள்ளவர்களாக இல்லாமல் ஒருவர் விஷயம் தெரிந்தவரகாவும் எதிர் வாதம் செய்பவர் அது பற்றிய ஞானம் இல்லாதவராக இருக்கும்போது அந்த வாதம் சொற்போராக இல்லாமல் அக்கப் போராக ஆகிவிடும்.

ஒரு கருத்தைச் சபையில் எடுத்துவைத்தவருக்கு எதிராக எதிர்கருத்தை வலுவாக சொல்லப்பட்ட கருத்தின் அடப்படையில் எடுத்துரைப்பதே
சிறந்த வாதம் எனக் கொள்ளவேண்டும்.அதில் எதிர் வாதம் செய்பவர் முதலில் எடுத்து வைத்த கருத்து சபைக்குப் பொருந்தாது என்பதைப் பொருந்தமான விளக்கங்கள் மூலம் அந்தக் கருத்துத் தவறு என்று நிரூபிக்க முயல்வது.

இதை, வழக்கு மன்றங்களில் வாதி-பிரதிவாதிகளின் சார்பாக வழக்கறிஞர்கள் வாதம் செய்து கொள்வதன் மூலம் உணரலாம்; பட்டிமன்றங்கள் நடத்தி இரு வேறு குழுக்கள் வாதத் திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருப்பதன் மூலமும் அறியலாம்.

இத்தகைய வாதங்களில் ஈடுபட்டிருக்கும் ஒருவர், தனது வாதத் திறமையின் மீதோ,அல்லது தான்  உரைக்கும் கருத்தின் வலுவான அடித்தளத்தின் மீதோ எதிர் வாதம் செய்பவரிடம் இருக்கும் முதிர்ச்சியற்ற அறிவும், அறிவின்மையும் சேர்ந்த கருத்தை இடித்துரைத்து, எதிர்வாதம் செய்வதற்குப் பதில் கேலியும் கிண்டலும் காட்ட முனையும்போது, .  வாதம் என்பது பேதம் ஆகிப் போய்விடுகிறது.

அந்த பேதமானது,எண்ணெயும் தண்ணீரும்போல் ஒன்றுக்கொன்று ஒட்டாத நிலையை எட்டி அறிவற்றவனின் குறுக்கீடு அவல நிலையை அடைகிறது; விஷயஞானம் இல்லாது வாதம் செய்வதானது, போகிற போக்கில் மண்ணைக் கூட வாரித் தூற்றும் வக்கிரப்புத்தியைக் காட்டும்  நிலையை எட்டி அந்த மேடை பரிதாபத்துக்குரியதாகி விடுகிறது.

.

விவாதம் என்பது:
அனுபவமும் அறிவும் உள்ளவன் ஒரு கருத்தைச் சபையில் எடுத்துச் சொல்லுபோது, அறிவுடையோரும் அறிந்து கொள்ள ஆர்வம் உடையோரும் அந்தக் கருத்துத் தொடர்பான விரிவான விஷயங்களை விளக்கிச் சொல்வதும்  சொல்லப் பட்ட கருத்தின் அடிப்படையில் மேல் விளக்கம் கேட்பதும் உதாரண,உவமானங்களை சொல்லப்பட்ட கருத்துக்கு வலுவூட்டும் வகையில் எடுத்துரைப்பதுமான உரையாடல்கள் அங்கே  பிரவாகம் எடுக்கும்.

இது ஒரு கவிதைக்குக் கருத்துரை,பதவுரை, விளக்கவுரை,இலக்கணவுரை எல்லாமுமாக அமைந்து முடிவுரையாக சபையோரால் ஏற்கப் படும் அறிவுசார்ந்த விஷயமாக ஆரோகணிக்கும்.

முகநூலில் நாம் எடுத்து வைக்கும் கருத்துக்கள எடுத்து வைக்கும் நோக்கம் நன்கு விஷயமறிந்தோர் அதை வாதம் செய்ய வர வேண்டும் என்ற நோக்கத்தில்தான்.

கற்றோரும் கருத்து உள்ளோரும் ஞானம் பெற்றோரும் பெரியோரும் இதில் தங்கள் வாதத்தை வைக்கும்போதுதான் அந்தக் கருத்தக் குறித்த சிந்தனைகள் படிப்போரின் மனதில் பதிந்து,பயன் மிக்கதாக அமையும்.

அதற்காகவே எண்ணுகிறோம்;எழுதுகிறோம்.

அறிவார்ந்த நண்பர்களே,
இங்கே வாதத்தைப் பேதம் ஆக்கி,வக்கிரம் பேச முனைவோருக்கும் மத்தியில் நாம் சொல்லுகின்ற கருத்தை வலுவுள்ளதென நிரூபித்து, நாட்டுக்கும் மொழிக்கும் நமது பண்பாட்டுக்கும் பெருமை சேர்க்கின்ற  வாதங்களிலும் விவாதங்களிலும் நட்புணர்வோடும் நலமார்ந்த சொற்சுவையோடும் நமது ஞானத்தைச் சுடர்விடச் செய்வோம். என்ற உணர்வில்தான் எனது கருத்துக்களைப் பதிவு செய்கின்றேன்.

ஆனால், அர்த்தமுள்ள விஷய ஞானத்தில் இருக்கும் ஆர்வத்தை விட,அர்த்தம்கெட்ட விஷயங்களிலும் அனர்த்தம் மிகும் வம்புக் கருத்துக்களிலும் இங்கு பலர் தங்கள் அறிவு விலாசத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

முகநூலில் வாதம் -விவாதம் செய்வதற்கு விஷயம் உள்ளோருக்கு  நேரம் இருப்பதில்லை;

எனக்கோ, கற்றுக் குட்டிகளோடு வாதம் செய்வதற்கு நேரம்  இருப்பதில்லை.

இவண்-
கிருஷ்ணன்பாலா
7.11.2012

No comments: