Monday, November 12, 2012

சிந்திக்கத் தவறாதீர்,நண்பர்களே,


றிவார்ந்த நண்பர்களே,

உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த  ‘தீப ஒளித் திருநாள்’ வாழ்த்துக்கள்.

உங்கள் வாழ்வில் புத்தொளி பரவி இருள் எனும் தோல்விகளையும் துயரங்களையும் முற்றாக நீக்கி, மகிழ்வும் மலர்ச்சியும் அளித்திட எல்லாம் வல்ல இறைவன்  பெருங் கருணையை இறைஞ்சுகின்றேன்.

‘தன்னேரில்லாதத் தமிழ்ப் பண்பாட்டின் தகைமை வாய்ந்த சிந்தனைகள் நம்மிடையே நலமும் பலமும் பெற்று வளர்ந்திருக்க வேண்டும்’ என்பதே நமது ‘உலகத் தமிழர் மையத்தின்’ மையக் கொள்கை.

இதற்காக இங்கு தொடர்ந்து எழுதி வருகிறேன். முகநூல் அதற்கு முதன்மையான இடத்தைத் தந்திருக்கிறது.

நல்லதைச் சொல்லவும் சொல்வதில் நிமிர்ந்து சொல்லவும்,சொன்னதில் நிற்கவும் எழுத வேண்டும்’ என்ற எனது குறிக்கோளில் எவர் குறுக்கிட்டாலும் அவர்கள் தோல்வி ஒன்றையே நிரந்தரமாகப் பெறும் அளவுக்கு, இங்கே சான்றோரின் ஆதரவும் கற்றோரின் நட்பும் பெருகி வருவதை மகிழ்ச்சியோடு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நாம் இங்கே சில தவறுகளைச் சுட்டிக் காட்டும் பொழுது, அதில் உள்ள நியாயத்தை ஆராயாமல் சிலர்,அவ்வாறு சுட்டிக் காட்டுவதையே ’கொலைக் குற்றம்போல்’ சித்தரிக்கின்றர்கள்.

உதாரணத்துக்கு -

நேற்று (11.112012) நாம் முகநூலில் பதித்த கருத்து:
//ஏற்கெனவே சொன்னது போல், இங்கு ஒரு சில பெண்கள், வெகு சாதாரணமாகத் தத்துப் பித்தென்று ஸ்டேட்டஸ் போட்டால்,அதில் ஈக்கள் மொய்ப்பதுபோல் ஆடவர் பலரும் Likeகள் போட்டு, மொய்வைத்து முறைவாசல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

'என்னடா இவ்வளவு பேர் Likes போட்டிருக்கிறார்களே,ஏதாவது  'நெடுநல் வாடைபோன்ற சிறப்பான இலக்கியச்செய்திகள் இருக்குமோஎன்று அந்த ஸ்டேட்டஸைத் திறந்தால் Nedunal Vadai தான்; அதாவது நெடுநாள் வடை.

ஊசிப்போன உதவாக்கரை வடைகளுக்காக நரிகள் கூட்டம் கூட்டமாகச் சென்று நத்தி ஊளையிடுவதைத்தான் காண முடிகிறது..

கொஞ்சம் விஷய ஞானிகளாக இங்கு தலை காட்ட எத்தனித்துக் கொண்டிருக்கும் சில அறிவு ஜீவிகளும்கூட இதில் அடக்கம்.

கூடும் கூட்டத்தைப் பார்த்து அந்தப் பெண்கள் வித்தியாசமான சிந்தனைவாதிகளாய்த் தங்களைச் சிங்காரித்துக் கொண்டு கண்ணாடி முன்பு எப்பொழுதும் உட்கார்ந்து அழகு பார்க்கத் தொடங்கி விட்டார்கள்!

வெட்கம் இல்லாத விருந்தாளிகள்;
விஷயம் இல்லாத வெறுந்தாளிகள்!

நமது நாவையும் பேநாவையும் இன்னும் கூர் தீட்டத்தான் வேண்டும் நண்பர்களே!//

என்ற இந்தக் கருத்துக்கு நண்பர்கள் பலர் பதிவூட்டம் செய்தார்கள். 
அதில் ஒரு சகோதரி சற்று வித்தியாசமாக எழுதியிருந்தார்;அதற்குரிய பதிலை நானும் எழுதி விட்டேன்.

ஆனால்,அந்தப் பதிவை மட்டும் எடுத்து, அந்தச் சகோதரி, தனது பக்கத்தில் போட்டுக் கொண்டு’ # கிருஷ்ணன்பாலா ஸார் கவனத்துக்கு # என்று அடிக்கோடிட்டிருந்தார். அவர் செய்தது, ‘கருத்தப் பரவல்’ என்ற நல்லுணர்வின் பொருட்டேதான்.

இதன் அடிப்படையில் அதைப் படித்த இன்னொரு நண்பர் அதற்கு எழுதிய கருத்தூட்டம்தான் இங்கு என்னை மேலும் எழுதத் தூண்டிற்று!

' Syamalam Kashyapan' என்ற முகநூல் நண்பர் ஒருவர், இட்ட கருத்தூட்டம் அது. அந்தப் பதிவு இதுதான்:

// Syamalam Kashyapan: ஐயமார்களே! மனித குலம் செய்தமிகப்பெரிய பாவம் மனிதர்களை ஆண்-பெண் என்று பிரித்தது. நாம் அருகிலிருக்கும் ஓட்டுச்சாவடிக்குக் கூட போய்  வாக்களிப்பதில்லைவிண்வேளியிலிருந்து  வாக்களித்திருக்கிறாள் "வில்லியம்ஸ்" என்ற பேண். "மாலாலா"என்ற பதினந்து வயது சிறுமி இன்று ஒரு legend..நண்பர்களே!  உன் அசைவு, உன் posture உன் கண் அசைவு ஆகியவற்றைக் கோண்டே உன்னைத் துள்ளியமாக எடை பொட்டுவிடுவாள் ஒரு பெண்..ஜக்கிரதை! முகனூல் ஆண்களுக்கு மட்டுமல்ல.தைரியமாகவரும் பெண்களை உற்சாகப்படுத்துவோம்.---காஸ்யபன்”//

(சில எழுத்துப் பிழைகள்; உள்ளது உள்ளவாறே எடுத்து இங்கு பதிவு செய்யப்படும் நோக்கம் காரணமாக நான் அந்தப் பிழைகளைத் தொடவில்லை)

அந்த நண்பரின் கருத்தூட்டமும் ’நல்எண்னத்தின் அடிப்படையில்தான்  எழுதப் பட்டிருக்கிறது’ என்ற போதும் ‘இம்மாதிரியான கருத்துக்கள் பண்பில்லாதவர்களின் எழுத்துக்களுக்கே பட்டயம் வழங்குவதாக அமைந்து விடும்’ என்பதைச் சுட்டி காட்ட விரும்புகிறேன்.

அதன் அடிப்படையில்,அவருக்கு நான் சொன்னதே,பலருக்கும் பொருந்தும். 

எனது பதில் இதுதான்:

விதி விலக்குகள் என்பதே விதியாகிவிட முடியாது நண்பரேபெண்களைச் சுற்றுகின்ற தீமைகளைச் சுட்டிக் காட்டுகிறவன் ஆண் என்றால்,அவனைப் பெண்ணினத்தின் பெரிய விரோதிபோல் சித்தரிப்பது,பேதைமை.

மானுடத்தின் நன்மைக்குச் சொல்லும் விஷயங்களை இங்குள்ள நல்ல பெண்மணிகளே உணர்ந்து வழி மொழிந்து வருகின்றார்கள்.

விவரம் புரியாமல் விஷத்தை தோய்த்து கொண்டு எழுதும் பெண்களை உற்சாகப்படுத்துவதை விட்டொழித்து, பெண்ணினத்தின் பெருமைகளைச் சாகப் படுத்தும் அபவாதக் கருத்துக்களைத் தட்டிக் கேட்கவும் சுட்டிக் காட்டவும் துணிவது ஆண்மை.

(இந்த இடத்தில் ஆண்மை என்றால் ஏதோ ஆணுக்கிருக்கின்ற புரதச் சத்து என்பதாக யாரும் அனர்த்தம் கொண்டு விடக் கூடாது.‘எழுத்தின் ஆளுமை’என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்,இங்கே. அதைப் பெண்களும் கொண்டிருக்கிறார்கள்;கொள்ளலாம்.)

நண்பர்களே,
உப்புச் சப்பற்ற விஷயங்களை மட்டுமல்ல; அருவருப்பான – நமது பண்பாட்டைச் சீரழிக்கின்ற சிந்தனைகளைச் சில பெண்கள் இங்கே பதிக்கின்றனர். அதை ஏராளமான ஆண்கள் தேடிச் சென்று ’ஆகா.ஓகோ’ என்று likeகளும் கருத்தூட்டங்களும் இடுகின்றனர்.

அதைத்தான் நமது சிந்தையின் மையக் கருத்தாக இங்கு உங்கள் முன் வைக்கின்றேன்.

உதாரணத்துக்கு –

// ‘நான் இன்று பல்கூடத் துலக்காமல் பேஸ்புக்கில் காலையிலேயே உட்கார்ந்து விட்டேன் என்று  பெண் ஒருத்தி பதிவிடுகிறாள்.
அதற்கு  100,200,300 என்று  likeகளை ஆடவர் குவிக்கின்றனர். //

அது மட்டுமா?

அவள் இட்ட இடுகையைச் சிலாகித்து ஆடவர்கள் இடும் // ’சூப்பர்’, செம சூப்பர்’ ’சரி, எப்போ குளிக்கப் போவீங்க?’ ’நானும் கூட ’உங்களுக்காகவே பல் துலக்காமல் இங்கே காத்திருக்கிறேன் தோழி’ என்பது போன்ற கருத்தூட்டங்களும் குவிய அந்தப் பெண் புளகாங்கிதம் கொள்வதுதான் உச்ச கட்டம்.

நம் கண்களையும் மனதையும் உறுத்துகின்ற இது போன்ற மலிவான,அருவறுப்பான,அருவறுக்கத்தக்க, அறிவற்ற, பெண்மையை நாறவைக்கும் சிந்தனைகளை வெளிப்படுத்தி தனது ரசிகப் பெருமக்களைப் போதை ஏற்றுவது எப்படி? என்ற சிந்தனையில் ’புதிய புதிய தொழில் நுட்பங்களை’த் தனது கருத்தில் ஏற்றி மெருகூட்டுவதே  எழுத்திலக்கியத்துக்கு ’எரு இடும் பணி’ என்று அவள் எண்ணி இறுமாப்புக் கொள்கிறாள்.

அதைக் கண்டிக்க, நாம் தலைப்படும்போது நமது கருத்துக்களின் உண்மைத் தன்மையை ஆராயாது, ‘இதெல்லாம் பெண்களின் பிரமிக்கத் தக்க பரிணாம வளர்ச்சி; அதில் இளைஞர்களுக்கும் பெரும் பங்கு இருக்கிறது’;அதனை ஊக்கப் படுத்துவது நமது கடமை’ என அறிவுரையும் ஆலோசனையும் சிலர் சொல்கின்றனர்.

அவர்களுக்குச் சொல்வேன்:

உங்கள் புரட்சிகரமான ஊக்குவித்தல் காரணமாக உங்கள் வீட்டுப் பிள்ளைகளே உங்கள் சிந்தனைகளுக்கு சேதாரமில்லாத ஆதரவு காட்டி நிரூபணமாகி நிற்பார்கள்.அப்போதுதான் உங்களுக்குத் தெரியும்:
‘நாம் வருத்தப் பட்டு பாரம் சுமக்கின்றவர்கள்’ என்பது.

இந்த எச்சரிக்கை, பண்பற்ற கருத்துக்களைப் பயன் உள்ளவைதான்’ என்று சான்று தருவோருக்கு மட்டுமல்ல; பண்பட்ட சிந்தனையைக் கற்பதற்குப் பதிலாகக் கண்ணை மூடிக் கொண்டு ‘மஞ்சள் தனமான’ சிந்தனையில் வளைய வரும் வனிதைகளுக்கும் அவர்களை நத்தி நின்று கும்மி அடித்து உற்சாகப்படுத்தும் இளைஞர் மற்றும் முகநூல் நண்பர்களுக்கும்தான்.

’உங்களுக்கு முகநூலில் இத்தனை நண்பர்களா?’ என்று ஒரு பெண் இன்னொரு பெண்ணைப் பார்த்து வியந்து, அதை விடவும் அதிகமான நண்பர்கள் எண்ணிக்கையைக் காட்ட வேண்டும்’ என்கிற தாகம் கொண்ட பெண்களை நாம் பெருக விடுவது நமது பண்பாட்டின் ஒட்டு மொத்தச் சீரழிவுக்கே வழிக்காட்டும்.

அதைப் போன்றே இளைஞர்களின் சிந்தனை சீர்கெட்டுப் போவதற்கும் நாம் மௌனம் காட்டுவது.

நண்பர்களே,
குறிப்பாக முகநூலில் பெண்களையே சுற்றி நின்று சிற்றின்பச் சிந்தனைகளை விதைக்கவும் நமது பண்பாட்டைப் புதைக்கவும்
எழுத்து வட்டத்தில் நாட்டம் கொண்டுள்ள அறிவுஜீவிகளே,

நீங்கள் இம்மாதிரியான ‘சில்லரைத் தனமான சிந்தனைகளில் சிக்கி விட்டால்,பின் உங்கள் வீட்டுப் பெண்மணிகளும் இதே நிலையில் இறங்கிக் குத்தாடம் போடுவதையும் அவர்களுக்கும் இம்மாதிரி like களும் கண்ணறாவிக் கருத்தூட்டங்களும் விழுவதையும் ரசிப்பீர்களா? ஊக்கப் படுத்துவீர்கள? ஆதரிப்பீர்களா?

அதற்காகத்தான் நான் அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறேன்:
எழுத்துக்கென்று ஒரு இலக்கை வகுத்துக் கொண்டு,அந்தத் திசையில் உங்கள் சிந்தனைகளைச் செலுத்தும் பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

இன்றைய இளைஞர்களும் இளைஞிகளும் நாளைய பெற்றோர் என்பதையும் குழந்தை, குடும்பம், உறவுகள் என்றிருக்கின்ற நடுத்தர வயதுப் பெண்களும்,ஆண்களும் நமது பண்பாட்டின் பெருமையைக் காக்கவும் வளர்க்கவும் கருத்தில் கொண்டு எழுதுங்கள்.

’ஒழுக்கமும் உயர்வும் மிக்க சமூக,கலை,இலக்கியம்,அரசியல் முதலான கருத்துக்களில் சிந்திப்பதையும் வாதிப்பதையும் வளர்த்துக் கொள்ளுங்கள்; அதற்கெதிரான நச்சு எழுத்துக்களைத் தட்டிக் கேட்கவும் சுட்டி காட்டவும் தயங்காதீர்கள்!

”அஞ்சுவது அஞ்சாமை பேதைமை; அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்”

என்கிறது உலகப் பொதுமறையாம் திருவள்ளுவம்.

அஞ்ச வேண்டிய விஷயங்களுக்கு அறிவுடையோர் அஞ்சுவார்கள்;ஆனால் கண்டும் காணாமல் ஒதுங்க மாட்டார்கள்.

இந்த எண்ணமும் எழுத்தும் உணர்வுகளும் உங்களின் குடும்பத்தின் உயர்ந்த ஒழுக்க வாழ்வுக்கே அன்றி,எனது எழுத்தின் கம்பீரத்தைக் காட்டிக் கொள்வதற்கன்று.

இவண்-
கிருஷ்ணன்பாலா
12.11.2012

No comments: