Thursday, November 8, 2012

மெய் சிலிர்த்தது!


ண்பர்களே,

எனது அன்பில் நிறைந்த நண்பர்-என்னைத் தன் மூத்த சகோதர உணர்வில் எப்போதும் நினைத்து நட்புறவு வளர்த்து வரும் திரு கணேசன்,தாம்பரத்தில்  சிறிய  ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறவர்.

பெரிய பக்திமான் அல்ல; தான் செய்யும் தொழிலைக் கண்ணும் கருத்துமாய்ச் செய்பவர்;

உடன் பிறந்தார் அனைவருக்கும் உதவி, தனது சம்பாத்தியத்தில் பெற்ற சொத்துக்களையும்கூட விட்டுக் கொடுத்து எவ்விதச் சலனமும் இன்றி வாழ்பவர்.

எனக்கு ஏறத்தாழ 20 வருடப் பழக்கம்.
இன்று அவரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன்.

பேச்சுவாக்கில் சென்ற வாரம் திருப்பதி போய் வந்த விஷயத்தைச் சொன்னார்.

தன் வாழ்நாளில் இதுவரை நான்கு முறைதான் திருப்பதி சென்றிருக்கிறார்;அதுவும் ஒரே நண்பர்  திரு. ஏகாம்பரம் - அவர்களின்  அழைப்பின் பேரில் மட்டு’மே என்று சொன்னவர்  இம்முறை செல்ல நேர்ந்ததின் வாய்ப்பைச் சொன்னபோது  இந்த வெங்கடாஜலபதியின் விந்தைமிகு தந்திரமும் கருணையும் யாதெனப் புரிந்து மெய் சிலிர்த்தது.

அந்த சிலிர்ப்பு உங்களுக்கும் ஏற்படுகிறதா அல்லது எனக்கு மட்டும்தானா?

அவர் என்னிடம் சொன்ன விஷயம்:

“அண்ணா, நான் ரொம்ப நாளாகாவே எனது ஓட்டலில் ஒரு உண்டியலை அவ்வப்போது பத்து ரூபாய் போட்டு நிரப்பி வந்தேன். இந்த உண்டியலை வைக்கும்போது  ‘திருப்பதிக்கு இதைப் போட்டுவிடலாம்’ என்று என் மனதில் ஒரு எண்ணம் பளிச்சிட்டது; ஆனால் திருப்பதிக்காக நான் அந்த உண்டியலை வாங்கவில்லை.

எனது ஊருக்குப் பக்கத்து ஊரைச் சேர்ந்த ஒரு பையன் வசதியற்றவன்; அவன் சென்னையில் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பதற்காக வந்து, ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் வசதி இல்லாத காரணத்தால்,என்னிடம் உதவி கேட்டு வந்தான். எங்காவது தங்கியிருந்து கல்லூரிக்குச் சென்றுவர உதவி கேட்டான்.

நான்  ‘என் ஓட்டலிலேயே தங்கிக் கொள்;முடிந்த போது மாலை நேரங்களில் நீயும் இந்த ஓட்டலில் ஓய்வு நேரப் பணி செய்து  உனது படிப்புக்கேற்ற அனுபவத்தையும் கற்றுக் கொள்ளலாமே’ என்றேன்.

’சரி’  என்று சொன்னவன் அவ்வாறே எனது ஓட்டலில் இரவு தங்கிக் கொள்வதும் படுக்கும் வரை கிச்சன்,சர்வீஸ் என்று கொஞ்சம் பகுதி நேரப் பணிகள் செய்வதும்,மறுநாள் காலை கல்லூரிக்குப் படிக்கச் செல்வதுமாக இருந்தான்.

அவன் ஓட்டலில் கூடமாட வேலையும் செய்கிறானே என்பதற்காகத் தினமும் அவனுக்கு நான், 100 ரூபாய் செலவுக்கும் கொடுத்து விடுவேன்; இலவசமாகத் சாமகத் தங்கிகொள்வதைத் தவிர.

ஆனால், சில மாதங்களில் படிப்பின் நிமித்தம் அவன் கல்லூரிக்கு அருகிலேயே தங்கிக் கொண்டு படிக்க வேண்டியிருப்பதை என்னிடம் சொன்னான்.

செலவு செய்ய வசதியற்ற நிலையில் இருந்த அவன்,ஏன் அப்படி முடிவெடுத்தான் என்பது எனக்குச் சற்று வருத்தத்தைக் கொடுத்தாலும்,
‘சரி அப்பா,உன் விருப்பம்’ என்று நானும் சொல்ல அவன் இங்கு தங்கி இருந்ததைக் காலி செய்து விட்டுச் சென்று விட்டான்.

ஆனால் எதைக் கற்பனை செய்து கொண்டு இங்கிருந்து போனானோ? அது அவனுக்கு உதவவில்லை; அங்கே தங்கியிருக்கவும் உணவுக்குமாக மாதம் ரூ.3000/= செலுத்தும்படிக் கேட்டிருக்கிறார்கள்.

அது அவனால் முடியவில்லை:இந்த விஷயம் என் காதுக்கும் வந்தது
திரு,கணேசன்,தாம்பரம்

‘இலவசமாகத் தங்கியிருந்த அந்தப் பையனுக்குத்
தினசரி செலவுக்கு ரூ.100ம் கொடுத்து வந்தோம்.இப்போது அவனுக்கு கட்டாயம் பணம் தேவை படத்தானே செய்யும்?’ என்று எண்ணிய மனதில்,’இந்த உண்டியல்தான் நிரம்பி விட்டதே! இதை உடைத்து அவனுடைய செலவுக்குக் கொடுத்து  விடுவோமே:  வெங்கடாஜலபதிக்குப் போவது இவன்  படிப்புக்குப் போகட்டுமே!’’ என்று என்று முடிவு செய்தேன்.

மறுநாள் எனது நண்பர் திரு.ஏகாம்பரம் என்னைப் பார்க்க வந்தார்.’ நான் தி’நகர் வரை போக வேண்டியிருக்கிறது; நீயும் வந்தால் உதவியாக இருக்கும்’ என்றார்

‘சரி’  என்று அவருடன் போனேன் ஒரு மூன்று மணி நேரம்
தி’நகரில் வேலைகளை முடித்து விட்டு வெங்கட்ட நாராயணா சாலை வழியாகத் தாம்பரம் திரும்பினோம்.

வழியில் உள்ள வெங்கடாஜலபதி கோவில் கண்ணுக்குத் தட்டுப்படவே,
‘சரி,கணேசன்,  வந்தது வந்தோம்;பெருமாளைத் தரிசித்து விட்டுப் போகலாமே’என்றார்.
.
சென்றோம்.
சாமி கும்பிட்டோம்; வெளியில் வந்தோம்.

அப்போது திரு ஏகாம்பரத்துக்கு திடீர் என்று ஒரு யோசனை தோன்றிற்று. சொன்னார்:

“கணேசன், நாம் திருப்பதிக்குப் போய் நீண்ட காலம் ஆகிவிட்டது. அடுத்த வாரம் போய் வரலாமே’என்றார்.

எனக்குப் ’பக்’ என்றது மனம்.

‘நேற்றுத்தானே நமது திருப்பதி உண்டியலை உடைத்து, அந்தப் பயனுக்கு அந்தப் பணத்தை எல்லாம் கொடுக்க நினைத்தோம்; இந்தச் சாமி அதைத் தடுக்கிறதோ?’ என்று எண்ணியவாறு ‘சரி,போகலாம்’என்றேன்.

உடனே அவர் அங்கு எங்களின் அடுத்தவாரத் திருப்பதிப்ன  பயணத்துக்கான தரிசன அனுமதி டிக்கெட்டுகளை ‘ரிசர்வ்’ செய்து விட்டார்.

திட்டமிட்டவாறே திருப்பதிக்குப் போனோம். எனது உண்டியல் பணம் முழுவதையும் அங்கு உண்டியலில் சேர்த்து விட்டேன்.

‘பேசாமல் அந்தப் பையன் நம்ம ஓட்டலிலேயே தங்கி இருந்திருக்கலாம்;சரி எப்படியாவது அவனுக்கு உதவத்தான் வேண்டும்’என்று அப்போதும் மனம் எண்ணிக் கொண்டது.

திருப்பதியிலிருந்து திரும்பி வந்து மூன்று நாட்களாக அந்தப் பையனைக் கூப்பிட்டு எப்படியும் உதவ வேண்டும்’ என்று  நினைத்துக் கொண்டிருந்தேன்.
நேரம் இன்மையால் அது முடியவில்லை.

இன்றும் கூட அந்தப் பையன் பற்றி எண்ணினேன்.

சற்று முன் அந்தப் பையனிடமிருந்தே போன் வந்தது.
‘என்னப்பா விஷயம்? என்றேன்.

“அய்யா,எனக்கு இங்கு தங்கி இருந்து படிக்க இயலவில்லை;உங்க ஓட்டலிலேயே மறுபடியும் வந்து தங்கி இருந்து படிக்கிறேன்;இன்றைக்கே மாலை வந்து விடலாமா?என்று கேட்டான்..

‘அதில் என்ன உனக்குச் சங்கடம்;வா.தாராளமாகத் தங்கிக் கொள்’என்றேன்.

அண்ண இன்று இரவு அந்தப் பயன் வருகிறான்.
இந்தச் சாமி பொல்லாத சாமியாய் இருக்கிற; திருப்பதிக்குச் சேர்க்கலாம் என்ரு முதலில் நினைத்திருந்ததை கப்’பென்று பிடித்துக் கொண்டு, அந்த உண்டியல் பணத்தை எல்லாம் தானே பிடுங்கிக் கொண்டுவிட்டு,
அந்தப் பையனுக்கும் உதவி விட்டதே! என்ரு வெள்ளந்தியாக என்னிடம் சொன்னார்.

மெய் சிலிர்த்தது எனக்கு;அதாவது  திருவேங்கடனின்  தெய்வீக ஆற்றலின் உண்மை சிலிர்த்தது!

“ ஊருக்கு மறைக்கும்
உண்மைகள் எல்லாம் 
வேங்கடம் அறியுமடா?உந்தன்
வேதனை தீருமடா”

என்றும்


“பிள்ளையைக் கிள்ளி விட்டு
தொட்டிலை ஆட்டி விட்டு
தள்ளி நின்றே சிரிப்பான்;ஞானத் தங்கமே அவன்
தத்துவம் என்ன சொல்வேன்? ஞானத்தங்கமே.”

என்றும்

பாடிய கவியரசு கண்ணதாசனின் பாடல் மானசீகமாக ஒலிக்க
திருவேங்கடப் பெருமாள்  அதிலே னச் சிரிப்பை முகிழ்த்தருளிக் கொண்டு நின்றார்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
7.11.2012
Post a Comment