Saturday, November 24, 2012

ஞானமென்னும் கரையினிலே!.....




ஏகம் என்ற சமுத்திரத்தில்
எழுந்து டும் அலைஎலாம்
வேகமாகக்  கரையை மோதி
விழுந்தெழுந்து திரும் பிடும்!

அலைத்துளிகள் கோடிகோடி
அங்கும் இங்குமாய்,அவை
அலைதுளிர்த்த கிளைகள்போல
ஆர்ப்பரித்து  மறைந் திடும்!

கவலையின்றி மீண்டும் அலை
கரையைத் தொட்டுமோத;நீர்த்
திவலைகளின் ஜனன மரணம்
தினமுமங்கு நிகழ்ந் திடும்!

ஓய்வில்லாத கடல் அலைகள்
உணர்த்து கின்ற தத்துவம்
ஆய்ந் துணர்ந்தால்;தெரிகிறது:
அண்ட பேரண் டமாய்!

பிரம்மம் அது;கடலைப்போல
பேருருவாய்த் தெரிய;அதில்
கரும பூமி அலையைப் போல
கருத்தில் வந்து படிந்திடும்!

ஜீவரெல்லாம் நீர்த் துளிகள்;
ஜீவிப்பது இல்லை;அவர்
பாவபுண் ணியங்கள் யாவும்
படியும் கரை ஈரத்தில்!

பரப்பிரும்மக் கடலில் தோன்றி
பரவி எழும் அலைகள்;நாம்
வரவு செலவு காட்டுதற்கு
வந்து போகும் துளிகளே!

ஞானமென்னும் கரை ஒதுங்கி
நானும் நின்று பார்க்கிறேன்;
ஊனமில்லா உண்மை யைத்தான்
உவமையாகச் சொல் கிறேன்!

பார்வையிலே தெரியும் இந்தப்
பரப்ரும்மக் கடலை;நாம்
கூர்மை யாகப் பார்க்கும்போது
குறைகள் ஏதும் இல்லையே!

மேடுபள்ளம் யாவுமில்லை
மேவி நிற்கும் பூமி; நேர்க்
கோடுபோல சமநிலையில்
குறைகளின்றித் தோன் றிடும்!

வானத்திலே பறந்து செல்லும்
பறவை போலப் பார்த்திடும்
ஞானத்திலேதான் அதனை
நானும் பார்த்துக் கொள்கிறேன்!

ஞானமென்னும் கரையின் ஓரம்
நான் இருக்கும்பொழு தெலாம்
ஊனமில்லை;என்றன் நெஞ்சில்
உலகம் மறைந்து போவதால்.

பாசம்;பகை;உறவு,நட்பு
பாரமாக இருப்பது;அலை
நேசத்திலே நிலைத்து நிற்கும்
நேர அளவு மட்டும்தான்!

உலக வாழ்வு அலையைப் போன்று;
உறவு,பிரிவு யாவும்;நாம்
பலரும் வாழ்ந்து பிரிவதுபோல்
பார்த்துப் பார்த்து உணர்கிறேன்!

நொடிப்பொழுதில் தோன்றியிங்கு
நொடியில் மறைகிறோம்;விதி
படைத்தவாறு  பிரம்மத்தோடு
பரவி,அதில்  நிறைகிறோம்!

நீயும் நானும் நீர்த்துளிகள்
நேச உறவுகாள்நாம்
போயும்போயும் மறைவதிலா
புழுங்கிக் கொண்டு சாவது?


இவண்-
கிருஷ்ணன்பாலா
24.11.2012 / 9.00 am

1 comment:

Anonymous said...

"...கவலையின்றி மீண்டும் அலைகள்
தேடும் கரைகளில்;நீர்த்
திவலைகளின் ஜனன மரணம்
தினமும் நடந்திடும்.."
அத்தனை வரிகளும் அருமை - வாசிப்பதில் மகிழ்வடைகிறேன்.இனிய நல்வாழ்த்து!
வேதா. இலங்காதிலகம்.