Monday, November 19, 2012

ஆணவமல்ல;ஆணவத்துக்கான எச்சரிக்கை!


ண்பர்களே,

பலமுறை சொல்லியிருக்கிறேன்;
மறுபடியும் சொல்கிறேன்:

மக்கள் அறிவதற்கும் தெளிவதற்குமான
எழுத்துக்களை இங்கே இலவசமாக
விருந்து வைக்கின்றவன் நான்.

பசியுடையோர் புசிக்க;
பண்புடையோர் ரசிக்க;
வசியமிகு எழுத்தென்று
வரைகின்றேன்;அதைக்

கண்ணுடையோர் காண;
கருத்துடையோர் பேண;
புண்ணுடையோர் நாண;
பொய்யுடையோர் கோண;

என மொழிகின்றேன்.

என் எழுத்துக்களை அரை குறையாகப் புரிந்து கொண்டு
மதச் சாயம் பூச  சிலர் எத்தனிப்பது துரதிர்ஷடம்;நஷ்டம்
அவர்களுக்குத்தான்.

பால்தாக்ரேயின் இறுதி ஊர்வலம் குறித்து நான் எழுதியது
முழுக்க முழுக்க  அறிவு சார்ந்த பார்வையே தவிர,
மத உணர்வு சார்ந்ததல்ல:

’நீத்தார் பெருமை’ என்பது ஒருவர் இறந்த போது அவர்
வாழ்ந்த வாழ்வின் சிறப்புக்களை எண்ணி நினைவு கூர்வது;
இது இந்தியப் பண்பாட்டின் இலக்கணம்;
குறிப்பாகத் தமிழ் இலக்கியப் பண்பு.

ஆனால், ‘பால்தாக்ரேயின்  வன்கொடுமைச் செயல்கள் குறித்து ஏன் எழுதவில்லை’ என்கிறார்கள்.

இதுதான் ‘வன்முறையைத்தூண்டும் உணர்வு’ என்பேன்.

அவர்கள் நல்லவர்களாகவே இருந்த போதும் எழுதும்
ஆர்வக் கோளாறு காரணமாக அவ்விதம்  நான் எழுதுவதை
எதிர் பார்க்கின்றார்கள்.

நான் பிறப்பால் ஒரு இந்தியன்; மதத்தாலும் இந்தியன்தான்.

நான் எழுதுவது அதன் உயரிய தர்மத்தின் குரலை.
அது  உலகின் எல்லா மதத்தவர்க்கும் இனத்தவர்க்கும்
பொது உடமைச் சொத்து

ஏனெனில் -

கர்த்தரும் அல்லாஹ்வும் ஈசனும் நாராயணனுமான  இறைவன்
என்னை அதில்தான் பிறக்க வைத்தான்.

இந்த நாட்டின் இறையாண்மை எதுவோ அதை இமயத்தில்
ஏறி நின்று எழுதுகிறேன்.

ஆயினும் -

நான் மதப் பார்வையில்  எதையும் ஒரு சார்பாய் எழுதுகிறவன் அல்லன்;என்னோடு மதம் கொண்டு எவரையும் மோத
அனுமதிக்கிறவனும் அல்லன்.

என்னோடு மோதும் அறிவுடையோர் நல்ல நண்பர்களாகி விடுவதும் அறிவில்லாதோர் பகைவர்களாகத் தங்களை வரித்துக் கொள்வதும்
இங்கே காண்கின்ற காட்சிகள்தான்.

எனது கருத்துக்களின் ஆழம் உயரம் அறிந்து காலை வைத்தால் வாதிப்பதற்குப்  பொருள் உண்டு.

யானையைத் தடவிப் பார்த்து  ‘அது’  இதுதான்’ என்று முடிவு செய்து
கொண்டு  வந்தால், உங்கள் சொரூபம் தெரிந்து விடும்.

இது ஆணவம் அன்று; ஆணவத்துக்கு எதிரான எச்சரிக்கை!

நட்புடன் -
கிருஷ்ணன்பாலா
19.11.2012

No comments: