Tuesday, November 6, 2012

நெஞ்சே! உனக்குபதேசம் இது!


பொய்யுரைக்கு அஞ்சுவாய்;
புகழுரைக்கும் அஞ்சுவாய்;
மெய்யுரைக்கு மிஞ்சுவாய்
மேன்மைகளில் கொஞ்சுவாய்!

நஞ்சுரைக்கும் வஞ்சகர்கள்
நாவிருக்கும் வார்த்தைகள்;
கொஞ்சினாலும் கெஞ்சினாலும்
கோபம் கொண்டு தள்ளுவாய்!

வஞ்சகர்கள் அஞ்சுகின்ற
வார்த்தை என்னும் ஆயுதம்;
வெஞ்சமரில் வீசி நின்று
வெல்வதுபோல் வெல்லுவாய்!

செஞ்சுடரின் கீற்றொளிபோல்
சீறுகின்ற மொழியினால்
மிஞ்ச வரும் பகைஉணர்வை
மிரள வைத்துக் கொல்லுவாய்!

தலைசிறந்த பண்புடன்
தமிழன் வாழ்ந்த காலத்தின்
நிலைமைமாறிப் போனதை
நிமிர்ந்து நின்று சொல்லுவாய்!

சரிவில்லாத கருத்தினையேச்
சாற்றுகின்ற போதினில்;
நரிகள் ஊளை இடுமெனில்
நடுநிலைமை தேவையா?

சொற்குவிப்பின் கூர்மையில்
சுவைமிகுந்த மொழியினை
தற்குறிகள் அறிவதில்லை;
தயவு காட்ட வேண்டுமோ?

அறிவு சார்ந்த கொள்கையை
அகல உழுது விதைப்பதும்;
அறிவு கெட்ட பேர்களை
ஆழ உழுது புதைப்பதும்

உனது தொழில் ஆக்கியே
உற்பத்தியைப் பெருக்குவாய்;
எனது மொழி இதனையே
ஏற்றிருப்பாய்,நெஞ்சமே!


இவண்-
கிருஷ்ணன்பாலா
6.11.2012

காண்க:.http://krishnanbalaa.blogspot.com

1 comment:

V.Rajalakshmi said...

உலக அவலங்களை பாடியும் ,படைத்தும் அதை கலை எடுப்பது எப்படி என கன்னத்தில் கை வைத்து கவலையாக, வழி மாறி தடுமாறும் ஆடுகளை நோக்கும் மேய்ப்பான்!!