Sunday, November 4, 2012

சொல்வதெல்லாம் உண்மை: (தொகுதி:4)ஏகப் பிரும்மத்துக்குள்

நான்;

எனக்குள் ஏகப் பரும்மம்!


இரண்டும்

ஏக காலத்தில்
நிகழ்ந்து 
கொண்டிருக்கின்றன
இங்கே:
.76
சேவல் கூவித்தான்
செழுஞ்சுடர்
உதிக்கின்றான்

என்று
கொக்கரிக்கும்
மமதையன்று
எனது எழுத்துக்கள்.

சூரியன்
உதிப்பதைக்
கட்டியம் கூறி
காரிருள் விலகுவதைக்
காண அழைக்கும்
கவிதை மொழிகள் இவை.


77
எனது
விமர்சனங்களினால்
எதிர்க் கருத்துக்கள் 
சொல்லத் தெரியாமல்
எச்சில் வார்த்தைகள் மட்டுமே
எழுதத் தெரிந்த
சிலரின் கவனத்துக்கு::

எப்படியாவது
விளம்பரம் தேட வேண்டும்
என்ற
உங்கள் அறியாமையை
என் மூலம்
வெளிப்படுத்தும்
வெற்று மொழிகளை
இங்கே வீசாதிருப்பது
உங்களுக்கு நல்லது.

ஏனெனில்-

எனது
சொற்கள்
வெறும் பதங்கள் அல்ல;
பாசுபதங்கள்.

அதை
ஏவப்படாதிருக்கப்
பார்த்துக்கொள்ளுங்கள்.


78
நேற்றைய கோபம்
இன்றைய சாம்பல்!.

அதில் 
எரிந்து போனது யார்?
என்பதுதான்
சிந்திக்கத் தக்க விஷயம்!


79
நீங்கள்
அருவறுப்பான
விஷயங்களை
அழகாக
வரிந்து கொண்டிருக்கிறீர்கள்;

நான்
அழகான
விஷயங்களை
உங்களுக்காக
அருவறுப்போடு
வழங்கிக் கொண்டிருக்கிறேன்.

80
எனது எதிரிகள்

எங்கோ இருப்பது
வருத்தம் தருகிறது;

அவர்கள்
இல்லாமல் இருப்பதோ
துக்கம் தருகிறது!


81
நல்ல எழுத்து
என்பது
ஞானமுடையோரின்
விலாசமாக
இருக்கும்
என்பதை விடவும்

ஞான சூன்யங்களின்
முகவரிகளைத்
தெரிந்து கொள்வதாக
இருக்கும்
என்பதே உண்மை!
  
82
பிறரிடம் இருந்து
தான் மாறுபட்ட ஆற்றல் உடையவர்
என்று-
காட்டிக் கொள்ளும்
எந்த காவியுடைக்  குருஜிக்களாவது,
பணத்தின் தேவையிலிருந்து
விலகி இருக்கின்றார்களா?

அருளை
வழங்குவதாகக் காட்டிக் கொண்டு
பொருளைத்
தன் பக்தர்களிடம்
களவாடும்
இந்த -
கபட வேடதாரிகளிடமிருந்து
விலகி நிற்கும்
அறிவைப் பயன் படுத்துங்கள்.


                                                                      
83
தோற்கின்ற
விஷயங்களைச்
சிந்திக்காதிருங்கள்;

சிந்தித்த விஷயங்களில்
தோற்காதிருங்கள்!


84
நண்பனே,

நான்
சத்தியத்தைப் பேசுகின்றேன்;

நீயோ-
பேசுவதையே
சத்தியம் என்று
சாதிக்கின்றாய்!

86
முகநூலில்
எனது பதிவுகளை
விடாது படித்து,
விழைவும் (Likes)
பகிர்வுகளும் (Shares)
செய்து விட்டு
நட்பு இணைப்பும் வேண்டினார்
நண்பர் ஒருவர்.

உடனே,
இணைப்புக்குச் சம்’மதி’த்தேன்.

 “சம்மதித்தற்கு நன்றி
என்றார் அவர்.

நான் சொன்னேன்:

அறிவார்ந்த தேடலும்
இலக்கிய ரசனையும்
உள்ளோர்க்கு
நன்றி சொல்ல வேண்டியவன்:
நான்”87
எழுத்துக்களைப்
படைத்து விட்டதாய்
என்னுள்
ஓர் கர்வம்;

பிறகுதான் தெரிந்தது:

அப்படி-
கர்வம் கொள்வதற்கு
உங்களிடையே
என்னைப்
படைத்ததே
அதுதான் என்பது!


88
காதல்
வசப்படும் யாவரும்
அறிவையும் மனசாட்சியையும்
இழந்து விடுகிறார்கள்;

அறிவும் மனசாட்சியும்
உள்ளவர்கள்
காதலை
இழந்து விடுகிறார்கள்!


89
காதல் என்பது
சுவர்க்கத்தின்
வாயிலில் நுழைந்து
நரகத்தின் வழியாக
வெளியேறும்
பாதை!

90
சமூகம் என்பது
ஒரு
யானையைப் போல்.

அதை
நாம்
தடவிப் பார்த்து
முடிவு சொல்லும்
குருடர்கள்தான்
என்றார்,
எனது நண்பர் ஒருவர்.

மறுத்துச் சொன்னேன்:

நண்பரே,
நான்
யானைப் பாகன்;
அங்குசம்தான்
எனது எழுத்துக்கள்
91
சரஸ்வதி சபதம்
திரைப் படத்துக்கு
வசனம் எழுதிய வாய்ப்பை,
திரு .பி. நாகராஜன் அவர்கள்
உங்களுக்குத் அளித்திருந்தால்,
என்ன நடந்திருக்கும்?’

என்று-

நண்பர் ஒருவர்
எனது
அறிவுச் செல்வம் அளித்த அன்னை
கவிதையைப்
படித்து விட்டுக் கேட்டார்:

சொன்னேன்:
நிச்சயம் அந்தப் படம்
டப்பாவுக்குள்
ஓடிப் பதுங்கி இருக்கும்.

பின்னே,
பணத்தைத் தேடுவதற்கு
அறிவு எதற்கு?
என்று எண்ணும்
முட்டாள்கள்
எனது வாதங்களை
எப்படி
ஏற்றுக் கொள்வார்கள்?”


92
விஞ்ஞானம்:
மக்களுக்கு ஆபத்து
எப்படி வருகிறது?’
என்பதை மட்டும்
நமக்குத் தெரிவிக்கிறது;

மெய்ஞ்ஞானம்:
அந்த ஆபத்து
எப்படிக் குறைக்கப்படுகிறது 
என்பதை மெய்ப்பிக்கிறது.

#செய்தி:
-------------
அமெரிக்கவில் சாண்டு புயல். 5 கோடி மக்கள் பாதிக்கப்படும் அபாயம். அடுத்த 24 மணி நேரத்தில் உலக சரித்திரத்தில் இதுவரை  நிகழாத உச்ச கட்ட அபாயம்,அமெரிக்கவில்சாண்டி  புயலால்நேரும்என்ற அச்சம் அமெரிக்காவை ஆட் கொண்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் என்ன நடக்கும் என்பதை அமெரிக்க மக்கள் மனங்களில் அச்சம் மேவி நிற்கிறது. எனவே மக்கள் அனைவரும்  இறைவனிடன் மனம் உருகிப் பிரார்த்தனை செய்யுமாறு வேண்டப் படுகிறார்கள்#


93
பெண்களே,
ஆண்களை அதிகம் புகழாதீர்கள்.

ஏனெனில் -

அவர்கள் உங்களுக்கு 
அடிமை ஆகிவிடுவார்கள்
அடிமைகளால் 
உங்களுக்குப் பெருமை இல்லை.

ஆண்களே,
பெண்களை அதிகம் புகாழாதீர்கள்.

ஏனெனில்,
உங்களை  அவர்கள்
அதிகம் நம்பி விடுவார்கள்.

உங்களை நம்புபவர்களின்
தேவையை நீங்கள்
பூர்த்தி
செய்ய முடியாதவர்கள்
ஆகி விடுவீர்கள்.

பூர்த்தி செய்வீர்களாயின்
நீங்கள் பிச்சை எடுக்கும்
நிலைக்குப்
போய் விடுவீர்கள்.


94
ஒரு பிச்சைக்காரனின் உயில்:
-------------------------------------------
எழுதி வையுங்கள்;
எனது கல்லறைமீது:

இவன் சில்லறைக்காக
வாழ்ந்தானே தவிர,
சில்லறையாக
வாழவில்லை
என்று!
95
இந்த எழுத்துக்கள்…
-------------------------------------
தமிழுக்குள்ள
செறுக்கையும் கர்வத்தையும்
கடுகளவேனும்
குறையாமல் காட்டும்
கடமையைக்
கொண்டுள்ளவர்களின்
முகவரியைத்
தேடுவதற்காக
வீசப்படும் வலை.

கற்றுக் குட்டிகளின்
முகவரிகளைத் தேடி
முகத் திரையைக்
கிழிக்கின்ற க’வலை.


96
தங்களை
அழகாக வெளிப்படுத்திக்
கொள்வதில்
அக்கறை காட்டும்
பெண்கள்
எங்கோ
குழியில்
விழத் தயாராக இருப்பவர்கள்;

தங்கள்
அறிவுப்பூர்வமான
கருத்துக்களை வெளிப்படுத்த
விரும்பும் பெண்கள்
எவரையோ
குழியில் வீழ்த்தத்
தயாராக இருப்பவர்கள்.

97
ஓராயிரம் 
மவுனங்களுக்கிடையே
ஒரு சில உளறல்கள்.....

அந்த
ஒரு சில உளறல்களுக்கு
உசுப்பேற்றும் ஆற்றல்கள்?.

மவுனம் சம்மதம்
என்பதில்
எனக்குச் சம்மதமில்லை
என்றேன்.

ஆனால்
உளறல்களோடு
எனது உறவு எப்போதும்
இருக்கட்டும்
என்பதைத்
தீர்மானித்துக் கொண்டு விட்டேன்.

பிறகு,
எனது கூரான எழுத்தாயுத்தை,
எப்படித்தான் சோதித்துப் பார்ப்பதாம்?


98
ஒரு மதத்தில் உள்ள

மூட நம்பிக்கைகளை எடுத்துக் கூறிப்
பாமர மக்களைத்
தவறான நம்பிக்கைகளில்
இறக்கி விட்டுப்பின்
அதற்கான கூலிகளைப் பெற்று
வாழ்கின்றவர்கள்,சமூகக் குற்றவாளிகள்.

கடவுளை
ஒரு கம்பெனியின்
கருணைமிக்க முதலாளியாகச்
சித்தரித்து,
பலாப்பழத்துக்கு ஈக்களைப்
பிடித்து விடும்
ஏஜண்டுகளாகச் செயல்படும்
இவர்கள்தான்
முதலில் தண்டிக்கப்பட வேண்டியர்கள்!

ஏனெனில் –
வருத்தப்படாமல்
பாரம் சுமக்கிறவர்கள்
இவர்கள்.


99
குழப்பத்தில் எடுக்கும்
முடிவுகளும்
முடிவு எடுத்தபின் அடையும்
குழப்பங்களும்
ஒருவனை
புறப்பட்ட இடத்துக்கும்
திருப்பிவிடாது;
போய்ச் சேருகின்ற
இடத்தையும் காட்டாது.
திரிசங்கு சொர்க்கம்
என்பார்களே
அதுதான் இது.

அதாவது
சொர்க்கம் இருக்கும்;
சுகம்தான் இராது.

சொல்லப்போனால்
சொர்க்கத்தில் நரகம்’.100
ஓயாத அலைகளின்
ஒழியாத
இரைச்சலில்
சலித்தது மனம்;
பிறகுதான் தெளிந்தது அது.

ஆரவாரங்களை
மவுனத்தால்
ரசித்தலே
ரசனை என்பதை.

ஆம்;
நான் பேசுவதற்காக
வரவில்லை;
பேசப்படுவதற்காக
என்றது அலை.


கிருஷ்ணன்பாலா
4.11.2012

Post a Comment